இதழ் 85

ஈழத் தமிழ் உலகின் அருஞ்சொத்து பேராசிரியர் சி. தில்லைநாதன் அமரத்துவம் அடைந்தார்

தமிழ் ஆர்வலரும் சிந்தனையாளரும், தமிழர் போற்றும் ஆய்வறிவாளரும், பல்கலைக் கழகத்தின் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவருமான அன்பும் பண்பும் நிறைந்த எமது பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்கள் காலமான செய்தி நெஞ்சை உலுக்குகிறது. மும்மொழி அறிவும் திறனாய்வாளரான பேராசிரியர் மானிடரை நேசிப்பவராகவும் மாணவரை அரவணைப்பவராவும் இருந்தவர்.

பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள் 02.05.1937ஆம் ஆண்டு சின்னத்தம்பி – நாகம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.சுன்னாகம் திருஞான சம்பந்தர் வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார்.1948-ஆம் ஆண்டில், இவர் இடைநிலைக் கல்வியை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் கற்று அறிந்து.1956-ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் கிளரிக்கல் பரீட்சையில் தேற்றி இராணுவத் தலைமை அலுவலகத்தில் நியமனம் பெற்றார்.1957-ஆம் ஆண்டு பல்கலைக் கழக அனுமதி கிடைத்தது. அக்காலத்தில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இருந்து இருவரே பல்கலைக் கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் தமிழ், பொருளியல், வரலாறு முதலான பாடங்களை எடுத்துக் கொண்டார். இவருடைய சக மானாக்கராக மு.தளையசிங்கம், தொலைத் தொடர்பு சாதனங்களின் அமைச்சரின் செயலாளர் கே.சி.லோகேஸ்வரன், அரச அதிபராக இருந்த செந்தில்நாதன், பேராசிரியர் பூலோகசிங்கம், பேராசிரியர் ஜே.பி.திசாநாயக்க, முதலியோர் இருந்தனர்.

பேராசிரியர் தமிழை பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி.செல்வநாயகம், பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் ஆ.சதாசிவம், முதலியோரிடம் துறைபோகக் கற்றார். 1959-ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சஞ்சிகையான இளங்கதிர் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். 1959-ஆம் ஆண்டு இந்து இளைஞர் நடாத்திய கட்டுரைப் போட்டியிலும் முதல் பரிசினைப் பெற்றார்.1960-ஆம் ஆண்டு இளங்கதிர் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசான தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொண்டார். 1960-களில் பல்கலைக் கழகத்தில் இருந்து முதல் மாணவனாக வெளியேறி 1961இல் ஏரிக்ரைப்பத்திரிகை என அறியப்படும் தினகரன், ஒப்சேவர் பத்திகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகக் காணப்பட்டார்.

இக்காலப்பகுதியில் எஸ்மன்ட் விக்கிரமசிங்கவின் கீழ் பணியாற்றினார்.
பேராசிரியர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் காலத்திலேயே அங்கிருந்து வந்த பேராதனைக் கவிதைகள் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தார். இது தவிர இளங்கதிர், முஸ்லிம் மஜ்லிஸ், இந்து தர்மம் முதலான பத்திரிகைகளிலும் எழுதினார். இவர் ஆங்கிலப் பத்திரிகையான ஒப்சேவரில் பணியாற்றிய காலப் பகுதியில் யாழ்ப்பாண சாதி அமைப்புக்கள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்பான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.ஏரிக்கரைப் பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டு வருகை தரு விரிவுரையாளராகப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் அரிய வாய்ப்பினைப் பெற்றார்.

1964-இல் தமிழ் பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்கள் பேராசிரியர் மு.வரதராஜன் தலைமையின் கீழ் அரசவை இலக்கியங்கள் என்னும் தலைப்பின் கீழ் ஆய்வினை மேற்கொண்டு முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். 24.04.1985 அன்று இணைப் பேராசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் கலாகீர்த்தி சி. தில்லைநாதன் 15.01.1991 முதல் தமிழ் பேராசிரியராக விளங்கினார். வித்தியோதயப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் தமிழ் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1964 ஒக்டோபர் 1965 ஏப்ரல் வரை நிரந்தர விரிவுரையாளராகக் கடமையாற்றினார். இதனைத் தொடர்ந்து 1969 – 1975 காலப்பகுதியில் விரிவுரையாளராகவும் 1975 -1985 காலப்பகுதியில் முதுநிலை விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில் 1973இல் ‘தகுதி’ என்ற நாடகத்தை மேடையேற்றினார். 1974-இல் மானிடம் என்பது புலலோ என்ற நாடகத்தையும் மேடையேற்றினார். யாழ்ப்பாண சாதியக் கட்டுமானங்களை இந்நாடகம் தகர்த்தெறிந்தது.

1997ஆம் ஆண்டு யூலைமாதம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இப்பதவியைப் பெற்றுக் கொண்ட முதல் தமிழ் பேராசிரியர் இவரே ஆவார். 1993-ஆம் ஆண்டு இந்துக் கலாசார இராஜங்க அமைச்சரினால் இலக்கியச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1994-ஆம் ஆண்டு இலங்கையின் அதி உயர் தேசிய விருதான கலாகீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவர் எழுதிய நூல்களாக ‘வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை’ (1967), ‘இலங்கைத் தமிழ் இலக்கியம்’ (1997), ‘பண்பாட்டுச் சிந்தனைகள்’ (2000), ‘சோழர் கால அரசவை இலக்கியங்கள்’ முதலானவற்றைக் கூறலாம்.

பேராசிரியர் இலங்கைத் தமிழ் இலக்கியம் குறித்து எழுதிய 27 கட்டுரைகளின் தொகுப்பே இலங்கைத் தமிழ் இலக்கியம். இந்நூல் தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக வெளிவந்தது. பேராசிரியர் கலாகீர்த்தி சி.தில்லைநாதன் அவர்கள் இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்து நிறையவே எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய அறிவு வரன்முறையை தமிழ் அறிவு எனும் அடித்தளத்தில் இருந்து கட்டியெழுப்பிய பேராசிரியரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Related posts

ஈழத்தின் பொக்கிஷம் பேராசிரியர் கா.சிவத்தம்பி

Editor

துன்புறுத்தல்

Editor

இஸ்ரேல் எனும் ஆச்சரியங்களின் தேசம்

Editor

Leave a Comment