திருவிழா என்பது ஒரு நாள் கொண்டாட்டமல்ல; அது நம் இனத்தினால் ஆயிரம் ஆண்டுகளாக எடுத்துச் செல்லப்படும் ஒரு கலாச்சாரத் தொடர்ச்சி. அந்த அழகான நாளில் மறைந்திருந்த எங்கள் வீதிகள்,தங்களின் சொந்த அடையாளங்களை மீண்டும் மீட்டெடுக்கும். வீதி முழுதும் மனிதச் சுவாசம் நிரம்பியிருக்கும்.
விழா என்றால் அது எப்போதும் கோயிலோடு மட்டும் அல்ல. அது வீதிகளிலும் ஒளிரும். வீடுகளுக்குள்ளும் நுழையும்.
திருவிழா வீதிகள்….
சுவர்களில், தூண்களில் அலங்காரம்; வாசல் தோறும் நிறை குடம்; இரவினை அழகாக்கும் வண்ண விளக்குகள்..
முழங்கும் மேள தாளங்கள்… நடனமாடும் வண்ணங்கள்…
மயில் வடிவ வாகனங்களிலும், அழகு மற்றும் வீரம் சொல்கின்ற பெரிய பொம்மைகளிலும், களையாத கலைஞர்களின் ஒற்றுமையிலும் கலந்து நிற்பது நம் மரபு மட்டும் அல்ல; ஒரு வாழ்வாங்கு வாழ்வு!
திருவிழா வீதிகளில் பரவியுள்ள இந்த சுதந்திரமான கலைகளும் அது தருகிற ஆடம்பரமான மகிழ்ச்சியும் நமக்கு பண்டை தமிழரின் களி, பக்தி, கலை, பழக்கவழக்கம் ஆகிய செல்வச் சீர்களின் சிறப்பை உணர்த்திச் செல்கின்றன.

இன்றைய உலகம் நகர்வாகி விட்டாலும், நம் மூலக்கலாசாரம் என்ற மரம் வேருடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த மேள முழக்கமும், ஆடல் அசைவுகளும் இன்றும் எமக்கு இத்தனை பூரிப்பை அளிக்கின்றன என்றால் நம் வேர் எவ்வளவு ஆழமானது என்பதை உணரமுடியும்.
அந்த கோவில் வீதியில் நடந்து செல்லும் ஒரு குழந்தையின் கண்களில் தெரியும் அதிசயமும், ஒரு முதியவர் முகத்தில் தெரியும் நெகிழ்ச்சியும் ஒரே உணர்வையே பகிர்கின்றன: கலாசாரம் பயணப்படுவதை நாம் கண்கூடே காண்கிறோம்.
மழையும் வெயிலும் நமக்கு அந்நியமல்ல. ஆனால் விழா நாளில் பெய்யும் மழை பெருஞ்சிறப்பு. மழை நனைக்கும் போதும் மேளம் மாறுவதில்லை. அது இன்னும் உருக்கமாகிக்கொள்கிறது. நனைந்த ஆடையிலும் மக்கள் ஆடுவார்கள், சிரித்துக் கொள்வார்கள். ஏனெனில் அவர்களுக்கு விழா என்பது உடலினால் கொண்டாடுவதல்ல; உள்ளத்தால் கொண்டாடுவது.
நம் முன்னோர்கள் வெகு நேர்த்தியாக இந்த விழாக்களை வடிவமைத்துள்ளனர். இது வெறும் ஆடல், பாடல் மட்டுமல்ல. இது ஓர் உறுதிமொழி – “எதுவாகி விட்டாலும், நம் பாரம்பரியம் கைவிடப்படக்கூடாது!” என்பதற்கான விழிப்புணர்வுக் கோலம்.

விழா நாள் முடிந்தாலும், அந்த வீதிகளில் அந்த ஒலி சில நாட்கள் நிலைத்திருக்கும். தூண்களில் தொங்கிய கொடிகள் மெதுவாக உதிரும். ஆனால் நம் உள்ளத்தில் அந்த விழா அடுத்த ஆண்டுவரை பசுமையாகவே இருக்கும். குழந்தைகள் அடம்பிடித்து வாங்கிய விளையாட்டு பொம்மைகள், பெரியவர்களுக்கு கிடைத்த அந்த வழிபாட்டு நிமிடங்கள், உறவுகளுடனான உரையாடல்கள்— இவை வாழ்க்கையின் செழிப்பான நினைவுகள். அடுத்த ஆண்டு திருவிழா வரை இந்த நினைவுகள் தாங்கியே மகிழ்ந்திருப்பர் மக்கள்.
யாரோ ஒரு மூதாட்டி சொல்லிக்கொள்வாள்.
“இந்த திருவிழா வந்தாத்தான எங்கட ஊருக்கு உயிர் வரும்..”
இந்த மாதிரி விழா கொண்டாட்டத்தில்தான் ஊர்மக்களின் வாழ்க்கையின் பிரகாசமான பக்கங்கள் எழுதப்படுகின்றன.
நாட்கள் கழிந்த பிறகும் அந்த திருவிழா நினைவுகளை நினைத்தபடி ஒரு முறை மூச்சு இழுக்கிறீர்கள் என்றால் — அதை விட இன்பமான நினைவு வேறில்லை.
திருவிழாக்களில் தாயை கையில் பிடித்துக்கொண்டு, கூட்டத்தில் தொலைந்து போகாமல் நின்ற அந்த சிறு வயது நாட்கள் போல் இன்பத்தை அள்ளித்தரக்கூடிய எங்கள் கலாசாரத்தையும், மரபுகளையும் தொலைந்து விடாமல் இறுகப்பிடித்துக் கொள்வோம். இன்பத்திற்காக ஏங்கும் வருங்கால உலகம் அதை எங்களிடம் வந்து பெற்றுக் கொள்ளட்டும்.

