இதழ் 95

வருங்காலத் தலைமுறைக்கு ஒரு வறண்ட பூமியையா பரிசளிக்க போகிறோம்?

இலங்கையின் தற்போதைய வானிலை ஒரு சாதாரண பருவகால மாற்றமாகத் தெரிந்தாலும், அதன் பின்னணியில் ஒரு மாபெரும் இயற்கைச் சீற்றம் மெல்லத் தலைதூக்கி வருவதை ஆய்வாளர்கள் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவர்கள் இவ்விடயம் தொடர்பாக மக்களை தொடர்ச்சியாக விழிப்பூட்டிய வண்ணம் உள்ளார். அந்த விழிப்புணர்வு பதிவுகளை மீள வலியுறுத்துவதே துமியின் ஆசிரியர் பதிவின் நோக்கம்.

சூரியனின் நேரான கதிர்வீச்சு ஏப்ரல் இறுதிவரை நீடிக்கப்போகும் அதேவேளை, வளிமண்டலத்தின் சாரீரப்பதன் எண்பது சதவீதத்திற்கும் அதிகமாக நிலவுகின்றது. இது வெறும் வெக்கையை மட்டும் தராமல், மனித உயிருக்கும் விவசாயத்திற்கும் அவசியமான நீரை மிகவேகமாக வளிமண்டலத்திற்குள் உறிஞ்சி எடுத்து வருகின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில் பதிவாகி வரும் ஆவியாக்க அளவுகள் நம்மை அதிரச் செய்கின்றன. ஒரு நாளைக்கு நாற்பது மில்லிமீட்டருக்கும் அதிகமான நீர் ஆவியாவதென்பது, நமது தரைமேற்பரப்பு மற்றும் தரைக்கீழ் நீர்மட்டங்கள் சடுதியாகக் குறைவதற்கான மிகமுக்கிய அறிகுறியாகும். அவ்வப்போது பெய்யும் வெப்பச்சலன மழையானது இந்த இழப்பை ஈடுசெய்யப் போதுமானதாக இல்லை என்பதே கசப்பான உண்மை.

வரப்போகும் நாட்களில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ‘சூப்பர் எல்நினோ’ ஆகும். மே மாதம் முதல் ஆரம்பித்து 2027ஆம் ஆண்டு இறுதிவரை நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தோற்றப்பாடு, சமுத்திர வெப்பநிலையை வழமைக்கு மாறாக மூன்று முதல் ஐந்து பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கச் செய்யும் வல்லமை கொண்டது. ஐரோப்பிய வானிலை மாதிரிகளின் இந்த எதிர்வு கூறல்கள் உண்மையாகும் பட்சத்தில், இலங்கை வரலாறு காணாத வறட்சியைச் சந்திக்க நேரிடும். எல்நினோவின் தாக்கம் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகளின் இயல்பு நிலையைச் சிதைக்கக் கூடியது. சில நேரங்களில் இது எதிர்பாராத பெருவெள்ளத்தை ஏற்படுத்தினாலும், ஒட்டுமொத்தமாக நீர் பற்றாக்குறையையே ஒரு நிரந்தரச் சவாலாக மாற்றப்போகின்றது.

இயற்கையின் இந்த எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் நமது அன்றாட நீர் பயன்பாட்டு முறைமை மிகுந்த கவலையளிப்பதாகவே உள்ளது. வானிலை ஆய்வாளர்கள் பகல் பொழுதில் நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கோரிக்கை விடுத்தும், நடைமுறை யதார்த்தம் வேறாக உள்ளது. சுட்டெரிக்கும் மதிய வேளையில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதும், வீதிகளில் தூசி கிளம்பாமல் இருக்க அதிகப்படியான நீரைத் தெளிப்பதும், கிணறுகளை இறைத்துச் சுத்தப்படுத்துவதும் நமது நீர் இருப்பைத் தற்கொலைக்குச் சமமான நிலைக்குத் தள்ளி வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளின் போது நாம் பயன்படுத்தும் நீரை விட, ஆவியாகி வீணாகும் நீரின் அளவு மிக அதிகம் என்பதை மக்கள் உணராதது பெரும் பலவீனம்.

கோடை காலம் மார்ச் முதல் செப்டம்பர் வரை நீண்டிருப்பதாலும், அதன் உச்சகட்டம் ஜூலை மாதத்திலேயே ஏற்படப்போவதாலும், இன்று நம்மிடம் இருக்கும் சிறு அளவு நீரையே எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தற்போது நிலவும் கடும் வெப்பநிலை, அதிகரித்து வரும் ஆவியாக்கம், மே மாதம் உருவாகவுள்ள சூப்பர் எல்நினோ மற்றும் நிச்சயமற்ற பருவமழை ஆகிய நான்கு காரணிகளும் இணைந்து ஒரு மாபெரும் நீர் நெருக்கடியை நம் முன்னே நிறுத்தியுள்ளன.

இந்த இக்கட்டான சூழலில், அரசாங்கமும் பொதுமக்களும் கைகோர்த்துச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். நீர் வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பது இனி ஒரு தெரிவு அல்ல, அது நமது வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரே வழி. விழிப்புணர்வு என்பது வெறும் அறிக்கைகளோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு தனிமனிதனும் பகல் நேர நீர் பயன்பாட்டைக் குறைத்து, சேமிப்பைத் தன் கடமையாகக் கொள்ள வேண்டும். இல்லையேல், வருங்காலத் தலைமுறைக்கு ஒரு வறண்ட தேசத்தையும், தீராத தாகத்தையும் மட்டுமே விட்டுச் செல்லும் வரலாற்றுப் பிழையை நாம் செய்தவர்களாகிவிடுவோம். இயற்கையின் மாற்றங்களை உணர்ந்து, காலத்தே செயல்பட வேண்டிய தருணம் இதுவே.

Related posts

இதழ் 95

Editor

பெண்களின் முன்னேற்றம்: சவால்களும் சாதனைகளும்

Editor

இருபதாம் நூற்றாண்டில் கிரிக்கெட் கண்ட வளர்ச்சி

Editor

Leave a Comment