இதழ்-89

லண்டன் நகரின் இதயம்.. தேம்ஸ் நதியில் ஒளிரும் கோபுரப்பாலம்..

ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலான மனித மனத்தின் தைரியம், தொழில்நுட்பத்தின் அதிசயம், இரண்டையும் சாட்சியாகக் கொண்டிருக்கும் ஓர் உயிருள்ள நினைவுச்சின்னம்.

1894 ஆம் ஆண்டு இரு பெரிய கோபுரங்கள் நடுவே திறக்கப்பட்ட பாலம் அன்று முதல் லண்டனின் பெருமையாய் மாறியது.

நதி வழி பயணிக்கும் பெரிய கப்பல்களிற்கு வழிவிட்டும், தரை வழிப் பயணர்களிற்கு நதியைக்கடக்கும் பாலமாகவும் என இரு வழிகளிற்கும் இடையூறின்றி இணங்கி நிற்கும் கோபுரப்பால கட்டமைப்பு உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது.

கோபுரப்பால கட்டுமானத்திற்கு எட்டு ஆண்டுகள் எடுத்தன.
11,000 டன் எடையுள்ள இரும்புக் கட்டமைப்பும், உள்ளே மாபெரும் நீராவி இயந்திரங்களும் என அனைத்தும் மனிதக் கைகள் நிகழ்த்திய அதிசயமே ஆகும்.

கோபுரப்பாலத்தின் தேவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கியுள்ளது.

ரோமர் காலத்திலிருந்தே, தேம்ஸ் நதி லண்டனின் வாழ்வின் மையமாகவும், பொருளாதார நெடுஞ்சாலையாகவும் இருந்தது.
ரோமர்கள் பிரிட்டனை விட்டு சென்ற பின்பும் லண்டனில் ஒரே ஒரு பாலம் மட்டுமே இருந்தது — அது லண்டன் பாலம். 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் லண்டன்பாலமே இன்னும் பெரும்பாலான மக்கள் வடக்கு-தெற்காக செல்லும் முக்கிய வழியாக இருந்தது.

இதுவே பின்னர் ஒரு பெரிய பிரச்சினை ஆனது. அந்த காலத்தில் லண்டன் மக்கள் தொகை இரட்டிப்பாகியிருந்தது.
விக்டோரியா ராணி ஆட்சியில், தொழில்துறை புரட்சியால் இயந்திர ஆற்றல் மூலம் நகரம் மேலும் விரிவடைந்தது.

ஆனால் லண்டன் நகரத்தின் ஏறத்தாள மூன்றில் ஒரு பங்கு மக்கள், தினமும் தேம்ஸ் நதியை கடக்க ஒரே வழியாக லண்டன் பாலத்தை மட்டுமே பயன்படுத்தினார்கள்.

ஆனால், லண்டன் பாலத்திற்கு கிழக்கே வாழ்ந்தவர்கள் தங்களுக்காக அருகில் எந்தப் பாலமும் இல்லாமல், தினசரி கடுமையான சிரமத்துடன் பயணித்தனர்.

குதிரை வண்டிகள், வேலைக்குச் செல்லும் மக்கள், சந்தைக்குச் செல்லும் விவசாயிகள் ஆகியோர் ஒரே இடத்தில் சிக்கி நெரிசலாகியதால், நதியை கடக்க ஒருவருக்கு இரண்டு மணி நேரம் வரை எடுத்தது!
அதுவே சென்று திரும்பும் பயணம் என்றால், தினமும் நான்கு மணி நேரம் வீணாகியது.

லண்டன் பாலத்தை அகலமாக்க முடியாததால், புதிய பாலம் கட்டுவதே முக்கிய தீர்வாகப் பட்டது. Tower of London-க்கு கிழக்கே ஒரு புதிய கடத்தல் பாலம் தேவை என அரசாங்கத்துக்கும், City of London Corporation-க்கும் பல கோரிக்கைகள் வந்தன.

1876 பிப்ரவரி 10-ஆம் தேதி, Corporation of London, “Bridge House Estates” என்ற அமைப்பை, புதிய பாலம் அல்லது சுரங்கம் அமைக்கும் சாத்தியங்கள் பற்றி ஆய்வு செய்ய Special Bridge or Subway Committee அமைக்குமாறு கேட்டுக் கொண்டது.

அந்த காலத்தில் சுரங்கம் அமைப்பது மிகவும் செலவானதும் ஆபத்தானதுமான ஒன்றாக இருந்தது. ஏற்கனவே Sir Marc Brunel மற்றும் அவரது மகன் Isambard Kingdom Brunel வடிவமைத்த தேம்ஸ் சுரங்கம் இருபது ஆண்டுக்குள் மூடப்பட்டது.
வாகனங்களும் பாதசாரிகளும் பயன்படுத்தப்பட வேண்டிய அச்சுரங்கம் நிதி பற்றாக்குறையால் ஈரம் கசிந்து, குற்றவாளிகளை தங்க வைக்கும் ஓர் இடமாக மாறியது.

அதனால், 1876-க்கு வந்தபோது பெரும்பாலான திட்டங்கள் பாலம் அமைப்பதையே முன்வைத்தன. ஆனால் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறற்ற வகையில் பாலக்கட்டுமானம் அமையவேண்டும்.
அதற்காக தொடக்க, முடிவு தேதிகள் ஏதும் இல்லாமல், ஒரு போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டது. பொறியாளர்களும் வடிவமைப்பாளர்களும் தங்களது யோசனைகளை அனுப்பத் தொடங்கினர்.
மொத்தம் ஏறத்தாள 50 வடிவமைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன; பல முக்கிய பொறியாளர்களும் இதில் பங்கேற்றனர்.

ஜார்ஜ் பார்க்லே புரூஸ் (George Barclay Bruce) என்பவர் “rolling bridge” என்ற வடிவமைப்பை முன்வைத்தார். அவ்வடிவமைப்பானது நதியிலுள்ள கப்பல்களுக்கு தடை இல்லாமல் செல்ல வழி வழங்குவதை உறுதிசெய்தது. ஆயினும் செயல்பாட்டில் சிரமமானது என்பதால் நிராகரிக்கப்பட்டது.

ஃப்ரெடெரிக் பார்னெட் (Frederic Barnet) என்பவர் “duplex bridge” என்ற வடிவமைப்பை முன்வைத்தார். எட்டின் (8) வடிவில் நதியை கடந்திருந்த இவ்வடிவமைப்பில் வாகன போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து இரண்டும் ஒரே நேரத்தில் தடையின்றி இயங்கக்கூடியதாக இருந்தது.

லண்டன் நகரத்தின் கழிவு நீர் அமைப்பை வடிவமைத்த பிரபல பொறியாளரான சர் ஜோசப் பசல்ஜெட் (Sir Joseph Bazalgette) என்பவர் ஓர் உயரமான பாலம் ஒன்றை வடிவமைத்தார்; அதற்கு கீழே எந்தக் கப்பலும் செல்ல முடியும் என்பதால் பாலம் திறக்க வேண்டிய தேவையே இருக்காது என முன்மொழிந்தார்.

இத்தகைய பல வடிவமைப்புகள் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், 1877-இல், விண்ணப்பிக்கப்பட்ட வடிவமைப்புகளைப் பரிசீலிக்க Bridge and Subway Committee ஆனது , அந் நூற்றாண்டில் லண்டனில் பிரபலமான நகர வடிவமைப்பாளராக விளங்கிய சர் ஹோரஸ் ஜோன்ஸ் Sir Horace Jones என்பவரை அழைத்தது.

கட்டமைப்புகளை பரீட்சித்த Sir Horace Jones அதன் பின்னர், அவர் தனது சொந்த வடிவமைப்பையும் முன்வைத்தார்.

அவர்தான் பின்னர் பாலம் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமைப்பாளர் ஆனார் — அவ்வடிவமைப்பே இன்று நாம் பார்க்கும் கோபுரப்பாலத்திற்கு அடித்தளம் அமைத்தது.

1886-இல் கட்டுமானம் தொடங்கியது. கட்டுமானத்திற்கு சர் ஜான் வுல்ஃப் பாரி பொறியாளராக, சர் ஹோரஸ் ஜோன்ஸ் நகர வடிவமைப்பாளராக பணியாற்றினர்.

பாலம் மூன்று வகையான அமைப்புகளைக் கொண்டிருந்தது. பாலத்தின் இரண்டு பக்கங்களும் தொங்கு பாலமாக அமைக்கப்பட்டன. மையத்தில் உள்ள இரண்டு பாகங்கள், கப்பல்களுக்கு இடம் தருவதற்காக உயர்த்தப்படுவன. மேல் நடைபாதைகள் கம்பி பாலமாக வடிவமைக்கப்பட்டன.

எட்டு ஆண்டுகள் நீடித்த கட்டுமானத்தில் பல தொழில்நுட்ப சவால்கள் மற்றும் இயற்கை சவால்கள் இருந்தன. கட்டுமானத்தில் பல தொழிலாளர்கள் பங்கேற்றனர். அவர்களின் கடின உழைப்பு மற்றும் தியாகம் கோபுரப்பாலத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. ஒரு சான்றாக
பாலம் கட்டப்பட்டு கொண்டிருந்த 1892-ல் ஒரு தொழிலாளி, John Batchelor, உயரத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது வழுக்கி விழுந்தார்.
அவர் கீழே விழுந்தது தேம்ஸ் நதிக்குள் அல்ல, கீழே திறந்திருந்த ஓர் உலோக மேடையின் மேல் — அதுவே அவரது உயிரை காப்பாற்றியது.
அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இது Tower Bridge-இன் முதல் “ஆச்சரியக் கதை (miracle story)” என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tower Bridge 1894-ஜூன் 30 இல் திறக்கப்பட்டது. அதன் திறப்பு, லண்டனின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

விக்டோரியா ராணியை பிரதிநிதித்துவமாகக் கொண்டு, Prince மற்றும் Princess of Wales பாலத்தை திறந்தனர், முதன்முதலில் வெள்ளிக் கலசம் பயன்படுத்தி பாலத்தை தூக்குவதற்கான சமிக்ஞை கொடுக்கப்பட்டது. அதன் பிறகு 14 கப்பல்கள் பாலத்தின் கீழ் சென்றன.

Engineer William Armstrong என்பவர் பாலத்தை உயர்த்துவதற்கான நீராவி இயந்திரத்தை வடிவமைத்தார்.

வாரத்திற்கு ஏறத்தாள 25 தொன் கள்ளிகளை (coal) எரித்து, அதனால் உருவான வெப்பத்தால் நீரை கொதிக்கவைத்து நீராவியை உருவாக்கினர். பின் அந்த நீராவியானது இரண்டு நீராவி இயந்திரங்களிற்கு அனுப்பப்பட்டது. நீராவி இயந்திரங்களின் சக்தி மற்றும் அதனால் இயக்கப்படும் பறக்கும் சக்கரத்தின் (flywheel) வேகத்தால் திரவ அழுத்த குழாய்கள் இயக்கப்பட்டன. அவை உருவாக்கிய அழுத்தமான நீர் ஆறு பெரிய திரட்டிகளில் (accumulators) சேமிக்கப்பட்டது. அந்த திரட்டிகள் சேமித்த நீரழுத்த சக்தியே பாலத்தின் தளங்களை உயர்த்தி திறக்கும் ஆற்றலாக பயன்படுத்தப்பட்டது.

பிற்காலத்தில் இத்தொழில்நுடபம் மின்மயப்படுத்தப்பட்டது. ஆயினும் தேவையின் போது இரு தொழில்நுட்பங்களும் சமாந்தரமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறே ஒருமுறை – 2005 ஆம் ஆண்டின்
ஓர் இரவில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டு பாலம் திறந்தபடியே நின்றது.
நகரின் இருபுறமும் போக்குவரத்து முடங்கியது, கப்பல்கள் நிறுத்தப்பட்டன.
அப்போது பழைய பொறியாளர்கள் கைமுறையில் இயந்திரங்களை இயக்கியே பாலத்தை மூட்டினர்.
பழைய அறிவும் புதிய தொழில்நுட்பமும் சேர்வது அவசியம் என்பது கோபுரப்பாலம் அன்று சொன்ன பாடமாகும்.

எல்லாம் எப்போதும் நேர்த்தியாக நடைபெறும் என்பதும் அல்ல. தவறுகளும் இயல்புதான். அவ்வாறே ஒருமுறை
1958-ல் ஒரு பெரிய Swedish cargo ship (பெயர்: Kronan II) கோபுரப்பாலம் வழியாக கடக்க இருந்தது. ஆனால் நேரத்தை தவறாக கணக்கிட்டமையால் பாலம் திறக்கப்படவில்லை, ஆனால் கப்பல் நிற்கவில்லை! அது முழு வேகத்தில் பாலத்தின் அடித்தளத்தைத் தாக்கியது.
இரும்பு தளத்தில் சிறிய சேதம் ஏற்பட்டது, ஆனால் பாலம் அதிசயமாக கப்பலின் வேகத்தை தாங்கியது. இத்தவறினால் கோபுரப்பாலத்தின் பொறியியல் வலிமை உலகளவில் புகழ்பெற்றது.

இன்னுமொரு கோபுரப்பாலம் பற்றிய சுவாரசியமான சம்பவம் ஒன்றுண்டு.
டிசம்பர் 30, 1952 அன்று, பேருந்து ஓட்டுநர் ஆல்பர்ட் குண்டர் கோபுரப்பாலத்தின் மேல் லண்டனின் ஷோர்டிச் நோக்கி 78 ஆம் எண் இரட்டை தட்டு பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

பேருந்து பாலத்தின் நடுப்பகுதிக்குச் சென்றது. பக்கங்களில் இரு பசுமை நிற காவல் அதிகாரிகள் கைகாட்டிக் கொண்டிருந்தனர் — ஆனால் அல்பர்ட் கவனிக்கவில்லை. அப்போது ஒரு திடீர் அதிர்ச்சிச் சத்தம்!
பாலத்தின் நடுவில் கடந்து செல்லும்போது, அவருக்கு மிகவும் ஆச்சரியமாக, அவருக்கு முன்னால் இருந்த சாலை சரிந்து விழுவது போல் தோன்றியது. பாலம் திறந்து கொண்டிருப்பதையும், அவரது பேருந்து உயரும் பாலத்தின் மீது சிக்கிக் கொண்டிருப்பதையும் அவர் விரைவாக உணர்ந்தார்!
இரண்டாம் உலகப் போரின் போது ஒரு தாங்கி ஓட்டுநராக இருந்த ஆல்பர்ட், கணநேரத்தில் சுதாரித்து பாலத்தின் ஒரு தட்டிலிருந்து மறுதட்டிற்கு அந்த இரட்டைதட்டு பேருந்தை பாயச் செய்தார். பாலத்தில் உள்ள இடைவெளியைக் கடந்து அப்பேருந்து வெற்றிகரமாக மறுபக்கத்தை அடைந்தது.
அவ்வாறு செய்ததன் மூலம் ஆல்பர்ட் தனது பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாகக் காப்பாற்றினார் –

பிறகு, அல்பர்ட் குன்ஸ்டனுக்கு லண்டன் நகராட்சி “Bravery Award” வழங்கியது.

இப்படி ஒளிவீசுகின்ற இந்த கோபுரப்பாலத்தின் நாளேடுகளில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் பல. எல்லா நினைவுகளோடும் இன்றும் பல புதிய நம்பிக்கைகளை இக்கோபுரப்பாலம் தன்னகத்தே கொண்டு நிற்கிறது.
திருமண முன்மொழிவுகளுக்கு ஏற்ற ஒரு பிரபலமான சுற்றுலாத் தளமாக கோபுரப்பாலம் தற்சமயங்களில் பிரபல்யம் அடைந்தமையும் இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது.

ஆண்டு முழுவதும் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும் கோபுரப்பாலம், சமீபத்தில் நிறுவப்பட்ட கண்ணாடி நடைபாதை வழியாக தன்னை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,

இன்று கோபுரப்பாலம் என்பது வெறும் போக்குவரத்திற்கான ஒன்று மட்டுமல்ல. அது லண்டனின் அடையாளம், நினைவுச் சின்னம், காதலின் களிப்பிடம், புகைப்படக் கனவிடம்… வாசித்த வாசகர்களே… விரைவில் கோபுரப்பாலத்தை உங்கள் நிஜக்கண்களால் காணுங்கள்.. உங்களைப் அவ்விடத்தில் நானும் சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

Related posts

இதழ் 89

Editor

கறையான்களின் கதை

Editor

பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதிய தரச் சான்றிதழ்கள் அவசியம்

Editor

Leave a Comment