இதழ் 87

அந்த விநாடியை வாழப் பழக மாட்டோமா…?

அண்மையில் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் மிகவும் ஆழமான சிந்தனைகளை எங்கள் மனங்களில் விதைத்துள்ளது. அதிகாலை எழும்பி, நீராடி, நேர்த்தியாக உடை அணிந்து, பல மைல் தூரம் பயணம் செய்து, மிகப்பெரும் மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்து, முருகப்பெருமான் வரவை எதிர்பார்த்து காத்திருப்பது எதற்காக? தொலைபேசியில் அந்த காட்சியை சேமித்து வைப்பதற்காகவா? அல்லது ஆண்டுக்கு ஒருமுறை காணும் அந்த அலங்காரக் கந்தனின் அற்புதக் காட்சியை கண்குளிர கண்டு, மனமுருக வழிபட்டு, அரோகரா என்ற அதிர்வுகள் நிறைந்த அந்த தெய்வீகமான, பக்திப் பிரவாகத்தில் திழைத்து, அந்த ஆன்மீக அனுபவத்தை அனுபவிப்பதற்கா? இந்த கேள்விக்கான பதிலை ஆராய்ந்து விட்டு அடுத்த முறை ஒரு ஆலயம் செல்லுங்கள்.

மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்கள் அதி நவீன புகைப்பட கருவிகளின் உதவியுடன் அணு அணுவாய் அழகன் முருகனை இரசித்து, அதை தொழில் நுட்ப உதவியுடன் மேலும் அழகாக்கி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி உள்ளார்கள். அந்த படங்களில் முருகப்பெருமானின் ஆபரணங்களில் இருந்து, சாத்துப்படி சோடணைகள் வரை அழகாக தெளிவாக கண்டு காலத்திற்கும் இரசிக்க முடியும்.

இது இவ்வாறு இருக்க, எதற்காக எல்லோரும் புகைப்படம் எடுக்க முயற்சிக்கிறோம்? எல்லோருமே கைகளை உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டிய நேரத்தில், கை உயர்த்தி கைபேசி பிடித்து, அந்த காட்சியை சிறைப்பிடித்து என்ன காண போகிறோம்? அந்த கணத்தின் காட்சிகள் சித்திரமாகி சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழியும் தானே? அவற்றை நாங்கள் சேமித்து வைக்கலாம். விரும்பினால் வர்ண பிரதி எடுத்து, சட்டகமாக்கி வீட்டில் வைக்கலாம். நெருக்குப்பட்டு, முண்டி அடித்து, தள்ளுப்படும் கூட்டத்திற்குள் நின்று, கைகளை உயர்த்தி எடுக்கும் புகைப்படங்கள் நேர்த்தியாக வரவே வராது. பிறகு ஏன் இந்த தேவையில்லாத வேலை. இவ்வாறு எங்கள் கைபேசிகளில் எடுக்கும் படங்களை எத்தனை தடவை திருப்பி திருப்பி பார்ப்போம். எங்கள் வரவை சமூக வலைத்தளத்தில் பதியவா இந்த வேலை? இந்த சமூக வலைத்தளங்களில் இருந்து எங்களுக்கு சுதந்திரம் வாங்கித் தரப்போவது யார்?

மேலும் கைகளை உயர்த்தி கைகூப்பி வணங்கினால், பின்னால் இருப்பவருக்கு சுவாமி தரிசனத்தை இடையூறு செய்ததாகி விடுமென்று கை உயரத்தி வணங்குவதையே தவிர்க்கும் பக்தர்களையும் கண்டிருக்கிறோம். அவர்களுக்கு மத்தியில் இவ்வாறு கைபேசியை உயர்த்தி தாமும் அந்த திருக்காட்சியை அனுபவித்து வழிபடாமல் மற்றவர்களையும் வழிபட விடாமல் தடுக்கும் செயலை என்னவென்று சொல்வது? இன்னொருவர் வழிபாட்டை இடையூறு செய்வது மிகப்பெரும் பாவச் செயல் என்பதை எப்போது உணர போகிறோம். நந்தனார் வழிபடுவதற்காக சிலையாக இருந்த நந்தியே விலகியதாக கூறுவார்கள். எனவே, அந்த தெய்வீக அனுபவத்தை நாம் அனுபவிக்காமல் விட்டாலும் இன்னொருவர் பெறுவதற்கு நாம் தடையாக இருந்து விடக்கூடாது.

கண்கள் தரிசிக்க வேண்டிய திருக்காட்சியை கமராக்களா தரிசிக்க வேண்டும்? பெரும்பாலான ஆலய உள் வீதிகளில் புகைப்படங்கள் எடுக்க தடை விதித்திருப்பதே இந்த நோக்கத்திற்காகத்தான். இனிவரும் காலங்களில் வெளி வீதிகளிலும் இவ்வாறான தடைகளை விதிக்க வேண்டிய தேவை வந்துவிட்டதாகவே உணர்கிறோம்.

எனவே, நல்லூர் கந்தசுவாமி கோயில் உட்பட மற்றய ஆலயங்களிலும் மட்டுமல்ல, எங்கள் வாழ்க்கையிலும் முக்கியமான தருணங்களை முதலில் நாங்கள் மனதார அனுபவித்து உள்ளத்தில் சிறைப்பிடிக்க பழக வேண்டுமே தவிர கமராக்களில் அல்ல. மாற்றங்களை எங்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பிப்போம்…!

Related posts

இதழ் 87

Editor

தொல்லியல் துறைசார் கற்கையின் முக்கியத்துவங்கள்

Editor

போதைக்கு அடிமையாதலை களையும் சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்

Editor

Leave a Comment