எழுபத் தெட்டு ஆண்டுகள்……
இது காலண்டர் கிழித்த வெறும் காகிதக் குப்பையல்ல,
ஒரு தேசம் தன் முதுகெலும்பைக் கண்டறிந்த
மூச்சடக்கிய நெடிய பயணம்!
அன்று,
வெள்ளையன் வெளியேறியபோது
அவன் விட்டுச் சென்றது வெறும் அதிகாரம்!
ஆனால்,
நமது இரத்த அணுக்களில் ஊறியிருந்ததோ
அந்நிய மோகம் எனும் அடிமைச் சிலந்தி!
எழுபத் தெட்டு ஆண்டுகளில்..
அந்தச் சிலந்தி வலைகளைச்
சிந்தனையால் அறுத்து எறிந்தோம்!
தாழ்வு மனப்பான்மை எனும் மன நோயைச்
சுயமரியாதை எனும் அக்கினியில் சுட்டெரித்தோம்!
காயங்கள் இல்லாத சரித்திரம் கிடையாது,
வடுக்கள் இல்லாத முதிர்ச்சி கிடையாது!
நாம் கண்ட போர்களும்.. பசிப் போர்க்களங்களும்..
எம்மைச் சிதைக்க வந்த உள வடுக்கள் அல்ல,
எம்மைச் செதுக்க வந்த ஞான உளிகள்!
நெருக்கடி என்பது நெருப்புதான் – அதில்
இலங்கை எனும் தங்கம் இற்றுப் போகவில்லை..
மாறாக, மீண்டெழும் திறன் எனும் பக்குவத்தில்
மின்னிப் போகிறது!
இன்று,
இலங்கை என்பது வெறும் நிலப்படமல்ல..
அது 78 வயதான வடுகளால் செதுக்கப்பட்ட வைரத்தீவு!!!!
பிரிவினைகளை விழுங்கி ஒருமைப்பாட்டை பெற்றெடுத்த தாய்!!
உணர்ச்சிகளின் கொதிப்பை விட
அறிவின் தர்க்கத்தை நேசிக்கும் ஒரு புதிய ஆளுமை!
முதுமையின் நரையில் – இங்கு
முற்போக்குச் சிந்தனை மின்னுகிறது!
சுதந்திரம் என்பது வெறும் கொடியேற்றமல்ல..
சக மனிதனின் கண்ணீரைத் துடைக்கும்
உள்ளத்தின் விடுதலையே – உண்மையான விடுதலை!
இளமை இன்னும் தீரவில்லை..
ஏனெனில் –
மாற்றத்தை ஏற்கும் தேசத்திற்கு
மரணமே கிடையாது!

