இதழ் 83

புத்தகப்பைச் சுமையால் பாதிக்கப்படும் மாணவர்கள்

பாடசாலை மாணவர்களின் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக இன்று புத்தகப்பைகளின் அதிக எடை அமைந்துள்ளது. கல்வி என்பது ஒவ்வொரு மாணவருக்கும் அறிவை வழங்கும் பயணமாக இருக்க வேண்டும். ஆனால் அந்த பயணம், ஒவ்வொரு நாளும் பின் சுமக்கும் ஒரு பாரமாக மாறியுள்ளது. மாணவர்கள் அவர்களுடைய வயதுக்கும், உடல் திறனுக்கும் மேற்பட்ட எடையை சுமக்கின்றனர். இந்த நிலைமையால், அவர்களது உடல்நலம் மீது தீவிரமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது பல்வேறு ஆய்வுகளிலும், மருத்துவ அறிக்கைகளிலும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவர் சமல் சஞ்சீவ் அவர்கள் இது பற்றி கூறுகையில், புத்தகப்பைகளின் அதிக எடை காரணமாக, மாணவர்கள் முதுகுத்தண்டு வலி, கழுத்து வலி, தலைவலி, நரம்பு கோளாறுகள் மற்றும் சமநிலை குறைபாடு போன்ற பலவிதமான உடல் நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர் என கூறியுள்ளார். இவை மாணவர்களின் வளர்ச்சி மட்டுமின்றி அவர்களின் கல்விச் செயல் திறனையும் மங்கச்செய்கின்றன.

மாணவர்கள் பெரும்பாலும் தங்களது உடல் எடையின் 15 முதல் 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட எடையை தங்களது புத்தக பைகளில் சுமக்கின்றனர். இது நெற்றிப் பஞ்சையிலும் முதுகுத்தண்டிலும் நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலைமைக்கே வழிவகுக்கின்றது. குறிப்பாக, குறைந்த வயதிலேயே இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுவதை மருத்துவர்கள் மிகுந்த கவலையுடன் கூறுகின்றனர்.

இந்தப் பிரச்சினை பற்றி கடந்த பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் உரிய தீர்வுகள் எடுக்கப்படாமை மிகவும் கவலைக்கிடமானது. கல்வி அமைச்சும், சுகாதார அமைச்சும் ஒன்றாக இணைந்து ஒரு திட்டமிடல் நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகிறது. துமியின்
ஆய்வுகளூடாக பின்வரும் ஆலோசனைகளை பற்றி சிந்தித்து செயலாற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் துமி அன்புடன் வேண்டிக் கொள்கிறது.

  1. பாடப்புத்தகங்களை பகுதிகளாக பிரித்து அச்சிடுதல்,
  2. தேவையற்ற புத்தகங்களை தினசரி பள்ளிக்கு கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்,
  3. பாடசாலைகளில் தனித்துவமான புத்தகங்கள் வைக்குமிடங்களை ஏற்படுத்தல்,
  4. பாடப்புத்தகங்களின் எடையைக் கருதி நேர சூசி தயாரித்தல்,
  5. மின்னணு புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் கற்றல் முறைகளை ஊக்குவித்தல்

இவ்வாறு பல்வேறு தீர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதனுடன், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் இப்பிரச்சினையின் தீவிரத்தன்மையை உணர்ந்து, தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். பிள்ளைகள் தினமும் புத்தகம் அடுக்கும் சோம்பேறித்தனத்தால் நேர அட்டவணைக்கேற்ப புத்தகங்களை கொண்டு செல்லாமல் எல்லா புத்தகங்களையும் கொண்டு செல்வார்கள். இதனை பெற்றவர்களும் ஆசிரியர்களும் உரிய முறையில் கண்காணித்து பிள்ளைகளை நெறிப்படுத்த வேண்டும்.

ஒரு நாடு தனது எதிர்காலத்தை மாணவர்களிடம் எதிர்பார்பது என்பது ஒரு வழக்கமான சொற்றொடராக இல்லாமல் செயல்பாட்டிலுள்ள யதார்த்தமாக இருக்க வேண்டும். அந்த எதிர்காலத்தை பாதுகாக்கும் முதல் படியாக, மாணவர்களின் உடல்நலத்தை காப்பது மிக அவசியமான ஒன்றாகும். எனவே, புத்தகப்பைகளின் எடையை கட்டுப்படுத்தும் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த அரசாங்கம், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இது மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்வையும், சிறந்த கல்விச் சூழலையும் உருவாக்கும் முன்னோடியான நடவடிக்கையாக அமையும்.

ஒன்றாக சிந்தித்து நன்றாக செயற்படுவோம்

Related posts

சிரிப்பு மருத்துவர் சார்லி சப்ளின்

Thumi202122

நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர் அரசுப் பணியில் சேர வழி உள்ளதா?

Thumi202122

மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் அறங்காவலர்சபையின் போற்றத்தக்க பணி.

Thumi202122

Leave a Comment