ஒரு பயண நடுத் தேநீருக்காக வாகனம் நிறுத்தப்பட்ட நேரமது. அந்த நீண்ட பயணத் தவணைகளின் இடையில் ஒரு தேநீர் தேவை என்று எனக்கும் பட்டது. இயற்கை விசாலமாய் சூழ்ந்திருந்த அந்த கிராமத்துக் கடையின் வாசமும் இசையும் கூட என்னை வாவென்று அழைத்தது. பேருந்திலிருந்து இறங்கினேன். கடைக்குள் நுழைந்து ஒரு தேநீர் குவளையை கையில் வாங்கிக்கொண்டு தனியான கதிரை ஒன்றில் போய் அமர்ந்தேன்.
அலைபேசி அலம்பல்களை பார்க்க போதிய இணையவசதியும் அவ்விடத்தில் இருக்கவில்லை. ஆனால் அலைபேசியை தவிர வேறு யாரையும், எதையும் பார்ப்பதற்கும் பிடிக்கவில்லை.
வேறு வழியில்லை. தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்ட புகைப்படக் களஞ்சியத்திற்குள் நுழைந்தேன்.
மெல்ல மெல்ல தட்டிக் கொண்டு செல்கையில் ஓரிடத்தில் கண்ணும் விரலும் அசைய மறுத்து நின்றது.
இதோ நீங்கள் இந்த அட்டையில் கண்ட அதே புகைப்படம் தான்.
இது எங்கேயோ தரவிறக்கம் செய்து வைத்ததல்ல. இதே தொலைபேசியின் வில்லைக்கண்களால் காணப்பட்ட ஒரு தரிசனம் தான் இது. அந்தக்காட்சியை சேமித்த நொடிகள் நினைவில் ஊறத்தொடங்கியது. இந்த புகைப்படத்தில் நீங்கள் காணாத சில காட்சிகள் என் நினைவில் சேமிக்கப்பட்டுள்ளன.
நான் சொன்னது போல் இந்தக்காட்சியை கண்டது என் அலைபேசியின் கண்கள் தான். ஆனால் பதிவு செய்தது என் கைகளல்ல. ‘எனக்கென பிறந்த கைகள்’ அன்றையநாளில் – அந்தநேரத்தில் அதுதான் உண்மை.
அப்படியென்றால் இன்றைய உண்மை என்ன?
உண்மைகள் யாருக்கு வேண்டும்? நினைவுகளில் இன்பத்தில் மூழ்கும் வேளையில் உண்மைகளை பற்றிய எண்ணத்தை வர அனுமதிக்கக்கூடாது. நினைவுகள் இன்புறுத்தும். உண்மைகள் துன்புறுத்தும்.
உண்மையை தூரந்தள்ளிவிட்டு சில நினைவுகளை மீட்க மனம் விரும்புகிறது..
“காதல் கிளிகள் இரண்டு …” பாடலை முனுமுனுத்துக் கொண்டே அன்று இந்தக்காட்சியை பதிவு செய்தது ‘அவள்’தான். அவள் சார்ந்த எல்லா புகைப்படமும் என் அலைபேசியில் எப்போதோ அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்தப்புகைப்படம் மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டது.
எந்த கோபத்தின் உச்சத்திலும், எந்த சோகத்தின் ஆழத்திலும் கூட அவள் சார்ந்த நினைவுகளை நிர்மூலம் செய்யமுடியாமல் எங்கோ ஒரு புள்ளி மிச்சம் வைக்கப்பட்டிருந்தது இந்த புகைப்படமாய்… அந்தப்புள்ளி இன்று இந்தப்பயணநடுவில் என் பார்வையில் பட்டு அன்று போல் மீண்டும் என்னை உருக்குலைக்க வைக்க எத்தனிக்கிறது. ‘இப்படி ஒருநாள் நிகழலாம்’ என்று நீங்கள் என்னிடம் நேற்று சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டேன். மனம் எப்போதோ பக்குவப்பட்டுவிட்டதாக நினைத்தேன்.. ஆனால் மனம் பொல்லாதது.
சரி என்னை விடுங்கள். அந்த ‘அவள்’ பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லையே. சொல்லவும் மாட்டேன். ‘சொல்லாமல் எங்களிற்கு என்ன புரியும் ?’ என்று கேட்கிறீர்களா? சொன்னால் மட்டும் புரிந்து கொள்ள முடியுமா அவளை .. புரியாத புதிர்..

அவள் ஓர் இராட்சசி..
அவளை அப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டும். கோயிலுக்குப் போய் கடவுளைப்பார்த்தால் கையெடுத்துக் கும்பிடவேண்டும் போல் தோன்றும்.. ஆனால் ஓர் இராட்சசியை பார்த்தால் என்ன தோன்றும்? பார்க்கவே பயமாக இருக்கும்.. ஆனாலும் பார்க்காமல் இருப்போமோ.. ஒரு கண்ணை மூடி இன்னொரு கண்ணால் என்றாலும் பார்த்தே ஆகவேண்டும் என்று தோன்றுமல்லவா? அவளும் அப்படித்தான்.. அவளை பார்ப்பதென்றாலே பயம்.. ஆனாலும் பார்க்காமல் இருக்க முடியாது.
ஒவ்வொரு முறையும் பயத்தின் உச்சகட்டம்தான். ஒவ்வொரு சந்திப்பும் குலை நடுக்கம் தான். ஆனாலும் அவளிடம் ஒரு கனிவு இருப்பதாக எப்படியோ நம்பினேன்.
தொடக்கம் எங்கு? முடிவு என்ன? இந்தக் கதைகளே வேண்டாம்… ஒன்று மட்டும் சொல்கிறேன். என் நினைவில் தற்சமயம் ததும்புகிற கதை.. இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த நாள் காட்சிகள்…
அந்த ஒரு நாள் அவள் கொஞ்சம் வேளைக்கு வந்து விட்டாள். அதாவது நான் வருவதற்கு முன்னால். இத்தனை நாள் சந்திப்புக்களிலும் அந்த ஒருநாள் மட்டுந்தான் அப்படி நிகழ்ந்திருந்தது.
நான் போய் நின்றதும் என் பக்கம் திரும்பவில்லை. கன நேரம் காத்திருந்த களைப்பு. களைப்பு மேலெழுந்து பொங்கிய கோபம்.. எல்லாம் சேர்ந்து அவள் தலையை திருப்பி வைத்திருந்தன.
ஒரு ஆண் அதிகநேரம் காத்திருப்பதும், ஒரு பெண் அதிகநேரம் காத்திருப்பதும் சமூகத்தின் பார்வையில் ஒன்றல்லதான். எனக்கும் அது புரிந்தது.
கூடவே ஒரு பயமும் இருந்தது.. இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் பயப்படாத மாதிரி நடிக்கின்ற வீரம் என்னிடம் கொஞ்சம், இல்லை, கனக்கவே இருந்தது..
என் வீரத்தோடு அமைதியாகவே நின்றேன். பிடிவாதக்காரி.. கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் கடந்திருக்கும். தலை திருப்பவேயில்லை.
இப்படி நான் முன்னதாக வந்து அதிக நேரம் காத்திருந்த பொழுதுகளில், அவள் வரும்போதே ஏதேதோ பேசிக்கொண்டு தன் குற்றத்தை திசை திருப்பிக் கொண்டே தான் வருவாள்.. அந்த வல்லமைதான் எனக்கு தெரியாதே.. பெண்ணின் கண்களை பார்த்தாலே வாய் திறக்க முடியாதபடிதானே ஆணினைத்தையே படைத்து வைத்திருக்கிறான் இறைவன்.
சரி இனி என்ன செய்யலாம் என்று
‘வந்து கன நேரம் ஆவிட்டோ..?’
‘ இத கேட்கிறதுக்கே இவ்வளா நேரம்…’
என்றவாறே தலை ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் திரும்பியது. இப்போதும் என்பக்கமல்ல.
‘கொஞ்ஞ்ஞ்ஞ்சம் வேலை … .. நேரத்திற்கு வெளிக்கிட்டிட்டன்.. ஆனாலும் இடேல கொஞ்சம் பிந்திட்டுது..’
‘கொஞ்சம்’ என்ற வார்த்தைக்கு மட்டும் அப்படியொரு ‘எதிர்ஒளி’ அவள் கண்களிலிருந்து
‘சரி கொஞ்சம் இல்லை.. கனநேரம் ஆகிட்டு போல தான் கிடக்கு…’
அந்த அமைதி அசையவேயில்லை..
‘ஏதோ இண்டைக்கு ஒருநாள் மட்டும்…‘ சொல்ல வந்துவிட்டேன்.. ஆனால் சொல்ல முடியவில்லை. சுதாரித்து வாயை இறுக்க மூடிக் கொண்டேன்.. ஆனால் சொல்ல வந்தது சென்றடைந்து விட்டது.
‘என்ன?’
விளங்காதது போல் கேட்டாள்?
விளங்கிவிட்டது என்றது அவள் கேட்ட தொனி.
‘ஒண்டுமில்லை’
என் வேகமான பதில்.
ஒரு முடிவிற்கு கொண்டுவருவதற்கான என் முயற்சி.
நான் பயந்துவிட்டேன் என்றால்.. அவள் வென்றுவிட்டாள் என்று பொருள் அவள் அகராதியில்.. ஒளித்து வைத்திருந்த வெற்றிச்சிரிப்பு அவளிடமிருந்து கேட்டது..
‘அதாவது நான் இண்டைக்கு ஒருநாள் வெள்ளெண்ண வந்துபோட்டு கதைக்குறன்.. அப்படித்தானே…’ சிரித்த குரல் மாறாமல் கேட்டாள்.
‘அப்பிடியில்லை…’
சொல்லும் போது அவள் முகத்தில் சிரிப்பு வற்றாமல் இருந்ததை கவனித்துவிட்டு ‘அப்படித்தான்’ என்றேன்.
சிரிப்பு வற்றவில்லை… வென்றுவிட்டேன் நானும்..
இப்படித்தான் தொடங்கும் எங்கள் ஒவ்வொரு சந்திப்புக்களும்..…
ஒவ்வொரு சந்திப்புக்கும் முன்னும் எத்தனை ஒத்திகை பார்த்தாலும் அவளிடம் தோற்றுப்போகும் வேடிக்கை என் வாடிக்கையானது.
உரிமைகளும் சுதந்திரமும் வேண்டுமென போராடிய மனம் அடிமைத்தனத்தை விரும்பத் தொடங்குவது காதலில் தானே..
இறைவனே அவதாரமெடுத்து வந்தும் அழிக்கமுடியாத ‘நான்’ என்ற எண்ணத்தை காதல் வெகு இலகுவாக அழித்துவிடுகிறது.
அப்படியே வீதியில் நடந்து கொண்டு போனோம். ஒரு தொலைவில் தான் இந்த புகைப்படத்தில் தெரியும் இந்த தென்னைமரத்தை பார்த்தோம். தினமும் அது அங்குதான் இருந்தது. ஆனால் அன்றுதான் அதுவரை கண்டு அறியாதது கண்டோம்..
‘அங்க அந்த தென்னமரத்த ஒருக்க பாரன்..’ என்றாள்..
‘தென்னை மரமா அது?? எப்பயோ செத்துப் போன மரம்… ‘
‘உனக்கு இரசனை எண்டதே அவ்வளாந்தான்..’
‘சரி சொல்லுங்க இரசிகை.. அந்த தென்னை மரத்தில் அப்படி என்ன தெரிகிறது?’
‘ஒண்டுமில்ல .. அந்த பொந்த குடையிற கிளி இரண்டையும் பாரன்….. மரத்தை கொத்துறதும் சண்டை பிடிக்கிறதும்… ‘
‘ஓமோம் … நல்லத்தான் இருக்கு..’
உப்பு சப்பில்லாத என் பதில் அவள் கோபத்தை சீண்டும் நோக்கில் தான்..
அருகில் கிடந்த புல்லொன்றை பிடுங்கினாள். சொல்லால் அடி வாங்கி திருந்தாதவனை இனி புல்லால் அடிப்பதே வழி என்று நினைத்ததாள் போலும்..
புல்லிற்கு பயந்து நானும் ஓடினேன். அவளும் அந்த புல்லோடு துரத்திக் கொண்டு வந்தாள். அந்த தென்னை மரத்திற்கு அருகில் தான் வந்தேன்… ‘நில்லு… நில்லு…அதுகளுக்கு கிட்ட போகாத.. பாவம் பயத்தில ஓடிடுங்கள்..’
‘சரி …. சரி’ என்று அதே இடத்தில் நின்றேன்..
ஓடி வந்தவள்.. கிட்ட வந்து அந்த கிளிகளை கண்டு அமைதியாய் நின்றாள்.. உற்றுப் பார்த்தாள்.
“செத்துப் போனதாய் நீ சொன்ன தென்னைக்கு அந்த கிளிகள் உயிர் கொடுத்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா?” என்றாள்.
“சூனியக்கார கிளிகளா இருக்குமோ.. உயிர்ப்பிக்க எல்லாம் தெரிஞ்சிருக்கு..” என்றேன். சிரித்தாள்.
வாயில் ஒரு பாடலை முனுமுனுக்கத் தொடங்கினாள்..
“காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே….”
ஓய், என்று நான் தட்டியதும் சுயநினைவு கொண்டவளாய்.. ‘உண்ட போன ஒருக்க தாவன்’ என்றாள்..
‘என்னத்துக்கு?’
‘ஏன் சொல்லணுமா??’
‘ வேண்டாம் பிடி ‘
கொடுத்தேன்.
அப்படி அன்று என் போனில் எடுத்த காட்சி தான் இன்று உங்கள் கண்களால் நீங்கள் காண்பது.
எடுத்த படத்தையே கனநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.. போனை பார்த்துக் கொண்டே
‘ஏய்…… நான் ஒண்டு சொல்லவா..’
‘வேண்டா….ம்’ என்றேன்…
என் முகத்தை நிமிர்ந்து பார்த்து சிரித்தாள்..
‘நீ… சொல்லத்தான் வேண்டுமென்றல்ல..’
என்றேன்..
சிரித்துக்கொண்டே அணைத்துக் கொண்டாள்..
தன்னந்தனியாக கதிரையில் அமர்ந்து போனைப் பார்த்துக்கொண்டு தேநீர் பருகும் நானும் சிரித்துக் கொண்டிருந்தேன்.. என்னைப் பார்க்கும் சகபயணிகளிற்கு நான் வேடிக்கையாய் கூட தெரியலாம். அதற்காக இந்த நிமிடத்து என் சிரிப்பை ஒளிக்க முடியுமா? எதற்கு ஒளிப்பதென இன்னும் அகலமாக சிரித்தேன்…
‘லவ் பண்ணுங்க சேர்..’ வாழ்வு நல்லா இருக்குமோ, இருக்காதோ தெரியாது .. ஆனால் அந்த நினைவுகளை மீட்டிப்பார்க்கிற ஒவ்வொரு தருணங்களும் ஆயுள் முழுதும் இனிமையாக தான் இருக்கும்…
நினைத்துப் பாருங்கள்…
எல்லோருக்கும் காதலர்தின வாழ்த்துகள்..

