ஒரு நரி, அது பல நாள் பட்டினி. பல இடங்களிலே உணவுக்காக அலைந்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியில் பெரியதொரு இறைச்சித்துண்டம் கிடைத்தது. அதை வாயிலே கௌவிக்கொண்டு நரி தன் இருப்பிடம் நோக்கி விரைந்தது. வழியிலே நீர் பாய்ந்து கொண்டிருக்கும் ஒரு வாய்க்கால். அதைக் கடந்து செல்லுகையில், மீன்கள் தண்ணீரில் குறுக்கும் நெடுக்குமாக ஓடி மிளிர்ந்தன. நல்ல வரிகளையுடைய வரால் மீன்கள் நீலநிறமாய்ப் பளபளவென்று மின்னின. தண்ணீர் வேகமாய்ச் சுருட்டி இழுத்தது. நரிக்கு நிலைக்க முடியாத ஆழம். ஆயினும் அது நீந்திக் கொண்டே சென்றது. வரால் மீன்கள் அதன் வாலிலும் காலிலும் பட்டு துடித்துத் துள்ளின. நீரை அடித்துத் தள்ளின. மீனைக் கண்டதும் நரிக்கு வாயிலே நீர் ஊறியது.
மீன்சுவையோ தேன்சுவையோ அல்லவா? அதோ ஒரு வரால் நீரை எதிர்த்து எவ்வளவு ஒய்யாரமாய் நிற்கிறது. ஒரே பாய்ச்சல். வாயைத் திறந்து கொண்டு நரி பாய்ந்தது. மீன் நழுவிவிட்டது. வாயிலிருந்து வழுக்கிவிழுந்த இறைச்சிக் கண்டமும் நீரிலே முழுகிவிட்டது. ஏமாந்து போன நரி வெறும் வாயைக் குதட்டிப் பற்களை மென்றது. மீன் மீதிருந்த ஆசை தன்வாயிலிருந்த இறைச்சித் துண்டையும் மறக்கச் செய்தது. மீனைக் கண்டதும் ஊனை மறந்தது. பேராசையே பெருநட்டமானது.
வாய்க்கு எட்டியது வயிற்றுக்கு எட்டவில்லை. இந்த நரிக்கு ஏன் இவ்வளவு அறிவு இல்லாமற் போய்விட்டது? என்று நாம் நரியைப் பார்த்துச் சிரிக்கிறோம். ஆனால் நம்முடைய அறிவுதான் எந்த நிலையிலிருக்கிறது? பெறுதற்கரிய மனிதப் பிறவியை எடுத்தோம். அதன் குறிக்கோளைத் தெரிந்து கொள்ளாது கெடுத்தோம். சிவஞானம் பெறுதற்கேற்ற வாய்ப்புகளுடன் பிறந்தோம். அவ்வாய்ப்புக்களைப் பயன்படுத்த மறந்தோம். சிவகதி அடைவதற்கானவற்றை முயலாமல் அவகதி அடைவதற்கான அல்லல்களையெல்லாம் விரும்பித் தேடிக் கொண்டோம்.
பரம சுகமாவது பொறுப்பரிய துயரமாய் அழுத்தக் கண்டோம். மனதைச் செம்மைப்படுத்தி அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்புலன்களாகிய யானைகளை அடக்கும் வலியை இழந்தோம். அவற்றின் கால்களில் நாம் கட்டுண்டு, அவை நாலாபக்கமும் இழுக்க நாம் நடுவிற் கிடந்து நலிவுறுகிறோம். அருளிற் திளைக்கப் பிறந்த நாம் மருளிற் புதைந்து மதிகுலைகிறோம். இவ்வுலக வாழ்க்கையே நீரோடை. இவ்வுலகிடை நிலைத்திராத சிற்றின்பங்களே வரால் மீன்கள். உயிர்தான் நரி. நல்லறிவைக் கொண்டு பேரின்பம் பெறுவதற்கேதுவாகிய இப்பிறவியே இறைச்சித்துண்டு.
இந்த முறையே பார்க்கும்பொழுது, நாம் நரியை விடவும் மிகமிகக் கேடுகெட்ட நிலையில் அல்லவா இருக்கிறோம்? நரியைப் பார்த்துச் சிரித்தோமே! இப்பொழுது நம்மையே பார்த்து அழுகிறோம் அல்லவா! நமது சிந்தையிலே எழுகின்ற மயக்கத்தை அறுப்பதற்குச் சிவபெருமான் திருவருள் வேண்டும். அவனுக்கு நாம் அன்பு செலுத்தி அவன் அருள் பெற்று ஞானம் அடைவதை விட்டு உலக காரியங்களிலே நமது புத்தியைச் செலுத்தித் காலத்தைக் கழிக்கிறோம். கால பாசத்திற்காளாகிக் கழிக்கிறோம். உறுதியளிக்கும் பொருள்களை இறுகத் தழுவித் திகைக்கிறோம். நல்லறிவையும் கழுவிக் கரைக்கிறோம். உலக பாசம் என்னும் வரால் மீன்கள் நம்மைச் சுற்றி வளைத்து மயக்கி மருட்டி மறைந்து விடுகின்றன. காலம் என்னும் நீரோடை, இறைச்சி என்னும் நமது மானிடப் பிறப்பினால் வந்த காயத்தை நம்மைவிட்டுக் கழற்றி இழுத்துக் கழிந்து விடுகிறது. ‘வாய்ந்தது நந்தமக்கீதோர் பிறவி! மதித்திடுமின்!’ என்ற அறிவுரையை நாம் மதியாது வாழ்ந்ததால் மயங்கித் தவிக்கிறோம்.
வரால் மீனுக்கு ஆசைவையாது நரி ஓடையைக் கடந்திருந்தால், இறைச்சியைக் கொண்டு தன் பசியை ஆற்றியிருக்கும். அதுபோல் உலக மயக்கத்திலே நமது மனதைச் சிக்கவிடாது சிவன் திருவருளே வேண்டிச் செம்மையுள் நிற்போமாகில், நமது ஆன்ம வேட்கையாகிய பசி தீர்ந்து, என்றும் அழியாத வீட்டின்ப வாழ்வினை நாம் எளிதில் அடையலாம். இல்லாவிடில் பூத்தாடும் பொய்கையிதுவேயெனக் கருதிப் பேய்த்தேர் முகக்குறும்பேதையராகிப் பேதுறுவது திண்ணம். இதை, இந்த நரியின் கதை காட்டுகிறது. பேதை நரியே ஒரு மேதைக் குருவாகி நமக்கு நல்ல பாடம் கற்பிக்கிறது. இதை அப்பர் அடிகள் சுட்டிக் காட்டுகிறார்
நரிவரால் கவ்வச் சென்று நற்றசை யிழந்த தொத்த
தெரிவரால் மால்கொள் சிந்தை தீர்ப்பதோர் சிந்தை செய்வார்
வரிவரா லுகளும் தெண்ணீர்க் கழனிசூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த வதிகை வீரட்ட னாரே
