இதழ் 95

உழைப்பின் பெருமை பேசும் தொழிலாளர் தினம்

மனித வாழ்க்கையின் அடிப்படை அஸ்திவாரம் உழைப்பாகும். மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உழைப்பின் அர்த்தத்தையும் அவசியத்தையும் உணர்ந்து கொண்டே இருக்கிறான். தனிமனித முன்னேற்றம் முதல் தேசிய வளர்ச்சி வரை அனைத்திற்கும் பின்னால் அமைதியாக செயல்படும் சக்தி தொழிலாளர்களின் உழைப்பே. இந்த உழைப்பை மதித்து, தொழிலாளர்களின் உரிமைகளை நினைவூட்டும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

தொழிலாளர் தினம் என்பது வெறும் ஒரு நாள்  நிகழ்வு அல்ல; அது உலக வரலாற்றில் உரிமைக்காக எழுந்த குரலின் நினைவுச்சின்னமாகும். 19ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சிக்குப் பின்னர் தொழிற்சாலைகள் வேகமாக வளர்ந்தன. ஆனால் தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் துயரமானதாக இருந்தது. நீண்ட நேர வேலை, குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற பணிச்சூழல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுரண்டல் போன்றவை அன்றாட நிலையாக இருந்தன.

1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் “எட்டு மணி வேலை, எட்டு மணி ஓய்வு, எட்டு மணி குடும்பத்திற்காக” என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டம் உலக தொழிலாளர் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பலர் உயிரிழந்தாலும், தொழிலாளர் உரிமைகள் உலகம் முழுவதும் பேசப்படத் தொடங்கின. அதன் நினைவாகவே மே 1 உலக தொழிலாளர் தினமாக அங்கீகரிக்கப்பட்டது.

ஒரு நாட்டின் உண்மையான செல்வம் அதன் தங்கச் சுரங்கங்களோ, உயரமான கட்டிடங்களோ அல்ல; உழைக்கும் மக்களின் கரங்களே அதன் உண்மையான செல்வம். விவசாயி விதைக்கும் விதை, கட்டுமானத் தொழிலாளி எழுப்பும் கட்டிடம், தொழிற்சாலைத் தொழிலாளி உருவாக்கும் பொருள், ஆசிரியர் அளிக்கும் அறிவு, மருத்துவர் காப்பாற்றும் உயிர் இவை அனைத்தும் சமூக வளர்ச்சியின் அஸ்திவாரங்களாகும்.

சமூகத்தில் உடல் உழைப்புக்கும் அறிவு உழைப்புக்கும் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும். ஆனால் பல சமயங்களில் உடல் உழைப்பை இகழும் மனப்பான்மை காணப்படுகிறது. இது மாற்றப்பட வேண்டிய ஒன்று. எந்த தொழிலும் இவ்வுலகில்  இழிவானதல்ல; உழைப்பில்லாத வாழ்க்கையே உண்மையான இழிவு.

இன்றைய உலகில் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் இன்னும் முற்றிலும் தீரவில்லை. குறைந்த சம்பளம், நிரந்தரமற்ற வேலை, மருத்துவ வசதியின்மை, ஓய்வூதிய பாதுகாப்பின்மை, பெண்தொழிலாளர்களின் பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை , உரிய சட்டப்பாதுகாப்பின்மை , நிச்சயமற்ற வேலை போன்றவை தொடர்ந்து காணப்படுகின்றன. குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இன்னும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கொரோனா காலத்தில் அநேகமான தொழிலாளர்கள் வேலை இழப்பு, வருமானக் குறைவு, உணவுப் பாதுகாப்பின்மை ,மருத்துவ வசதியின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

தொழிலாளர் உரிமைகள் மனித உரிமைகளின் ஒரு பகுதியாகும். நியாயமான சம்பளம், பாதுகாப்பான பணிச்சூழல், ஓய்வு நேரம், மருத்துவ பாதுகாப்பு, விடுமுறை, தொழிற்சங்க உரிமை போன்றவை ஒவ்வொரு தொழிலாளருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள். தொழிலாளியின் வியர்வை உலருவதற்கு முன் அவருக்குரிய கூலியை வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நெறி நம் சமூகத்தின் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாளர் தினத்தின் உண்மைப் பொருளை புரிந்துகொள்ள வேண்டும். உழைப்பின் மதிப்பு, தொழிலின் கண்ணியம், பிறர் உழைப்பை மதிக்கும் மனப்பான்மை ஆகியவை சிறுவயதிலிருந்தே வளர்க்கப்பட வேண்டும். துப்புரவு பணியாளர் முதல் விஞ்ஞானி வரை அனைவரும் சமுதாயத்திற்கு அவசியமானவர்கள் என்பதை உணர வேண்டும்.

தொழிலாளர் தினம் நமக்கு ஒரு பெரிய பாடத்தை கற்பிக்கிறது: உழைப்பை மதிக்காத சமூகம் முன்னேற முடியாது. தொழிலாளர்களின் நலனைக் காக்கும் சமூகமே உண்மையான நாகரிக சமூகமாகும். தொழிலாளர்களின் வியர்வை தான் உலகின் செழிப்பை உருவாக்குகின்றது.

எனவே, தொழிலாளர் தினம் என்பது ஒரு விடுமுறை நாள் அல்ல; அது நன்றியுணர்வின் நாள், சமூக நீதியின் நாள், சமத்துவத்தின் நாள். நாம் அனைவரும் தொழிலாளர்களை மதித்து, அவர்களின் உரிமைகளை காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சமத்துவமான நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.

உழைப்பை போற்றுவோம்; தொழிலாளியை உயர்த்துவோம்; சமத்துவமான சமூகத்தை உருவாக்குவோம் – இதுவே தொழிலாளர் தினத்தின் உண்மையான செய்தியாகும்.

Related posts

வருங்காலத் தலைமுறைக்கு ஒரு வறண்ட பூமியையா பரிசளிக்க போகிறோம்?

Editor

பக்தி பூர்வமாக நடைபெற்ற நல்லை குரு முதல்வர் குருபூசை தினம்

Editor

பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது துமி அமையம்

Editor

Leave a Comment