சைவத்தமிழ் உலகிற்கு ஈடு இணையற்ற தொண்டாற்றி இறைபதம் அடைந்த அகில இலங்கை இந்து மாமன்றத்தின் முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டன் அவர்களின் ஒப்பற்ற சேவைகளைக் கௌரவிக்கும் விசேட நினைவேந்தல் நிகழ்வு, நல்லூர் அகில இலங்கை இந்து மாமன்ற பிராந்திய அலுவலகத்தில் மிகச்சிறப்பாக கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நாளில் அமரரின் சமய, சமூக மற்றும் கல்விப்பணிகள் குறித்த அரிய வரலாற்றுத் தகவல்கள் பலராலும் நன்றியுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
மலேசியாவில் 1947 ஆம் ஆண்டு பிறந்து உடுப்பிட்டியில் வசித்து, யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1969 இல் சட்டத்தரணியாகத் தனது பணியை ஆரம்பித்தார். சிறந்த சட்டப் புலமையும் சமய அறிவும் கொண்ட இவர், தனது வாழ்நாள் முழுவதும் இந்து ஆலயங்களின் பாதுகாப்பு, கல்வி மேம்பாடு மற்றும் சமூக நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். குறிப்பாக, மூடப்பட்டிருந்த கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரியை மீண்டும் இயங்கச் செய்ததிலும், அங்கு தங்கிப் பயிலும் வசதியற்ற மாணவர்களுக்காக ‘சக்தி இல்லம்’ விடுதியை உருவாக்கியதிலும் இவருக்கு முக்கிய பங்குண்டு.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச்செயலாளர், தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவரது காலத்தில், மாமன்றத்திற்கான பிரதான கட்டடம் கொழும்பில் நிறுவப்பட்டதுடன், யாழ்ப்பாணம் நல்லூர் கிளை அலுவலகம் மற்றும் முறிகண்டியில் ‘சரவணப் பொய்கை’ கட்டடம் என்பனவும் உருவாக்கப்பட்டன. திருக்கேதீச்சர திருப்பணிச்சபைத் தலைவராக இருந்து, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சுமார் 360 மில்லியன் ரூபா செலவில் ஆலயத் திருப்பணிகளை முன்னெடுத்தமை இவரது பாரிய சாதனைகளில் ஒன்றாகும். அத்துடன், உயர்தர மாணவர்களுக்கான இந்து நாகரிகப் பாடநூல் வெளியீடு மற்றும் போர்ச்சூழலால் பாதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவிகள் என இவரது கல்விப்பணி விரிந்து நின்றது.
அன்றைய நிகழ்வில் புகழ்பெற்ற சட்டத்தரணிகளான திரு. ஜோ. சிவராமசர்மா மற்றும் கலாநிதி கு. குருபரன் ஆகியோர் கலந்துகொண்டு, இந்து ஆலயங்களைப் பரிபாலனம் செய்வதில் எழுந்துள்ள சட்டச் சிக்கல்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் நுணுக்கங்கள் குறித்துக் காத்திரமான கருத்துரைகளை வழங்கினர்.
2018 ஆம் ஆண்டு தனது 71 ஆவது வயதில் இறைபதம் எய்திய அமரர் நீலகண்டன் அவர்களின் நினைவைப் போற்றும் இவ்விழாவில், சட்டக் கல்லூரி மாணவர்கள், ஆலயத் தர்மகத்தாக்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
