நம் நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களில் மிக முக்கியமானது, எரிபொருள் இறக்குமதிக்காக அரசு செலவிட வேண்டியுள்ள பெரும் தொகையாகும். உலக சந்தையில் எரிபொருள் விலை மாறுபாடுகளுக்கு மத்தியில், பெருமளவிலான அந்நியச் செலாவணியை இதற்காக ஒதுக்க வேண்டியிருப்பதால் அரசுக்கு பெரும் நிதி நட்டம் ஏற்படுகிறது. ஒருபுறம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் இந்த நட்டம் அமைந்திருந்தாலும், மறுபுறம் நாட்டின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த முரண்பாடான நிலைக்கு நாம் உடனடியாக தீர்வு காணாவிட்டால், அது நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

எரிபொருள் தேவை இவ்வளவு வேகமாக அதிகரிப்பதற்கு முதன்மைக் காரணம், வீதிகளில் பெருகிவரும் தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கையாகும். ஒவ்வொரு குடும்பமும் அல்லது தனிநபரும் சொந்தமாக மோட்டார் சைக்கிள்களையும் கார்களையும் பயன்படுத்துவது ஒரு கௌரவப் பிரச்சினையாகவும், அதேவேளை தவிர்க்க முடியாத தேவையாகவும் மாறியுள்ளது. இதற்கு நேர்மாறாக, நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. பேருந்துகளும் புகையிரதங்களும் முறையான நேர முகாமைத்துவம் இன்றியும், தூய்மையற்றதாகவும், வசதிகள் குறைந்ததாகவும் காணப்படுகின்றன. இந்தத் தரம் குறைந்த பொதுப் போக்குவரத்து முறையினால், நடுத்தர மற்றும் உயர் வருமானப் பிரிவினர் அதனைப் பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்க்கின்றனர். இதன் விளைவாக, தனிநபர் வாகனப் பயன்பாடு அதிகரித்து, வீதி நெரிசலும் எரிபொருள் விரயமும் பன்மடங்கு உயர்கிறது.
இந்தப் பிரச்சினைக்கு மிகச் சிறந்த மற்றொரு மாற்று வழியாக அமைவது எமது நாட்டில் இயற்கையாகவே கொட்டிக்கிடக்கும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களாகும். வருடம் முழுவதும் தாராளமாகக் கிடைக்கும் சூரிய ஒளி, கடலலை, நீர்வீழ்ச்சி, காற்று போன்ற இயற்கை வளங்கள் சூழ்ந்த நாடாக நம் நாடு இருந்தபோதிலும், இவற்றை நாம் ஆற்றலாக மாற்றிப் பயன்படுத்துவது மிகக் குறைவாகவே உள்ளது. தற்போதைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களின் மூலம் ஆங்காங்கே சூரிய சக்தி (Solar Power) மின்னுற்பத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் ஒரு பெரிய குறைபாடு நீடிக்கிறது. பகல் நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இரவு நேரப் பயன்பாட்டிற்காகவோ அல்லது அவசரத் தேவைகளுக்காகவோ சேமித்து வைப்பதற்கான முறையான, பெரிய அளவிலான மின்கல (Battery Storage) வசதிகள் நம்மிடம் இல்லை. இதனால், உற்பத்தி செய்யப்படும் தூய்மையான ஆற்றலைக் கூட நாம் வினைத்திறனுடன் பயன்படுத்த முடியாமல் வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமாயின், அரசு உடனடியாக சில தீர்க்கமான உத்திகளைக் கையாள வேண்டும். முதலாவதாக, எரிபொருள் தேவையை நேரடியாகக் குறைப்பதற்கு பொதுப் போக்குவரத்துத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். தூய்மையான, குளிர்சாதன வசதி கொண்ட, நவீன மற்றும் சரியான நேரத்திற்கு இயங்கக்கூடிய பேருந்து மற்றும் புகையிரதச் சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மட்டுமே தனிநபர் வாகனப் பயன்பாட்டாளர்களை பொதுப் போக்குவரத்தை நோக்கி ஈர்க்க முடியும். மின்சாரப் பேருந்துகளை (Electric Buses) இறக்குமதி செய்வதன் மூலம் எரிபொருள் இறக்குமதியை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.
அடுத்ததாக, புதுப்பிக்கத்தக்க சக்திப் பயன்பாட்டை வெறும் உற்பத்தியோடு நிறுத்தாமல், அதன் சேமிப்புத் திறனை மேம்படுத்துவதில் அரசு முதலீடுகளைச் செய்ய வேண்டும். சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தை பெரிய அளவில் சேமிக்கக்கூடிய நவீன ‘கிரிட்-லெவல்’ (Grid-level System) மின்கல சேமிப்பு நிலையங்களை நிறுவ வேண்டும். வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சூரியக் கலங்களை பொருத்துவதற்கு மானியங்களும், உபகரணங்களை இறக்குமதி செய்ய வரி விலக்குகளும் வழங்கப்பட வேண்டும். உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் சேமித்து, தேவைப்படும் போது விநியோகிக்கும் ‘நெட் மீற்றரிங்’ (Net Metering) முறையை மேலும் எளிமையாக்க வேண்டும்.

இறுதியாக, மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான உட்கட்டமைப்புகளை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும். ஆங்காங்கே விரைவு மின்சார மீள்நிரப்பு நிலையங்களை (Fast Charging Stations) அமைப்பதன் மூலமும், இந்த நிலையங்களுக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் வழங்குவதன் மூலமும் தூய்மையான பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நாம் நகர முடியும்.
சுருக்கமாகக் கூறின், எரிபொருள் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது என்பது தேவைகளை முடக்குவது அல்ல, மாறாக மாற்று வழிகளை நோக்கித் திறம்பட பயணிப்பதே ஆகும். தரமான பொதுப் போக்குவரத்து மற்றும் முறையான சேமிப்பு வசதிகளுடன் கூடிய புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய இரு தூண்களைப் பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே, அரசு தன் நட்டத்தைத் தவிர்த்து, நாட்டை ஒரு சுயசார்புப் பொருளாதாரப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். காலத்தின் கட்டாயமாக எழுந்துள்ள இந்த மாற்றத்திற்கு அரசும், பொதுமக்களும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய தருணம் இதுவே.
“வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.”
