இதழ் 84

குழந்தைகளின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டியது சமூகத்தின் கடமை

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்பது ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. நம் தேசத்தில் குழந்தைகள் வீடு, பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்கள், மக்கள் கூடிய இடங்கள் என அனைத்து சூழல்களிலும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் வன்முறையில் பலியாகுவதும், அதனைத் தடுக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததுமாக காணப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு எவ்வாறு ஒரு நியாயமான தீர்வு வழங்க முடியும் என்பதற்கான ஒரு நல்வழிகாட்டியாக இருக்கிறது. ஒரு மாணவிக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்முறையை அந்நாட்டின் சட்டப்பாதுகாப்பு அமைப்பு மிக வேகமாக கையாள்கிறது. குற்றவாளி விரைவில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்பட்டன. இது சரியான விசாரணையும், பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்திய ஒரு முறையாகும். இந்த முறை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடும்.

அந்த வரிசையில் நம் தேசத்தில் நடக்கும் பல சம்பவங்களில் நீதி கிடைக்காமை தான் பெரும் கவலையளிக்கிறது. இசைப்பிரியா முதல் அநுராதபுர வைத்தியர், அண்மையில் கொழும்பில் தற்கொலை செய்து கொண்ட மாணவி போன்ற நபர்களின் கதைகள் ஒரு கட்டத்தில் ஊடகங்களில் பேசப்படும். ஆனால் அதன் பிறகு மறக்கப்பட்டு விடுகின்றன. இது ஒரு சமூகமாக நாம் உணர்ச்சிபூர்வமாக மட்டும் நடந்து கொள்ளாமல், உண்மையான மாற்றத்திற்காக செயல்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

பாலியல் குற்றங்களை தவிர்க்க வேண்டுமெனில், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது நிச்சயம். ஆனால் அதைவிட முக்கியமானது – விழிப்புணர்வை ஏற்படுத்துவது. பாலியல் கல்வி பாடசாலை மட்டுமின்றி பெற்றோர்களாலும் வீட்டிலேயே குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் எதை “அருவருப்பான” என நினைத்து பேசாமலிருக்கிறார்களோ, அதுவே அவர்களை ஆபத்துகளுக்குள் இட்டுச் செல்கிறது. அதற்காக பெற்றோர்கள் திறந்த மனதுடன் பேசுவது அவசியம்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நேர்மையான நீதியும், பாதுகாப்பும் கிடைக்க வேண்டும். இது தான் மற்றவர்களுக்கான எதிர்வினையாகவும் செயல்படும். சரியான வழக்குப் பராமரிப்பு, நீதிமன்றத் தீர்ப்புகள், ஊடக ஒழுங்குமுறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, குற்றங்களைத் தடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதும் சாத்தியமாகும். அதோடு பாதிக்கப்பட்டவர்களையும் அவர்கள் சார்ந்தவர்களையும் ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுவது தடுக்கப்பட வேண்டும். ஊடகங்கள் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

முடிவில், குழந்தைகளை பாதுகாப்பது தனிப்பட்ட முறையில் பெற்றோர்களின் மட்டுமல்ல, அரசாங்கத்தின், சட்ட அமைப்பின், கல்வி அமைப்பின், ஊடகங்களின் மற்றும் முழு சமூகத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும். வரி வசூலிக்கப்படுகின்ற அளவுக்கு நியாயமான சேவைகள் வழங்கப்பட வேண்டும். ஒரு குழந்தையின் பாதுகாப்பை நாம் உறுதி செய்யும்போது தான் ஒரு நாட்டு எதிர்காலத்தை நிச்சயமாக்குகிறோம்.

Related posts

யாழ் பல்கலை நுண்கலைத்துறையினரின் மரபுரிமை: மாறும் தளம் காண்பியக் காட்சி

Editor

பொறியியலாளர் சி. தயாபரன் அவர்களுக்கு துமியின் இதய அஞ்சலி

Editor

அறத்தின் நாயகன் கலாநிதி. ஆறு திருமுருகன்

Editor

Leave a Comment