இளம் தலைமுறையின் சாதனைகளை உற்சாகப்படுத்தும் முகமாகவும், சமூகத்தின் முன்னேற்றத்தில் அவர்களின் பங்கு மற்றும் சேவைகளை மதிப்பளிக்கும் நோக்கில், செஞ்சொற்செல்வர் பிறந்தநாள் அறநிதியச் சபை வருடந்தோறும் “இளைய ஆற்றலாளர் விருது”யை வழங்கி வருகின்றது. இவ்வருடம், இவ் விருதினை பெறுபவர்களாக சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் பாலசிங்கம் பாலகோபி மற்றும் யாழ் பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


டாக்டர் பாலகோபி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சைத் துறையின் தலைவர் மட்டுமல்லாமல், சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார். கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா, புவியியல் துறைத் தலைவராகவும், அத்துடன் சான்றளிக்கப்பட்ட வானிலை ஆய்வாளராகவும் சிறப்பாகக் கடமையாற்றி வருகிறார்.
இவ் விழாவில், யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டாக்டர் சிவன்சுதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஏராளமான பொதுமக்கள், சமயத் தலைவர்கள், மகளிர் இல்ல மாணவிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் விழாவில் கலந்து கொண்டு விருது பெற்ற இளம் ஆற்றலாளர்களை வாழ்த்தினர். தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர் அவர்கள் நிகழ்வை வழிநடத்தினார்.

விருது பெற்ற இருவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! அவர்கள் எதிர்காலத்தில் மேலும் உயர்ந்தோங்கி, சமூக சேவையில் தங்களை அர்ப்பணிக்க, தெல்லி நகர் அன்னை துணைநின்று அருள் செய்வாளாக வாழ்த்துகிறோம்.
