இதழ்-23

ஐபிஎல் திருவிழா

இதுவரை அணிகள் கடந்து வந்த பாதை மற்றும் தற்போதைய நிலை குறித்து பார்ப்போம்.

ராஜஸ்தான் ரோயல்ஸ்

கடந்த ஆண்டு இறுதி இடத்தை பிடித்த ஐபிஎல் போட்டித் தொடரில் முதல் சாம்பியனாக உருவெடுத்த அணி. 2008 இல் அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து நாயகன் கிங் ஷேன் வார்னே தலைவராகவும் பயிற்சியாளராகவும் செயற்பட்டிருந்தார். ஷேன் வாட்சன், சோகைல் தன்வீர் கம்ரான் அக்மல், யூசுப் பதான், முனாப் பட்டேல் போன்ற முன்னணி வீரர்களுடன் மற்றும் அறிமுகமில்லாத பல வீரர்கள் இடம்பெற்ற அணி முதல் ஐபிஎல் கோப்பை தனதாக்கிக் கொண்டது. சென்னையின் தற்போதைய கலக்கல் நாயகன் ரவீந்திர ஜடேஜா வும் இந்த அணியில் இருந்த வீரர் தான். அறிமுகமில்லாத திறமையான பல வீரர்களுக்கு பெயர் பெற்ற அணி. பின் 2013 இல் தான் பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றனர். தலைவர்கள் வரிசையில் ராகுல் டிராவிட், ஷேன் வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், அஜின்கயா ராகானே போன்றோர் தலைமை தாங்கி இருக்கின்றனர். இந்த முறை புதிய தலைவராக சாம்சன் மற்றும் புதிதாக இயக்குனராக இலங்கையின் கனவான் குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று வரை ஷேன் வார்னே இந்த அணியுடன் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களுக்கு முன் இவர்கள் ஏலத்தின் போது அதிகமாக பணத்தை செலவழிப்பதே இல்லை. முதல் முதலாக கிரிக்கெட் அக்கடமி உருவாக்கிய அணியும் இதுவே. தற்போது அதிக இங்கிலாந்து வீரர்கள் வெளிநாட்டு வீரர்களாக உள்ள அணி. இங்கிலாந்திலும் தங்கள் அக்கடமி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

கடந்த வருடத்தை தவிர்த்து விளையாடிய அனைத்து வருடங்களும் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறிய அணி. இன்றுவரை தலைவர், பயிற்சியாளர்கள், நிர்வாகம் என்று எதிலும் மாற்றமே (சில தவிர்த்து) இல்லாத அணி. Consistency என்பதற்கு வரைவிலக்கணமான அணி. தோணி தலைவராக உள்ள அணி: முதல் வருடம் இறுதி போட்டி, பின் 2009 மற்றும் 2010 இல் ஐபிஎல் சாம்பியன்கள். ஐபிஎல் என்பது சென்னையுடன் யார் இறுதி போட்டியில் ஆடுவது என்பதற்கான தொடராக மாறிப்போனது தான் உண்மை. பின் 2015இல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ், சூதாட்டத்தில் ஈடுபடுபட்டு இரு வருடங்கள் தடை செய்யப்பட்டனர். 2018 இல் ஐபிஎல் மகுடம் சூடி நாங்கள் திரும்பவும் வந்திட்டோம் என்றது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த அணியின் வீரர்களை பார்த்தால் தல என்கிற தோனி, சின்ன தல என்கிற ரெய்னா, மேத்யூ ஹைடன் என்கிற நாமக்கல் ஆஞ்சநேயர், முத்தையா முரளிதரன், அன்ட்ரூ பிளின்டோவ், ஸ்டீபன் பிளமிங், மைக்கேல் ஹாசி,அல்பி மோர்கல், ஷேன் வாட்சன், பாலாஜி, பத்ரிநாத், அஸ்வின் என்று பெரும் தமிழக இந்திய வெளிநாட்டு வீரர்கள் பட்டாளமே கலக்கி இருக்கிறது. மொய்ன் அலி, புஜாரா, கிருஷ்ணப்பா கௌவுதம், ஹரிசங்கர் ரெட்டி, ஹரி நிசாந் போன்ற வீரர்களை இந்த முறை ஏலத்தில் எடுத்திருக்கிறது. கடந்த வருடம் விளையாடிய சுரேஷ் ரெய்னாவும் இம்முறை அணிக்கு திரும்பி இருக்கிறார்.

பஞ்சாப் கிங்ஸ்

இதுவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்றிருந்த அணி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்டின் இளவரசன் யுவராஜ் சிங், இலங்கையின் சங்கக்காரா மற்றும் மஹேல, ஷோன் மார்ஷ், பிராட் லீ, அடம் கில்கிறிஸ்ட், பியூஸ் சாவ்லா, வீரேந்திர ஷேவாக் என்று பல நட்சத்திர வீரர்கள் இந்த அணிக்கு விளையாடி இருக்கிறார்கள். 2008 இல் இரண்டாம் இடம் பிடித்து அரையிறுதி சென்றனர். இன்றுவரை தலைமை தாங்கியவர்களில் இந்த அணியின் சிறந்த தலைவராக இருந்த யுவராஜ் சிங்னை 2010இல் மாற்றி சங்கக்காரா விடம் கொடுத்தனர்: அணி கடைசி இடம் பிடித்தது. பின் அடம் கில்கிறிஸ்ட்யை 2011 ஏலத்தில் எடுத்து தலைமை பொறுப்பை கொடுத்தனர். இருந்தாலும் அணி பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற வில்லை. பின் 2014 இல் ஜோர்ஜ் பெய்லி தாங்க கிளென் மக்ஸ்வெல், டேவிட் மில்லர் வாணவேடிக்கை காட்ட இறுதி போட்டி வரை சென்று கொல்கத்தா விடம் தோற்றனர். பின் எந்த வருடமும் பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இவர்கள் எப்போதும் தலைவரை மாற்றுவது பயிற்சியாளரை மாற்றுவது என்று மாற்றி பின்னடைவு பெற்றதே அதிகம். இம்முறை அதே பயிற்சியாளர் அனில் கும்ளே, அதே தலைவர் கேஎல் ராகுல் என்று மாற்றம் இல்லாமல்; ஏலத்திலும் ரில்லி மெர்டித், அஜெய் ரிச்சர்ட்சன், டேவிட் மாலன், தமிழக வீரர் சாருக்கான் என்று நல்ல வீரர்களை எடுத்து இருக்கின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தாவின் இளவரசன் தாதா சௌராவ் கங்குலி தலைமை தாங்க ரிக்கி பாண்டிங், சோகைப் அக்தர், கிறிஸ் கெய்ல், மக்கெலம், உமர் குல், அஜித் அகர்கார், பிராட் ஹோட்ஜ், டேவிட் ஹசி, சால்மன் பட் என்று ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே வெற்றிகளை குவித்த ஆஸியின் பயிற்சியாளர் ஜோன் புச்சனன் பயிற்றிவிப்பில் களம் இறங்கியது. ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் போட்டி அது. பிரென்ட்டன் மக்கெலம் வாணவேடிக்கை நடத்தி 158 ஓட்டங்களை குவித்து அட்டகாசமான ஒரு ஆரம்பத்தை, தன் அணிக்கு மட்டுமல்ல ஐபிஎல் என்ற திருவிழா க்கு கொடுக்க ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரை முதல் போட்டியிலே அதிரடியாக வீழ்த்தி வெற்றி யுடன் ஆரம்பித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன் ஐபிஎல் பயணம். 2011இல் முதல் முறையாக பிளே ஒப் சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா 2012 மற்றும் 2014 இல் கவுதம் கம்பீர் தலைமையில் ஐபிஎல் கிண்ணத்தை தன்வசமாக்கியது. பின் 2016,17,18 களிலும் பிளே ஓப் சுற்றினை ஏட்டி பார்த்து இருக்கிறது நைட் ரைடர்ஸ். கடந்த இரு வருடங்களாக பிளே ஓப் சுற்றுக்கு முன்னேற முடியாத இந்த அணி, இம்முறை மக்கெலம் பயிற்றுவிப்பாளராகவும் இயன் மோர்கன் தலைவராகவும் தொடர களம் இறங்குகிறது. கரீபியன் பிரிமியர் லீக்கிலும் ஒரு அணியை வைத்திருக்கும் நைட் ரைடர்ஸ், அடுத்த வருடம் பிக்பாஸ் தொடரிலும் ஒரு அணியை (Hobart Hurricanes) வாங்குகிறது என்பது மேலதிகமான தகவல்.

மற்றைய நான்கு அணிகளும் அடுத்த இதழில்…

Related posts

சிங்ககிரித்தலைவன் – 23

Thumi2021

எனக்கு கொரோனாவா?

Thumi2021

சூழல் தரமிழத்தலில் செல்வாக்கு செலுத்தும் சமூகக் காரணிகள்

Thumi2021

Leave a Comment