இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரரான விராட் கோலி, 2025 மே 12 அன்று தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வை அறிவித்து, ஒரு பெரும் டெஸ்ட் கிரிக்கெட் பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். 2008ம் ஆண்டில் தனது சர்வதேச பயணத்தை தொடங்கிய கோலி, 123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்கள் எடுத்துள்ளார். 10000 ஓட்டங்கள் என்ற மைல் கல்லை எட்ட முதல் இந்த ஓய்வை எடுத்தமை இரசிகர்களை ஆச்சரியப்படுத்தினாலும் இந்தியாவில் கொட்டி கிடக்கும் இளம் ஆற்றலாளர்களுக்கு வழிவிட வேண்டியதும் கட்டாயமானது ஆகிறது.

அவரது ஆட்டத்திறன் மட்டுமல்லாமல், அணியின் கேப்டனாக 68 போட்டிகளில் பங்கேற்று 40 வெற்றிகளை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்க்கர் போன்ற ஆளுமையுடன் ஒப்பிட்டால், சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள் எடுத்தாலும், கோலி குறுகிய காலத்தில் அதிக வெற்றிகள் மற்றும் வெளிநாட்டு மண்ணில் தொடர் வெற்றிகள் பெற்றுள்ளார். இருவரும் வெவ்வேறு கால கட்டங்களில் விளையாடியவர்கள் என்பதால் ஒப்பிட முடியாதவர்கள். சச்சின் சச்சின் தான். கோலி கோலி தான். சச்சின் அமைதியான தன்னம்பிக்கையின் முதன்மை முகமாக இருந்தால், கோலி உற்சாகமான தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பாக விளங்கினார்.
உலக கிரிக்கெட்டில் விராட் கோலி தனித்துவமான ஒரு நட்சத்திரம். வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு போராடுவதில் ருசி கண்டவர். சச்சின் வழியாக கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்களுக்கு கங்குலி கொஞ்சம் வித்தியாசம் காட்டினார். கங்குலியின் கோபம் மற்றும் கள வாக்குவாதம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. சாதுவான சச்சினின் எதிர் துருவத்தை தேடி அலைந்த கூட்டத்துக்கு கங்குலி தீனி போட்டது உண்மை.

விராட் கோலி கால் ஊன்றிய காலத்தில் அவர் வெளிப்படுத்திய உணர்வெழுச்சி, கிரிக்கெட் விளையாட்டுக்கு சம்பந்தமில்லை என்று உறுதியாக நம்பினேன். அந்த நிலைப்பாட்டில் அவரை நிராகரித்தேன். சச்சின் கங்குலி போன்ற வழிகாட்டிகளை ஏற்றுகொண்ட மனதுக்கு கோலி துச்சமாகத் தெரிந்தார். எல்லாம் கொஞ்ச காலம்.
விராட் கோலி கிரிக்கெட் விளையாட்டில் ஒரு கால்பந்தாட்ட வீரனோடு ஒத்துப்போனார். குத்துச்சண்டை வீரனின் பெருங்கோபத்தை மைதானத்தில் கட்டவிழ்த்து விட்டார். இங்கு எனக்கொரு கேள்வி உண்டு. கிரிக்கெட் விளையாட்டை இத்தனை உக்கிரமாக ஆட வேண்டுமா? முன்னவர்கள் சாதுக்கள். என் மூப்பர்கள் மகா முனிகள். கோலி ஏன் இவ்வளவு தீவிரம் காட்டவேண்டும்?

அதற்கான பதிலையும் கோலியே தந்தார். மைதானம் முழுவதும் நான்கு மணிநேரம் வெறித்தனமாக ஓடி முடித்துக் கையில் மட்டையுடன் கோலி களத்தில் இறங்கும்போது பிரமித்துப் போனேன். அடுத்த நான்கு மணிநேரம் மின்னல் வேகத்தில் ரன்களை குவித்தார். எப்படி இவ்வளவு உற்சாகம். எங்கிருந்து வருகிறது இத்தனை கரை புரண்ட ஆற்றல்?
விராட் கோலியின் உடல் மற்றும் மனம் ஒருநொடி கூட களைத்துப் பார்த்தது கிடையாது. மைதானம் அல்லது போராட்டத்தை ரசிக்கிற ஒருவனின் தம்மம் அது.
இந்திய கிரிகெட் வரலாற்றுக்கும் விராட் கோலிக்கும் என்ன வித்தியாசம் என்றால் இது ஒன்றுதான் என அடித்துச் சொல்வேன். கோலி ஒரு மனித இயந்திரம்.
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அசத்திய ஒரே அவதாரம். என் காலத்தில் நான் கொண்டாடிய அனைத்து கிரிகெட் வீரர்களுக்கும் மேலான உடல் மற்றும் மன வலிமை கொண்ட மாவீரன் கோலி. கிரிக்கெட்டின் பாரம்பரிய வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் உன் பொற்பாதங்களில் முத்தங்கள் என் காதலனே.

அவரது டெஸ்ட் ஓய்வு, இந்திய அணிக்குள் ஒரு புதிய தலைமுறைக்கு வாய்ப்பை வழங்குகிறது. இளம் வீரர்கள் வந்தாலும், விராட் கோலியின் சாதனைகள், தலைமுறைகளை வழிநடத்தும் ஒளியாக நிலைத்திருக்கும்.
