இதழ் 84

சொந்த நீருக்குள் மூழ்கும் வாத்துகள்

மாலை நேரம். சூரியன் கீழே சாய்ந்தபின், ஏரியின் மேற்பரப்பு ஒரு மென்மையான வெண்கலக் கண்ணாடி போல மெதுவாக ஒளிர்கிறது. அள்ளி வீசுகிற காற்று அவசரமான மனிதர்களையும் அந்த அழகை நின்று சுகிக்க வைக்கிறது.

ஆர அமர்ந்து இரசிப்பதற்கே என இயற்கை தந்த இருக்கையாய் ஒரு பெரிய கல் ஏரிக்கரையில் நிலை கொண்டிருந்தது. அதில் அமர்ந்திருந்தாள் அமுதா, எழுத்தாளர், எளிமையானவள், பார்வைகளுக்குள் பல கதைகள் புதைத்தவள்.

இன்று ஏதாவது எழுத வேண்டும் என்கிற ஈர்ப்பே அவளை இங்கு கொண்டு வந்து அமர்த்தியது. ஆனால் எழுத வார்த்தைகள் எதுவும் வரவில்லை. கையிலிருந்த நாட் குறிப்பேடு வெறுமையாக இருந்தது.

திடீரென்று கீச்சுக்கீச் என்று ஓர் ஒலி கேட்டது. அமுதா மெதுவாக தலையைத் திருப்ப, வாத்துகளின் ஒரு கூட்டம், நீரில் வட்டமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. பெரிய கூட்டம் இல்லை — பதினைந்து வாத்துகள். ஆனால் அவற்றின் சுழற்சி… அதை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவை ஒன்றன்பின் ஒன்றாய் முன்னோக்கி சுழன்றன. எதையோ தேடுவது போலவும் இல்லை, ஓய்வெடுப்பது போலவும் இல்லை. ஒருவிதமான ஒழுங்கு. ஒருவிதமான நம்பிக்கை.
ஒருவிதமான, ஒற்றுமை.

அமுதா தன்னையே கேட்டுக் கொண்டாள்:

“இவையெல்லாம் ஒத்திகையே பார்க்காத நடனங்கள்…
யாரும் திட்டமிடாத நடனங்கள்..
நான் இதுவரை பார்த்த ஒவ்வொரு மனிதக் கூட்டத்திலும் ஒரு சிதைவு இருந்தது.
ஆனால் இங்கே? அமைதி. இணக்கம். ஒத்திசைவு.”

அவளுக்கு ஞாபகம் வந்தது — அவள் வாழ்வின் நாட்கள். தான் வட்டமாய் சுற்றித்திருந்த கணங்கள். சுமையில்லாத சிரிப்புகள்… அந்த சிரிப்போடு கூடியிருந்த ஏராளம் மனிதர்கள்…

நண்பர்கள் என்று அன்று அவளிற்கு பலர் இருந்தனர். நாளடைவில் சிலர் ஆயினர். இப்போது ஒருவருடனும் அவள் வட்டம் அமைக்கவில்லை.

வாத்துகள் அடுத்த வட்டத்தில் வந்தன. ஒன்றின் பின்னே ஒன்று, சமதூரத்தில். திடீரென்று, ஒன்று தனது சிறகை விரித்தது. மற்றையவை அதை பின்பற்றவில்லை. ஆனால் அச்சிறகுப்பறவையை நிமிர்ந்து பார்த்தன. அது வானில் உயர்ந்தது. மற்றையவை மெல்ல தங்கள் சுழற்சியை நிறுத்தின. மெதுவாக, தண்ணீரின் மீது திரும்பிச் சென்றன — ஒருவிதமான அமைதியுடன்.

அமுதா எழுந்தாள். முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு.
அவள் நாட் குறிப்பைத் திறந்தாள்.

முதல் வரிகள்:

“வாத்துகள் ஒருமித்துப் சுழல்வதை நாம் புகழ்வோம்.
ஆனால் ஒருத்தி தனியாக பறக்கின்ற பொழுது —
அதுவும் ஒரு கவிதைதான்.”

அவள் எழுதத் தொடங்கினாள்.

என்றோ படித்த கவிதை இன்று அவள் நினைவில் வந்தது.

“ஒரு அழகு பட்டாம்பூச்சி
அமரவரும் பொழுது
உள்ளங்கை இரண்டையும்
அகல விரித்து
வாங்கிக் கொள்வதைப்போல
அது கைகளிலிருந்து பறந்து செல்ல
முற்படும் போது
அகல விரித்து விட்டுவிடும்
தைரியம்
வாழ்க்கையில் இருந்துவிட்டால் போதும்”

அதை யாரோ முன்பே எழுதியதாக நினைத்தாள். ஆனால் அந்த வார்த்தைகள் அவளுக்குள் புதிதாய் பேசின. தன் தைரியத்தை ஒரு கணம் பாராட்டிக் கொண்டாள்.

அவளுக்குத் தோன்றியது:

சேருவதும் கூடுவதுமே மகிழ்வென்றால் சுதந்திரம் என்பதென்ன?

இங்கே வாத்துகள் தங்களுக்குப் பிடித்ததை மட்டுமே செய்கின்றன.
தன் சுகத்தில், தன் குரலில் வாழ்கின்றன.
அவைகளுக்காக யாரும் கவிதை எழுதவேண்டுமென தேவையில்லை; அவற்றிற்கு அவை உண்மையாக இருப்பதே போதும்.

அதுவே அமுதாவுக்குப் புதிய உணர்வாய் அமைந்தது.

“நானும் ஒரு வாத்து போலத்தான்.
என் வாழ்க்கையை யாராவது கவிதையாக்குவார்கள் என்பதற்காக அல்ல…
ஆனால் நான் என் சொந்த நீருக்குள் மூழ்குவதற்காக,
என் சுதந்திரத்தின் வாலைக் கிளர்த்துவதற்காக வாழ்கிறேன்
என் சுகத்தில்..

என்று எழுதி முடித்தாள்.. நாட்குறிப்பை மூடினாள்.

சிறகை விரித்தது போல் வேகமாக எழுந்தாள்.
அள்ளி வீசிய காற்று அவளை வாரி அணைத்துக் கொண்டது

Related posts

யாழ்ப்பாண விவசாயத்தின் பாரம்பரிய நீர்ப்பாசனக் கருவி துலா

Editor

குழந்தைகளின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டியது சமூகத்தின் கடமை

Editor

விராட் எனும் ஒரு போர் வீரனின் ஓய்வு

Editor

Leave a Comment