இதழ்-25

மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும் – 02

அண்டம்

சிவபெருமான் எவ்வளவு பெரியவர் என்பதை நமது கோணத்திலிருந்து நமக்கு விளக்கமுனைகிறார். அவர் விவரித்திருக்கும் அண்டம், அதனுள் அடங்கியிருக்கும் விண்மீன்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள், அவற்றின் எண்ணிக்கைகள் அனைத்தையும் விஞ்ஞானிகளும் விவரித்திருக்கிறார்கள் என்பதை நாமும் அறிவோம். நாம் புகழ்ந்துரைக்கும் மேலைநாட்டோர் உலகம் தட்டையானது, அதை யாராவது எதிர்த்துப் பேசினால், கம்பத்தில் கட்டிக் கொளுத்துவோம் என்று சொல்லிக்கொண்டிருந்த போது அனைத்து உலகங்களும், விண்மீன்களும் உருண்டையானவை, அவை எண்ணிலடங்கா என்று எதற்கும் கவலைப்படாது மணிவாசகர் பாடியிருப்பதைக் கண்ணுறும் போது நம்மால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.

அடுத்து, அவரது மருத்தவ அறிவைப் பற்றிக் காண்போம். ஒரு கரு தாயின் கருப்பையில் எப்படி வளர்கிறது, அது வளரும்போது எப்படிப்பட்ட ஆபத்துகளைச் சந்தித்து, தாண்டித் தப்பிப் பிழைத்துப் பிறப்பெடுக்கிறது, எப்படிப்பட்ட வேதனைகளை அது அனுபவிக்கிறது என்பதையும் போற்றித் திருவகலில் விளக்குகிறார்.

யானை முதலா எறும்பு ஈறாய
ஊனமில் யோனியில் உண்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்(து)
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர்இரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

போற்றித் திருவகல்: 11-25

தாயின் கருப்பையிலிருக்கும் முட்டையில் தந்தையின் விந்து சேர்ந்து தனது வளர்ச்சியைத் துவங்கும் கரு கிருமிகளிடமிருந்து தப்பித்து, முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவே பெரிதாகிறது. அது இரண்டாகப் பிளக்காமல் தப்பவேண்டும். அப்படி இரண்டாகப் பிளக்காமல் ஒன்றாக இருப்பினும், இரண்டாம் மாதவளர்ச்சியின் போது இடைவிடாத எதிர்ப்புகளிலிருந்து தப்பவேண்டும். மூன்றாம் மாதம் கொழுப்பு கலந்த நிணனீரில் முழுகி இறப்பதிலிருந்து தப்பவேண்டும். நான்காம் மாதம் கூரிருட்டில் நிலைகுலையாது இருக்கவேண்டும். ஐந்தாம் மாதம் கருப்பையில் அதிகமாகச் சுரக்கும் நீரில் முழுகாமல் பிழைக்கவேண்டும். ஆறாம் மாதம் தாங்கமுடியாத உறுத்தலுக்கும் எரிச்சலுக்கும் பலியாகாமல் பொறுத்துக் கொள்ளவேண்டும். ஏழாம் மாதம் கனத்தால் கீழிறங்கும் தாயில் வயிற்றிலிருந்து நழுவிவிழாமல் தப்பவேண்டும். எட்டாம் மாதத்தில் எப்பொழுதும் கருப்பை தன்னைச் சுற்றி அழுத்தும் வலியைப் பொறுத்துக்கொள்ளவேண்டும். ஒன்பதாம் மாதத்திலேயே பிறந்துவிடாமலிருப்பதால் ஏற்படும் வலியைத் தாங்கவேண்டும். பத்தாம் மாதத்தில் பிரசவத்தில் வெளிவரும்போது தாயுடன் வேதனைப் பெருங்கடலில் நீந்தி வெளிவருவதோடு மட்டுமல்லாமல் இறப்பினையும் ஏமாற்றிப் பிழைக்கவேண்டும்.

மனிதக் கருவுக்கு ஏற்படும் இத்தனை சோதனைகளையும், வேதனைகளையும் மாணிக்கவாசகர் விவரிக்கும்போது — பிரசவத்தில் ஒரு தாய்படும் வேதனையை, வலியை அறிந்து போற்றும் நாம், ஒரு கருவும் எப்படிப்பட்ட வேதனையும், கண்டங்களையும், வலியையும் பொறுத்து வெளிவருகிறது என்பதை அறியாமல்தான் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டு, அச்சிசுவின் பெருமையை உணர்கிறோம்.

மிகப்பெரிய யானையாக இருந்தாலும், மிகச்சிறிய எறும்பாக இருந்தாலும், குறையில்லாத கருப்பையில்தான் கரு வளரமுடியும்; அப்படி வளரத் தொடங்கினாலும் அக்கரு கருப்பையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கிருமிகளிடமிருந்து தப்பிப் பிழைத்தால்தான் முழுவளர்ச்சி அடையமுடியும். இதை முதலில் சொல்லிவிட்டு, மாணிக்கவாசகர் மனிதத்தாயின் வயிற்றிலிருக்கும் கருப்பையில் எந்த அளவுக்குக் கரு வளர்க்கிறது, அது எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும், வேதனைகளையும் சந்திக்கிறது என்பதை மாதவாரியாகப் பட்டியலிடுகிறார்:

ஒரு சிசு தனது வேதனைகளை எடுத்துச் சொல்ல இயலாததால் பத்து மாதங்களும் அது தாயின் வயிற்றில் சுகமாக வாழ்கிறது என்று நாம் எண்ணக்கூடாது என்பதை மாணிக்கவாசகரின் மருத்துவ அறிவு தெளிவுபடுத்துகிறது. மேலே கொடுத்துள்ள இந்த விளக்கம் மருத்துவர்கள் அறிந்ததே. மணிவாசகர் ஒப்பிலாச் சிவனடியார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அவர் பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாதவர் என்று நாம் எண்ணக்கூடாது என்பது அவரது பாடல்களில் தெரிகின்றது.

Related posts

தேடல்கள் உள்ளவரை தொடர்வோம்…

Thumi2021

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

ஈழச்சூழலியல் – 12

Thumi2021

Leave a Comment