இதழ் 91

அரும்பணியாற்றிய அமரர் லேடி இராமநாதன் அம்மையாருக்கு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் வளர்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக, கல்லூரியின் முன்னாள் அதிபரும் மேலாளருமான லேடி லீலாவதி இராமநாதன் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா 18-12-2025 வியாழக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி அம்பிகை சிவஞானம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரியின் பழைய மாணவனும், அகில இலங்கை இந்து மாமன்றத் துணைத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் கலந்துகொண்டு உருவச்சிலையைத் திறந்து வைத்து
நினைவுப் பேருரையையும் நிகழ்த்தினார். இலங்கையின் கடந்த நூற்றாண்டு கால வரலாற்றில் தமிழர்கள் பெருமையுடன் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடயங்கள் பலவற்றை இந்த நாற்பது நிமிட பேச்சில் அறிந்து கொள்ள முடியும். இவ்வளவு விடயங்களையும் வாசித்து, ஆராய்ந்து, நினைவில் வைத்து பேச ஈழத்தில் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் இருப்பது தவப் பயன். எங்கள் வரலாற்றையும் பெருமைகளையும் இயன்றவரை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் மிகப்பெரிய பணியை தொடர்ச்சியாக செய்துவரும் ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுளை ஆண்டவன் அளிக்க அனைவரும் பிரார்த்திப்போம்.

இராமநாதன் கல்லூரி வளாகத்தில் இராமநாதன் தம்பதிகள் வசித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லத்திற்கு முன்பாக இந்த உருவச்சிலை நிறுவப்பட்டது. கல்லூரியின் பழைய மாணவிகளின் மிகுந்த முயற்சியினாலும், பங்களிப்பினாலும் லேடி இராமநாதன் அவர்களின் அரும்பணிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டிருந்தது.

1909ஆம் ஆண்டு முதல் 1953ஆம் ஆண்டு வரை இராமநாதன் கல்லூரி வளாகத்திலேயே தங்கியிருந்து, இராமநாதன் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி மற்றும் இராமநாதன் சைவப் பெண் ஆசிரிய கலாசாலை ஆகியவற்றின் மேலாளராகவும், அதிபராகவும் லேடி இராமநாதன் அரும்பணியாற்றியுள்ளார். யாழ்ப்பாணம் சைவ மங்கையர் கழகத்தின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் இருந்து அவர் ஆற்றிய கல்வி மற்றும் சமூகப் பணிகள் இவ்விழாவில் நன்றியுடன் நினைவு கூறப்பட்டன.

இவ்விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாக, கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் பதிப்பாசிரியத்துவத்தில் உருவான “கர்மயோகி லேடி இராமநாதன்” எனும் சிறப்பு மலரும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

அமரர்கள் லீலாவதி இராமநாதன் மற்றும் சேர் பொன் இராமநாதன் ஆகியோர் இந்த மண்ணில் மக்களுக்காக ஆற்றிய பணிகளை நன்றியோடு நினைவு கூர வேண்டிய நேரம் இது.

Related posts

இலங்கைப் பெருவெள்ளம்: நீர் வடிந்த பின்பும் நீடிக்கும் மனக்காயங்கள் – உளவியல் மீட்சிக்குத் தேவைப்படும் அவசர கவனம்

Editor

பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்

Editor

தமிழ் பழமொழிகள் மற்றும் மனித நடத்தை உளவியல்

Editor

Leave a Comment