இதழ் 20

அவளும் புதுமைதான்!!!

முதன்முதல் கவிதை எழுதப் பேனாவை எடுக்கும் இளைஞன் பெண்ணைத்தான் வருணிக்கிறான். கேட்டால் ‘அவள் கவிஞன் ஆக்கினான் என்னை’ என்கிறான்.

பெண்ணை வருணிப்பது அப்படி ஒன்றும் சுலபமான காரியமல்ல. வருணணை வலைக்குள் இலகுவில் அகப்படும் மீனும் அல்ல அவள். வார்த்தைகளால் அவளை வடிக்க முயல்வது வெளிச்சத்தைக் கைப்பிடிக்குள் பிடிக்கமுயல்வது போலத்தான். மடக்கிய கைக்குள் இருள்தான் இருக்கும். வெளிச்சம் வெளியே நகைத்தபடி!

அவள் வார்த்தைகளை விட எல்லாம் பெரியவள். அர்த்தங்களை விடவும் ஆழமானவள். அவளை வர்ணிக்க என்று புறப்பட்ட பழம்பெயர் புலவர்கள் பாதாதி கேசம் வரிசையாய் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு உவமையாய் பொருத்தினார்கள். அதுவும் அவளுடைய வெளிவடிவத்தை மட்டும் பிடிப்பதற்கே இந்தப்பாடு. ஆனால் எத்தனை முயற்சிகள் கடந்த பின்னும் இன்னும் அவள் அழகு சொல்லப்படாமல் மிச்சமாய்த்தான் இருக்கிறது.

அது யாராலும் சொல்லிவிடமுடியாத பேரழகு தான். ஆனால் அந்த அழகினை புறத்தோற்றத்தோடு நிறுத்திவிடாமல் அகத்தின் அழகையும் வெளிச்சப்படுத்த முயலும் போதுதான் ஒரு பெண் சகல பரிமாணங்களிலும் தரிசனமாகிறாள்.அந்த முயற்சியுடனே இம்முறை இதழின் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. அகத்தின் அழகுடன் அங்கொரு பெண் ஒளி வீசுவதைக் காணுங்கள்.

ஒரு பெண்ணில் வசீகரம் மட்டுமா இருக்கிறது? இல்லை. பயங்கரமும் இருக்கிறது. பேதமை மட்டுமா இருக்கிறது? சூழ்ச்சியும் இருக்கிறது. கருணை மட்டுமா? கொடூரமும் இருக்கிறது. நியாயம் மட்டுமா? அநியாயமும் இருக்கிறது. அதிசயம் மட்டுமா? சாதாரணமும் இருக்கிறது. வெளிப்படை மட்டுமா? மர்மமும் இருக்கிறது. அருள் வடியும் உமையும் அவளில்த்தான். கபாலமாலை சூடி கோர நர்த்தனம் ஆடும் காளியும் அவளில்த்தான்.

அவள் ஆராய ஆராய ஆபூர்வமானவள். முறத்தால் புலியை விரட்டிய புறநானூற்றுப் பெண் தொட்டு பாரதி சொன்ன புதுமைப்பெண் வரை நாம் இன்னும் விளக்கமுடியாத விசித்திரங்கள் பெண்ணிற்குள் ஏராளம் உண்டு. அது ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் உள்ளது. அதை வலியுறுத்தவே அட்டையில் முயன்றிருக்கிறோம்.

உலகின் புதுமையான பெண்களை எல்லா மூலைகளிலும் துருவித் துருவித் தேடிக்கொண்டே இருக்கிறோம்.
தோளில் பையும், நாகரீக உடையும், ஒப்பனை முகமும், மடியில் கணனியும் கொண்டு பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும், ஏவுகணைகள் ஏவவும் புறப்பட்டுப் போன பெண்களை புதுமைப்பெண் என்று போற்றிக் கொண்டாடுகிறோம். நம் வீதிகளிலே நாம் அன்றாடம் கடந்து செல்கிற ஒரு சாதாரண பெண்ணிடம் நாம் எந்தப்புதுமையையும் கண்டு வியப்பதில்லை. ஏன் புதுமை இருக்கிறது என்பதைக் கூட ஏற்றுக்கொள்வதில்லை.

புதுமைப்பெண் என்பவள் இனிப்புதிதாய் பிறந்து வரப்போகும் அற்புதப்பிறவியோ அல்லது வாழ்ந்து பெயர் பெற்று மாண்ட மங்கையோ அல்ல. புதுமை என்பது நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு பெண்ணிலுமுள்ள ஓரம்சமாகும். அத்தகைய புதுமை ஒன்றையே இம்முறை மகளீருக்காய் விழா எடுக்கும் சிறப்பிதழின் அட்டைப்படத்தில் நாம் அலங்கரித்துள்ளோம்.

இறகுகள் கரைய கரைய நனைந்தபின் வெயில் காய்வதற்காய் வீதிக்கு வந்த ஓர் ஈரப்பறவை இவள்.

ஆகிவிட்டது. வீட்டுக்குள்ளே பூட்டியிருந்த பெண் விடுதலை பெற்று வீதிக்கு வந்து வெகுநாளாகிவிட்டது. இனி பெண் உலகை ஆளப்போகிறாள் என்று கொண்டாடுபவர்களே இவளையும் உங்கள் கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தேரின் வருமான வடக்கயிற்றினை தன்னந்தனியாய் தைரியமாய் இழுத்துச்செல்லும் பாவையிவள் கைகளின் பவித்திரத்தை பாருங்கள். பாராட்டாவிட்டாலும் வீண் பேச்சு பேசாதீர்கள்.

வீட்டிலுறங்கும் தொட்டில் கயிறுகளை தலாட்டுவதும் அந்த மெல்லிய கைகள் தான். விறகுக் கட்டைகளை அடுக்கி முடிச்சுட்டு இறுக்குவதும் அந்த மெல்லிய கைகள் தான்.

விறகுகளை வாங்கும் போது விரல்களையும் விசாரிக்கும் விரசல்காரல்களையும் அவள் கடந்து வருவதும் இவள் மெல்லிய கைகளால் தான். வீரம் என்பது உள்ளம் சார்ந்தது என்பதற்கு உதாரணமாய் இவளை நீங்கள் காணலாம்.

ஏன் இந்தப்பாடு? உண்ணவேண்டும் , உறங்கவேண்டும் அதற்காகவா? இல்லை ஊட்டவேண்டும்; அதற்காகவே உழைக்கிறாள்.

வாழ்வதற்காய் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டும் ; உழைக்கிறாள். வட்டி கட்டினாலும் கடன் மாறாது. கட்டாவிட்டால் மாதம் மாதம் மரியாதை குறையும். அதற்காக உழைக்கிறாள்.

உணவு உடை உறையுள் என அடிப்படைத்தேவைகள தீர்ந்தாலும் இனி ஈன்ற மகவுகளுக்கு சீதனம் கொடுக்க சேர்த்து வைக்கவென்று உழைக்க வேண்டும். உழைப்பு வங்கிக்கணக்கை நிறைக்கா விடினும் கூட முடியில் முழுதும் நரைக்கும் வரை இவள் உழைத்தே ஆக வேண்டும்.

எவ்வளவுதான் உழைத்து உழைத்து ஓய்ந்தாலும் மனம்முறியாமல் இரவு உணவிற்காய் வட்டம் சிறிதும் பிசகாமல் முறுக முறுக சுவை குறையாத தோசைகளை சுட்டு வைக்கும் இவளிடம் இல்லாத புதுமை எதுவென்று இப்போது சொல்லுங்கள்.

புதியன எல்லாம் புதுமையானவையல்ல. புதுமை என்பதே கொண்டாடத்தக்கது. இவள் ஆளுமையில் புதுமை இருக்கிறது. அதைக் கொண்டாடிய ஆக வேண்டும். சாலையில் கடந்து செல்கிற ஒவ்வொரு பெண்ணின் புதுமையையும் கண்டு கைதட்டிக் கொண்டாட பழகுவோம். நம்மால் அது முடிந்தால் பெண்ணுக்கான தினத்தை பெருமையாய்க் கொண்டாடுவோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Related posts

எண்டோமெட்ரியோஸிஸ்

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 17

Thumi2021

திரைத்தமிழ் – 36 வயதினிலே

Thumi2021

Leave a Comment