திருமண வைபவங்களில் மாங்கல்யம் கட்டும் போது ஏன் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது..?
மண்டபத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ யாரையோ வசைபாடிக்கொண்டிருக்கலாம். அமங்கலமான வார்த்தைகள் கூறிக்கொண்டிருக்கலாம். அத்தகைய தகாத வார்த்தைகள் எதுவும் தவறுதலாக கூட மாங்கல்யம் பெறும் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே அந்த அமங்கல சத்தங்களை அடக்கும் நோக்கில் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது.
ஒரு மங்கல நிகழ்வில் நல்ல வார்த்தைகளே பேசப்படவேண்டும் என்று வகுத்து வைத்துள்ளது நம் நாகரிகம். இவையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லி முன்னோக்கி செல்வது- களை எடுக்கிற வேகத்தில் பயிரையே பிடுங்கிய கதைதான்.
நமது மங்கல வழக்குகள் ஒரு மகத்தான சம்பிரதாயம். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் விழுது விட்டுத் தழைக்கும் மரம் ஆலமரம். ஓரிடத்தில் முளைக்கும் அறுகம்புல் அத்தனையையும் ஒருங்கு சேர்ப்பது ஒரே வேர்தான். இப்படித் தழைத்து நிற்பவை, வேரோடு வாழ்பவை, பெருமைக்குரிய பேறுகள் அனைத்தையும் மங்கல வழக்கில் சேர்த்தார்கள். இயற்கையில் கண்டடைந்த ஞானத்தை வாழ்வியலாக வகுத்தார்கள்.
ஒரு மங்கல நிகழ்விற்கு வருபவர்கள் உட,உள சுத்தியுடன் உள் நுழைய வேண்டுமென வாசலிலே நிறைகுடம் வைக்கப்படுகிறது. விபூதி- சந்தனம்- குங்குமம் போன்ற மங்கல பொருடகள் அணிவித்து விருந்தினரை வரவேற்பது தமிழர் மாண்பு. சந்தனம், குங்குமம், விபூதி மூன்றும் இல்லாமல் தமிழர்களின் சடங்குகள் சிறப்புப் பெறுவதில்லை.

நெற்றிக்கு அழகு நீறு தான்.
‘நீறில்லா நெற்றி பாழ்’ என்பது ஔவை காட்டிய நல்வழி.
கூன்பாண்டியனின் வெப்ப நோயைத் தீர்ப்பதற்காக அவன் உடல் முழுதும் திருநீறு பூசி திருநீற்றுப் பதிகம் பாடி சிவபெருமானைத் துதித்தார் திருஞானசம்பந்தர். திருநீற்றின் மகிமையால் வெப்ப நோய் முற்றிலுமாகத் தீர்ந்து பாண்டிய மன்னன் பூரண குணமடைந்தான்.
`மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல
வாயன் திருநீறே!’
என்ற முதல் பாடலுடன் தொடங்கும் திருநீற்றுப் பதிகம், திருநீற்றின் பெருமைகளை விரிவாகப் பேசுகிறது. அனைவரும் திருநீறு அணியுங்கள் என அறைகூவிச் சொல்கிறது.
எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும். கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும். அது ஒரு வகை வேதி வினை. அதையே நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டதுதான் திருநீறு.

உருவாகும் வகைக்கேற்ப திருநீற்றிலும் பலவிதம் உண்டு. கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.
ஆரண்யங்களில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு, மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு,
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு என உண்டாக்கும் வகையில் திருநீற்றுக்கு பல பெயர்கள் உண்டு.
விபூதியை நெற்றியில் எப்படி எடுத்துப் பூச வேண்டும் என்று சில சம்பிரதாயங்கள் உள்ளன. விபூதி அணிவதற்கு ஆள்காட்டி விரல், சுண்டு விரல் மற்றும் நடுவிரலை பயன்படுத்தக் கூடாது. ஆள்காட்டி விரலால் விபூதி பூசுவதால், பொருள் இழப்பும், நடு விரலால் விபூதி இட்டால் நிம்மதியின்மையும், சுண்டு விரலால் அணிவதால் கிரக தோஷங்களும் ஏற்படலாம் எனப்படுகிறது.
விபூதியை அணிந்து கொள்வதற்கு மோதிர விரலே சரியானது. மோதிர விரல் மற்றும் கட்டை விரல் இரண்டையும் சேர்த்து விபூதியை எடுத்து, மோதிர விரலால் விபூதியை நெற்றியில் அணிந்து கொள்பவர்களுக்கு எண்ணிய காரியம் நிறைவேறும், முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
நம் நெற்றியின் இருபுருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகள் உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி, மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க இந்த இடத்தில் திருநீறு, சந்தனம், குங்குமம் போன்றவை இடப்படுகின்றன. இந்த உண்மையைச் சாதாரணமாகக் கூறி விளங்க வைக்க முடியாத மக்களுக்கு, நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கிறார்கள். எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துகிறது.
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும் படாமலும் சுண்டு விரலை நேராகப்புடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு தோன்றும். சிந்தனை தெளிவு பெறும். எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க சந்தனம் சரியான மருந்து. நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்களின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.
மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து தயார் செய்யப்படுவது குங்குமம். இவை மூன்றுமே கிருமிநாசினிப் பெருட்கள் ஆகும்.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்குமாம். அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். அதனால்தான் திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது என்கிறார்கள்.
ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்கிறார்கள்.

தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை அனைத்தும் உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு நன்மைகள் பல உண்டாகும்.
நெற்றி நிறைய இந்த மங்கல பொருட்களை அணிவதை ஏளனம் என்று கருதும் அறியாமை சந்ததிகளிற்கு அறிவிப்பது எம் கடமையாகும்.
நெற்றியில் திருநீறு அணிவதால், மூத்தவளான மூதேவி நம்மை விட்டு விலகிச் சென்று விடுவாள் என்றும் அந்த நேரத்தில் இளையவளான திருமகள் நம் இல்லம் தேடிவந்து நம் சிந்தையைக் குளிரவைப்பாள் என்றும் உரத்துச் சொல்கிறது இந்தத் திரைப்பாடல்.
`கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி
ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை
நாடிவரும்
சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திரு
நீறணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப்
போய்விடுவாள்
அந்தநேரம் பார்த்திருந்த அன்னை
செல்வம் ஓடிவந்து
சிந்தை குளிர வைத்து சொந்தம்
கொண்டாடிடுவாள்
மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை
இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப்
பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீறு
அணிந்திடடா
தீர்ந்திடும் அச்சமெலாம் தெய்வம் துணை
காக்குமடா!’
