யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்; கலைப்பீடத்தின் நுண்கலைத்துறை நான்காம் வருட கலை வரலாறு மாணவர்களின் ஏற்பாட்டில் 2025.04.22 தொடக்கம் 2025.04.26 வரையிலான காலப்பகுதியில்; மரபுரிமை: மாறும் தளம் என்ற தலைப்பிலான ஓர் காண்பியக் காட்சி நுண்கலைத்துறையின் கலைக்கூடத்தில் நடைபெற்றது. இக்காண்பியக் காட்சியில் யாழ்ப்பாணத்தின் வரலாறு, பண்பாட்டைக் கூறத்தக்க கட்டடங்களின் இடிபாடுகளுக்கு இடையிலுள்ள மௌனம், அதில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அதன் பின்னாலான காரணங்கள், எமது மூதாதையரின் அன்றாடப் பாவனைப் பொருட்களில் பதிந்துள்ள பெறுமானங்கள், படிப்படியாக மாறிக்கொண்டிருக்கும் பாரம்பரிய கைவினைகள், பயில்வுகளின் பின்னாலான தொட்டுணரத்தக்க, தொட்டுணரமுடியாத பெறுமானங்களைக் காண்பியப் படைப்பாளிகளின் மொழியில் காட்சிப்படுத்தினர்.

இக் கண்காட்சியின் மையக் கருத்தான மரபுரிமை என்பது “ஒரு சமூகக் குழுமத்தின் வாழிடம் சார்ந்ததும் அவ்வாழிட நிலவரங்களினால் காலந்தோறும் உற்பத்தி செய்யப்பட்டுக் கைமாற்றப்பட்டு வருகின்றதுமான அனைத்தும் ஆகும். கடந்த காலத்திலிருந்து வருவதும் மரபினால் கைமாற்றப்படுவதுமான கடந்த காலத்தின் தடயங்களாகவுள்ள வரலாற்று இடங்கள், கட்டடங்கள், இயற்கைத் தனிச்சிறப்புக்கள் என்பனவற்றை உள்ளடக்கிய தற்காலச் சமூகத்தின் பரம்பரைத் தனி அடையாளங்கள் மரபுரிமை ஆகும்.” எனப் பாக்கியநாதன் அகிலன் குறிப்பிடுவதற்கிணங்க மரபுரிமை என்பது கடந்த காலத்திலிருந்து பெறப்பட்ட வளங்களின் தொகுதியாகும்.

இது மக்களின் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் பெறுமானங்கள், நம்பிக்கைகள், அறிவு மற்றும் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாக சுயாதீனமாக அடையாளப்படுத்தும் உரிமைத்துவம் ஆகும்.
மரபுரிமை எனும் பதம் மிகவும் சிக்கலானது. இலங்கை போன்ற ஒரு நாட்டில் தொல்லியலும் மரபுரிமையும் ஒன்றுடனொன்று இணைந்தனவாய் பார்க்கப்படுகின்றதோடு சிறுபான்மையினங்கள் பல்வேறு திட்டமிட்ட செயல்களால் மரபுரிமை சார்ந்த ஓர் நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவ்வேளையில் யாழ்ப்பாணமும் அதன் பலாபலன்களை நீண்ட நாட்களாக அனுபவித்து வருகின்றது. காலனித்துவம், முப்பது வருட யுத்தத்தின் விளைவான இடப்பெயர்வு, புலப்பெயர்வு, இராணுவமயமாக்கம், வீதி அகலிப்பு, நவீனமயமாதல் அல்லது புதுமையை விரும்புதல், அரும்பொருள் திருட்டும் வியாபாரமும், பொதுமக்களின் அக்கறையீனமும் தெளிவின்மை ஆகியன மரபுரிமையைப் பெரும் பூதாகரமான அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.
இதனால் தமிழர் தம் இருப்பையும் வரலாற்றையும் சொல்லும் இடங்களும், கட்டடங்களும், பொருட்களும், பயில்வுகளும் இங்குள்ள சமய, அரசியல், பொருளாதார, கலாசாரக் காரணிகளால் மிக விரைவான மாற்றங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உட்பட்டு வருகின்றன. இதனைப் பேசுவதாகவே ,க்காண்பியக் காட்சியிலுள்ள படைப்புகள் அமைகின்றன.
இக்காட்சியில் கலைக்கூடத்தின் முதலாவது பகுதியாக மாறும் இடங்கள் எனும் தலைப்பில் மு.கனகசபை, பிரதீப் தலவத்த, மனோ பிரசாத் ஆகியோரின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. அந்த வகையில் காலனியத்திற்கு முற்பட்ட, காலனியத்திற்கு பிற்பட்ட, போருக்குப் பிற்பட்ட உள்நாட்டு முரண்பாடு, வன்முறை, இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அழிவுகள் என்பவற்றினால் மாற்றத்திற்கு உள்ளான மரபுரிமை அடையாளங்களாகிய சில கட்டடங்களிற்கான படைப்பாளிகளின் எதிர்வினைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அதாவது மு.கனகசபையின் போருக்கு முற்பட்ட கோட்டை என்ற ஓவியமானது கட்டட நிலவுருவை ஆவணப்படுத்தியிருப்பினும் அதனைச் சூழ பல ஆண்டு காலமாக நிகழ்ந்த பல்வேறு அரசியல் பதட்டங்கள் அந்நிலவுருவில் ஏற்படுத்திய மாற்றங்களை நினைவுபடுத்துகிறது. இவரது நல்லூர் தேர்த் திருவிழா என்ற ஓவியமானது நல்லூரின் பழைய கட்டடக்கலை, ஆலயத்தின் தேர்த் திருவிழா, சடங்கு முறைகள் என்பவற்றை தான் வாழும் காலத்தில் பார்த்தவற்றிலிருந்து ஆவணப்படுத்தியுள்ளார். மனோ பிரசாத்தின் படைப்புகளில் தோன்றும் கட்டடங்களின் முகப்புகள் கொங்கிறீட் மற்றும் கல்லால் ஆனவை அல்ல, மாறாகக் கட்டியவர்களின் அபிலாசைகள், கற்பனைகள், வினோதங்களால் ஆனவை. ஆவை காலம், வெளி, பண்பாடு, ஞாபகம் மற்றும் வரலாறு என்பவற்றின் பதிவுகள். அவை சமூக மாற்றத்தை பிரதிபலிக்கின்றன.
அந்த வகையில் துன்பகரமான சுவர், தலைப்பிடப்படாதது போன்ற இவரது படைப்புக்கள் யாழ்ப்பாண மரபுரிமையின் நீடித்த சாட்சியங்களில் ஒரு அலகாகிய கட்டடங்களின் அழிவிற்கு பின்னாலான காரணங்களை பற்றிச் சிந்திக்கவும், நாம் இழந்த பல கட்டடங்களை மீள எம்மையும் எமது மனப்பதிவிலிருந்து மீட்டிப் பார்க்கவும் அழைக்கிறது.
இதனைத் தொடர்ந்து பிரதீப் தலவத்தேயின் மறைந்து மீண்டும் தோன்றும் நிலப்பரப்பு எனும் படைப்பானது பழைய கட்டங்கள் வீதி அகழிப்புக்குட்படுத்துவதால் ஏற்படும் மாற்றத்தினை கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது. இவ்வாறாக இவ் படைப்புக்களானது கட்டட வெளியில் நிலைத்த வடிவாக இருந்தாலும் அதன் பயன்பாடும், பார்வையும் காலத்தோடு மாறிக் கொண்டே இருப்பதனையும் மரபுரிமை என்ற வகையில் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் பறை சாற்றுவதாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து இக் கண்காட்சியின் பொருட்களும் நகர்வும் என்ற பகுதியானது யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் யாழ்ப்பாணத்தில் உள்ள கோயில்கள், வீடுகள் மற்றும் பொதுக் கட்டடங்களில் இருந்து காணாமலாக்கப்பட்ட, களவாடப்பட்ட, எமது மக்களாலே பழம்பொருட்களாகக் கருதி விற்கப்பட்ட பழைய பாவனைப்பொருட்கள், தளபாடங்களை தனது நினைவிலிருந்து வரைந்திருப்பதனூடு பார்ப்பவர்க்கும் தம் சூழலிலிருந்தும் அவற்றின் மதிப்பை, பெறுமானத்தை உணரும் படி இழந்தவற்றை நினைவூட்டுவதாக கிருஸ்ணப்பிரியா அவர்களது படைப்பான யுசவநகயஉவள கசழஅ துயககயெ என்ற நூலானது காட்சிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கத்தரின் டேனியல் அவர்களது மறைந்த நினைவுகள் (2025) எனும் படைப்பானது தனது பாட்டியின் சமையலறை, பாட்டியின் ஞாபகங்கள், தனது சிறு வயது ஞாபகங்கள் போன்ற சூழலில் கைவிடப்பட்ட பழைய பாவனைப்பொருட்களினை தனது நினைவிலிருந்து வரைந்திருப்பதனூடு அது நவீனத்துவத்தால் மாற்றத்திற்குட்பட்டமையை நினைவூட்டுவதாக இவரது படைப்பு காட்சிப்படுத்தப்பட்டது.
இக் கண்காட்சியின் அடுத்த பகுதியாக பொருட்களும் பயில்வும் என்பதில், கைவினைப் பிரிப்பான திலக்சியா மட்பாண்ட நிறுவனத்தினை சார்ந்த கைவினைஞரினை நேர்காணல் மேற்கொண்டதோடு, மாற்றத்திற்குட்பட்டு தொடர்ந்து பயில்வில் உள்ள கைவினைத்தொழிலினை ஆவணப்படுத்தும் வகையில் தரன் அவர்களது ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைவினையான நெசவு, மண்பாண்டம் செய்தல், பின்னுதல் போன்ற கைவிடப்பட்ட எமது அடையாளத்தையும் அவை இன்றும் மாற்றத்திற்குட்பட்டு தொடர்ந்து செயலில் இருப்பதையும் நினைவூட்டுவதாக தர்மபாலன் திலக்சன் அவர்களது ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இடைமாறும் வெளியில் மரபுகள் என்ற பகுதியானது சர்மிளா சூரியகுமாரின் பிணைத்தல், முடிச்சுக்களின் தீண்டல் (2023), முடிச்சுக்களின் தீண்டல்(2024) ஆகிய படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இவை இந்து மத நம்பிக்கைகளில் மகப்பேற்றுக்காக, நினைத்தது நிறைவேற வேண்டுமென பல நேர்த்திகளின் பகுதிகளாக மரங்களின் நாணயங்களுடனான துணிகளை முடிச்சிடுதல், தொட்டில் கட்டுதல் முதல் கிராமத்து தெய்வங்களுடன் இணைத்து மரங்களை புனிதமாக, தல விருட்சங்களாக வணங்கும் முறை காணப்படுவதை நினைவுபடுத்துகின்றன. அதே வேளை இவ் வழிபாட்டின் நோக்கத்தில் இலங்கையின் உள்நாட்டு முரண்பாடு காலத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்டவர்கள் மீளத் திரும்ப வேண்டும் எனும் வேண்டுதலும் இவ் வழிபாட்டின் பகுதியாக மாறியுள்ளது. இப் படைப்புக்கள் மபுரிமையின் தொட்டுணரமுடியாத அலகாகிய மத நம்பிக்கை, கிராமிய வழிபாடுகளின் அம்சங்களையும் அவற்றின் எச்சசொச்சங்களையும் வெளிப்படுத்தி நிற்பதோடு மரச் செதுக்கலின் அசைவியக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது.
அதே வேளை பிறைநிலா கிருஸ்ணராஜாவின் வேர்களுடனான வரலாறு: திருநெல்வேலி மரம் செதுக்கும் கிராமம் எனும் டிஜிட்டல் அச்சுக்களாக பிரதி செய்யப்பட்ட புகைப்படத் தொடரானது ஆறுமுகம் ஆச்சாரியால் 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆறுமுகம் சிற்பாலயத்தை தொடர்ந்து அவரது பரம்பரையினரின் பட்டறையின் கைவினைஞர்களின் கலைப் பயில்வை ஒளிப்படமாக்கியுள்ளதன் மரபிலிருந்து தற்காலம் வரை அவர்கள் தொடரும் சில தொடர்ச்சிகளையும் அதில் ஏற்பட்டுள்ள அசைவியக்கங்களையும் தொழில்நுட்ப சாத்தியங்கள், சந்தை நிலவரங்களால் விரைவான மாற்றத்துக்குள்ளாகி வரும் கைவினை, அதன் பயில்வு, அறிவு, கைவினைஞர்கள் என்பவற்றைப் பேனுதலின் முதன்மை, அதே நிலவரம் மற்றைய கைவினைகளுக்கும் நிகழ்ந்து கொண்டிருத்தல் ஆகியன பற்றியும் அதனை பேண வேண்டும் என்ற சிந்தனையையும் விளக்கும் வகையில் இவரது படைப்பு காட்சிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இக் கண்காட்சியின் இறுதிப் பகுதியாக எதை நாம் பெற்றுக் கொண்டோம்? எனும் பகுதியானது நய்னா மங்களநாயகத்தின் அடையாளம் தொடர்பாக கட்டமைக்கப்பட்ட நிர்ணயங்கள் மீதான கேள்விகளாகவே இவரது ஒளிப்படங்கள்; சூழமைவுபடுத்தப்பட்டுள்ளது.
நய்னாவின் தந்தை யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராயினும் அவரது தாயார் டேனியப் பெண். அவர் தன் அடையாளத்தை யாழ்ப்பாண தமிழ் – டேனிய எனும் இரு அடையாளங்களின் இணைவாகவே எப்போதும் காண்கிறார். நய்னாவின் இவ்விரட்டைக் கலப்பு அடையாளம் அவரது சூழல், குடும்பம், மற்றவர்களின் பிம்பத்துடன் ஒத்துப்போகாத நிலவரத்தில் எழும் சிரமங்கள், தனது தந்தையின் பக்கத்தில் உள்ளவர்களுக்கு இடையிலான இடைவெளி, தான் வெளி நபராகவும் உள் நபராகவும் குடும்ப அமைப்பிற்குள் பார்க்கப்படுகின்றமை எனத் தமது சொந்த இடத்தைப் பகுப்பாய்வு செய்வதற்காக அவரது தமிழ் அடையாளத்துடனான நீண்ட இணைப்பை, ஆழத்தை தனது சுயசரிதத்தனமான ஒளிப்படங்களில் சிறைப்பிடித்துள்ளார்.
இங்கு அவரது அடையாளம் பற்றிய தேடல்களிற்காக மரபுரிமை சார்ந்து புலம்பெயர் வெளியில் பயிலப்படும் விடயமாகிய வரவேற்பிற்காக பூரண கும்பம் வைத்தல், சுவரில் தொங்கும் கறுப்பு வெள்ளையாலான அவரது மூதாதையரின் சட்டகமிடப்பட்ட மெய்யுருவின் ஒளிப்படம் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றின் வழி படைப்பாளி தனது தந்தை வழி அடையாளத்தின் வேர்களைத் தேடும், தொடுப்பதனூடு தான் ஏன் வேறாகப் பார்க்கப்படுகின்றேன் எனக் கேள்வி எழுப்புகின்றார்.
இறுதியாக இவ் ஓவியரின் படைப்பு இடம்பெறும் யு தொடக்கம் ணு வரையான முரண்பாடுகள் எனும் கலைஞர்களின் நூல் ஓர் கண்ணாடிப் பெட்டிக்குள் ஒரு பக்கத்தை காட்டுவதாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்நூலில் தமிழ் அகர வரிசையில் மை என்ற எழுத்துக்கான பதிலீடாக மரபுரிமை என்ற சொல் அதற்கான வரைவிலக்கணம் மற்றும் ஒரு ஒளிப்படப் பதிவினை நய்னா மங்களம் செய்துள்ளார். இங்கு யாரோ ஒருவருக்கு கையளிப்பதற்காய் நீட்டப்பட்ட ஒரு கையில் 1000ரூபாய் நாணயத்தாள் காணப்படுகின்றது.

இத்தாள் மஹிந்த ராஜபக்சவினால் 2009 யுத்த முடிவின் பின்னர் அவ்வெற்றியைப் புகழ்படுத்த இலங்கையின் தேசியக்கொடியை வெற்றிக்கொடியாக நாட்டும் ஐந்து படைவீரர்களின் படத்துடனும் மறு புறம் தன் சுய உருவப் படத்துடனுமாக வெளியிடப்பட்டது. இந்த நாணயத் தாளைக் கையளிக்கும் கையினை மரபுரிமை எனும் சொல்லுக்கும் அதன் வரைவிலக்கணத்துக்கும் எதிரீடாகக் வைப்பதினூடு நாட்டின் மக்களிற்கு குறிப்பாகப் பெரும்பான்மையினருக்கு அப்போதைய அரசு மரபுரிமையாக எதைக் கையளித்தது? என்பதோடு மரபுரிமையாக நாம் எதை அடுத்த சந்ததிக்குக் கையளிக்கிறோமோ அதுவே அடுத்த சந்ததியால் தொடரப்படும் ஆகவே நாங்கள் எல்லோரும் எதை அடுத்த சந்ததிக்கான மரபுரிமையாகக் கையளிக்கப்போகிறோம் எனும் வினாவையும் நயினாவின் படைப்பு எழுப்புகின்றது.
மரபுரிமை: மாறும் தளம் எனும் காண்பியக் காட்சியானது மரபுரிமை அம்சங்கள் சிலவற்றின் மாற்றங்களைக் காட்சிப்படுத்துவதோடு, அவை எவ்வாறு தொடர்ந்து சவாலுக்குள்ளாகின்றன? அவற்றின் இழப்பும், இன்மையும் எவ்வாறு நினைவுகளைக் காட்சியாக, அடையாளங்களாக மறுகட்டமைப்புச் செய்கின்றன? என்பதையும், கடந்தகாலம், நிகழ்காலத்திற்கு இடையிலான நுண்ணிய தொடர்ச்சியைப் பற்றிச் சிந்திக்கவும் அழைக்கின்றன என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது.
