மஹா வித்துவான் சி. கணேசையர் (ஏப்ரல் 1, 1878 – நவம்பர் 8, 1958) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். ‘வித்துவ சிரோமணி’ என்ற பட்டம் பெற்ற இவர், ‘மகா வித்துவான்’ எனப் போற்றப்பட்டார். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் (1854-1922) மறைந்தபோது, நாவலர்மரபு மறைந்து விட்டதாகக் கவலைப் பட்டவர்கள், குமாரசுவாமிப் புலவரின் மாணவராகிய கணேசையரிலே, நாவலர்மரபு தொடர்வதைக்கண்டு நிம்மதியடைந்தனர்.
இலக்கியத்துறையிலே, இலங்கை இலக்கிய வரலாற்றாசிரியராகவும் இலங்கை இலக்கிய உரையாசிரியராகவும், கம்பராமாயாண பாடாந்தர ஆய்வாளராகவும் இவர் நினைவுகூரப்பட லாம். வேகமாக வளர்ந்துவரும் இலங்கை இலக்கிய வரலாற்றுக்கு, இவருடைய ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் ஒரு முன் னோடி முயற்சியாகும். முட்டு அறுத்துக்கற்பதற்கு வில்லங்கமான இலங்கைக் காவியமான இரகுவம்மிசத்துக்கு இவர் எழுதிய உரை, இலங்கைத் தமிழர் பாரம்பரியப் பெருமை போற்றப்பட்டு வரும்வரை பாராட்டப்பட்டு வருமென நம்பலாம். கம்பராமாயாணத்தை நவீனமுறையிற் பதிப்பிக்க விரும்புவோர், கணேசையர் செந்தமிழ் என்ற சஞ்சிகையிலே தொடர் கட்டுரையாக எழுதிவந்த ‘இராமாவதாரப் பாடாந்தரம்’ என்பதைக் கருத்திலே கொள்ளவேண்டுமென்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, சும்பன்காவியம் என்ற நூலிலே கூறியுள்ளார்.
கணேசையர் இலக்கணத்துறைக்கு ஆற்றியுள்ள பணி இலங்கை அறிஞர் பிறரோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது ஈடிணையற்றதாகத் தோன்றுகிறது. இலங்கை – சிறப்பாக, யாழ்ப் பாணம் – நீண்டகாலமாகச் செந்தமிழைப் போற்றி வந்துள்ளது. நாவலர் நன்னூற் காண்டிகையுரையைத் திருத்திப் பதிப்பித்ததோடு, இலக்கணச் சுருக்கம் என்ற நூலையும் எழுதினார். கணேசையருடைய தொல்காப்பியப் பதிப்புகளுள்ளே அவருடைய எட்டுமுக்கியமான கட்டுரைகள் தொகுக்கப் பட் டுள்ளன. ‘இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை’ என்ற தலைப்பிலே இக்கட்டுரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சிந்தனை (1984) இதழிலே ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, 2025 மார்ச் 3ஆம் தேதி, தெல்லிப்பளையில் அமைந்துள்ள வருத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்தில் அவரது உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. இவரது 147 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த வருடத்தில் இது அவரின் பணிகளுக்கு அளிக்கப்படும் மரியாதையின் ஒரு முக்கிய அடையாளமாகும். மகா வித்துவான் சி. கணேசையரின் உருவச்சிலை திறப்பு விழா, அவரது பணிகளை நினைவுகூர்ந்து, தமிழ் சமூகத்தின் பெருமையை வெளிப்படுத்துகிறது. இது, அவரின் இலக்கிய பங்களிப்புகளை அடுத்த தலைமுறைகளுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும்.
