தென் ஆப்பிரிக்கா அணியின் சமீபத்திய வெற்றி ஒரு சாதாரண விளையாட்டு செய்தியாக மட்டும் பார்க்கப்பட முடியாது. இது வரலாற்று நீதியின் பிரதிபலிப்பாகவும், சமூக மாற்றத்தின் அடையாளமாகவும் உள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க ஆடவர் அணி ஒரு ஐ.சி.சி கோப்பையை வென்றது. கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியின் முக்கியத்துவம், இந்த அணியின் கேப்டனாக இருந்தவர் தெம்பா பவுமா என்பவர் கருப்பினத்தை சேர்ந்தவர் என்பதில்தான் உள்ளது.

தெம்பா பவுமா கோப்பையை ஏற்ற போது, அந்த தருணத்தில் கருப்பினத்தவருக்கு உலக அரங்கில் கிடைத்த மதிப்பும், வரலாற்றில் நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தலைவன் உலகத் தரத்தில் வெற்றி பெறும் தருணமும் ஒன்றாக காணப்பட்டது. ஒரு காலத்தில் தென் ஆப்பிரிக்காவில் கருப்பினத்தவர் கிரிக்கெட் போல ஒரு விளையாட்டில் தலைவராக வருவார் என யாரும் நம்பியதில்லை. அவர்களின் சமூக நிலைமையால் கூட அவர்களுக்கு கிரிக்கெட் பேட்டைத் தொடும் வாய்ப்பே இல்லை. ஆனால் இன்று அவர்கள் கேப்டனாக விளங்குவது, தென் ஆப்பிரிக்காவின் வரலாற்று பயணத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது.
அந்த நாட்டின் இனவெறிப் பின்னணியை புரிந்து கொண்டால் தான், ரிசர்வேசன் எனும் கோட்டா முறையின் அவசியத்தை உணர முடியும். வெள்ளையர்களின் இனவெறி அரசியல் அந்த நாட்டில் 1948 முதல் 1994 வரை கடுமையாக நிலவியது. கல்வி, வேலை, வீடு, சுகாதாரம், மற்றும் விளையாட்டு போன்ற அனைத்து துறைகளிலும் கருப்பினத்தவர்கள் ஒதுக்கப்பட்டனர். திறமை இருந்தாலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலையால் அவர்களது வளர்ச்சி தடையடைந்தது. இந்த நிலைமை 1994ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா தலைமையில் மக்கள் எழுச்சி ஏற்பட்டு ஜனநாயகத் தேர்தல் நடைபெற்று புதிய சமூக அமைப்பு உருவானதற்குப் பிறகும், அதற்குமுன் நிலவிய பின்விளைவுகள் தொடர்ந்திருந்தன.

இதனைக் கவனித்த தென் ஆப்பிரிக்கா அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம், அனைத்து சமூகங்களுக்கும் சம வாய்ப்பை வழங்கும் நோக்கில் ரிசர்வேசன் முறையை கொண்டு வந்தது. இதில் ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் குறைந்தது ஆறு பேர் பீப்பிள் ஒப் கலர் (People of Colour) என வகைப்படுத்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதில் குறைந்தது இரண்டு பேர் கருப்பினத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது திறமையின் மீது விளையாடாத நடைமுறை. இது சமூக நீதியின் கோட்பாட்டை முன்னிறுத்தும் செயல்.

பல்லாண்டுகளாக வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்திய துறையில், புறக்கணிக்கப்பட்ட இனத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் அவர்களின் திறமையை வெளிக்கொணர்வதே இந்த நடைமுறையின் நோக்கம். இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டதால்தான் தெம்பா பவுமா போன்றோர் உருவாக முடிந்தது. அவரின் வரலாறு வெகு சாதாரணமல்ல. ஆரம்பத்தில் பல்வேறு தடைகளை சந்தித்தவர். வாய்ப்புகள் வராமல் தவித்தவர். ஆனால் ரிசர்வேசன் முறை மூலம் வாய்ப்பு பெற்ற பிறகு, அதனை திறமையால் வெற்றி திருப்பினார். இன்று அவர் உலக கோப்பையை வென்ற தலைவராக திகழ்கிறார்.

பலர் இந்த கோட்டா முறையை திறமையின் எதிரியாகவே பார்க்கிறார்கள். “அரசியல் காரணங்களுக்காக குழுவில் சேர்க்கப்படுகிறார்கள்; இது அணியின் தரத்தை பாதிக்கிறது” என விமர்சிக்கின்றனர். ஆனால் இன்று தென்பா பவுமா போன்றவர் வெற்றியின் உயரத்தில் இருக்கிறார்கள் என்றால், அந்த கூற்று தவறானது என்பதற்கே இது பெரும் சான்றாகும். வாய்ப்பு இல்லாமல் வெளிவரும் திறமை சுருங்கிவிடும். வாய்ப்பு கிடைக்கும்போது திறமை வேரூன்றி வளர்கிறது.

இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடம் மிக முக்கியமானது. சமூகத்தில் வரலாறாக நீண்டகாலம் ஒடுக்கப்பட்ட குழுக்களுக்கு சம வாய்ப்புகள் கிடைக்க, ஒரு கட்டுப்பாடுகளுடனான வாய்ப்பு ஒதுக்கீடு தேவைப்படும். இது சிலருக்கு “அநியாயம்” போல் தோன்றலாம். ஆனால் வரலாற்றை முழுமையாக புரிந்து கொண்டால் தான் அது நியாயமாக தெரியும். ஒரு சமூகத்தில் சக சக்திகள் அனைவரும் சம பங்குள்ளவர்களாக உள்ளனர் என்ற உணர்வை ஏற்படுத்தும் செயல்தான் ரிசர்வேசன்.

தெம்பா பவுமாவின் சாதனையை வெறும் ஒரு விளையாட்டு வெற்றியாக பார்க்க முடியாது. இது ஒரு சமூகத்தின் உரிமை மீட்ட உணர்வாக பார்க்க வேண்டும். காலம் கடந்த பின் ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்காலம் எப்படி உயரலாம் என்பதை காட்டும் வழிகாட்டியாக இது திகழ்கிறது. விளையாட்டு என்பது வெறும் விளையாட்டாக இல்லை. அது சமூகத்தில் உள்ள ஒழுக்கங்கள், சமநிலை, உரிமைகள் போன்றவற்றை பிரதிபலிக்கும் மேடை.
இந்த வெற்றிக்கேற்ப தெம்பா பவுமா ஒரு பேட்டியில் கூறியுள்ளார், “என் பாட்டி எனக்கு இந்த பெயரை வைத்தார். ‘Temba’ என்றால் நம்பிக்கை என்று பொருள்” என்றார். ஆப்பிரிக்க மொழியில் Temba என்றால் நம்பிக்கையும் வலிமையும். தமிழிலும் இதேபோல் “தெம்பா இரு” என்று சொல்லுவது நம்மிடம் வழக்கமாக உள்ளது. இதுவே மொழிகளைத் தாண்டிய மனித நேயத்தின் சான்று.
இது போன்ற நிகழ்வுகள் நம்மையும் சிந்திக்க வைக்க வேண்டும். நம் நாட்டிலும் பல்வேறு சமூகங்களின் உரிமைகள், வாய்ப்புகள் குறித்து பேச்சுகள், முடிவுகள் நடைபெறுகின்றன. எல்லா சமூகத்தவரும் சமமாக பங்கேற்கும் ஒரு கட்டமைப்பு மட்டுமே உண்மையான வெற்றியின் அடையாளமாக அமையும். இன்று தென் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்ததை வைத்து, நாம் நம்மை சிந்திக்க வைக்க வேண்டும். வெற்றி என்பது அனைவருக்கும் சமமான முறையில் வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே அதன் மகத்துவம் உணரப்படுகிறது.
தெம்பா பவுமாவின் தலைமையில் தென்னாபிரிக்காவிற்கு கிடைத்த இந்த, வரலாற்று முக்கியத்துவம் மிக்க வெற்றி வலுவாக சொல்லும் செய்தி இதுதான். உங்களுக்கும் வெற்றிகள், சாதனைகள் வேண்டுமென்றால் ஒன்றுபட்ட தேசமாக விளையாடுங்கள். இலங்கைக்கும் சிறுபான்மை இனத்தின் ஒரு தெம்பா பவுமா போன்ற தலைவன் தான் வெற்றிகளை பெற்றுத் தர முடியும் என்றால் அதற்கு அவனை அனுமதியுங்கள்.
