சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இன்று மனித வாழ்வின் ஒரு அவசியமான பகுதியாக மாற்றம் அடைந்துள்ளது. மக்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர். இதில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஈடுபடுகிறார்கள். ஆனால், இதன் மூலம் பல நன்மைகள் இருந்தாலும், அதற்கு இணையாக பல தீமைகளும் காணப்படுகின்றன. இன்றைய உலகில் தகவல்கள் பரவும் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப், யூட்யூப், மற்றும் இணையதளங்களின் வளர்ச்சி காரணமாக, எந்த தகவலும் சில நொடிகளில் ஆயிரக்கணக்கான மக்களிடம் சென்றடைய முடிகிறது. ஆனால், இவை அனைத்தும் உண்மையானவை என்றும் நம்ப முடியாது. போலித் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதன் மூலம் பெரும் விளைவுகள் உருவாகின்றன.
தவறான தகவல்கள் உண்மைக்குப் புறம்பாக இருப்பினும் உண்மையாக இருப்பது போல பரப்பப்படும். சில நேரங்களில், தகவல்களை தற்செயலாக தவறாக பகிரலாம், ஆனால் சிலர் திட்டமிட்டு மக்களை மோசடி செய்யும் நோக்கத்துடன் அவற்றை பரப்புகின்றனர். பொய்யான செய்திகள் பெரும்பாலும் அரசியல், மருத்துவம், சமூக பிரச்சினைகள், பொருளாதாரம் மற்றும் அறிவியல் சார்ந்தவை ஆக இருக்கின்றன.மருத்துவத் தகவல்கள் தொடர்பான தவறான செய்திகள் அதிகம் பரவுகின்றன. ஒரு குறிப்பிட்ட மூலிகை அனைத்து நோய்களுக்கும் தீர்வாக இருக்கும் என பரவுவதால், மக்கள் மருத்துவ ஆலோசனையின்றி அந்த மூலிகையை நம்பி பயன்படுத்துகின்றனர். இது சில நேரங்களில் அவர்களின் உடல்நிலையை மோசமாக்குவதோடு, உயிருக்கு ஆபத்தாக முடிவடையக்கூடும். கொரோனா, டெங்கு போன்ற நோய்கள் தொடர்பான பொய்யான செய்திகள் மக்களை தவறான சிகிச்சை முறைகளை நம்ப வைக்கின்றன. இதனால், அவர்கள் உண்மையான மருத்துவ ஆலோசனையை புறக்கணிக்க நேரிடலாம்.
அரசியல் மற்றும் சமூக தகவல்கள் தொடர்பாகவும் போலித் செய்திகள் பரவுகின்றன. தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் மற்றும் பிரபலங்களை குறை கூறும் அல்லது புகழ்வதாக போலித் தகவல்கள் பரவலாம். இது மக்களின் கருத்துக்களை மாற்றி அமைக்க துணைபுரிகின்றது. சமூக பிரச்சினைகள் தொடர்பாக உண்மையற்ற செய்திகள் பரவுவதால், கலவரங்கள், போராட்டங்கள் மற்றும் வெறுப்பு உருவாக வாய்ப்பு உள்ளது.
பொருளாதார சம்பந்தப்பட்ட போலித் தகவல்களும் மக்களை ஏமாற்றுகின்றன. “ஒரே நாளில் பணக்காரர் ஆகலாம்!” போன்ற விளம்பரங்கள் போலித் தகவல்களை அடிப்படையாக கொண்டிருக்கும். சில இணைய தளங்கள் “இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்” என்று மக்களை மோசடி செய்கின்றன. இதனை நம்பி பலர் தங்கள் சேமிப்பை இழந்து தவிக்கின்றனர்.அறிவியல் மற்றும் இயற்கை சம்பந்தப்பட்ட போலித் செய்திகள் சமூகத்தில் பயம் ஏற்படுத்துகின்றன. நிலநடுக்கங்கள், சூறாவளிகள், மற்றும் பூமி அழிந்து விடும் போன்ற அவதூறு செய்திகள் பரவினால், மக்கள் குழப்பமடைந்து நம்பிக்கையிழக்கின்றனர். இது மன அழுத்தத்தையும், சமூக ஒழுங்கு கேடையும் ஏற்படுத்துகிறது.
இத்தகைய தவறான தகவல்களை பரப்புவது பல தீமைகளை ஏற்படுத்துகிறது. முதன்மையாக, சமூக கலவரம் உருவாகலாம். பொய்யான அரசியல் செய்திகள் மக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் வெறுப்பை உருவாக்கும். தவறான மருத்துவ ஆலோசனைகளை நம்பி உடல்நலத்தை பாதித்துக்கொள்வதன் மூலம் உயிரிழப்பு ஏற்படலாம். போலி முதலீட்டு திட்டங்கள் மக்களை ஏமாற்றி அவர்களின் பொருளாதாரத்தை அழிக்கின்றன. இதனால், பண இழப்பு ஏற்படும். தவறான செய்திகள் மன அழுத்தத்தையும், பயத்தையும் ஏற்படுத்தும் என்பதும் உண்மை.

அதேநேரம் உங்களுக்கு ஒரு சமூக வலைததள கணக்கு இருந்தாதான் அதன் மூலம் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம். இதன் மூலம் பணக்காரர்கள் ஆன பலர் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ளார்கள். உங்கள் காணொளியை எத்தனை பேர் பார்த்தனர் என்பதை பொறுத்து உங்கள் வருமானம் அமையும். இதனால் பலர் பொய்யான தகவல்களையும் உண்மை போல் கூறி மக்களை கவர்ந்து ஏமாற்றுகின்றனர். உதாரணமாக சமூக வலைத்தள காணொளி ஒன்றின் தலைப்பாக “முருங்கையிலையின் மருத்துவ குணம்” என்று போட்டால் வாசிப்பவர்களை விட “இறந்தவரையும் உயிர்ப்பிக்கும் அதிசய மூலிகை” என்று போட்டால் தான் அதிக பார்வையாளர்களை கவரலாம். ஆனால் அதில் உண்மைத் தன்மை எங்கே இருக்கிறது? என்வே மக்கள் இது தொடர்பாக விழிப்புணர்வு பெறுவது அவசியம். சமூக வலைத்தளம் சொல்வதெல்லாம் உண்மை இல்லை.இந்த பிரச்சினைகளை கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளன. ஒரு தகவல் உண்மையானதா என்பதை நம்பகமான ஊடகங்களில் சரிபார்க்க வேண்டும். ஒரு செய்தி ஒன்றுக்கு மேற்பட்ட நம்பகமான ஊடகங்களில் வந்திருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அரசு மற்றும் நம்பகமான மருத்துவ மையங்களின் அறிவிப்புகளை மட்டும் நம்ப வேண்டும். உலக சுகாதார அமைப்பு (WHO), இலங்கை சுகாதார அமைச்சு போன்ற அதிகாரப்பூர்வ ஊடகங்களின் அறிவிப்புகளை மட்டும் நம்புவது சிறந்த வழியாகும்.

சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாகும். போலி தகவல்களை பகிரும் பழக்கத்திலிருந்து விலக வேண்டும். சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் உண்மையா என விசாரிக்காமல் பகிரக் கூடாது. போலி தகவல்களை புகாரளிக்க வேண்டும். இலங்கையில் CERT (Computer Emergency Readiness Team) போன்ற அமைப்புகளுக்கு போலி தகவல்களை புகாரளிக்கலாம். போலி தகவல் பரப்புபவர்களை எதிர்த்துப் புகார் அளிப்பது சமூகத்தின் நலனுக்காகும்.தவறான தகவல்கள் ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக வளர்ந்து வருகிறது. அவற்றை முறியடிக்க ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு தகவல் உண்மையானதா என்பதை சரிபார்க்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களை பரப்புவதை தவிர்ப்பதே சமூக பாதுகாப்பிற்கான மிகப்பெரிய முதலீடாகும்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு “
