தமிழ் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாக இருந்து, நம் பாரம்பரியம், பண்பாடு, அடையாளம், உயிர்மூச்சு என அனைத்தையும் தாங்கி நிற்கிறது. நம் மண்ணில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில்கூட இன்று தமிழின் புழக்கம் குறைந்து வருகிறது. அன்றாட வாழ்வில் வீட்டில் பேசப்படும் மொழி தமிழாக இருந்தாலும் கல்வி, வேலை, வணிகம், நிர்வாகம் ஆகிய துறைகளில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

குறிப்பாக வணிக நிறுவனங்களில் தமிழ் மொழிப் பெயர்ப் பலகைகள் குறைந்து, ஆங்கிலப் பலகைகள் பெருகி நிற்பது வருத்தத்திற்குரியது. நம் மண்ணில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்கூட வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் காணாமல் போகும் நிலை உள்ளது. ‘ஆங்கிலப் பலகை இருந்தால் தான் வியாபாரம் உயரும்’ என்ற எண்ணம் வேரூன்றி விட்டதால் தாய்மொழிக்கு உரிய மரியாதை புறக்கணிக்கப்படுகிறது.
இந்த நிலைமை பல பாதகங்களை உருவாக்குகிறது. தாய்மொழியை புறக்கணிப்பதால் இளம் தலைமுறையில் தமிழின் மீது உள்ள பெருமை குறைகிறது. வணிகம் தமிழருக்கானதாக இருந்தாலும் அதன் முகப்பே வேறு மொழியில் இருப்பது நம் பண்பாட்டு அடையாளத்தை மறைக்கிறது. தமிழை மட்டுமே அறிவோர் வணிகத்தின் பெயர் அல்லது சேவையை புரிந்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். நாளடைவில் தாய்மொழியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் பிறமொழிகளுக்கு மாறி விடுகின்றனர்.
தமிழ் பேசும் வாடிக்கையாளர்களுக்கான கடைகளில் தமிழ் பெயர்ப் பலகைகள், அறிவிப்புகள், ரசீதுகள் போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இது வாடிக்கையாளர்களுக்கு எளிதான புரிதலை அளிப்பதோடு மட்டுமல்லாமல் வணிகத்தின் நம்பகத்தன்மையையும் உயர்த்துகிறது. வணிகம் செய்யும் இடம் தமிழர்களுக்கானதெனில் அதில் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும். மொழியற்ற வளர்ச்சி நிலையானதல்ல. ஆகவே வணிக நிறுவனங்கள் தங்களது பலகைகள், அறிவிப்புகள் அனைத்திலும் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்; மக்கள் அதனை வலியுறுத்தி தமிழை புறக்கணிக்கும் கடைகளை புறக்கணிக்கத் தொடங்க வேண்டும். தமிழ் பலகைகள் கொண்ட கடைகளுக்கு ஆதரவு அளிப்பது பிற கடைகளுக்கும் தமிழை பயன்படுத்தும் மனநிலையை உருவாக்கும். இது சட்டம் இயற்றுவதற்கும் மேலான ஒரு சமூகப் பொறுப்பு.

மொழிப் பெருமை குடும்பத்திலிருந்தே தொடங்குகிறது. குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் வைப்பது ஒரு பாரம்பரிய மரபாக இருந்தாலும் இன்று அது குறைந்து வருகிறது. வெளிநாட்டு ஒலிப்பாடுகளுக்கேற்ப ஆங்கிலம் கலந்த பெயர்களை பலர் விரும்புவதால் தமிழின் இனிமை மறைந்து விடுகிறது. அழகான தமிழ்ப் பெயர்கள் வைப்பது மொழியின் பெருமையைச் சுமக்கும் ஒரு சிறிய முயற்சி மட்டுமல்ல, அது தலைமுறைகளுக்கான ஒரு கலாச்சாரப் பரிசாகும். அதேபோல் அன்றாட உரையாடல்களில் தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் பழக்கமும் குறைந்து வருகிறது. சமூக ஊடகம், தொலைபேசி உரையாடல்கள், நண்பர்கள் வட்டாரங்களில் ஆங்கிலம் கலந்த தமிழ் அதிகரித்து வருவதால் தமிழ்ச் சொற்களின் செல்வாக்கு குறைகிறது. தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் பழக்கம் மீண்டும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்குப் பள்ளி மட்டத்திலிருந்தே ஊக்குவிப்பு வழங்கப்பட வேண்டும்.
மேலும் கையெழுத்து வைப்பது கூட இன்று பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுகிறது. தமிழில் கையெழுத்து வைப்பது சட்டரீதியாகவும் செல்லுபடியாகும் என்ற விழிப்புணர்வு பலருக்கு இல்லை. இதற்கு பள்ளி மட்டத்திலிருந்தே விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும். கையெழுத்து முதல் வணிகப் பலகைகள் வரை அனைத்திலும் தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் மனநிலையை உருவாக்கினால்தான் மொழி காப்பாற்றப்படும்.

தாய்மொழி காக்கப்படாவிட்டால் தலைமுறைகள் நம் வேரை மறந்து விடும். எனவே இன்று முதலே குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் வைப்பது, அழகான தமிழ்ச் சொற்களைப் பேசுவது, தமிழில் கையெழுத்து வைப்பது, வணிகங்களில் தமிழுக்கு முன்னுரிமை வழங்குவதை வலியுறுத்துவது ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவே தமிழின் பெருமையை உயர்த்தும் உறுதியான பாதையாகும்.
