இந்திய விமானம் விபத்துக்குள்ளான செய்தி வெளியான உடனே, பலரும் “எந்த இருக்கையில் அமர்ந்தால் உயிர் பிழைக்கலாம்?” என்ற கேள்வியில் ஆர்வம் காட்டினர். உண்மையில் அந்த விமானத்தில் பயணிக்காதவர்கள் கூட விமான பயணத்தின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்தனர். ஆனால் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டிய வீதிகளில் நாள்தோறும் நிகழும் விபத்துகளுக்குத் தீர்வு காண நம்மில் எத்தனை பேர் உண்மையான கவலை கொண்டிருக்கிறோம்?
2025ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை இலங்கையில் வீதி விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விமான விபத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட 4-5 மடங்கு அதிகம். இது எமது நாடு மட்டுமின்றி உலகளாவிய கவலையாக இருக்கிறது.
வீதி விபத்துகளின் முக்கிய காரணிகள் என்று பின்வருவனவற்றை கூறலாம்
- வேகக்கட்டுப்பாடின்மை
- மது அருந்தி வாகனம் ஓட்டுதல்
- மனச்சோர்வு அல்லது உறக்கத்துடன் வாகனம் செலுத்துதல்
- வீதியை பயன்படுத்துவோர் வீதிப்போக்குவரத்து விதிகளை பின்பற்றாமை
- குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்காமை
இவை அனைத்தினதும் அடிப்படை சாரதியின் கவனயீனமும் தவறுமாகவே இருக்கும். அதாவது மனித தவறுகள். ஆனால் அவை ஒருவரின் தவறாக இருந்தாலும் பலர் மீது தாக்கம் ஏற்படுத்தும். இது மிகப்பெரும் துர்பாக்கியம்.
அண்மையில் நிகழ்ந்த ஒரு கொடூர விபத்தில் ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மற்ற இரண்டு பேர் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நம்மில் பலர் அந்த சம்பவத்தின் மீது சில நாட்கள் சோகத்தை வெளிப்படுத்தினாலும், பின்னர் மறந்து விடுகிறோம். இது தவிர்க்க முடியாத இயற்கை பேரழிவு அல்ல; மனித தவறுகளால் நிகழும் மனிதநேயம் இழந்த பேரழிவு.

நம்மால் என்ன செய்ய முடியும்?
- போக்குவரத்து ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் தாங்கள் நடக்கும் வீதியை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளவர்களாக எண்ணிக்கொண்டு நடக்க வேண்டும். - வாகன ஓட்டுநர்களுக்கு கட்டாய பயிற்சி மற்றும் நெறிமுறைகள் தேவை.
ஓட்டுநர் உரிமம் பெறும் முன் முழுமையான பயிற்சி, மற்றும் விதிகளை மதிக்கும் மனப்பாங்கு வளர்க்க வேண்டும். - மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியில் போக்குவரத்து ஒழுங்கு கற்பிக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே ஒழுங்கு நடைமுறைகளை கற்றுக்கொடுத்தால் எதிர்காலத்தில் பொறுப்பான குடிமக்கள் உருவாக முடியும்.
- சிசிடிவி, போலீசார் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக்க வேண்டும். அதோடு குற்றவாளிகளுக்கான தண்டனையும் கடுமையாக்கப்பட வேண்டும்.
- முக்கியமாக – நாம் ஒவ்வொருவரும் தன்னிலைப் பார்வையை வளர்க்க வேண்டும். “நான் மட்டுமா தவறு செய்தேன்? எல்லாரும் தானே செய்கிறார்கள்.” என்று தப்பித்துக் கொள்ளாமல் “நானும் ஒரு பொறுப்புள்ள நபர்தான்” என்று எண்ண வேண்டும்.
- விமான விபத்து ஒரு விந்தையான நிகழ்வாக இருக்கலாம். ஆனால் வீதி விபத்து என்பது நாள்தோறும் நடைபெறும் அவலச் செய்தி. அதனால் வீதி விபத்துக்களை தடுக்கும் வழிகளை ஆராய்ந்து, அதன் மீது சரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது. நம்மிடம் உள்ள முக்கியமான சொத்து உயிர். அதை பாதுகாப்பது நம் கடமை. வீதி ஒழுங்கைப் பற்றி இன்று நாம் சிந்திக்காவிட்டால், நாளைய விபத்து செய்தியில் நம்மை அல்லது நம் நெருங்கியவர்களைப் பற்றிய புலம்பல்கள் இடம்பெறக்கூடும்.

