இதழ் 90

அதிகரித்து வரும் துஷ்பிரயோகமும் சிறுவர் பாதுகாப்பும் ஓர் பார்வை ….

மனித பிறப்பின் அடிப்படையான காலமாக சிறுவர் பராயம் காணப்படுகின்றது. எதிர்கால சமூகத்தின் அடிநாதங்களாக திகழ்பவர்கள் சிறுவர்கள் ஆகும். சிறுவர்கள் எனப்படுவோர் 18 வயதிற்கு உட்பட்டவர்களாக கருதப்படுவர் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமை சமவாயம் வரையறுத்துள்ளது. சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய சிறுவர்களே நாளைய சமூகத்தின் நட்சத்திரங்களாக பிரகாசிப்பவர்கள். சிறுவர்களை பாதுகாப்பதும் அவர்களை சரியான வகையில் வழிநடத்துவதும் காலத்தின் அவசியமாக விளங்குகிறது.
சிறுவர்களை பாதுகாப்பதற்காக சிறுவர் உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி சர்வதேச சட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் உறுப்புரை 1- 40 வரை சிறுவர்களுக்கான உரிமை பற்றி குறிப்பிடுகின்றது. சிறுவர்களுக்கான உரிமைகள் தொடர்பான அறிவு அவர்களை பாதுகாப்பதற்கு துணை புரியும். சிறுவர்களுக்கான உரிமைகள் மீறப்படும் போது அவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.

சிறுவர் துஷ்பிரயோகம்


இன்றைய காலத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால்களில் ஒன்றாக துஷ்பிரயோகம் காணப்படுகிறது. உலக நாடுகளிலும் சிறுவர்களின் வாழ்வை சீரழிக்கும் செயற்பாடாக காணப்படுகிறது. சிறுவர் துஷ்பிரயோகம் என்பது ஒரு சமூகப்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நாளாந்தம் பல்வேறு துஷ்பிரயோகங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் பல சம்பவங்கள் வெளிவராமல் மறைக்கப்படும் சம்பவங்களும் நடந்தேறுகின்றன.
இலங்கையில் 2011 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதியில் 89405 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமைஇ குடும்ப வன்முறை மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற காரணங்களினால் அதிகளவு சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன.

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது சிறுவர்களை அவர்களின் இயல்புகளுக்கும், தன்மைகளுக்கும் முரணாகப் பிழையாகப் பயன்படுத்துதல் எனப்படும். சிறுவர்களை உடல் ரீதியாக அல்லது உணர்வு ரீதியாகப் பாதிப்படையச் செய்தல், பாலியல் துஷ்பிரயோகம், புறக்கணித்தல், வர்த்தகம் அல்லது வேறு விடயங்களுக்காக அவர்களைச் சுரண்டல் போன்றவற்றின் மூலம் அவர்களின் ஆரோக்கியம், உயிர் வாழ்தல், வளர்ச்சி மற்றும் கௌரவம் போன்றவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துதல் சிறுவர் துஷ்பிரயோகம் ஆகும். (WHO)


சிறுவர் துஷ்ரயோகம் என்பது பல்வேறு வடிவங்களில் நிகழக்கூடும். முக்கியமாக இவை மூன்று வகைகளில் நோக்கப்படுகிறது.


 உடல் ரீதியான துஷ்பிரயோகம்
 உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம்
 பாலியல் ரீதியான துஷ்பிரயோகம்


உடல் ரீதியான துஷ்பிரயோகங்களாக அடித்தல் துன்புறுத்தல் காயப்படுத்தல் அங்கங்களை சேதப்படுத்தல் போன்ற உடலளவில் துன்பங்களை எதிர்கொள்ளும் செயற்பாடுகள் ஆகும். உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் என்பதனுள் சிறுவர்களை உள ரீதியாக பாதிப்பினை ஏற்படுத்தும் செயற்பாடுகளைக்குறிக்கும். எடுத்துக்காட்டாகஇ தனிமைப்படுத்தல்இ அவமானப்படுத்தல்இ சாபமிடுதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
பாலியல் ரீதியான துஷ்பிரயோகமானது தற்காலத்தில் பாரியளவில் நிகழ்வதை நாளந்தம் அறியக்கூடியதாக உள்ளது. சிறுவர்களின் பாலியல்பை மையமாகக்கொண்டு அவர்களது விருப்பத்திற்கு மாறாகவோ அல்லது கட்டாயத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான பாலியல்சார் செயற்பாடுகளும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் எனப்படும். தொடுதல் பாலியல் சொற்களை பயன்படுத்தல் ஆபாசபடம் பார்ப்பதில் ஈடுபடுத்தல் என்பன அடங்கும். சிறுவர்களது எதிர்காலத்தை சிதைக்கும் எதிர்மறையான செயற்பாடாக காணப்படுகிறது. இது குறுகிய மற்றும் நீண்ட கால உடல் உள மற்றும் நடத்தைசார்ந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

பாதுகாப்பு பொறிமுறைகள்


“இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்” என்பதால் அவர்களை பாதுகாத்து சரியான பாதையில் வழிகாட்டுவது அனைவரது கடமையாக காணப்படுகிறது. சிறுவர்களது உரிமைகளை மீறும் விதமாக இடம்பெறும் துஷ்பிரயோகங்களை உரிய முறையில் இனம்கண்டு எதிர்கால சமூகத்தை பாதுகாப்பதற்கு துணைபுரியும். அந்தவகையில்
 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிப்பில் வைத்திருத்தல் –
18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை பெற்றோர்கள் தங்களுடைய கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியமாகும். பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் யாருடன் பழகிறார்கள் என்பன தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும். பிள்ளைகளுடன் நண்பர்களை போல பழக வேண்டும். நாளந்தம் அவர்களுடன் நடந்தவற்றை கேட்டறிய வேண்டும். இதனூடான அவர்களை பின் தொடர முடியும்.

 பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் –


பாதுகாப்பான சூழல் என்பது அனைவருக்கும் அடிப்படையானதாகும். சிறுவர்களது பாதுகாப்பிற்கு ஏற்ற வகையில் வீடு, வசிக்கும் சூழல் மற்றும் பாடசாலை போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். ஏனெனில் சிறுபராயத்தை சேர்ந்தவர்களுக்கு எது நல்லது கெட்டது என்பதை பகுத்தறியும் பக்குவம் கிடையாது. ஆகவே அவர்களுக்கான பாதுபாப்பான சூழல் என்பது அவசியமானதாகும். பிள்ளையை அந்நிய நபர்களுடன் அல்லது அவர்களை விட பெரியவர்களுடன் அதிகளவு நெருக்கமாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுமாயின் அதை இனம் கண்டு பிள்ளைக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தல் வேண்டும். சிறுவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் முதன்மையான பங்கு குடும்பத்திற்குரியதாகும்.

 தகுந்த மற்றும் தகாத தொடுகை தொடர்பில் விழிப்புணர்வுட்டல் –


சிறுபிள்ளைகளுக்கு பொம்மை ஒன்றை பயன்படுத்தி உடல் உறுப்புக்களை பெயரிட கற்றுக்கொடுத்தல் வேண்டும். அதன் பின் நல்ல தொடுகை விரும்பத்தகாத தொடுகை மற்றும் கெட்ட தொடுகை என்பன தொடர்பாக சொல்லிக்கொடுத்தல் வேண்டும். உங்களுடைய உடல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. பாதுகாப்பற்ற முறையில் வேறொருவர் உங்களை அணுக முற்படும் போது வேண்டாம் (No) என்று மறுக்க வேண்டும். பிள்ளைகள் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் இது தொடர்பான அறிவினை பெற்றோர்களும் கொண்டிருக்க வேண்டும்.

 பிள்ளைகளை தேவையற்ற விதத்தில் தனியே செல்வதை தவிர்த்தல் –


பிள்ளைகள் தனியே இருப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படும் பட்சத்தில் அதனை பயன்படுத்தி தவறாக நடப்பதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக வீடுகளிலோ அல்லது பிற இடங்களில் சிறுவர்கள் தனியே இருப்பதற்கான நேரத்தை குறைக்க வேண்டும். பெண் பிள்ளைகள் மட்டுமல்ல ஆண் பிள்ளைகளும் துஷ்பிரயோகத்திற்குட்படும் சம்பவங்கள் அதிகளவு இடம்பெறுகின்றன. எனவே சிறுவர்களுக்கான தனிமையை குறைப்பதன் மூலம் துஷ்பிரயோகத்திற்கான சந்தர்ப்பங்களை குறைக்க முடியும்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் அமைப்புக்கள் தொடர்பில் சமூகத்திற்கு தெளிவூட்டல் –


சிறுவர் பாதுகாப்பு அவர்களது உரிமைகளை பேணுதல் என்பன தொடர்பாக பல்வேறு அமைப்புக்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் பல சிறுவர் நலன் கருதி செயற்பட்டு வருகின்றது. இலங்கையை பொறுத்தமட்டில் பல்வேறு பிரிவினரும் செயற்பட்டு வருகின்றனர். சிறுவர் உரிமை மீறல் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான சட்டங்கள் தொடர்பான அறிவு பலரிடத்தே காணப்படுவதில்லைஇ இதனால் தான் அதிகளவு துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. சட்டத்தால் தண்டிக்கப்படுவோம் என்பதை அறியாமல் பலர் பிழையான வழியில் செயற்படுகிறார்கள். மேலும் சிறுவர்களுக்கான துஷ்பிரயோகங்கள் இடம்பெறும் பட்சத்தில் அடுத்த கட்டம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தெளிவுகள் இல்லாததாலேயே பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. சிறுவர் பாதுகாப்பு தொடர்பான போதிய விளக்கங்களை சமூகத்திற்கு கொடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. இதன் மூலம் சிறுவர்களை பாதுகாக்க முடியும்.


இலங்கையை பொறுத்தமட்டில் சிறுவர்களுக்கு சாதகமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குதலையும் நோக்கமாக கொண்டு இயங்கும் அமைப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) காணப்படுகிறது. சிறுவர்களுக்கெதிரான துஷ்பிரயோகங்களை முறைப்பாடு செய்வதன் ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். 1929 எனும் இலக்கத்தை தொடர்பு கொண்டு புகாரளிக்க முடியும்.

எனவே சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் ஏற்பட ஏதுவான காரணிகளை இனம்கண்டு அவற்றை இல்லாமல் செய்வதன் ஊடாகவும் பிள்ளைகள் மீது பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதன் மூலம் இயன்றளவு துஷ்பிரயோகங்களை தவிர்க்கவும் முடியும்.


“சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களை களைந்து எதிர்கால சமூகத்தை பாதுகாப்பானதாக கட்டியெழுப்புவோம்”

Related posts

எமது மண்ணில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல்: யாழ்ப்பாணத்தின் சர்வதேச அங்கீகாரமும் எதிர்காலத் தேவைகளும்

Editor

சென்னைக்கு இலாபமா? ராஜஸ்தானுக்கு அதிர்ஷ்டமா?

Editor

மார்கழிக் கோலங்கள்

Editor

Leave a Comment