“நிலா பேசுவதில்லை
அது ஒரு குறை இல்லையே.. “
அது குறையே இல்லை…. நிறை..!
நிலவு மட்டும் பேசியிருந்தால் காலங்காலமாய் எத்தனை கதைகளை அது சொல்லியிருக்கும்?
பல அர்த்தங்களை கொண்ட ஓவியம் போல் அது ஊமையாய் இருப்பதால்தான் காலந்தோறும் நிலவை துணையாய் எண்ணுகிறார்கள்.
நிலவு நமக்கு சொல்கிற கதைகள் ஏராளம். கதை சொல்லி சோறு ஊட்டுகிற அன்னை எப்போது நிலவை காட்டி சோறு ஊட்டத் தொடங்கினாளோ அன்று தொட்டு நாம் நிலவிடம் கதைபேசத் தொடங்கிவிடுகிறோம்.
காதலர்களின் பெரிய தெய்வம் நிலவுதான். காதலர்களை நன்குணர்ந்த தோழமையும் நிலவுதான். நிலவிடம் கேளுங்கள்.. அது சொல்லக்கூடிய காதல் கதைகள் எத்தனையோ..
நிலவின் சாட்சியத்தில் நிகழ்ந்த இரண்டு காதல் கதைகளை பேசுகிறது எண்பதுகளில் வெளிவந்த ஒரு திரை இலக்கியம் – கிராமத்து காவியம். பொருள் தேடி அலைந்து கொண்டிருந்த உலகம் நின்று இரசித்துச் சென்ற ஒரு கதை. வெற்றிகளும் சாதனைகளுமே – இன்பமும் சுகமும் என்று நினைத்த உலகிற்கு “சுகராகம் சோகந்தானே…..” என்று பட்டிதொட்டியெங்கும் கூவிய குயிலின் கதை.
பச்சை நிற களம்.. பசுமையான வயல்வெளி.. வயலிற்கு வனப்பு தரும் ஒற்றை ஆறு… ஆற்றிற்கு இந்தப்புறம் தான் அந்த அழகிய கிராமம். கூவுகிற குயில், இன்னும் சில பறவைகள், ஆடுகள், மாடுகள் என அத்தனை அழகுடன் மனிதர்கள் சிலரும் நிறைந்திருந்த ஒரு கூட்டுக் கிராமம். கூட்டுக் குடும்பங்களே இல்லாது போன நாளில் ஒரு கூட்டுக்கிராமம் இருந்த கதை நம் கற்பனையை நனைக்கிறது.
அடுக்கு மொழியால் வசனமளந்தே சுட்டெரிப்பவள் பொன்னாத்தா.. பொன்னாத்தாவின் கணவன் மலைச்சாமிதான் கதையின் நாயகன்.

‘இந்த மனுசனிற்கு வாக்கப்பட்டு நான் என்னத்த கண்டேன். முப்பது வருசமா ஓட்டு வளையத்த பார்க்கிறதும், மூக்க சிந்தி போடுறதுமாவே காலத்த கழிச்சிட்டன்.. கல்லு சிவத்துக்கு கூட கண்ணு காது இருந்த பொன்னாத்தா பேச்சிற்கு இந்நேரம் உருகி ஒடியிருக்கும்..’
பொன்னாத்தா அவள் சோகத்த சொல்லிச் சொல்லி கூவுவாள். மலைச்சாமி சொல்லமாட்டார். வயல் மேடு தேடிச்சென்று பாடுவார்…
ஏதோ என்பாட்டுக்கு
நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த
சொன்னேனடி….’
மலைச்சாமியின் பாட்டுக்கு எத்தனையோ குயில்கள் எசப்பாட்டு பாடும்.
அப்படி எசப்பாட்டு பாடிய ஒரு குயில் தான் ‘குயில்’. ஆம் அவள் பெயரும் குயில் தான். ஏதோ ஊரிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவள். ஆத்தோரம் மண்வீடு கட்டி இருந்து ஊர்ப்பொன்னு, பெரிசுக ஆத்தக்கடக்க பரிசல் ஓட்டி வயித்த நிரப்பட்டும் என்று வழி விட்டவரும் மலைச்சாமிதான்.
மலைச்சாமி … ஊரிலயே உயர்ந்த மனிதன். செல்வத்திலுந்தான் .. செல்வாக்கிலுந்தான்.. செல்வாக்கில் உயர்ந்தது அவர் குணத்தால்.. செல்வத்தில் உயர்ந்தது எப்படி என்று பொன்னாத்தா தான் அடிக்கடி சொல்வாள்..
“அந்தாள் எனக்கு வாக்கப்பட்டு வரும் போது ஒரு துருப்பிடிச்ச துரட்டுக் கம்பியோடயும், பத்து வெள்ளாட்டோடயும் தான் வந்தாரு. அதான் அந்தாளு பரம்பர சொத்து.. செவக்க வேட்டி கட்டினதே எங்கப்பன் காசிலதான்.. அதான்… “
இப்படி வாயால் அடுக்குவாள் பொன்னாத்தா.
அத்தனை சொத்தும் பொன்னாத்தா அப்பன் சொத்துதான்.. ஆனால் சும்மா கொடுக்கவில்லை. கைமாறா கொடுத்தது. கௌரவக்கேடு விளையாமல் நடந்த அவசரத்திருமணம் மலைச்சாமி பொன்னாத்தா திருமணம்.

‘இந்த சிறுக்கி மக ஒரு தப்பு பண்ணிபுட்டன்.. இல்லேண்ணு சொல்லல.. ஒரு பொழுது ஒருத்தனோடு படுத்து எழுந்திருச்சன். புள்ளையோடு வந்தன்.. அதுக்காக உன் தலைல கட்டி வைச்சு ஆயுசுக்கும் தண்டனையா? ஆஸ்தி பாஸ்தியோட அறுபது பவுண் நகையோட இருந்த என்ன எங்கப்பன் துருப்பிடிச்ச துரட்டுக் கொம்பும் பத்து வெள்ளோடயும் வந்த உனக்கு..’
பொன்னாத்தா செய்த சின்னத்தவறு இதுதான். தந்தை வழிச்சொத்தின் பகுமானம் பேசி அவள் மூடி மறைக்க முயல்கிற உண்மையும் இதுதான். பொன்னாத்தாவின் தந்தை – தன் தாய் மாமன் காலில் விழுந்து மன்றாடியதால் தான் பொன்னாத்தாவை மணந்து கொண்டார் மலைச்சாமி. ஆனால் அன்றிலிருந்து மலைச்சாமி பொன்னாத்தாவிடம் வாய்திறந்ததில்லை. வாழ்ந்ததுமில்லை. ஊருக்காக ஒரு வாழ்வு .. பொன்னாத்தாவின் கணவனாக.. பொன்னாத்தா மகளிற்கு ஒரு தந்தையாக… பொன்னாத்தா பேரனிற்கு ஒரு தாத்தாவாக…. மற்றும்படி மலைச்சாமி வாழ்வென்பது பாட்டோடுதான்..
அவர் பாட்டிற்கு எசபாட்டு பாட வந்த குயில்தான் அவர் வாய்விட்டுப் பேசும் தோழியாகிறாள்.
ஒரு நாள் இப்படித்தான்… பொன்னாத்தா வீட்டில் ஒரு குருவி.. சிட்டுக்குருவி..
அந்தநேரம் பொன்னாத்தாவும் வீட்டில் இல்லை.. அதனால் குருவிய பார்த்த மலைச்சாமிக்கு பாட்டு வந்துவிட்டது.
“ஏ குருவி… சிட்டுக்குருவி…
ஒன் ஜோடி எங்க அதை கூட்டிக்கிட்டு
எங்க விட்டத்தில வந்து கூடு கட்டு
பொல்லாத வீடு…
கட்டு பொன்னான கூடு…
இப்போ பொண்டாட்டி இல்ல…
வந்து என்கூட பாடு..”
அந்நேரம் வீதி வழியாக மீன் விற்றுப் போகிற குயில் எசப்பாட்டு பாடுகிறாள்..
“ஏ குருவி……
ஐயா உள்ளத்திலே நல்ல அன்பு இருக்கு
ஆனா வீட்டுக்குள்ள.. கொஞ்சம் வம்பிருக்கு
பொண்டாட்டிக்காரி…. என்னன்னு பாப்பா
வந்து உன் கூட்ட பாத்தா..
ஹ…. ஹ….ஹ…
கொடக்கூலி கேப்பா..”
மலைச்சாமி – குயில் கதை நளினமும் ஏளனமுமாய் இப்படியே வளர்ந்தது. குயில் சாதி அடிப்படையில் மலைச்சாமியை நெருங்கமுடியாதவள். ஆனால் அவளை பொறுத்தவரை அவள் ஏழை வீட்டு மகாராணி..
‘நல்லா புழைச்ச காலத்திலயே போராவூரணி கோயிலில் பத்தாயிரம் பேருக்கு சோறு போட்டு காது குத்தி பேர் வெச்சாங்க.. என் பேரு குயிலு’ இது அவள் மிடுக்குடன் அடிக்கடி சொல்லும் வசனம்.
மலைச்சாமி – குயில் கதை என்ன விளக்கம் என்று அறிவது அவ்வளவு சாதாரணமானதல்ல. அதற்கிடையில் நாம் மலைச்சாமியின் மருமகன் கதையை கொஞ்சம் சென்று பார்ப்போம்.
செல்லக்கண்ணு அவன் பெயர். செருப்புத் தைக்கிற செங்கோடன் மகள் செவுளி மீது சொல்லக்கண்ணுக்கு காதல். சொல்லக்கண்ணுக்கு உறவென்பது தாய்மாமன் மலைச்சாமி தான். பொன்னாத்தாவிடம் ஏச்சு பேச்சு வாங்கி அவசரத்திற்கென்று இருக்கும் எடுபிடி தான் செல்லக்கண்ணு. அப்பாவி..
செல்லக்கண்ணு குழல் இசைப்பான். அவன் சோகம் குழல் வழியே..
சட்டைப்பொத்தான் கூடப் போடத் தெரியாத அவனிற்கு குழாய்ச்சட்டை போட்டு அழகு பார்க்க நினைக்கிறாள் செவுளி. சேர்த்து வைத்த பணத்திலே வாங்கிக் கொடுத்தாள். புது உடுப்பு போட்டுக் கொண்டு வீடு வந்தவனை பொன்னாத்தா கண்டுவிட்டாள். காணாமல் போன தனது இருபத்திரண்டு ரூபாதான் குழாய்ச்சட்டையா வந்து நிக்குது என்று நினைத்தவள் செல்லக்கண்ணுவ வெளுத்து வாங்கி விட்டாள்.
இருள் சூழ்ந்து விட்டது. ஆற்றங்கரை. அடி வாங்கிய செல்லக்கண்ணுக்கு கோபம். அடித்த பொன்னாத்தா மேலல்ல. போட்ட குழாய்ச்சட்டை மீதுமல்ல. வாங்கித்தந்த செவுளி மீதுதான்.
செவுளி என்ன சொல்லியும் அவன் சமாதானமாகவில்லை. ஆத்தோரமாய் நீரை பார்க்கிறாள். நீரில் நிலா… அப்படியே அள்ளி வந்து செல்லக்கண்ணு முன் நின்று
‘இத பாரய்யா… என் கூடதான் பேசமாட்டா.. உனக்கு பிடிச்சமான நிலாவ கொண்டு வந்து இருக்கன். அது கூடயாவது பேசய்யா..’
நிலவை ஊற்றினாள். காட்சியை முந்திக் கொண்டு இசை வந்தது..
“அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக..
“எங்க எங்க
கொஞ்சம் நான் பார்க்குறேன்”
“கண்ணை மூடு
கொஞ்சம் நான் காட்டுறேன்”
செல்லக்கண்ணு செவுளி காதலும் சாதி வழக்கப்படி சேர்வதற்கு வாய்ப்பே இல்லாத காதல் தான். அது தெரிந்த இருவரும் ஊரை விட்டு ஓடிச்செல்ல முடிவெடுக்கிறார்கள். ஊர் தாண்டிப் போக பரிசல் வேண்டி குயிலிடம் வந்து நின்றனர். அவ்வேளை அருவாளோடு வந்த மலைச்சாமியின் கண்களில் அகப்பட்டுக் கொண்டனர்.
எப்படியோ அவர்களை வாழ விடும்படி மன்றாடுகிறாள் குயில்.. “கௌரவத்துக்காக இந்த சின்னஞ்சிறுசுகளை பிரிச்சு காலந்தோறும் அதுகள அழச் சொல்லுறீயா” எனக் குயில் கேட்ட கேள்வி மலைச்சாமியை குத்தியது. அந்தச் சிட்டுக் குருவிகளை பிரிக்க வேண்டாம் என்று முடிவெடுத்த மலைச்சாமி சாதி என்னும் கோட்டை அழித்து செல்லக்கண்ணு செவுளி திருமணத்தை தன் தலைமையிலேயே நடத்தி வைத்தார். நிலவின் கண்முன் நிகழ்ந்த அந்தக் காதல் அன்று வெற்றியும் கண்டது.
இனி மலைச்சாமி – குயில் கதை என்னவாகப் போகிறது? மலைச்சாமி பஞ்சாயத்தில பேசும் போது வாய் சிறிது தடுமாறினாலே மலைச்சாமி வீடுவர முதல் கதை பொன்னாத்தா காதிற்கு வந்துவிடும். குயில் கதை வராமலா இருக்கும்? திரித்து திரித்து ஊரெல்லாம் மலைச்சாமி குயில் விவகாரந்தான் பேசுபொருள்.
மலைச்சாமி வீடு வரும் போதெல்லாம் பொன்னாத்தா வாய்ப்பாட்டு மந்திரமும் இப்போது குயில் பற்றித்தான்…
ஆனால் மலைச்சாமிதான் பொன்னாத்தாவை எப்போதும் கண்டு கொண்டதில்லையே.. இப்போதும் கண்டு கொள்ளவில்லை.
ஊர் என்ன பேசினாலும் எதையும் கண்டு கொள்ளாமல் அந்த கிராமத்து வீதிகளில் நடந்து கொண்டே இருப்பார். நடிப்பதில் திலகம் என்று பெயரெடுத்தவர் நடப்பதில் எத்தனை அமைதியைக் காட்டினார்.
ஊர் பேசுவது பேசட்டும் என தன் கௌரவத்தை இழக்காத நடை .. சலனமில்லாத நடை…
குயில் கூட ஒரு முறை மலைச்சாமியிடம் கேட்டாள்..
‘இல்லை…’ என்று அழுத்தமாக கூறிவிட்டு நடக்கத் தொடங்கினார் மலைச்சாமி.
குயிலின் மனது கீதம் இசைத்தது.
“பழச மறக்கலியே
பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சி
ஊரு சனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக
அரும குறஞ்சீக
தரும மகாராசா
தலைய கவுந்தீக
அட கண்ணு காது
மூக்கு வச்சி
ஊருக்குள்ள பேச்சு..”

தன்னால் ஒரு களங்கம் மலைச்சாமிக்கு வந்ததை எண்ணுகையில் குயிலிற்கு வருத்தம் இருந்தாலும் மலைச்சாமி மீது தான் கொண்ட அன்பு மட்டும் சொல்லப்படாத ஓர் உண்மைதான்..
‘என் புருசன வச்சிருக்கிறியா..?’ என நடுத்தெருவில் நிறுத்தி வைத்து பொன்னாத்தா அடித்த போதும் கூட ஊரே கேட்க பொன்னாத்த சொன்ன சொல்தான் குயிலிற்கு ஒரு பூரிப்பை அளித்தது.
இருக்கட்டுமே.. இருந்தால் என்ன… மலைச்சாமி மட்டும் இதை ஏற்க மறுக்கிறார். கௌரவத்திற்கு அஞ்சுகிறார். களங்கமென்று எண்ணுகிறார்.
“களங்கம் வந்தால் என்ன பாரு
அதுக்கும் நிலானு தான் பேரு
அட மந்தையில
நின்னாலும் நீ
வீரபாண்டி தேரு
ராசாவே
உன்ன நம்பி
இந்த ரோசாப்பு இருக்குதுங்க”
நிலவு மீண்டும் ஒரு காதலிற்கு சாட்சியாய் வந்து நிற்கிறது.
களங்கம் எத்தனை இருந்தாலும் முழு நிலவு – நிலவு தான் . ஒரு நிலவினை சாட்சியாக்கி காதலை சொல்லிவிட்டுப்போன ‘முதல் மரியாதை’ என்கிற திரைக்காவியத்தையே இதுவரை கதையளந்தோம் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
இந்த அவசரஉலகு கிராமங்களை அழித்து விடலாம். விளக்குகளை அணைத்துவிடலாம்.. ஆனால் நிலவை அணைக்க முடியுமா.. பூமியுள்ள காலம் வரை நிலவும் இருக்கும். நிலவுள்எ காலம் வரை மண்ணில் இது போன்ற கதைகளும் இருக்கும்.

நிலாக்காலங்கள் எல்லாம் விழாக்காலங்களாகவும் விரத காலங்களாகவும் கொண்ட நம்நாட்டவர் அனைவரிற்கும் சித்திரை முழுநிலவுத் திருநாள் மேலும் சிறப்பு சேர்க்கட்டும்.
