செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களால் எழுதப்பட்ட “சைவத் தமிழர்களின் கலங்கரை விளக்கம்” எனும் நூல் அகில இலங்கை இந்து மாமன்றந்தால் வெளியிடப்பட்டது. அந்த நூலின் ஒரு பகுதி நாவலர் பெருமான் குருபூசை வருவதை முன்னிட்டு (10.12.2025) பிரசுரிக்கப்படுகிறது.
நாவலர் பெருமான் கடிகாரம் ஓடும்முன் ஓடி கணப்பொழுதும் நற்காரியங்களை நிறைவேற்றியவர். நீதி நெறியில் நின்று நேர்மையாக பணி செய்தவர். ஒவ்வொரு நிமிடத்தையும் பெறுமதியாக செலவு செய்தவர். சைவமும் தமிழும் நின்று நிலை பெற வேண்டுமென்ற குறிக்கோளோடு இமைப்பொழுதும் செயற்பட்டவர். சேர். பொன் .இராமநாதனை சட்ட மன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சிபார்சு செய்தவர். ஆனால் தனக்கு ஒரு பதவியையோ படோபகார வாழ்வையோ தேடாதவர். கால்நடையாகவும், பாய்க்கப்பலிற் பயணம் செய்தும் இரவு பகல் ஓய்வின்றி பாடுபட்டவர். அவர் வாழுங் காலத்தில் எம் சமூகத்திற்கு அவர் பெருமை விளங்கவில்லை. அன்று மின்சார வசதியில்லை, சீரான போக்குவரத்து வசதியில்லை, ஏடு எழுத்தாணி, மைதொட்டு எழுதும் பேனாக்குச்சி, கடதாசி, கால்களால் இயங்கும் இலுப்பெண்ணை விளக்கு, மிஷனரியின் கெடுபுடி, இவற்றுக்குள்ளும் இம் மனிதன் 75 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, அச்சிட்டு, வெளியிட்டவர் என்றால் வியப்பாகவே இருக்கின்றது. அவர் உயிர் பிரிகின்ற போது அவர் கையால் எழுதிப் புதுப்பிக்காத புத்தகங்கள் ஆறு ஆயத்தமாக இருந்தன. நித்திரையிலும், அவர் நிம்மதியாக இருந்திருக்கமாட்டார். அவர் ஸ்தாபித்த பாடசாலை, ஆசிரியர் வேதனம், அச்சுக்கூட பணி, தன்னை நோக்கி வியாக்கியானம், செய்பவர்களுக்குப் பதில், சில நீதிமன்ற வழக்குகள் இப்பெருமகனைச் சூழ்ந்திருந்தன. ஆறுமுகநாவலர் அகத்தாலழுத நாட்கள் நிறையவே உண்டு. புற சமயத்தவர்களால் அகம் நொந்ததை விட எம்மவர்களாலேயே அகம் நொந்து வெதும்பிய நாட்களும் உண்டு.
சுயசரித்திரத்தை அவர் எழுதவில்லை. ஆனால் அவரது அகவேதனையை வெளியிட்டிருக்கின்றார். என்னைப் போல் ஒருவர் எதிர்காலத்தில் எம் சமயத்திற்குக் கிடைப்பாரா என்று கவலைப்பட்டுள்ளார். தன் ஆயுள் முடிவதற்கிடையில் தன் சிந்தனையில் எழுந்த விடயங்கள் நிறைவேறுமா என எண்ணிக் கவலைப்பட்டுள்ளார். 1870ஆம் ஆண்டு நாவலர் தன்னகத்தில் சுமந்த சில விடயங்களை சுருக்கமாக எழுதி வெளியிட்டார். அவற்றில் ஒரு பகுதியை இந்நூலைப் படிப்பவர்கள் வாசித்துணர்வதற்காகச் சேர்க்கப்பட்டுள்ளது.
“வீடு விளைநிலம் தோட்டம் ஆபரணம் முதலியவற்றோடு விவாகஞ் செய்து கொடுக்கும் வழக்கமேயுடையது. என் சென்ம தேசமாகவும், நான் இல்வாழ்க்கையிலே புகவில்லை. இவைகளெல்லாவற்றிற்குங் காரணம் சைவசமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசை யாம்.
இப்பேராசையினால் இருபது வருஷகாலம் நான் செய்த முயற்சிகள் பல, அவைகளுள்ளே சித்திபெற்றவை மிகச் சில. சைவ சமயிகள் யாவரும் சைவசமயத்திலே சிரத்தையுடையவர்களாகித் தங்களால் இயன்ற உதவி செய்தார்களாயின். நான் எடுத்த முயற்சிகளெல்லாம் இதற்கு முன்னரே நிறைவேறி விடும். நிறைவேறின், என்னைப் போலவே பிறரும் அங்கங்கே நன்முயற்சிகளைச் செய்வார்கள். செய்யிற் கல்வியும் சமயமும் தழைத்தோங்கும்.
தன்னிம்மைப் பயன்களெல்லாம் இகழ்ந்தும் கைம்மாறு வேண்டாதும் இருபது வருஷகாலம் சமயவிருத்தியின் பொருட்டு முயற்சி செய்பவன் ஒருவன் மற்றைச் சமயத்தார்களுள் இருப்பானாயின், அவன் எடுத்த முயற்சிகளுள் யாது சித்தி பெறாது? நம்முடைய சைவசமயிகள், தங்கள் சமயமும் பாஷையும் விருத்தியடையும் பொருட்டு நான் செய்யும் முயற்சிகளுக்கு உதவி செய்யாமை மாத்திரையின் அமையாது, பெரும்பான்மையும் அவமதிப்பும் இடையூறுமே செய்கின்றார்கள். இதனால் எனக்கு யாதாயினும் ஓர் குறைவு உண்டு என்னுங் கவலை எனக்குச் சிறிதும் இல்லை. எனக்குச் செய்யப்படுவனவற்றைக் காணுந்தோறும் கேட்குந்தோறும், பிறருக்குத் தமிழ் கற்றலின் கண்ணும் தமிழ்க்கல்வியையும் சைவசமயத்தையும் வளர்த்தலின் கண்ணும் ஊக்கங்கிளராவண்ணம் தடைவிளைகின்றதே என்னுங் கவலை எனக்குப் பெரிதுமுண்டு. பூர்வகாலத்திலே சைவசமய விருத்திப் பொருட்டு முயன்ற பெரியோர்களுக்குச் சுவசமயிகளாலே நன்கு மதிப்பும் பரசமயிகளாலே இடையூறும் செயப்பட்டன. தற்காலத்திலே சைவசமயவிருத்திப் பொருட்டு முயலும் சிறியேனுக்குச் சைவசமயிகளாலேயே அவமதிப்பும் இடையூறும் செயப்படுகின்றன. பரசமயிகளோ எனக்கு இடையூறு செய்யவில்லை, என்னை அவமதிக்கவுமில்லை.
இஃதென்னையாச்சரியம்!!! சைவசமயவிருத்திப் பொருட்டு முயலும் எனக்கு நம்மவர்களாலே அவமதிப்பும் இடையூறும் செய்யப்பட்ட போது. நான் தமிழ்க் கல்வியிலும் தமிழ்க்கல்வியையும் சைவசமயத்தையும் வளர்த்தற்கு வேண்டும் முயற்சிகளிலும் போக்குங் காலத்தை முன் பயின்ற இங்கிலிஷிலேயே போக்கி உத்தியோகமும் செல்வமும் பெற்று நம்மவர்களாலே நன்கு மதிக்கப்படல் வேண்டும் என்று விரும்பா வண்ணம் திருவருள் சுரந்த சிவபெருமானது பெருங்கருணைத் திறத்தை மறவாதிருத்தலே வாய்ப்புடைத்தாயதோர் பெருஞ் செல்வம். இஃ திங்ஙனமாக.
நிலையில்லாத என்சரீரம் உள்ள பொழுதே என் கருத்து நிறைவேறுமோ நிறைவேறாதோ என்னுங் கவலை என்னை இரவும் பகலும் வருத்துகின்றது. அக்கருத்து இது. தமிழ்க் கல்வியும் சைவ சமயமும் அபிவிருத்தியாதற்குக் கருவிகள் முக்கியஸ்தலந்தோறும் வித்தியாசாலை தாபித்தலும் சைவப்பிரசாரணஞ் செய்வித்தலுமே யாம். இவற்றின் பொருட்டுக் கிரமமாகக் கற்று வல்ல உபாத்தியாயர்களும் சைவப்பிரசாரகர்களும் வேண்டப்படுவார்கள். ஆதலினாலே, நல்லொழுக்கமும் விவேகமும் கல்வியில் விருப்பமும் இடையறா முயற்சியும் ஆரோக்கியமும் உடையவர்களாய்ப் பரீக்ஷிக்கப்பட்ட பிள்ளைகள் பலரைச் சேர்த்து, அன்னம் வஸ்திரம் முதலியவை கொடுத்து, உயர்வாகிய இலக்கண விலக்கியங்களையும் சைவசாத்திரங்களையுங் கற்பித்தல்வேண்டும். அவர்களுள்ளே தேர்ச்சியடைந்தவர்களையே உபாத்தியாயர்களாகவும் சைவப் பிரசாரகர்களாகவும் நியோகிக்கலாம்.
“நான் ஜய (வருடம்) (1834) முதலாகப் பீற்றர் பார்சிவள் துரையுடைய இங்கிலீஷ் வித்தியாசாலையிலே இங்கிலீஷ் கற்றேன். பிலவ (ளூ) (1841) பார்சிவல் துரைக்குத் தமிழ்ப்பண்டிதனாயினேன். பிதிரார்ச்சிதம் நான் பெறவில்லை. என்னுடைய தமையன்மார்கள் நால்வரும் இயன்ற மட்டும் பொருளும் உத்தியோகமும் உடையவர்களாயிருப்பவும், அவர்கள் பொருளுதவியும் நான் பெறவில்லை. இங்ஙனமாகவும், மேற்கூறப்பட்ட விருத்தியை நான் கீலக (?) புரட்டாதி மீ (1843) பரித்தியாகஞ் செய்தேன். பார்சிவல்துரை “நான் தங்களுக்கு உயர்வாகிய வேதனம் தருவேன், தாங்கள் என்னை விடலாகாது” என்று பலதரம் வற்புறுத்திச் சொல்லிய வழியும், நான் அவ்விருத்தியில் விருப்பம் வைக்கவில்லை. நான் இங்கிலிஷிலே அற்பவிற்பத்தியாயினும் பெற்றிருந்தும், என்னோடு இங்கிலிஷ் கற்றவர்களுள்ளும் எனக்குப்பின் இங்கிலி கற்றவர்களுள் அநேகர் தங்கள் தங்கள் சத்திக்கேற்ற உத்தியோகம் பெற்று வாழ்ந்திருக்கக் கண்டும், நானும் என்சத்திக்கேற்ற உத்தியோகத்தின் பொருட்டு முயற்சி செய்யின் அது தப்பாது சித்திக்கும் என்றறிந்தும், அஃ தில்லாமையால் விளையும் அவமதிப்பைப் பார்த்தும், உத்தியோகத்தை விரும்பவில்லை. தமிழ்க் கல்வித் துணைமாத்திரங்கொண்டு செயப்படும் உத்தியோகம் வலிய வாய்த்தபொழுதும், அதையும் நான் விரும்பவில்லை. கன்னியை நாயகனிடத்து ஒரு துட்டாயினும் வாங்காது…”
இப்படிக் கவலைப்பட்ட நாவலர் பெருமான் 1879ஆம் ஆண்டு பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் நாவலர் பெருமானுக்கு இறை அழைப்புக் காத்திருந்தது. ஆடி மாதம் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜைக்குப் பின் எந்தவொரு பிரசங்களும் அவர் செய்யவில்லை. சில எழுத்து வேலைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவரது உள்ளுணர்வு சொன்னது. நாவலரின் தமையனாரின் மகன் த. கைலாசபிள்ளையை தனக்கருகே இருத்தி சில விடயங்களை எழுதுவித்தார்.
கடைசிக் காலம் அவருடைய உள்ளத்திற்கவலை நிறைந்திருந்தது. கார்த்திகை மாதம் சிவபதமடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன் தான் வசித்த வண்ணார் பண்ணை வீட்டில் நடு அறையில் சுற்றிச் சுற்றி திருவாசகம் பாடிக் கொண்டிருந்தார். சில விடயங்கள் எழுத வேண்டும் நாளை உதயத்தில் வா எனத் தன் பெறா மகன் கைலாசபிள்ளையை முதல் நாள் வருமாறு சொன்னவர். அவர் வந்து காத்திருந்த வேளை கைலாசபிள்ளையைக் கவனியாது திருவாசகத்தை ஓதிய வண்ணம் பரவசமாயிருந்தார். அவசரமாக எழுத வேண்டும் என்று அழைத்தவர் எழுதவில்லை. இவருக்குத் தன் மரணம் பற்றிய நிலை தெரிந்து விட்டது போலும். இரண்டு நாட்களாக திருமுறைகளைப் பாடுவதோடு மட்டும் நேரத்தைச் செலவு செய்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு நோயினால் பாதிக்கப்பட்டவர். புதன்கிழமை எழுந்து நீராட முடியாதளவு போய் விட்டது. வேதாரணியத்துச் சைவச்சிவாச்சாரியாரை அழைத்து இவர் நித்திய பூஜை செய்யும் சிவலிங்கத்திற்குப் பூஜை நடைபெற்றது. பூக்களைக் கையிலேடுத்து ஒவ்வொன்றாகச் சிரசிற் போட்டு தன்பாட்டிற் கும்பிட்ட வண்ணமிருந்தார். தன்னைச் சூழ இருந்தவர்களைப் பார்த்து தொடர்ந்து திருமுறைகளைப் பாடுங்கள் என்று கட்டளையிட்டார். எவரும் நாவலர் இறக்கப் போகின்றார் என்று கருதவில்லை. வெள்ளிக்கிழமை சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர் முதலிய புண்ணிய தலங்களின் விபூதியை எடுத்து அணிந்தார். தான் அணியும் உருத்திராட்ச மாலைகளையும் அணிந்து கொண்டு தன் பூஜை அறையில் இருந்த கங்கைத் தீர்த்தத்தை பருகினார். சயனிக்கும் இடத்திற் தலையிற் கைகளைக் கூப்பிய வண்ணமாகக் கண்களை மூடித் தியானஞ் செய்தார். கார்த்திகை மாதம் 21ஆம் நாள் மக நட்சத்திரத்தில் இரவு 10 மணியளவில் அன்னாரது உயிர் பிரிந்தது. இவர் உயிர் பிரிவதற்குக் கொஞ்ச நேரத்திற்கு முன் இவரை அவதானித்த மாணாக்கர்கள், சுற்றத்தார்கள் இவருக்குச் சமீபமாகச் சென்று இவரிடம் சில விடயங்களைக் கேட்க முற்பட்டனர். வித்தியாசாலை விடயமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். “கைலாசபிள்ளையைக் கூப்பிடுங்கள்” இதுதான் அவரது கடைசி வார்த்தை. அதன்பின் அவர் பேசவே இல்லை. என்ன சொல்ல நினைத்தார் என்று இன்றுவரை தெரியவில்லை.
நாவலர் பெருமான் 56 வயது பதினொரு மாதம் 16 நாள் இப்பூவுல வாழ்வை நிறைவு செய்தார். வெள்ளிக்கிழமை இரவு சிவபதமடைந்த நாவலர் பெருமானைச் சனிக்கிழமை அவரது கைலாசபிள்ளையார் கோயிலுக்குச் சமீபமாக உள்ள அவரது வீட்டில் அந்திமக் கிரியைகள் நடாத்தப்பட்டன. பெருந்திரளான மக்கள் கூடி நாவலர் பெருமானுக்குக் கண்ணீர்க் காணிக்கை செலுத்தினர். வரணி, கரணவாய் ஆதினத்தார் முன்னிலையில் வேதாரணியத்து அப்புக் குருக்கள் எனப்படும் நமச்சிவாயத் தேசிகரால் நிர்வாண அந்தியேட்டி செய்யப்பட்டு, அவரது வீட்டிலும் வண்ணார் பண்ணைக் கோம் பயன் மணற் சுடலையிலும் தேசிகராற் கிரியைகள் நிறைவேற்றப்பட்டது. நாவலரது இறுதி ஊர்வலத்திற்காக பூக்களினால் ஒரு பூந்தேருக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான அன்பர்கள் நாவலரது பிரிவுத் துயர் தாங்க முடியாது. அங்கப் பிரதட்சணமாக சுமார் 3 ½ மைல் தூரச் சென்று சுடலையை அடைந்தனர் என்பது வரலாற்றில் மறக்க முடியாத உருக்கமான ஒரு நிகழ்வு .கோம்பயன் மயானத்தில் இராத்திரிவேளை சந்தனக் கட்டைகளடுக்கி ஆயிரக் கணக்கான மக்கள் கதறியழ நாவலரின் பூதவுடல் அக்கினியோடு சங்கமமாகியது.
தன் ‘நானுயி ரோடிருக்குப் போதே உங்களுக்காக ஒரு சைவப் பிரசாரகரைத் தேடிக் கொள்ளுங்கள் உங்களிடத்துக் கைம்மாறு பெறுதலை சிறிதும் எண்ணாது 32 வருடகாலம் சைவ சமய உண்மைகளை போதித்து வந்தேன்’ இவை நாவலரின் கடைப் பிரசங்க வாசகங்கள், நாவலரைப் போல் நமக்கு யாருண்டு. நாவலரின் வாழ்வு உண்மையானது. நாவலர் பெருமானுக்கு பல நினைவுச் சின்னங்கள் இன்று வரை நிறுவப்பட்டு வருகிறது. அவர் வாழுங் காலத்தில் அவருக்குச் சிலர் செய்த இடையூறுகளை நினைத்து நாம் வெட்கமடைய வேண்டும். அவரால் எம் சந்ததி பெற்ற பேறுகள் ஏராளம். ஈழநாட்டில் சைவமும் தமிழும் என்று நிலை பெற்று உள்ளதென்றால் அதற்கு இப்புண்ணியவானே முக்கிய காரணம் என்பதை அனைவரும் உணர வேண்டும். அப்பெருமானின் சரித்திரத்தை, சிறப்புகளை, சாதனைகளை, அனைவரும் முழுமையாக படிக்க வேண்டும். சைவ பாடசாலைகள், சைவ நிறுவனங்கள் அனைத்திலும் நாவலர் நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டு நாவலர் பெருமானை எம் சந்ததி மூல நினைப்பதற்கு நாம் வழி செய்ய வேண்டும்.

