இதழ் 85

துன்புறுத்தல்

துன்புறுத்தல் என்ற விடயமானது இன்றைக்கு எல்லா இடங்களிலும் பொதுவானதொரு செயற்பாடாக காணப்படுகிறது. மேலும் துன்புறுத்தல் என்பது மனிதனுக்கு எதிர்பாராத தருணத்தில் இடம்பெறுகின்ற மனதளவிலான மற்றும் உடலளவிலான பாதிப்பை தருகின்ற ஒரு சமூக பிரச்சனையாகக் காணப்படுகின்றது. இது இன்றைய சமுதாயத்தில் மட்டுமல்லாமல் பண்டைய காலங்களிலும் இருந்தே வந்துள்ளன.இத் துன்புறுத்தலானது ஒர் தரப்பு, இன்னுமோர் தரப்பை விட பொருட்பலம் அல்லது ஏதோ ஒரு விதத்தில் உடற்பலம் குறைந்து காணப்படும் பொழுது,பொருட்பலம் அல்லது உடற்பலம் கொண்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அடக்கு முறையேயாகும். இது ஆரம்பத்தில் ஆண்டான், அடிமை சமூகம் போன்றவற்றில் இடம் பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தில் தொடங்கி நாடுகள் வரை இடம்பெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.இத் துன்புறுத்தலானது தொடர்வதற்கு தங்கள் பலத்தை நிலைநாட்ட வேண்டிய தேவை உணர்வது முக்கிய காரணமாகும்,அதாவது தொடர்ச்சியாக பலத்தை நிரூபிக்க துன்புறுத்தல் என்பதனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.துன்புறுத்தலானது இன்றளவில் பாடசாலை மாணவர்களிடையேயும் பல்கலைக்கழக மாணவர்களுடைய தளங்களிலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொடர்ச்சியான துன்புறுத்தல் மூலம் எதிர்த்தரப்பினரை பயமுறுத்துதல் அல்லது தாழ்வாக உணரச் செய்தல்,உடல் அடிப்படையில் காயப்படுத்தல்,என்ற ஒன்றை மேற்கொள்கின்றனர்.


இந்த துன்புறுத்தலானது மொழிசார் துன்புறுத்தல், உடல் சார்ந்த துன்புறுத்தல், இணையவழித்துன்புறுத்தல் என்ற வகைகளை கொண்டதாக காணப்படுகிறது.மொழி சார்ந்த துன்புறுத்தலை பார்க்கும்பொழுது தனிப்பட்ட, கீழ்ப்பட்ட நபரை தன்னுடைய வார்த்தைகளால் உளரீதியாக துன்புறுத்துதலைக குறிப்பதாகும். இந்த மொழி சார்ந்த துன்புறுத்தல்கள்,கிண்டல், அவமானப்படுத்தல்,பெயர் சூட்டுதல் போன்றவற்றின் மூலம் இடம் பெறுகிறது,இதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் உளவியல் ரீதியாக அதிக தாக்கங்களை எதிர்கொள்கிறனர். உடல் சார்ந்த துன்புறுத்தலை பார்க்கும் பொழுது எதிர்தரப்பினரை காயம் அடையச் செய்யும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும், உடலியல் சார்ந்த வன்முறையை குறிப்பதாக காணப்படுகிறது. இது கூடுதலாக அடித்தல், தள்ளுதல் போன்ற செயல்முறைகள் மூலம் இடம்பெறுகின்றது.உணர்ச்சி ரீதியாக துன்புறுத்தல் என்பதனை பார்க்கும் பொழுது இது தன்னைவிட கீழ்ப்பட்ட நபரை தாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவரை உணர்ச்சிரீதியாக காயப்படுத்தலை குறிப்பதாகும்.அதாவது புறக்கணிப்பு,குழுவில் சேர விடாமை,சமூகவிலக்கல் போன்ற செயற்பாடுகள் மூலம் ஒரு நபரை உணர்ச்சி ரீதியாக காயப்படுத்தலை குறிப்பதாகும்.இணையவழி துன்புறுத்தல் என்பது நேரடியாக துன்புறுத்துவதல்லாது இணையத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுவதாகும்.இந்த துன்புறுத்தலானது, துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் தரப்பினரை உடல்,உள,சமூக ரீதியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக காணப்படுகிறது.இன்றைய நவீன யுகத்தில் இச்செயற்பாடானது எந் நேரமும் இடம்பெறக்கூடியதாக காணப்படுகிறது. இந்த துன்புறுத்தல்கள் சமூக ஊடகங்களில் அவமானப்படுத்தல்,பொய்யான தகவல்களைப்பகிர்தல், தனிப்பட்ட தகவல்களை பகிர்வதன் மூலம் நபர்களை துன்புறுத்துதல் என்று வகைகள் பலவாராக காணப்படுகின்றன.இவை ஒவ்வொன்றும் மனிதர்களில் பலதரப்பட்ட அடிப்படையிலான பாதிப்புக்களை ஏற்படுத்த வல்லன.


இந்த துன்புறுத்தல் என்ற விடயம் தொடர்பான தரவுகளைப் பார்க்கும் பொழுது 2020 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் தரவுகளின் படியும் உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள்,குறைந்தது ஒரு முறையாவது துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர் என கூறுகிறது. அதேபோல 2024 ஆம் ஆண்டு யுனிசெப் இன் தகவலின்படி 13 தொடக்கம் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களில் சுமார் 50 வீதமான மாணவர்கள் பள்ளியில் அல்லது அதன் சுற்றுப்புறங்களில் சக மாணவர்களால் வன்முறை அனுபவித்துள்ளனர் என தெரிவிக்கிறது.இவை 2020 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான உலக ரீதியான தகவல்களாக காணப்படுகிறது.இலங்கையில் தரவுகளை பார்க்கும் பொழுது 2016 ஆம் ஆண்டு யுனிசெப் அறிக்கையின் படி இலங்கையில் 13 தொடக்கம் 15 வயது மாணவர்களில் 39.4 வீதமான மாணவர்கள் ஒரு மாதத்தில் ஒருமுறையாவது துன்புறுத்தலுக்கு உட்படுகின்றனர் எனவும் 43.8 வீதமான மாணவர்கள் வருடத்தில் ஒரு முறையாவது துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனவும் இவர்களில் 54.9 வீதமான மாணவர்கள் ஆண்களாக காணப்படுகின்றனர் மேலும் 2024 ஆம் ஆண்டு கேகாலை கல்வி வளையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 12 தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 59 வீதமான மாணவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் இவர்களில் 45.2 வீதமானவர்கள் மொழி ரீதியான துன்புறுத்தலுக்கும் 36.3 வீதமான மாணவர்கள் மொழி சார்ந்த துன்புறுத்தலுக்கும் 22 வீதமான மாணவர்கள் புரட்சிசார்த்தலுக்கும் 22.4 வீதமானவர்கள் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 2023 ஆம் ஆண்டு தகவல் படி 14 தொடக்கம் 14 வயது மாணவர்களில் 3.5வீதமானவர்கள் இணைய துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அண்மையிலும் கூட பல்கலைக்கழகங்களில் இப்பகுதி என்பது அதிகரித்த வண்ணமே உள்ளது இந்த வருட ஏப்ரல் மாத இறுதியில் இரண்டாம் வருட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் பகிடிவதையின் காரணமாக தற்கொலை செய்துள்ளார். இப்படியான நிலைமைகள்தான் இலங்கையிலும், உலக அளவிலும் காணப்படுகிறன.
இதற்கான தடுத்தல் செயற்பாடுகள் பலதரப்பட்டவை காணப்படுகின்ற பொழுதிலும்,இது நிகழ்ந்த வண்ணமே காணப்படுகிறது. பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை மட்டங்களில் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்வுகள் செய்வதோடு, சட்டதிட்டங்களையும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சமூக ஊடக பாவனை தொடர்பாக அக்கரையுடன் செயல்பட்டு சமூகத்தில் இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகளை வெளிப்படையாக வெளிக்கொண்டுவரவேண்டும்.மேலும் இந்த துன்புறுத்தல்களில் பாதிக்கப்படும் நபர்களிடையே உளவியல்சார் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகிறது, எனவே அவர்களுக்கான மனநல ஆலோசனை வழங்குவதோடு சமூக ஆதரவையும் வழங்க வேண்டும். அத்தோடு எமக்கோ எம்மைச்சார்ந்தவர்களுக்கோ மட்டுமல்லாது சமூகத்தில் யாருக்கேனும் இவ்வாறான பிரச்சனைகள் வரும் பொழுது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இவ்வாரான பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண வேண்டியது இலங்கையின் பிரஜைகளான ஒவ்வொருவரின் மீதும் உள்ள கடமையாகும்.

Related posts

மரபுகளை கடத்துகின்ற திருவிழாக்கள்

Editor

அபயம் அறக்கட்டளையினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அதிநவீன கட்புல சோதனை இயந்திரம் வழங்கி வைப்பு

Editor

மனிதன் உருவாக்கிய சூரியன்

Editor

Leave a Comment