துனித் நெத்மிக்க வெல்லாளகே இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக பந்து வீச்சாளராகவே அதிகம் அறியப்பட்டாலும் துடுப்பாட்டத்திலும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியவர். 2003 ஜனவரி 9 ஆம் தேதி பிறந்த இவர் மொரட்டுவா ஸ்ட்.செபாஸ்டியன்ஸ் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு ஸ்ட்.ஜோசப் கல்லூரியிலும் கல்வி கற்றபோதே தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.
பள்ளி மட்டத்திலேயே பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறந்து விளங்கியதால் இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணியில் இடம்பிடித்தார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியின் கேப்டனாக செயல்பட்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 113 ரன்கள் குவித்து இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணியின் கேப்டனாக சதம் அடித்த முதல் வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார். அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளைப் பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றார்.
அவர் பந்து வீச்சாளராக அதிகம் கவனம் பெற்றது 2023 ஆசியக் கோப்பையில் நடந்தது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களை தடம் புரள வைத்தார். ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில், கே.எல்.ராகுல், விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களை அவர் வீழ்த்தியதால் அந்த நாள் முழுவதும் அவரைப்பற்றியே பேசப்பட்டது. இலங்கை தோற்றிருந்தாலும் அந்த ஆட்டத்தில் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஒருநாள் மற்றும் தேர்வு அணிகளிலும் இடம்பிடித்து தொடர்ந்து விளையாடி வருவதோடு உள்ளூர் லீக்குகளிலும் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார். பந்துவீச்சில் மட்டுமல்லாமல் துடுப்பாட்டத்திலும் முக்கிய தருணங்களில் ரன்கள் குவித்து அணிக்கு துணை நிற்கும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் இவரின் வாழ்க்கையில் மிகக் கடினமான தருணம் 2025 ஆம் ஆண்டில் ஆசியக் கோப்பை தொடரின் போது ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி முடிந்தபின் தான் தந்தை சுரங்க வெல்லாளகே மரண செய்தி இவருக்கு தெரிவிக்கப்பட்டது. குடும்ப துயரத்தில் சிக்கியிருந்தாலும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற முன்னோடி வீரர்கள் போன்று தனிப்பட்ட வலியை மீறி மீண்டும் அணிக்கு திரும்பி விளையாடி தனது மனவலிமையை வெளிப்படுத்தினார். மிகக் குறுகிய காலத்தில் பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டதோடு குடும்ப சோகம் போன்ற தடைகளை கடந்து நிற்கும் உறுதியையும் காட்டியுள்ள துனித் வெல்லாளகே இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் என அனைவராலும் பாராட்டப்படுகிறார்

