இதழ்-25

மரண வாக்குமூலம்

குடிநீர் வற்றிய பூமி இது! துளைக்குள்ளும் துளையிட்டு அடித்தண்ணீருக்கு அடிபட்டுக்கொண்டிருக்கிறோம். அருகே, ஒரு தேசத்தில் காற்றும் வற்றி விட்டது. குடிநீர் போத்தல்கள் போல அங்கே வாயு சிலிண்டர்கள் அன்றாட விற்பனைப்பொருளாகி அத்தியாவசியப்பொருளும் ஆகிவிட்டது. அண்டத்தில் ஆங்காங்கே தண்ணீரையும் காற்றையும் தேடி என்ன பயன்? இங்கே இருந்த தண்ணீரையும் காற்றையும் அல்லவா முதலில் பாதுகாத்திருக்க வேண்டும். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறார்கள். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்கள்.

நானும் அப்படித்தான் அலைகின்றேன். என்ன எழுதுவதென்று அலைகிறேன். நீர் வற்றியது போல, காற்று வற்றியது போல, என் தமிழும் வற்றத் தொடங்கிவிட்டது. வற்றத் தொடங்கும் கிணற்றில் அடியொட்ட சென்று கற்பாறைகளில் அடிவாங்கும் வாளி போல என் மூளையும் மூலை முடுக்கெல்லாம் அடிவாங்கித்தான் கடந்த சில மாதங்களாக தமிழைத் தந்து கொண்டிருக்கின்றன.

எழுத்துக்கள் தானாய் வந்து அமர வேண்டும். அதுதான் படைப்பு. நீங்களாவது நான் சொல்வதை கேளுங்கள் என்று இப்போதெல்லாம் எழுத்துக்களை வலிந்து இழுத்து வந்து அமரச்செய்கிறேன். இது திணிப்புத்தான். இதுவரை ஊசியில் நூலைக் கூட திணிக்கத் துணியாதவன் நான். இப்போது ஊசியில் கயிறையே திணிக்கத் தொடங்கிவிட்டேன். ஏன் இந்த மாற்றம்? இது சரியா? தவறா? தெரியவில்லை! கண்ணுக்கு தெரியாத கிருமியால் இந்த உலக இயக்கமே மாறி விட்ட நிலையில் என் மாற்றம் பெரிதாக பேசப்படாது. காலால் நடப்பவர்கள் தலையால் நடப்பதுதான் கலியுகம் என்றார்கள். இப்போதெல்லாம் தெருவில் தலைகள்தான் நடந்து திரிகின்றன.

என் எழுத்துக்களுக்காக யாராவது காத்திருந்தார்களா? என் எழுத்துக்களை எத்தனை பேர் வாசித்தார்கள்? வாசிக்க பரிந்துரைத்தார்கள்? எதுவுமே எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. இதுவரை எந்த பாடப்புத்தகத்திலும் என் எழுத்துக்கள் இடம்பெற்றதாக அறியவில்லை. எனவே, கட்டாயப்படுத்தி என்னை கற்க வேண்டுமென்ற கட்டாயம் எவருக்கும் இல்லை. விரும்பியவர்கள் வாசிக்கலாம். விரும்பாதவர்கள் விலத்தி விடலாம். ஆனால் நான் எழுதுவதை நிறுத்தப்போவது கிடையாது. ரசிகர்கள் எனக்கு தேவையில்லை. ரசிப்பதற்காக நான் எழுதவில்லை. இந்த பூமிப்பந்தில் நானும் வசிப்பதற்காக எழுதுகிறேன். எழுதாவிட்டால் இறந்துவிடுவேனோ என்ற பயம் எனக்கு. ஏனென்றால் என் உயிர் என் எழுத்துக்குள்த்தான் உள்ளது. விரக்தியில் நான் விறகாகிப் போகாமல் இருக்க வேண்டுமென்றால் என் தமிழோடாவது நான் உறவாடி இருக்க வேண்டும்.

தமிழ் அன்னையவள் என்னை அவ்வளவு எளிதில் கைவிட மாட்டாள் என்றுதான் நினைத்திருந்தேன். அவள்தான் என் உயிர்நாடி என்பதை உணர்ந்த மறுகணமே என்னை அவளிடம் அர்ப்பணித்து விட்டேன். அதைத்தான் பாரதி
“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா”
என்று பாடி இருக்க வேண்டும். ஆனால் இப்போது மெல்ல மெல்ல தாயவள் இந்த சேயை விட்டு சென்று கொண்டிருப்பதாக உணர்கிறேன். ஏற்றுக்கொள்ள முடியாத பிரிவுகளை உணரத்தொடங்கும் முன் நான் உணர்ச்சிகளை இழந்துவிட வேண்டும் என்று தான் இப்போதெல்லாம் வேண்டுகிறேன்.

முன்பெல்லாம் நான்கு பேராவது நான் பேசுவதை கேட்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் நான் பேசுவதை நானே கேட்பதில்லை. ஏனென்றால் நான் பேசுவதே இல்லை. திக்கத் தொடங்கி விடுகிறது. என்ன எழுவாய் சொன்னேனென்று பயனிலை சொல்வதற்குள் மறந்து விடுகிறேன். அப்போது தான் ஒரு முடிவெடுத்தேன். தமிழுக்கும் தமிழர்க்கும் ஒரு பெரிய உதவி செய்தேன். ஆம்! அன்றிலிருந்து பேசுவதை நிறுத்தி விட்டேன்.

பேச்சுத் தமிழ் தான் பேசாமல் போய்விட்டது. எழுத்துத் தமிழாவது எங்கும் போகாமல் என்னோடு இருக்க வேண்டும். ஐம்புலனும் ஒடுங்கிக்கொண்டே மரணப்படுக்கையில் சேடம் இழுத்தபடி இருக்கும் ஒருவனுக்கு அவன் இழுத்துவிடும் மூச்சுத்தான் உயிருள்ளதற்கான அடையாளம். எனக்கும் நான் எழுதிக்கொண்டிருப்பதுதான் என் மூச்சு இன்னும் மூர்ச்சையாகவில்லை என்பதற்கான அடையாளம். அதற்கு இந்தப் பக்கத்தில் ஏதாவது கிறுக்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அது தமிழை கெடுத்துவிடக் கூடாது. நான் சாகக்கூடாதென்பதற்காக இன்னொருவனை கொல்வது போன்றது நான் செய்யும் காரியம். இறைவா, நான் வேண்டுவன தருவாயா? என்னில் தமிழ் வற்ற முன்னர் என் குருதி வற்றிவிட வேண்டும்.

எந்த எழுத்தாளனுக்கும் என் நிலை என்றும் வந்துவிடக்கூடாது. என்ன எழுதுவதென்று தெரியவில்லை. ஆனால் எதாவது எழுத வேண்டும். நடந்ததை எழுதவா, நடக்க ஆசைப்பட்டதை எழுதவா என்கிற குழப்பத்தில் ஏதேதோ எழுதினேன். நான் எழுதியதை என்னாலேயே திரும்ப வாசிக்க முடியவில்லை. கண்ணை நீர் நிறைத்து எழுத்தை மறைக்கிறது. எழுதுபவர்களே, எழுதப்போகிறவர்களே! ஒரு எழுத்தாளன் எப்படி இருக்கக்கூடாதென்பதற்கு நான் தான் பொருத்தமான உதாரணம். என்னை ஆவணப்படுத்துங்கள். இவன் போல் வாழக்கூடாது என்று இடித்து உரையுங்கள்!

எல்லோருக்குமான முடிவை யாரோ ஒருவர் எடுப்பதற்குள் இயலுமானவர்களை காப்பாற்றிவிட வேண்டுமென்கிற அவசரத்தில் ஓடுகிறேன். நான் வந்து சேர்வதற்குள் வீழ்ந்துவிடுவேனோ தெரியாது. விழுந்த போதெல்லாம் எழுந்தவனென்று யாருமில்லை. நானும் அதற்கு விலக்கில்லை. என்னால் சொல்லக்கூடியதெல்லாம் ஒன்றுதான்!

என்றாவது ஒருநாள் என் எழுத்து நின்றுவிட்டதா?
அன்று என் மூச்சும் முடிந்து விட்டது!
அதுவரை தமிழோடு வாழ்வேன்!
அதன் பின்னர் என் தமிழ் மட்டும் வாழும்!

இப்படிக்கு,
எழுதவாவது தெரிந்தவன்

Related posts

சிங்ககிரித்தலைவன் – 25

Thumi2021

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

அறுபதில் கலாநிதி ஆறு. திருமுருகன்

Thumi2021

Leave a Comment