இதழ் 94

காகிதத்தில் அல்ல கல்லிலே பதித்திட்டோம் கண்டீர்

‘முதலில் ஒன்றுமே இல்லாமல் தான் இருந்தது. அதிலிருந்துதான் ‘இருப்பது’ என்பது தொடங்கியது’
இதுவே வேதங்களும் உபநிடதங்களும் சொல்லி முடிக்கிற சாரம்.

இருப்பவை எல்லாவற்றிற்குமான தொடக்கப்புள்ளி ஒரு சூனியப்புள்ளிதான்.

உலகு தோன்றிய காலத்தில் இது எதுவுமே இல்லாமல் இருந்திருக்குமா?
எதுவுமே இல்லாத சூனியம் எப்படியிருந்திருக்கும்?

சூனியமான உலகை கற்பனை செய்து பார்க்க உங்களால் இயலுமா?

உங்கள் கற்பனையில் வரும் உலகில் எந்த ஒரு பொருள் இருந்தாலும் கூட அது சூனியமாகாது…. உதாரணமாக கடல், கல், மண், ஒளி இப்படி எது இருந்தாலும் அது சூனியமல்ல.

இந்து மதத்தின் மூல நூலாக கருதப்படுகிற வேதநூல்கள் இதையே வியந்து பார்க்கிறது.

கடந்தும் உள்ளும் இருக்கின்ற கடவுளை கற்பனையால் காண்பது கூட அசாத்தியம் என்கிறது.

இந்து மதத்திற்கு எதிராக வளர்ந்து நின்ற சமணம், பௌத்தத்தினால் கூட கடவுள் என்ற ஒன்றை காட்சிப்படுத்த முடியவில்லை.

ஒன்றுமற்ற சூனியத்தில் இறைவன் இருக்கிறான் என்றே இஸ்லாமும் போதிக்கிறது.

சிற்றம்பலம் என்கிற சிதம்பரத்தின்
இரகசியம் ‘அம்பலம்’ என்கிற ஒன்றுமற்ற வெட்ட வெளியையே காட்டுகிறது.

தீபத்தில் ஏற்றும் சுடர் எங்கிருந்து வருகிறது? தீபத்தை அணைக்கும் போது அந்தச்சுடர் எங்கு செல்கிறது?

உடல் எரிகிற போது ஆத்மா எங்கு செல்கிறது?
எரிகிற உடல் எங்கு செல்கிறது? எல்லாம் சூனியத்திலிருந்து தொடங்கி சூனியத்திலே முடிகிறது.

ஒரு பிரபஞ்சத்தையே கற்பனை செய்து பார்க்க வல்ல எங்கள் கற்பனைத்திறத்தால் கூட ஒரு சூனியத்தை கற்பனை செய்து பார்க்க முடியாதது ஏன்?

உண்மையில் தொடக்கத்தில் ஒன்றுமே இல்லாமல் இருந்திருக்குமா?
அல்லது
இருந்தவைகள் அறியப்படாமல் இருந்திருக்குமா?

ஒரு பொருள் இல்லை என்று சொல்வதும் அது அறியப்படாமல் இருப்பதும் ஒன்றல்ல.

ஒவ்வொன்றாக மனிதன் உலகை அறிந்து கொள்ள தொடங்கினான். அவன் அறிவுப்புலத்திற்குள் உலகம் உள்வாங்கப்பட்ட போதுதான் சூனியமான உலகம் இருப்பவைகளால் நிரம்ப தொடங்கியது.

தனக்கு அறிவு என்ற ஒன்று இருப்பதை ஏதோ ஒரு புள்ளியில் உணர்ந்து கொள்ளத் தொடங்கினான்.

கோமோ சேப்பியன்ஸ் என்று வரலாற்று ஆய்வுகள் சொல்கிற மனிதனும் அறிவுள்ள மனிதனின் ஆரம்பத்தையே சொல்கிறது.

இவ் ஆய்வுகளை எல்லாம் தாண்டி பலகோடி ஆண்டுகள் முன்னிருந்து வந்த ஒரு வாழ்க்கைமுறை – தர்மநெறி.. இன்று இந்து மதமாக சொல்லப்படுகிற அந்நெறியின் புராணங்களில் மனித குலம் தோன்றி வந்த விதம் குறித்து எத்தனையோ ஆயிரம் கதைகள் உள்ளன.

எல்லாம் உண்மையா என்றால்… இல்லை… தெரியாது. ஆனால் எல்லாம் பொய்யா என்றால்… அதுவும் இல்லைதானே.. எங்கோ ஒளிந்துள்ள சில உண்மைகள் தானே கால ஓட்டத்தில் இத்தனை கதை வடிவங்களாய் உருவெடுத்து நிற்கின்றன.

மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து தோன்றி மறைந்த எத்தனையோ உயிரினங்களையும், மனுட வர்க்கங்களையும் உயிரோட்டத்தோடு இன்றும் நாம் காணக்கூடிய ஓர் இடம் என்றால் அது ஆலயங்கள் தான்.

இந்த நவீன யுகத்தில் மனிதர்களை – நிகழ்வுகளை பதிவு செய்ய எத்தனையோ கருவிகளையும் வழிமுறைகளையும் வகுத்து வைத்துள்ளோம். ஆனால் இக்கருவிகளினதும், முறைகளினதும் நிச்சயத்தன்மை , நீடித்த தன்மை பற்றி என்ன கூற முடியும்..
பதிவு செய்தவற்றை எம் ஆயுட்காலம் வரையாவது காப்பதே மிகப்பெரிய விடயமாகவுள்ளது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளிற்கும் மேலாக அழியாத வகையில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், உயிரோட்டத்தோடு காட்சிதந்து எம்மை அன்றைய யுகத்திற்கு அழைத்துச் செல்கின்றன அல்லவா?

ஆலயங்களில் காணப்படும் சிற்பங்கள் சொல்லும் கதைகள் தான் எம் வரலாற்றினதும், தத்துவங்களினதும் அருங்களஞ்சியமாகும்.

இந்து தொன்மவியலில் மனித இனக்குழுக்கள் பதினெட்டு வகையினராக காணப்படுகின்றனர். கணங்கள் என்றழைக்கப்படுவது இதனையே..
இவ் அத்தனை கணங்களின் அதபதியாக இருப்பதாலே ‘கணபதி’ என்கிற பெயர் முதற் கடவுளிற்கு உருவானது.

அபிதான சிந்தாமணி எனும் தமிழ் கலைக்களஞ்சியத்தில் இத்தகைய பதினெட்டு கணங்களை பற்றி பட்டியலிடப்பட்டுள்ளது.

அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், கந்தர்வர், இயக்கர் (யக்ஷர்), விஞ்ஞையர் (வித்யாதரர்), பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசியர், போகபூமியர் ஆகியனவே இப்பதினெட்டு கணங்களாகும்.

சிலர் பூலோக வாசிகள்; சிலர் மேல் லோக வாசிகள். சிலர் காற்றில் சஞ்சரிப்போர்.

ஒவ்வொரு கண மனிதர்களும் , உயிரினங்களும் வித்தியாசமானவைகள். இக்கால பார்வையில் இந்த உயர்திணை அஃறிணை கலப்பு விசித்திரமானது. இந்த பூமியில் நாம் வாழ்நாள் என்பது அதிகபட்சம் நூறு வருடங்களே. இக்காலத்திற்குள் எந்த ஒரு உயிரினங்களினதும் பரிணாம வளர்ச்சியை காண்பது என்பது சாத்தியமற்றது. ஆனால் இத்தகைய படிநிலைகள் பரிணாம வளர்ச்சியில் இருந்திருக்கக்கூடும் என்று ஆலய சிற்பங்களை உற்று நோக்கினால் ஊகிக்கலாம்.

சிங்க முகமும் மனித உடலும் கொண்டவர்கள் கிம்புருடர்கள் .

இடுப்பிற்கு கீழ் பறவை உருவமும், இடுப்பிற்கு மேல் மனித உருவமும் கொண்ட ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள் கின்னரர் என்பவர்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள் பௌத்த சமயத்திலும் உண்டு. கின்னரர்கள் ஆடற்கலையில் வல்லவர்கள். பௌத்த வழிபாட்டுத் தலங்களில் கூட கின்னரர்களின் உருவச்சிலைகளும், புடைப்புச் சிற்பங்களும், ஓவியங்களும் காணப்படுகின்றன.

தேவர்கள் தேவலோகத்தில் வசிக்கின்றார்கள். தேவலோகத்தில் தேவமங்கைகளின் நடனங்களை கண்டபடியும், சோமபானம் முதலிய பானங்களை அருந்தி மகிழ்வதாகவும் நம்பப்படுகிறது.

சித்தர்கள் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளைப் பெற்றவர்கள் ஆவர்.”சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள்.

சிவபெருமானுடைய சேவர்களாக கயிலை மலையில் இருப்பதாக சித்தரிக்கப்படுகிறார்கள் பூத கணங்கள். பூதகணங்கள் சிவபெருமானின் பல்வேறு வடிவங்களோடு இணைந்து வருகிறது.

சிவாலயங்களில் பூத கணங்கள் தனி வரிசையாக செதுக்கப்படுகின்றன. அவ்வாறு செதுக்கப்படும் பூத கணங்கள் குறும்பு செய்பவைகளாகவும், இசை கருவிகளை வாசித்து, நடனமாடுபவைகளாகவும் உள்ளன. சில சிவாலயங்களில் பூதங்கள் திருச்சுற்று சுவரின் மீது அமைக்கப்படுகின்றன.

அத்தகைய பூதகணம் ஒன்றே இதழின் முதற்படமாக இம்முறை பிரசுரமாயுள்ளது.

இத்தகைய பதினெட்டு கணங்களில் உள்ள அனைவரையும் ஆலய சிற்பங்களில் இன்றளவும் காண்கிறோம். இனி வருவோரும் காணலாம்..

வரலாற்று ஆய்வுகள் தொடங்குவதற்கு முற்பட்ட காலத்திலே இத்தகைய பதிவுகளை கல்லிலே செதுக்கி வைத்துள்ளனர் முன் வாழ்ந்தோர்..
வெறும் காகிதத்தில் பதிவு செய்யவில்லை என்று எம் உண்மைகளை ஏற்க மறுக்கும் மேற்குலகம் இதை எப்படி புரிந்து கொள்ளும்?

இவை யாவும் உண்மையாக இருந்தாலும் ஆச்சரியம்தான். கற்பனையாக இருந்தாலும் ஆச்சரியம்தான்.

Related posts

இந்து மாமன்ற முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டன் அவர்களின் நினைவேப் பேருரை சிறப்பாக நடைபெற்றது

Editor

இணையப் புனைவுகளால் உருவாகும் பேராபத்துக்கள்

Editor

இதழ் 94

Editor

Leave a Comment