மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோவில், வடக்கு மாகாணத்தின் முக்கியமான முருகன் ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. அருள்மிகு மாவைக் கந்தவேள் பெருமானின் திருவருள் சூழ, இத்திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஏப்ரல் 11, 2025 வெள்ளிக்கிழமை பங்குனி உத்தர நன்னாளில் நடைபெறவுள்ளது. இது 50 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் மிகப்பெரிய ஆன்மீக விழா என்பதால், பக்தர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும், பக்தி பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மஹா கும்பாபிஷேக நிகழ்வுகள் ஏப்ரல் 4 ஆம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு கர்மாரம்பம் மூலம் ஆரம்பமாகும். இதனை தொடர்ந்து ஏப்ரல் 6 முதல் 11 வரை தினமும் காலை, மாலை என யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளன. ஏப்ரல் 7 முதல் 9 ஆம் தேதி வரை அதிகாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்தர்கள் எண்ணைக் காப்பு சாற்றலாம். மேலும், ஏப்ரல் 10 ஆம் தேதி அதிகாலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை எண்ணைக் காப்பு நிகழ்வு நடைபெறும்.
மஹா கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வான 10ம் கால யாக பூஜை ஏப்ரல் 11 ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு நடைபெற உள்ளது. அதன் பின்னர், காலை 8:07 மணி முதல் 10:09 மணி வரை கோபுரங்கள், விமானங்கள், விநாயகர், மூலவர் முதல் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேக அபிஷேகங்கள் நடத்தப்படும். இதற்குப் பிறகு மாலை திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும்.
மஹா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது. இது கோவிலின் புனிதத்துவத்தை உறுதிப்படுத்தும் முக்கியமான ஆன்மீக வழிபாடாகும். பக்தர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். முருகப் பெருமானின் அருளைப் பெற, எம்பெருமான் திருவுளத்தில் இணைந்திருக்க அனைவரும் இந்த விழாவில் பங்கேற்று இறையருளைப் பெற வேண்டும்.அதனால், அனைவரும் பக்திபூர்வமாக கோவிலுக்கு வருகை தந்து, மகா கும்பாபிஷேக விழாவின் ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ளலாம். மாவைக் கந்தவேள் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
