இதழ் 91

பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்

நாம் வழிபடுகிற எத்தனையோ தெய்வங்கள் இந்த பூகோளத்தை கண்காணித்துக் கொண்டிருந்தாலும் இந்த பூமியை ஆள்வது என்பது பஞ்சபூதங்கள் மட்டுமே..

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களில் ஒன்று நினைத்தால் கூட இந்த பூவுலகை ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும்.
இது கடந்த வருடம் மட்டுமல்ல.. கடந்து சென்ற பலகோடி வருடங்கள் கற்றுத்தந்த பாடம்.

பஞ்ச பூதங்கள் நிகழ்த்திய அனர்த்தங்களை தாண்டி எஞ்சி நிற்பவைதான் இன்று நாம் காண்கின்ற பூமியும் அதிலுள்ள உயிரினங்களும்..
முன்சென்ற யுகங்கள் பலவற்றின் முடிவையும் பஞ்சபூதங்களே நிகழ்த்தியுள்ளன…

இறைவனிற்கு நாங்கள் வழங்கியுள்ள சக்தி வடிவங்கள் என்பதும் பஞ்சபூதங்களிலிருந்து பெற்றவைதான்.

ஒரு கடற்கரையில் ஆர அமர்ந்து பாருங்கள்.. பெருங்கடலை ஓயாமல் அள்ளி அள்ளி கரைநோக்கி இறைத்துக் கொண்டிருக்கிறது அலைகள்.. அந்த அலைகள் எதன் வடிவம்?

ஒரு சாதாரண மனிதனால் அல்லது ஒரு மக்கள்கூட்டத்தால் அல்லது பெரும் எந்திரங்களால் கூட இந்த வேலையை எத்தனை நேரம் செய்யமுடியும்?

ஆனால் பூமி உருவாகியதாக- கடல் உருவாகியதாக நம்பப்படும் காலம் தொட்டு இந்த வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யார் மூலம்? இந்த வேலையை செய்யும் ஆற்றலான சக்தி எங்கிருந்து வருகிறது?

ஒரு தீக்குச்சியின் சுவாலை போதும், இந்த பூகோளத்தையே அழித்துவிடலாம் என்றால்..அத்தகைய சக்தி அச்சிறு சுவாலைக்குள் எப்படி சேமிக்கப்பட்டுள்ளது?

வெப்பகாலங்களில் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்விசிறிகளின் செலவீனமே எம் வருமானத்தை மிஞ்சி செல்கிறது. தென்றல், கொண்டல், கோடை, வாடை என்று வேகத்திற்கேற்ப – திசைக்கேற்ப வெவ்வேறு பெயர்களில் சலிக்காமல் வீசுகிற காற்றிற்கு சக்தி எங்கிருந்து கிடைத்தது?

கைத்தொலைபேசிகளில் அறிவிப்பு சமிக்ஞைகள் வரும் போது அது அதிர்வாக உணரப்படுகிறது. அவ் அதிர்வுகளை கூட சக்தி இழப்பு என்று கருதி நாம் நிறுத்தி வைக்கிறோம்… ஆனால் இந்த முழு உலகையே அதிரவைக்கும் சக்தி-பொறுமையின் சிகரம் என்று சொல்லப்படுகிற பூமிக்கு எங்கிருந்து வருகிறது?

அணைக்கட்டுக்களையே உடைந்தெறிந்து பாயும் மழை வெள்ளம், ஒரு முகிலிற்குள் எப்படி மென்மையாய் பதுங்கியுள்ளது?

இந்த உலகை ஆளும் சக்தி என்பது என்னென்ன வடிவங்களாக எங்கெங்கு சேர்த்து வைக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது சிந்திக்க முடிகிறதா?

பஞ்சபூதங்களும் சக்தியின் முகவடிவங்களே..

இரண்டு மேகங்கள் உரசும் போது உண்டாகும் மின்னலில் உள்ள சக்தியை கண்டறிந்த பின்தான் விஞ்ஞானிகள் மின்சாரத்தை கண்டறிய முன்னேறினர்.

இவ்வாறாக இந்த பூமியில் மறைந்துள்ள சக்திவடிவங்களை மீட்டெடுப்பது என்பதே இன்று வரை விஞ்ஞானம் விடைதேடிக்கொண்டிருக்கும் பெரிய வினாவாகும்.

மனிதனின் நுண்ணறிவை செயற்கையாக்கி கொள்வதை பெருஞ்சாதனை என்று நகர்கிறோம். அதனிலும் அவசியமானது இயற்கையில் மறைந்துள்ள சக்தியை மீட்டெடுத்து உபயோகிப்பது? எல்லாவற்றையும் தருகிற இயற்கை இந்த உலகம் இயங்க தேவைப்படும் சக்தியை தராதா? பெற்றுக் கொள்ளும் பக்குவம் எம்மிடத்தில் பூரணமாக இல்லை என்பதே உண்மை.

காலங்காலமாய் பூமியின் காலகர்ப்பத்தில் உருவான எரிபொருட்களையே பெருமளவில் நம்பிக் கொண்டு மனிதன் இந்த உலகை இயக்குகிறான். அதன் விளைவாய் பூமியையே அசுத்தமாக்கி, உலகின் அழிவை நோக்கி நாமெல்லாம் விரைந்து கொண்டிருக்கிறோம். இது நாம் இயற்கையின் சக்தி வடிவங்களை இன்னும் ஓரளவேனும் கண்டடையவில்லை என்பதையே காட்டுகிறது. நம் தொழில்நுட்ப வறுமை என்றே இதனை கருத வேண்டும். தொழில்நுடபம் இல்லாமல் இல்லை. இருக்கிறது. ஆனால் முழுமையான பயன்பாட்டிற்கு இன்னும் வெகுதூரம் இருக்கிறது.

இயற்கையின் இந்த சக்தி மூலத்தையே “புதுப்பிக்கத்தக்க ஆற்றல்” (Renewable Energy) என்று விஞ்ஞானம் பெயரிடுகிறது.
இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவி வெப்பம் போன்ற புதுப்பிக்கத் தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்ய முனையும் ஆற்றல் ஆகும்.

இத்தொழில்நுட்பமானது சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர்மின்சாரம், உயிர்த்திரள் ஆற்றல், உயிரெரிபொருட்கள் என்பவற்றை உள்ளடக்கி அதன் சக்தியை ஜனரஞ்சகபடுத்த எத்தனிக்கிறது. மின்னுருவாக்கம், அறை வெப்பமூட்டல், நீர்ச் சூடாக்கல் அல்லது குளிர்த்தல், போக்குவரத்து, ஊரக மின் தடங்கல் நேர ஆற்றல் பயன்பாடுகள் போன்ற பல முதன்மையான பயன்பாடுகளுக்குப புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மேலும் புதுபிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகள் இப்போது மிகவும் சிக்கனமானதாகவும் திறமையானதாகவும் மாறிவருகின்றன. மொத்த ஆற்றல் நுகர்வில் இதன் பங்களிப்பு தொடர்ந்து கூடிக்கொண்டே வருகிறது. நிலக்கரி, எண்ணெயின் நுகர்வின் வளர்ச்சி எதிர் காலத்தில் அளவில் பெரிதும் கட்டுப்பட்டு அதற்கு மாற்றாக பெருமளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலே பயன்பாட்டில் நிற்கும் என்பது வெளிப்படை.

இலங்கையில் பாய்ந்தோடுகிற மகாவலிமை கொண்ட மகாவலி ஆற்றின் சக்தி கொண்டே முழுநாடும் ஆற்றல் பெருகின்றது என்றால் அது மிகையல்ல. ஒரு நதியின் சக்தி ஒரு நாட்டை இயக்க போதுமானது என்றால் ஐம்பூதங்களின் சக்தியை ஓரளவேனும் பயன்படுத்த முயற்சி செய்தால் நாம் எந்தளவு முன்னோக்கி செல்ல முடியும்?

எல்லாவற்றையும் விட பசுமையான இந்த பூமியை பசுமையாகவே பேணுவது எம் தலைமுறையின் தலையாய கடமையாகும். அதற்கு ஒரே வழி சூழலுக்கு எந்த தீங்கும் இலாத இந்த இயற்கையின் ஆற்றல்களை நாம் நம்வசப்படுத்தி பயன்படுத்திக் கொள்வதுதான். அதற்கான வினைத்திறனான தொழில்நுட்பம் தொடர்ச்சியான வளர்ச்சிப்பாதையில் பயணிக்க வேண்டும். கடந்த வருடம் கற்றுத்தந்த பாடங்களுடன் புதிய வருடத்தை இயற்கையின் புதுப்பிக்கத்தக்க பேரற்றலை பயன்படுத்தும் தொனிப்பொருளில் வரவேற்போம். ஆற்றல் மிகுந்த பசுமையான பூமியை அடுத்த தலைமுறைக்கு பரிசளிப்போம்.

Related posts

இலங்கைப் பெருவெள்ளம்: நீர் வடிந்த பின்பும் நீடிக்கும் மனக்காயங்கள் – உளவியல் மீட்சிக்குத் தேவைப்படும் அவசர கவனம்

Editor

தமிழ் பழமொழிகள் மற்றும் மனித நடத்தை உளவியல்

Editor

நாக்கின் வலிமை

Editor

Leave a Comment