இதழ் 93

மதம் பிடிக்காத வரை மனிதனைப் போலத்தான் யானைகளும்

காட்டின் அரசன் சிங்கம் என்றாலும் அந்த மாமிசம் உண்ணும் சிங்கமே கண்டு அஞ்சும் விலங்காக யானை உள்ளது. காட்டை ஆள்வது சிங்கமாக இருந்தாலும் காட்டை உருவாக்குவது யானைகள் என்ற சுவாரசியம் தெரியுமா உங்களுக்கு?

யானைகள் தாவர உண்ணிகள் என்பது நாம் அனைவரும் அறிந்தது. இவை ஒரு நாளில் மட்டும் 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. பொதுவாக நன்கு வளர்ந்த பெரிய யானைகள் ஒரு நாளைக்கு 140 முதல் 270 கிலோ வரை உணவுகளை உட்கொள்ளும். ஆனால் இதனுடைய செரிமானம் என்பது மந்தத்தன்மையாகத்தான் இருக்கும்.இவை சாப்பிடும் பல உணவுகள் செரிமானம் இல்லாமல் சாணத்தின் வழியாக அப்படியே வெளியேறிவிடும். இவ்வாறு வெளியேறும் சாணத்தில் பல பழங்களின் விதைகள் இருக்கும். இவை தான் முளைத்து காடுகளாக வளர்கின்றன.

இவ்வாறு கூட்டமாக வாழும் யானைகள் காடுகளில் உள்ள பல பழங்களை உண்டு அதனை சாணமாக வெளியேற்றும் பொழுது அதிலிருந்து பலவகையான செடிகளாக வளர்கின்றன. மேலும் இவை நடந்து செல்லும் வழிகளில் பல பெரிய மரங்களின் கிளைகளை உடைத்து சூரிய ஒளி தரையில் படும் அளவிற்கு வசதிகளை ஏற்படுத்தி செல்கின்றன. இதனால் காட்டில் மழை பெய்து, தரையில் சூரிய ஒளி படும் போது அந்த சாணத்தில் இருந்து பல வகையான செடிகள் மீண்டும் முளைத்து காடுகளாக மாறுகிறது.

மேலும் இவை நடந்து செல்லும் போது காட்டில் வழித்தடத்தை ஏற்படுத்துகின்றன. காட்டில் வாழும் சிறிய வகை உயிரினங்கள் உணவுகளை தேடிச் செல்வதற்கு இவை பெரும் பங்களிக்கின்றன. நீர் நிலைகளில் இவை இறங்கி நீர் அருந்தும் பொழுது அங்கு பள்ளம் தோன்றி செயற்கையான நீர் குட்டைகள் உருவாகின்றன. இதனால் காட்டில் வாழும் மற்ற விலங்குகள் எளிமையாக நீர் அருந்துவதற்கு இவை உதவுகின்றன. இவ்வாறு காடுகளை உருவாக்குவதில் யானைகளின் கூட்டம் பெருமளவில் உதவுகிறது. இதனால்தான் யானை இருந்தால் ஆயிரம் பொன் எனக் கூறுகிறார்கள்.

யானை இறந்த பிறகு அதனுடைய உடல் காட்டில் வாழும் மற்ற விலங்குகளுக்கு உணவாக நீண்ட நாட்களுக்கு பயன்படுகிறது. மேலும் யானையின் தந்தம் விலை மதிக்க முடியாத பொருளாக இருக்கிறது. எனவே யானையின் தந்தத்திற்கு வணிக சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது. மேலும் ஆப்பிரிக்காவில் யானைகள் அதிகம் வாழகின்றன. அந்த நாட்டில் தந்தங்களுக்காக யானைகள் அதிகமாக கொல்லப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.இதனால்தான் யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கூறுகிறார்கள்.

இலக்கியங்களில் மா, வேழம், கரி, சிந்தூரம், அத்தி, அருகு, ஆம்பல், அலுவல், இபம், இம்மடி, கைம்மா போன்ற 50ற்கும் அதிகமான பெயர்களில் அழைக்கப்படும் விலங்கு யானை.
தமிழர்களில் வாழ்வியலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் ஒரு பெரிய உயிரினம் யானையாகும்.

புதர் ஒன்றில் தனது கூட்டத்துடன் மேய்ந்துகொண்டிருந்த ஆண் யானை, நீர்நிலை ஒன்றில் பதுங்கியிருந்து தன்னைத் தாக்க வந்த புலியை தனது கூரிய தந்தத்தால் குத்தி கொன்று, தந்தத்தில் வழியும் குருதியை கொட்டும் மழை நீரில் கழுவி விட்டு மலைச்சரிவில் இறங்கி தனது கூட்டத்துடன் சேர்ந்துகொண்டது என்கிறது கபிலர் எழுதிய அகநானூற்றுப் பாடல் ஒன்று. புலியைக் கொல்லும் யானையை போரில் ஒருவன் கொல்கிறான், அதுவும் ஆயிரம் யானைகளைக் கொன்று குவிக்கிறான் என்றால் அவனைப் போற்றி பாடாமல் இருக்க முடியுமா? அப்படி அமைந்தது தான் பரணி இலக்கியம்.

இது ஒருபுறம் என்றால், புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியை பற்றி அறிகிறோம். யானையை அடக்கிய ஒரு தமிழ்ச்சியை பற்றி அறிவோமா.. அதுவும் ஓர் ஈழத்து தமிழச்சியைப் பற்றி அறிவோமா… வன்னியில், மதங் கொண்ட யானையை அடக்கிய ’அரியாத்தை’ என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறும் “வேழம்படுத்த வீராங்கனை”என்னும் நாட்டுக்கூத்தை செல்லத்துரை என்பவர் எழுதியுள்ளார்.

”வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்”

எனத் தன்னுடைய திருமணக்கனவைப் பற்றி நாச்சியார் திருமொழியில் கூறுகிறார் ஆண்டாள். அதாவது, திருமால், ஆயிரம் யானைகள் சூழ வருகிறார். அக்காட்சியைக் காணும் மக்கள், பாதையின் இரு புறமும் பொற்குடங்களை வைத்து, தோரணங்கள் கட்டி வரவேற்பதாகக் கனவு கண்டதை தன் தோழியிடம் ஆண்டாள் கூறுவதாக அமைகிறது அப்பாடல்.

”நசைபெரிது உடையார் நல்கலும் நல்குவார்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின் தோழி! அவர் சென்ற ஆறே”  –  குறுந்தொகை.

பிரிந்து சென்ற காதலன் விரைவில் வருவான் எனத் தோழி, தலைவியிடம் கூறுவதாக அமைந்திருக்கும் இப்பாடலில், தலைவன் சென்ற பாலை நிலத்தில், வலிமையான ஆண் யானை, மென்மையான கிளைகளை உடைத்து பெண் யானைக்குக் கொடுக்கும் காட்சி இருக்கும். அதனைப் பார்க்கும் தலைவன், விரைவில் வந்து சேர்வான் எனக் கவலையில் இருக்கும் தலைவிக்கு தோழி கூறுகிறாள். காதலிலும் யானை இன்றியமையாததாக உள்ளது என்பதை மேற்கண்ட இரு பாடல்களின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

”கொம்புளதற்கு ஐந்து  குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி” –  நீதி வெண்பா

இப்பாடலில், கொம்பிருக்கும் விலங்குகள் இருக்கிறது என்றால் அது இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து முழம் தள்ளி நிற்க வேண்டும். குதிரையாக இருந்தால் பத்து முழம் தள்ளி நிற்க வேண்டும், அதே யானையாக இருந்தால் ஆயிரம் முழம் தள்ளி நிற்க வேண்டும். அதே போல்,  தீயோரைக் கண்டால் கண் காணாத தூரத்திற்கு ஓடிவிடுங்கள் என்று கூறுகிறது இப்பாடல். மிகப்பெரிய விலங்கான யானையை விட ஆபத்தானவன் மனிதன் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.

இவ்வாறு யானைகளை சங்க காலத்தில் பல்வேறு தளங்களில் உவமானமாக பயன்படுத்தியுள்ளார்கள். மனிதர்கள் தங்கள் முன்னோடியாக யானைகளை என்றும் மதித்து வந்திருக்கிறார்கள். யானைகள் நிறைய பாடங்களை மனிதனுக்கு போதித்திருக்கின்றன. அட்டையைப் பாருங்கள். அதிலும் ஒரு சில பாடங்கள் உங்களுக்கு இருக்கும். தாய் யானை பாராமரிப்பில் அதன் குட்டி யானைகள் சகோதர பாசத்தில் விளையாடுகின்றன. குடும்பங்களுக்குள் ஒற்றுமை குலையாமல் இருப்பது காடுகளில் மட்டும் தான் என்றான் ஒரு கவிஞன்.‌ உண்மைதான் போலும்…! மதம் பிடிக்காத வரை மனிதனைப் போலத்தான் யானைகளும்.

Related posts

சிகரம் தொடும் சிங்கப்பெண்கள்.

Editor

அதிகார மட்டத்தில் எடுக்கப்படும் சமூக நலன் சார் துணிச்சலான முடிவுகள் வரவேற்கத்தக்கவை

Editor

அகம் எவ்வாறோ!! புறமும் அவ்வாறே.

Editor

Leave a Comment