இதழ் 87

படிப்பதும் நினைவில் பதிப்பதும்

ஒவ்வொரு நாளும் மனிதர்களாகிய நாம் புதிய புதிய விடயங்களை கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். தினம் தினம் கற்பவன் தினமும் புதியவனாக பிறக்கிறான். கல்வி என்பது வேலைக்கானது மட்டுமல்ல, அறிவின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும் நாம் கற்க வேண்டும். வாழ்க்கையின் அர்த்தம் எங்கோ ஏதோ ஒன்றில் ஒளிந்து கொண்டிருக்கின்றது, அதைக் கண்டுபிடிக்க கல்வி ஒரு முக்கிய திறவுகோல். கற்றுக் கரை காண முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கற்பது நமது வாழ்நாள் முழுவதும் இடம்பெறக்கூடிய ஒரு விடயம். இதற்கு வயது தடையாக இருக்காது, எமது மற்ற வேலைகளும் எமக்கு தடையாக இருக்காது. ஆனால், நாம் கற்பதற்கு தேவையானவற்றை முதலில் அறிந்து வைத்து ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.

கல்வியாக இருந்தாலும் சரி, ஏனைய விடயங்களாக இருந்தாலும் சரி, அவற்றைக் ஞாபகத்தில் பதித்து வைத்திருப்பது என்பதுதான் நாம் அனைவரும் எதிர்நோக்குகின்ற சிக்கல். எல்லோருக்கும் ஆசை உண்டு, குறைந்த நேரத்தில் ஒன்றை படிக்க வேண்டும், ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நிறைய தகவல்களை நாம் படித்துதான் தெரிந்து கொள்கின்றோம். அதைத் துரிதமாகப் படித்து தெரிந்து கொள்ள ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அதற்கான ஒரு ஒழுங்குமுறையை நாம் செயல்படுத்த வேண்டும்.

படிப்புக்கான நேரத்தை உருவாக்குதல்

படிப்பதை மேம்படுத்திக் கொள்ள விரும்பினால், படிப்பதற்கு தேவையான நேரத்தினை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். உண்மையில் உங்களுக்கு ஆர்வம் இல்லாத விஷயத்தைப் படிப்பதை விட, முக்கியத்துவம் குறைவான விஷயங்களைப் படிப்பதை விட, அந்த நேரத்தை தகுதியானவற்றை படிப்பதற்கு பயன்படுத்தலாம். புத்தகச் சுருக்கங்கள் (Book Summaries) கரும்பின் சாறு, கனியின் ரசம் போல் புத்தகங்களின் சத்தான விஷயங்களைப் புத்தகச் சுருக்கமாகப் பெற்று கற்றுக்கொள்வது ஞாபகத்தில் பதிப்பதற்கான ஒரு நல்ல முயற்சியாக இருக்கும். குறைந்த நேரத்தில் நாம் நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்து முக்கியமான விடயங்களை நாம் இழந்து விடுகிறோம். அவற்றை நினைவில் இருந்தும் அழித்து விடுகிறோம். அமெரிக்காவில் “சவுண்ட் வியூ” என்ற நிறுவனம் புத்தகச் சுருக்கங்களை வெளியிட்டு வருகின்றது. இது போன்ற முயற்சிகள் குறைவான நேரத்தில் அதிக தகவல்களை உள்வாங்க உதவும்.

வாசிப்புத் திறனை மேம்படுத்துதல்

முக்கியமான வார்த்தையைப் புரிந்து கொள்ளாதவர், முழு வாக்கியத்தையும், அதன் அர்த்தத்தையுமே புரிந்து கொள்ள முடியாதவர் ஆகிறார். நம்முடைய வாசிப்புத் திறனில் பாதி அளவை அல்லது மூன்றில் ஒரு பங்கைதான் நாம் படிப்பதற்கு பயன்படுத்துகின்றோம். வாசிப்பதற்குத் திறமை வேண்டும். அந்தத் திறமையை பயிற்சி மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். நாம் ஒரு விடயத்தைக் கேட்கும் போது மேலோட்ட நோக்கும் கவனமும் தேவை. படிக்கும்போது ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை வார்த்தை வார்த்தையாய் பக்கம் பக்கமாய் சிரமத்துடன் படிக்க வேண்டும் என்பதில்லை.

ஸ்கிம்மிங் (Skimming) மற்றும் ஸ்கேனிங் (Scanning):

மேலோட்டமாகப் படிக்கும் போது கண்கள் வரிகளின் மீது ஒட்டிக்கொண்டே இருக்கும். அதே நேரத்தில் முக்கியமான விஷயங்களை (தலைப்பு, வரைபடம், கண்ணைக் கவரும் செய்திகள்) விட்டுவிடக்கூடாது. எப்போதுமே ஒரு பந்தியின் முதல் வாக்கியத்திலும் கடைசி வாக்கியத்திலும் நல்ல குறிப்புகள் இருக்கும். கவனமாக வாசிப்பது என்பது முழுமையாகப் படிக்காமலேயே நுட்பமுடன் பரீட்சித்து அறிவது. மேலோட்ட நோக்குடன் கவனமாகப் படிக்கும் போது குறைந்த நேரத்தில் நிறைய விடயங்களைப் படிக்கலாம். இந்த ஸ்கிம்மிங் மற்றும் ஸ்கேனிங் உத்திகள் வாசிப்பு வேகத்தை அதிகரிக்கவும், முக்கியமான தகவல்களை விரைவாகக் கண்டறியவும் உதவும்.

ஞாபக சக்தியை மேம்படுத்தும் உத்திகள்

பயிற்சி ஒருவனை முழுமையாக்கும். அந்த வகையில் பயிற்சி மூலம் உங்களது ஞாபக சக்தியை மேம்படுத்திக் கொள்ளுங்கள். பெயர்களையும், இடங்களையும், திகதிகளையும் நினைவுபடுத்திக் கொள்ளும் முயற்சியில் பல நிமிடங்களை வீணடிக்க வேண்டி இருக்காது. உங்களுக்கு பதிலாக தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ளும் பொறுப்பை கணினிகளின் தலையிலோ அல்லது கையடக்க தொலைபேசியின் தலையிலோ கட்டிவிட வேண்டாம். நீங்கள் ஞாபகப்படுத்தி வைக்க வேண்டிய விடயங்களை நீங்களே உங்கள் நினைவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

எமது வாசிப்பு வேகத்தை மேம்படுத்தவும், ஞாபக சக்தி விருத்தி செய்து கொள்ளவும் சில உத்திகள் உண்டு.

 * நோக்கம்: படிப்பதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். எந்தவித நோக்கமும் இன்றி படிப்பது பயனற்றதாக இருக்கும். சுருக்கமாக கூறின் எமக்கென்று ஒரு இலக்கு இருக்க வேண்டும். இலக்கில்லாத பட்டம் இடையிலையே விழுந்து விடும்.

 * புரிதல் மற்றும் கோடிடுதல்: ஒரு விடயத்தைக் கற்கும் போது அவற்றை நாம் புரிந்து கற்றுக் கொள்ள வேண்டும். புத்தகங்களை வாசிக்கும் போது அச்செழுத்துகளில் மறைந்திருக்கும் அர்த்தத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் முக்கியமானவற்றை கோடிட்டு வைத்துக்கொண்டு, கோடிட்டுவற்றை படிப்பது மனதில் ஆழமாகப் பதியும்.

 * வாய்விட்டுப் படித்தல்: வாய்விட்டுப் படிப்பது வாசிப்பு வேகத்தைக் குறைக்கும். ஆனால், நாம் படிப்பவற்றை நினைவில் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். ஒரு விடயத்தை நாம் வாய்விட்டுப் படிக்கும் போது நமது செவிப்புலன், கண்புலன் இரண்டும் இணைந்து செயல்படும். எமது புலன் உறுப்புகள் ஒரு விடயத்தில் எந்த அளவிற்கு பங்குகொள்கின்றனவோ, அந்த அளவிற்கு நாம் ஒரு விடயத்தை தெளிவாகவும் நீண்ட காலத்திற்கும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும்.

 * சொற்களின் தொகுப்பாகப் படித்தல்: ஒரு சிலர் ஒவ்வொரு வார்த்தையாகப் படித்துக் கொண்டிருப்பார்கள். கருத்துக்கள் அரிதாகவே ஒரு வார்த்தையில் சொல்லப்படும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். விரைந்து படிப்பவர் வார்த்தைகளை கூட்டாகவே படித்துக் கொண்டு போவார். இது படித்தவற்றை நினைவில் வைத்துக் கொள்ள உதவாது. இப்பொழுது நாம் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வோம். ரயில் செல்லும் வேகத்தில் பக்கவாட்டு காட்சிகள் ஓடி மறையும். அந்தக் காட்சி நமக்கு ஞாபகத்தில் இருக்குமா? இருக்காது. ஏனெனில், அது ரயிலின் வேகத்தை போல எமது பார்வையில் இருந்தும் கடந்து சென்றுவிட்டது. அதேபோல்தான் வார்த்தைகள் ஓடிக்கொண்டே இருந்தால் முக்கியமான விடயங்களை நாம் விட்டு விடுவோம். படிக்கும் விடயமும் ஞாபகத்தில் இருக்காது. எனவே, வார்த்தைக் கூட்டங்களாகப் படிப்பது வேகத்தை அளித்தாலும், தகவல்களை உள்வாங்குவதற்கு ஒவ்வொரு வாக்கியத்தின் பொருளையும் உள்வாங்குவது அவசியம்.

 * திட்டமிடல் மற்றும் பயிற்சி: திட்டமிடுதல் என்பது கல்வியில் மட்டுமல்ல, அனைவரது வாழ்விலும் ஒரு முக்கியமான விடயம். அந்த வகையில் ஒரு அத்தியாயத்தை முடிக்க எத்தனை நிமிடங்கள் ஆகும் என்பதை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். அதை அந்த நேரத்துக்குள் படித்து முடித்து விட வேண்டும். பின்னர் அதை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து பார்த்தால் நீண்ட காலத்திற்கு அது நமது ஞாபகத்தில் இருக்கும்.

 * முக்கியமில்லாததை ஒதுக்குதல்: படிக்கும் போது முக்கியமில்லாத விஷயங்களைத் தைரியமாக ஒதுக்கி விடுங்கள்.

 * குறியீட்டு வசனங்கள்/வரைபடங்கள்: ஒரு விடயத்தைப் படிக்கும் போது எமக்கென்று தனியான குறியீட்டு வசனங்களையோ அல்லது வரைபடங்களை வைத்திருப்பது சிறந்தது. உதாரணமாக வானவில்லின் ஏழு நிறங்களையும் எம்மால் வரிசையாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால், ஆங்கிலத்தில் “VIBGYOR” என அந்த ஏழு நிறங்களின் முதல் எழுத்தையும் ஒரு குறியீடாக உருவாக்கி நினைவுபடுத்தி வைத்துக் கொள்ளும் போது இலகுவில் அந்த ஏழு நிறங்களையும் ஒட்டிப் பார்த்துக் கொள்ளலாம். இது நினைவூட்டி நுட்பங்களில் (Mnemonics) ஒன்றாகும்.

இணைத்துப் பார்த்தல் (Association)

டாக்டர் புருனோ ஃபர்ஸ்ட் ஞாபக சக்தி தொடர்பாக பல நூல்களை எழுதியவர். ஒரு தடவை இவரது மனைவி காப்புறுதி நிறுவனம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட நிதி தொடர்பான விடயங்களை மாற்றி வரும்படி சொல்லி இருந்தார். அவரது மனைவி கூறியதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இவர் தம்முடைய அலுவலக மேசை தீப்பிடித்துக் கொண்ட மாதிரி படம் வரைந்தார். இதிலிருந்து கூற வருவது யாதெனில், ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள நமக்கு பழக்கமான மற்றொன்றை அந்த விடயத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கலாம். இவர் கையாண்ட உத்தியும் அதுதான். நினைவூட்டி நுட்பங்கள், படிக்கும் தகவல்களை ஏற்கனவே தெரிந்த அல்லது காட்சிப்படுத்தக்கூடிய ஒன்றோடு தொடர்புபடுத்துவதன் மூலம் நினைவாற்றலை மேம்படுத்துகின்றன.

நினைவாற்றலின் முக்கியத்துவம்

ஞாபக சக்தி என்பது தசை மாதிரி. அது எப்பொழுதும் ஓய்வாக இருந்தால் பலவீனம் அடைந்து விடும். தொடர்ந்து உபயோகிக்க உபயோகிக்க வலுவடையும். தற்கால வாழ்க்கையில் வரும் புள்ளிவிபரங்களில் நாம் கணினிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை பெரிதும் நம்பி இருக்கிறோம். எனக்குத் தெரிந்த ஒருவரின் பிறந்தநாளை கூட நாம் எமது தொலைபேசிகளிலோ அல்லது எமது கணணிகளிலோ தான் சேமித்து வைக்கிறோம். எமது மூளையை செயல்படுத்துவதில்லை. எமக்கு மூளை இருப்பதையே நாம் உண்மையில் மறந்து விடுகிறோம். இவ்வாறு விஞ்ஞானத்தை நம்பி இருப்பதனால் படிப்பதில் பாதியை மறந்து விடுகிறோம். தொழில்நுட்பம் ஒரு கருவிதான், ஆனால் அது நமது அடிப்படை திறன்களை மழுங்கடிக்க விடக்கூடாது. மூளைக்குக் தொடர்ச்சியான பயிற்சி தேவை.

முடிவாக  படிப்பதும், படித்ததை நினைவில் பதிப்பதும் ஒரு தொடர்ச்சியான கற்றல் செயல்முறையின் இன்றியமையாத பகுதிகள். வெறும் தகவல்களைச் சேகரிப்பதை விட, அவற்றை உள்வாங்கி, புரிந்துகொண்டு, நீண்டகாலம் நினைவில் வைத்திருப்பதுதான் உண்மையான அறிவு. இதற்குக் கவனமான வாசிப்பு, குறிப்பெடுத்தல், மீண்டும் மீண்டும் பயிற்சி செய்தல், வாய்விட்டுப் படித்தல், காட்சிகளாக மனதில் பதியவைத்தல், மற்றும் ஏற்கனவே தெரிந்தவற்றுடன் தொடர்புபடுத்துதல் போன்ற உத்திகள் மிகவும் பயனுள்ளவை.

இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல்கள் எளிதில் கிடைக்கின்ற போதிலும், அவற்றை வடிகட்டி, முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிரித்தறிந்து, மனதில் நிலைநிறுத்தும் திறன் மிகவும் அவசியம். கணினி மற்றும் கைபேசிகள் தகவல்களைச் சேமிக்க உதவும் கருவிகளே தவிர, அவை நமது சிந்தனை மற்றும் நினைவாற்றல் திறன்களுக்கு மாற்றாகாது. நாம் நமது மூளையை ஒரு தசையைப் போல தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதும், அவற்றை நினைவில் நிலைநிறுத்த முயற்சிப்பதும் நமது அறிவின் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், நமது வாழ்வின் அர்த்தத்தை மேலும் ஆழப்படுத்தும். எனவே, ஒவ்வொரு நாளும் புதியதைக் கற்றுக் கொண்டு, நமது நினைவாற்றலை மேம்படுத்தி, வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருப்போம்.

Related posts

போதைக்கு அடிமையாதலை களையும் சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்

Editor

கழிவு வெளியேற்றத்தை நோய் என்று குழப்பாதீர்கள்

Editor

ஒரு யானைக்கு தூக்கு தண்டனை

Editor

Leave a Comment