இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் அபரிமிதமான வளர்ச்சி மனிதத் தொடர்புகளை எளிதாக்கியுள்ள அதே வேளையில், பொறுப்பற்ற தகவல் பகிர்வு என்பது ஒரு பெரும் சமூக அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இன்று ஒரு செய்தியின் உண்மைத் தன்மையைச் சற்றும் ஆராயாமல், சுயலாபத்திற்காகவும் பரப்பரப்பிற்காகவும் கற்பனையான கதைகளை உருவாக்கி அதனைப் பொதுவெளியில் பகிரும் போக்கு அதிகரித்து வருகின்றது. இத்தகையச் செயல்கள் வெறும் எழுத்துக்களுடன் நின்றுவிடாமல், தனிமனிதர்களின் அந்தரங்கம், குடும்ப அமைதி மற்றும் சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றின் மீது மிக மோசமானத் தாக்குதல்களைத் தொடுக்கின்றன.

ஒரு பொய்யானச் செய்தி காட்டுத்தீயைப் போலப் பரவும்போது, அதன் பின்னணியில் உள்ள உண்மை மறைக்கப்பட்டு விடுகிறது. இது பல குடும்பங்களில் தீர்க்க முடியாத மனக்கசப்புகளையும், பிரிவினைகளையும், தற்கொலை போன்ற விபரீத முடிவுகளையும் நோக்கி இட்டுச் செல்கிறது. குறிப்பாக, பெண்களையும் குழந்தைகளையும் இலக்காகக் கொண்டு பரப்பப்படும் அவதூறுகள், அவர்கள் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியாதச் சூழலை உருவாக்குகின்றன. டிஜிட்டல் உலகில் ஒருமுறை பதியப்படும் ஒரு தவறானத் தகவல், காலங்கள் கடந்தாலும் அழியாமல் இருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ச்சியான மன உளைச்சலைத் தருகிறது.
மறுபுறம், சமூகத்தின் நலனுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, பல நற்பணிகளை ஆற்றி வரும் சமூகப் பெரியார்கள் மற்றும் தன்னார்வலர்களைப் பற்றிய அவதூறுகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. மதிப்போடு இருப்பவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதன் மூலம், அவர்கள் செய்யும் நற்பணிகளை முடக்கச் சில சக்திகள் முயல்கின்றன. ஒரு மனிதன் பல ஆண்டுகாலமாகச் சேர்த்தப் புகழும் கௌரவமும், ஒரு சில நிமிடங்களில் பகிரப்படும் ஆதாரமற்ற வதந்தியால் சிதைக்கப்படுகிறது. இத்தகையப் போக்கு தனிப்பட்ட நபரை மட்டும் பாதிப்பதில்லை; மாறாக, ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் முடக்கிப் போடுகிறது. ‘நல்ல காரியம் செய்தாலும் நமக்கும் இத்தகைய அவதூறு நேரிடுமோ’ என்ற அச்சம் இன்று பலரிடையே ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்தின் காரணமாகச் சமூகப் பணிகளில் ஆர்வம் உள்ளவர்கள் கூடத் தங்களை அப்புறப்படுத்திக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இது வருங்காலச் சந்ததியினருக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. சமூகத்திற்கு உதவ முன்வருபவர்கள் மதிக்கப்பட வேண்டிய இடத்தில், மலிவான விமர்சனங்களுக்கும் வதந்திகளுக்கும் உள்ளாக்கப்படுவது ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம் அல்ல.
இத்தகைய வதந்திகள் பரவுவதற்குப் பின்னால் இருக்கும் உளவியல் மற்றும் தொழில்நுட்பக் காரணிகளை நாம் ஆழமாக நோக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ‘லைக்’கள் மற்றும் ‘பகிர்வு’கள் மூலம் கிடைக்கும் தற்காலிகப் பிரபல்யத்திற்காகப் பலர் உண்மையைச் சிதைக்கத் துணிகின்றனர். ஒரு செய்தியைப் பகிரும் முன் அது உண்மையா, இதனால் யாருடைய வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற அறச் சிந்தனை பலரிடம் இருப்பதில்லை. இணையத்தில் உலவும் ‘கிளிக் பெய்ட்’ (Clickbait) கலாச்சாரம், பரபரப்பானத் தலைப்புகளைக் கொண்டு மக்களை ஈர்க்க முயல்கிறது. இதில் சிக்கிப் பல குடும்பங்களின் மானமும் மரியாதையும் ஏலத்திற்கு வருகின்றன.
சமூகப் பணியாளர்களைத் தாக்கும் வதந்திகள் பெரும்பாலும் பொறாமை அல்லது காழ்ப்புணர்ச்சி காரணமாகவே உருவாக்கப்படுகின்றன. பொது வாழ்வில் நேர்மையாக இருப்பவர்களைக் கறைப்படுத்துவதன் மூலம், அவர்களுடைய நற்பணிகளால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தடுக்க முடியும் என எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர். இது சமூகத்தின் மனசாட்சியை மழுங்கடிக்கும் செயலாகும்.
பாதிப்புகளைப் பொறுத்தவரை, இது ஒரு தொடர் சங்கிலி வினையைப் போன்றது. குடும்ப ரீதியாகப் பார்க்கும்போது, கணவன்-மனைவிக்கிடையிலான விவாகரத்துகள், பிள்ளைகளின் கல்வி பாதிப்பு மற்றும் சமூகப் புறக்கணிப்பு போன்றவை முதன்மையானவை. வதந்தியால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
சமூக ரீதியாகப் பார்க்கும்போது, அறக்கட்டளைகள், பொதுத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர் சமூகச் சேவகர்கள் மீதான நம்பிக்கை குறைகிறது. இதனால் ஏழை எளிய மக்களுக்குச் சென்றடைய வேண்டிய உதவிகள் தடைபடுகின்றன. வதந்திகளுக்கு அஞ்சிப் பொதுநலப் பணிகளிலிருந்து நல்லவர்கள் ஒதுங்கிக் கொள்ளும்போது, அந்த இடத்தைச் சுயநலவாதிகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இது சமூகத்தில் ஊழலையும் அநீதியையும் வளர்க்கவே வழிவகுக்கும்.
இந்தச் சமூகப் பிணியைத் தடுக்க வேண்டியப் பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு. ஒரு தகவலைப் பெறும்போது அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வரை அதைப் பகிராமல் இருப்பதே சிறந்த அறமாகும். சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், தனிமனித ஒழுக்கமும் சமூகப் பொறுப்புணர்வுமே நிரந்தரத் தீர்வைத் தரும். சமூக வலைத்தளங்களை மற்றவர்களை இழிவுபடுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தாமல், ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கானக் கருவியாக மாற்ற வேண்டும். அவதூறுகளைப் பரப்புபவர்களைச் சமூகம் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
அதேபோல், வதந்திகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தார்மீக ஆதரவை வழங்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும். குறிப்பாக, நற்பணிகள் செய்பவர்களைப் பாதுகாக்க வேண்டியது அந்தச் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. அப்போதுதான் எவ்வித அச்சமுமின்றி மக்கள் பொதுப் பணிகளில் ஈடுபட முன்வருவார்கள். உண்மையை ஆராயும் பண்பும், பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மனப்பக்குவமும் வளரும்போது மட்டுமே, இத்தகைய இணையவழி வன்கொடுமைகளிலிருந்து நமது சமூகத்தையும் குடும்பங்களையும் பாதுகாக்க முடியும். நவீன யுகத்தில் இணையம் என்பது ஆற்றல் மிக்கது; அந்த ஆற்றல் ஒருவரைக் காக்கப் பயன்பட வேண்டுமே தவிர, அழிக்கப் பயன்படக் கூடாது.

