இதழ்-24

சிங்ககிரித்தலைவன் – 23

புதிய இலங்கை

பொழுது மெல்லப்புலர்ந்தது… அனுராதபுரம் காலைச்சூரியனின் கதிர்களால் நிறைந்து, கானுறையும் பறவைகளின் கீதங்களால் உறைந்து, கொடிமலர்களின் நறுமணத்தைத் தன்மீது தவளவிட்டு, புதுப்பெண்ணைப் போல், பூரித்துக் கிடந்தது… உண்மையில் அனுராதபுரம் புதுப்பெண் தான்… காசியப்பன் என்ற கட்டிளம்காளையை மணந்த புதுப்பெண் தான்..!


வழமையான ஆட்சியாளர்களின் வரண்முறைகளை மீறி காசியப்பன் புதிய சட்டங்களையும், நீதிநெறிமுறைகளையும் வகுத்திருந்தான்… படைகளை உரிய அளவுகளில் பிரித்து, விவசாயிகளுக்கும், சேனைப்பயிர்செய்கையாளர்களுக்கும், உதவுவதற்காக கிராமங்களுக்கு அனுப்பியிருந்தான்… அவர்கள் புரிய வேண்டிய பணிகள் தொடர்பில் கட்டளைகளை வழங்குவதற்காக குறித்த எண்ணிக்கையுடைய கிராமங்களை ஒருவலயமாக அறிவித்து, அந்த வலயங்களுக்குப் பொறுப்பாக ஒவ்வொரு அதிகாரிகளையும் நியமித்திருந்தான்…


வெள்ள அனர்த்தத்தால் உருக்குலைந்து போன ஊர்களை மீண்டும் கட்டியெழுப்பவும், அழிவடைந்த நீர்ப்பாசனத்தை மீளுருவாக்கம் செய்யவும் காசியப்பன் திட்டங்களை வகுத்திருந்தான்… அதற்கு தன்னோடு பலமாக இருந்த படைகளை, சீலகாலனின் துணையுடன் பயன்படுத்தி ஊதியமும் அதிகமாகவே வழங்கினான்… விவசாயக்குடும்பங்களில் இருந்தும் பெரும்பாலான இளையவர்களை திரட்டிப் புதிய படைப்பிரிவுகளை உருவாக்கி அவற்றையும் களப்பணிக்காக அனுப்பி அங்கேயே பயிற்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தான்… அவனது கிளர்ச்சிப்படையில் முன்னின்று உழைத்தவர்களுக்கெல்லாம் கிராம நிர்வாக தலைமைப் பதவியை வாங்கியிருந்தான்… அடுத்த இரு ஆண்டுக்கு அரசுக்கு செலுத்தவேண்டிய வரியை முற்றாக நீக்கியும், அதற்கடுத்த ஓராண்டுக்கான வரியை பாதியாகக் குறைத்தும் அறிவிப்பு வழங்கியிருந்தான்…


அரச களஞ்சியத்தில் இருந்த நெல்லை பகிர்ந்து கிராமங்களுக்கு அனுப்பியிருந்தான்… காசியப்பன் ஒரு கதாநாயகனைபோல் நாட்டுமக்களால் பேசப்பட்டான்… தந்தையைக் கொன்றான் என்ற செய்தி எவ்வளவு வேகமாகப்பரவியதோ, அதை விடவும் வேகமாக அவனின் மக்கள் நலத்திட்டங்கள் பரவின… பரப்பப்பட்டன… அரண்மனை வாசல்களில் மக்கள் குறைகேள் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததோடு, ஆதுரசாலைகளையும் புதிதாக அமைத்துக்கொண்டிருந்தான் காசியப்பன்… அரச படைவீரர்களும், கட்டுமானப்பணியாளர்களும், பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்… சுருங்கச் சொல்லப்போனால், புதிய அரச அமைப்பு ஒன்று மெல்ல மெல்லக்கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருந்தது!

நகரத்தின் மத்தியில் அமைக்கப்படும் ஆதுரசாலையை பார்வையிட்டுக்கொண்டிருந்தான் காசியப்பன்… ஓயாமல் வேலைகள் நடைபெறுவதனால், பணியாளர்களின் இயலளவு குறைந்துபோயிருந்ததையும், சலிப்பு ஏற்ப்பட்டிருந்ததையும் கண்ட காசியப்பன், தன் வீரர்கள் சிலரை அழைத்து, பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த யானைகள் சிலதையும் வீரர்களையும், பணியாளர்களையும் அருகிலிருந்த மைதானத்திற்கு வருமாறு பணித்திருந்தான்…
விரைவாக அனைவரும் அங்கு கூடியதும், காசியப்பன் ஒரு யானை மீது ஏறி,


” இந்த லங்காபுரியை புதிதாக செதுக்கிக்கொண்டிருக்கும் என்னருமைச் சகோதரர்களே…”
ஆரவாரம் வானைப்பிழந்தது… காசியப்பன் தன் வலக்கரத்தை உயர்த்தி அமைதிப்படுத்தினான்…


“உங்கள் அயராத உழைப்பு இந்த ஆதுரசாலையோடு முடியப்போவதில்லை… இதைப்போல் பலமடங்கு கட்டுமானங்களை நீங்கள் உருவாக்க வேண்டுமெனக் காலம் காத்திருக்கிறது..! சோர்வோ, சலிப்போ உங்களை அண்டக்கூடாது… வாரத்தில் ஒருநாள், நீங்கள் கண்டு ஆச்சரியப்படத்தக்க வகையில்… உங்கள் சோர்வைப் போக்கும் வகையில், இந்த மைதானத்தில் யானைகள் மோதும்! யானை வீரர்கள் தம் திறமைகளை உங்களுக்கு காட்டுவார்கள்..! இன்றிலிருந்தே அது தொடங்கட்டும்!” என்றவன் தானிருந்த யானையை தூண்டி ஒரு சுற்று சுற்ற வைத்தான்! பணியாளர்களெல்லோரும் ஆரவாரித்தனர்..! காசியப்பனின் யானை விலகிப்போகவே, மேலும் நான்கு யானைகள் எதிர் எதிர் திசைகளில் இருந்து வந்து மோதிக்கொண்டன…


பணியாளர்களின் ஆரவாரம் இன்னும் அதிகரித்தது…கவசம் அணிந்த கொம்பன் யானைகளும், அவற்றுக்கு மேலிருந்து ஏவும் வீரர்களின், திறனும் பார்வையாளர்களை கூட்டியது!


காசியப்பன்,அவனுக்காக அமைக்கப்பட்ட கூடாரத்துக்குள்ளிருந்து தன் வீரர்களின் ஆற்றலை வியந்துகொண்டிருந்தான்… சற்றுநேரத்தில் எல்லாம் அங்கே சீலகாலன் வந்து சேர்ந்தான்…வந்தவன், கூடாரத்தினுள் காசியப்பன் அருகில் வந்து ” மைத்துணா… கயிறுகள் தயார்…” என்றான்… தன வீரர்களின் ஆற்றலால் பூரித்துப்போயிருந்த காசியப்பனின் முகம் இன்னும் பன்மடங்காகப் பிரகாசித்தது…
சீலகாலனை அணைத்துக்கொண்ட காசியப்பன்…

“தாமதமேன்… வீரர்களைத் தயாராக்கி விரைந்து செல்வோம்… கயிறுகளை வண்டிகளில் ஏற்றி தயாராக்க வேண்டியது தானே..?”
“மைத்துணா… ஒரு சிக்கல் உள்ளது…”
“சீலா … நீ உடனிருக்கையில் என்ன சிக்கல் வரும்?”
“இல்லை மைத்துணா…அதற்கும் தீர்வு உண்டு… ஆனாலும்…. தீர்வு சரியாய் பிழையா என்பதில் தான் குழப்பமே…”
“சீலா… புதிர் போடாதே… “
ஒரு கொம்பன் யானை இன்னொரு கொம்பன் யானையோடு மோதிய வேகத்தில் கீழே விழுந்து பயங்கரமாகப் பிளிறியது…!

தொடரும்….

Related posts

மரங்களோடு வாழ்வார் விவேக்!

Thumi2021

ஐபிஎல் திருவிழா

Thumi2021

நவீன வேதாள புதிர்கள் 03 – காணி நிலம் தந்தோம்

Thumi2021

Leave a Comment