இதழ் 96

சைவத்தமிழ் இலக்கிய பணியில்செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன்

-ஐ.வி.மகாசேனன்-

அறிமுகம்:


ஒரு மொழி மற்றும் பண்பாட்டு இருப்பிற்கு இலக்கிய உருவாக்கங்கள் அவசியமாகின்றது. இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடியாகவும் தலைமுறைகளுக்கான ஊடகமாகவும் செயலாற்றுகின்றது. புண்பாடு மற்றும் மொழிக்காக பணியாற்றும் பல போராளிகளின் கருவியாக இலக்கியங்கள் அமைந்துள்ளது. அத்தகைய கருவியை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஐயா அவர்களும்இ தன்னுடைய மொழி மற்றும் பண்பாட்டின் இருப்பை பேணி வளர்க்கும் பணியில் பயன்படுத்தி உள்ளார். திருமுருகன் ஐயா அவர்களினை சமயத் தலைவராக அவரது சொற்பொழிவுஇ ஆலய பரிபாலனம் மற்றும் ஆலய நிர்மானங்கள் போன்றவற்றினூடாக வரையறுக்கும் பொதுத் தன்மை காணப்படுகின்றது. ஈழத்தில் சைவ சமயப் பணி என்பது தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒருங்கிணைந்தது என்பது நிராகரிக்க முடியாத எதார்த்தமாகும். இலங்கையின் அரசியலில் தொடரும் ஆக்கிரமிப்புக்களும் அதனையே உறுதி செய்கின்றது.

இவ்ஒழுங்கிலே திருமுருகன் ஐயா அவர்கள் சைவ சமயத்தின் முகவரியில் தமிழன்னையை இலக்கியங்களால் அலங்கரிக்கும் கைங்கரியத்தை ஆற்றி வருகின்றார். இக்கட்டுரை எதிர்கால ஆய்வானர்களுக்கு புதிய தேடலுக்கான ஆய்வுப்பொருளை வழங்கக்கூடியதாகஇ செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஐயா அவர்களின் இலக்கியப் பணியை அடையாளங்காண்பதாகவும் தொகுப்பதாகவுமே உருவாக்கப்பட்டுள்ளது.


திருமுருகன் ஐயா அவர்கள் இதழாசிரியராகஇ நூலாசிரியாகஇ பதிப்பாசிரியராக மற்றும் இளம் தலைமுறைகளை இலக்கியப்பணியில் ஒருங்கிணைக்கும் வழிகாட்டியாகவும் பல பரிணாமங்களை இலக்கியப் பணிக்கு வழங்கி வருகின்றார். இதற்கான ஆரம்பத்தை யாழ். இந்துவின் மைந்தனாக அன்னை மடியில் பெற்றுள்ளார். 1978ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவனாக ‘யாழ்மதி’ எனும் கையெழுத்து பிரதியை வெளியிட்டிருந்தார். இவ்நடைமுறை இந்துவின் இளவல்களுக்கு தனித்துவமானது. இக்கட்டுரையாளர் 2005-2013 காலப்பகுதியில் யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற அனுபவத்திலும் சகாக்களின் கையெழுத்து பிரதி அனுபவங்கள் நிறைவாய் உள்ளது. இக்கட்டுரையை வெளியிடும் துமி அமையத்தின் உருவாக்கமும் அவ்வகையிலான ஒன்றின் தொடர்ச்சியாகவே அமைகின்றது. இது இந்துவின் மைந்தர்களின் அனுபவமாகும். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அன்னை மடியில் கிடைக்கப்பெற்ற கையெழுத்து பிரதி உருவாக்க அனுபவத்தை அத்திவாரமாய் கொண்டு திருமுருகன் ஐயா அவர்கள்இ ஏறத்தாழ ஐந்து தசாப்தங்கள் பல்வேறுபட்ட இதழ்களையும்இ நூல்களையும்இ ஆவணப் பெட்டகங்களையும் உருவாக்கியுள்ளார்.

இதழாசிரியர்:


ஆறு. திருமுருகன் ஐயா மூன்று சைவத்தமிழ் சஞ்சிகைகளில் இதழாசிரியராகவும் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் செயலாற்றி வருகின்றார். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆன்மீக இதழான ‘இந்து ஒளி’ ஆசிரியர் குழு உறுப்பினராகவும்இ தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மாதாந்த சஞ்சிகையான ‘அருள் ஒளி’ மற்றும் சிவபூமி அறக்கட்டளையின் மாதாந்த சஞ்சிகையான ‘சிவபூமி’ என்பவற்றின் இதழாசிரியராக உள்ளார். இதழாசிரியராக அவர் எழுதிவரும் ஆசிரியர் பதிவுகள் தொகுக்கப்பட வேண்டிய பெரும் தனிப்பெரும் இலக்கியமாகும். சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் ஆசிரியர் பதிவு மையமானதாகும். அது காலத்தை பிரதிபலிப்பதுடன்இ ஆசிரியர் எண்ணங்களில் சமூக மாற்றங்களுக்கான செய்தியாகவும் அமையக்கூடியதாகும். இவ்ஒழுங்கை திருமுருகன் ஐயா அவர்களின் இதழாசிரியர் பதிவுகளும் வெளிப்படுத்துகின்றது. இதழாசிரியராக சைவத்தமிழ் சமூக சூழலை வேறுபட்ட பரிமானங்களில் ஆசிரியர் பதிவுகளில் வழங்கி வருகின்றார்.


இந்து மாமன்றத்தின் இந்து ஒளி இதழானது 1996ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் காலாண்டிதழாக ஆரம்பிக்கப்பட்டது. இது ஏறத்தாழ நான்கு முதல் ஐந்து ஆளுமைகள் ஒன்றிணைந்த ஆசிரியர் குழுவாக வடிவமைக்கப்படுகின்றது. ஆறு. திருமுருகன் ஐயா அவர்கள் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவராகவும் யாழ் மாமன்ற இந்து ஆராய்ச்சி நிலைய கௌரவ இயக்குநருமாக நீண்டதொரு உறவுத்தொடர்ச்சியை இந்து மாமன்றத்துடன் பேணி வருகின்றார். இந்த வரிசையிலேயே 2012ஆம் ஆண்டு முதல் இந்து ஒளியின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் செயலாற்றுகின்றார். இந்து ஒளியின் முதலாவது இதழில் உருவாக்க நோக்கம் பற்றிய குறிப்பில்இ ‘….இலங்கை இந்து மாமன்றம் தன் தலைமையகக் கட்டிடத்தை பூர்த்தி செய்து கொண்ட பின்இ இந்நாட்டின் இந்து மக்களுக்குச் சமய அறிவைப் புகட்டும் வழியில் நல்லதொரு சஞ்சிகையை வெளியி வேண்டும் என விளைந்தோம். இந்து மக்களிடையே சமய அறிவை வளர்க்கவல்ல ஒளியாக இந்து ஒளி விநாயகப்பெருமானின் திருவருளுடன் ஏற்றப்படுகின்றது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்உருவாக்க நோக்கத்தை பாதுகாக்கும் வகையிலேயே சமகாலம் வரையில் இந்து ஒளி இதழ் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. அதனொரு பகுதியாக ஆசிரியர் குழுவில் ஆறு. திருமுருகன் ஐயா பணியாற்றுகின்றார் என்பதோடுஇ சிறப்பிதழ்களில் அதற்குரிய முக்கியத்துவத்தை தமது அனுபவங்களினை இளைய தலைமுறைக்கு சைவத் தமிழர்களுக்கும் வழங்கும் வகையில் கட்டுரைகளையும் எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அருள் ஒளிஇ தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான மாதாந்த சஞ்சிகையாக 2002ஆம் ஆண்டு ஆவணி திருவோணம் முதல் வெளிவருகின்றது. அருள் ஒளியின் முதல் இதழ் தொடக்கம் அன்னை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் ஆசியுடன் ஆறு. திருமுருகன் ஐயா ஆசிரியராக செயற்பட்டு வருகின்றார். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பல அறப்பணி வரிசைகளில் ஒன்றாகவேஇ மக்களுக்கு ஆன்மீக கருத்துக்களை எடுத்துரைக்கும் பணியை அருள் ஒளி நிறைவேற்றி வருகின்றது. கடந்த இரண்டு தசாப்தங்களாக அருள் ஒளி இதழின் ஆசிரியர் பதிவுஇ சைவ சமயத்தை வெறுமனவே ஆகம நெறிமுறைகளுக்குள்ளும் சைவசித்தாந்தம் மற்றும் வேதங்கள் எனும் இலக்கியங்களுக்குள்ளும் சுருக்காது சைவ சமூகத்தின் எதார்த்தங்களை பிரதிபலிப்பதாகவே அமைந்து வருகின்றது. இது சமயத்தை சமூகத்துடன் இணைக்கும் பெரும் செயலாற்றுகின்றது. அருள் ஒளி இதழின் முதலாம் ஆண்டு நிறைவு மலரின் ஆசிரியர் பதிவில்இ ‘இந்துமதம் பற்றி ஏராளமான நூல்கள் இதுவரை வெளிவந்த போதிலும் இன்று வாழும் மனிதன் கற்றுணரக்கூடிய நூல்கள் வெளிவருவது மிகக்குறைவு. எனவே யதார்த்த உலகிற்குப் பொருத்தமான வாழ்வியலுக்கு உகந்த ஆன்மீக செய்திகளை வெளியிட வேண்டுமென அருளொளி ஆதங்கம் கொள்கின்றது. புராண நூல்களில் காணப்படும் அரிய கருத்துக்களை இன்றைய சமூகம் விளங்கிக் கொள்ளத்தக்க வகையில் புதுமையாய் வழங்க வேண்டியது ஆக்கவியலாளரின் கட்டாய கடனாகும்’ எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்ஆதங்கத்தை அருள் ஒளியின் ஆசிரியர் பதிவினூடாக ஆறு. திருமுருகன் ஐயா செவ்வனவே நிறைவேற்றி வருகின்றார். அறநெறிப் பாடசாலைகளின் தேவைப்பாடுஇ இயற்கை வழிபாட்டின் முக்கியத்துவம்இ நிறுவன ரீதியாக சைவ சமயத்தை பாதுகாத்தல்இ ஆலயங்களில் கேளீக்கைகள் என்ற போர்வையில் அதிகரித்தும் வரும் பண்பாட்டு சிதைவுகளுக்கு எதிரான அறச்சீற்றம் என அருள் ஒளியின் ஆசிரியர் பதிவுகள் சமுக எதார்த்தத்துடன் சமயத்தை இணைப்பதாக இருந்து வருகின்றது.


2018ஆம் ஆண்டு பங்குனி மாதம் முதல் சிவபூமி அறக்கட்டளையினால் ‘சிவபூமி’ மாதாந்த செய்திப் பத்திரிகை வெளியிடப்படுகின்றது. இவ் மாதந்த பத்திரிகை இந்து சமயம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகள்இ கவிதைகள்; ஆலய உற்சவங்கள் மற்றும் நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட செய்திகள்இ படங்கள்; இந்துக்களின் விசேட தினங்கள் தொடர்பான சிறப்புக் கட்டுரைகள்; சிவபூமி அறக்கட்டளை செயற்பாடுகள் தொடர்பான செய்திகள் என பரந்துபட்ட அடிப்படையில் சைவத்தமிழ் செய்திகளின் தொகுப்பை கொண்டுள்ளது. இதன் ஆசிரியராகவும் சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகரும் தலைவருமான ஆறு. திருமுருகன் ஐயா செயற்பட்டு வருகின்றார். சிவபூமி அறக்கட்டளையின் மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியர் பதிவுகள் தமிழ் சமூகத்தின் நிறை குறைகளின் பிரதிமைகளை காலத்தின் கண்ணாடியாக வெளிப்படுத்தி வருகின்றது. குறிப்பாக விவசாயப் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டிய தேவைப்பாடு தறிகெட்டு செல்லும் இளையோர் புனர்வாழ்வின் தேவைப்பாடுஇ வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வீழ்ச்சியடையும் பொதுப்பரீட்சை பெறுபேறுகளை சீர்செய்வதற்கான ஆலோசனைகள் என்ற வடிவத்தில் சிவபூமி இதழின் ஆசிரியர் பதிவுகள் அமைகின்றது. முழுமையாக ஆறு. திருமுருகன் ஐயாவின் சமூகம் சார்ந்த அக்கறையும் சமூக மாற்றத்திற்கான செய்திகளும் சிவபூமி மாதாந்த பத்திரிகையின் ஆசிரியர் பதிவில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 2021ஆம் ஆண்டு மார்ச் சிவபூமி பத்திரிகையில் ‘நிலங்களை வெற்றிடயங்களாக விடாதீர்கள்’ எனும் தலைப்பிலான ஆசிரியர் பதிவில்இ ‘போருக்கு பின்னர் பாவனை இழந்த நிலங்கள் இராணுவ பயன்பாட்டுக்கு உட்படும் நெருக்கடியையும்இ அதனை சீர்செய்ய குறைந்தபட்சம் உறவினர்களுக்கும் நிலமற்றவர்களுக்கும் குத்தகைக்காவது காணியை பகிர்வது பொருத்தமானது’ எனும் ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.


கல்லூரி ஆசிரியராகவும்இ அதிபராகவும் மற்றும் தேசங்கள் திரியும் சொற்பொழிவாளராகவும் பல்பரிமாண அனுபவங்களின் தொகுப்பு இதழாசிரியர் பதிவுகளையும் இதழ் கட்டமைப்பையும் செழுமைப்படுத்துகின்றது. சமீப கால முதிர்ச்சி சமூகப் பிறள்வுகள் மற்றும் அசமந்தங்களுக்கு எதிரான அறச்சீற்றத்தையும் இதழாசிரியராக பதிவு செய்து வருகின்றார். எழுத்தாளர்கள் சில சந்தர்ப்பங்களில் விமர்சகர்களாய் மாத்திரம் செயலாற்றி சென்றுவிடுவதுண்டு. குறைகளை விமர்சிக்கையில் மாற்றுத்தீர்வை பரிந்துரைப்பதில்லை என்பது எழுத்தாளர்கள் மீதான குறையாகவும் காணப்படுகின்றது. எனினும் திருமுருகன் ஐயா அவர்களுடைய அனுபவ விரிவும் முதிர்ச்சியும் ஆசிரியர் பதிவுகளை நிறைவு செய்கின்றது. சமூக பிறழ்வுகளை கண்டு வேதனைப்படும் ஆசிரியர் பதிவுகளில் அதனை களைவதற்கான முன்யோசனைகளையும் வழங்கி வருகின்றார்.

நூலாசிரியர்:
ஆறு. திருமுருகன் ஐயா நூலாசிரியராகவும் சைவத் தமிழ் பணிக்கான நூல்கள் பல உருவாக்கி தந்துள்ளார். நூலாசிரியராக ஆவணப்படுத்தல்களுக்கே முக்கியத்துவம் அளித்து வந்துள்ளார். தமிழ் மக்களிடம் மிகவும் பலவீனமானதொரு பகுதியாகவும் இவ்ஆவணப்படுத்தலே காணப்படுகின்றது. ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடிகள்’ என தமிழர்கள் தம் வரலாற்றை விழிப்பதுண்டு. இன்று விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள பலவற்றையும் சைவத் தமிழ் இலக்கியங்களும் மரபுகளும் என்றோ இயல்பாக்கி உள்ளது. எனினும் அறிவியலை மேற்கு சார்ந்திருப்பதும்இ நாகரீகத்தை மேற்கிலிருந்து ஒப்பிடுவதும் தமிழர் தம் வரலாற்றை சீராக ஆவணப்படுத்த தவறியதன் விளைவாகவே அமைகின்றது. ஈழத்தில் தமிழர்கள் தம் இருப்புக்காக போராடுவதும் ஒரு வகையில் வரலாற்றில் மூதாதையர் தம் வரலாற்றை சரியாக ஆவணப்படுத்த தவறியதன் பேறாகவே காணப்படுகின்றது. இவ்அனுபவங்களின் வெளிப்பாடுதானோ ஆறு. திருமுருகன் ஐயாவின் நூல்கள் ஆவணப்படுத்தல் எனும் மையக் கருவில் ஒருங்கிணைகின்றன.


2003ஆம் ஆண்டு சீர் இணுவில் திருவூரில் இயங்கும் சிவகாமி அறநெறிப் பாடசாலையின் ஆறாம் ஆண்டு நிறைவு நினைவாய் வெளியிடப்பட்ட ‘அறநெறிக் களஞ்சியம்’ என்ற நூலின் ஆசிரியராய் ஆறு. திருமுருகன் ஐயா செயற்பட்டுள்ளார். இந்நூல்இ 21 கல்விமான்கள் அறிஞர்களின் சைவத்தமிழ் வாழ்வியல் மற்றும் இணுவில் பண்பாட்டியல் தொடர்பான பெறுமதியான கட்டுரைகளையும்இ இணுவில் சிவகாமி அன்னையின் பெருமைகள் பற்றி மகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் அவர்களால் இயற்றப்பட்ட 51 கீர்த்தனைகளையும் உள்ளடக்கிய சைவத்தமிழை போற்றும் நூலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் வாசிப்பினூடாக அறச்சிந்தனைகளையும்இ ஆன்மீகக்கருத்துக்களையும்இ இணுவைத் திருவூர் சைவமரபின் மாண்பையும் அறியக்கூடியதாக அமையும் என்ற செய்தியை வெளியீட்டுரையில் ஆறு. திருமுருகன் ஐயா வழங்கியுள்ளார். இந்நூலினை சிவகாமி அறநெறிப் பாடசாலையை ஆற்றுப்படுத்தும் இணுவில் சைவத் திருநெறிக் கழகம் வெளியீடு செய்துள்ளது.
ஆறு. திருமுருகன் ஐயா அவர்களை பின்தொடர்பவர்கள்இ ஐயாவின் சொற்பொழிவுகள் மற்றும் உரைகள் பதிவுசெய்யப்பட்டு ஆவணப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றார்கள். ஒரு சில உரைகள் ஆரம்ப காலங்களில் ஐயாவின் அன்பர்களால் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. சமகால இணைய உலகில் வலையொளிகளில் (லுழரவுரடிந) செறிந்து காணப்படுகின்றது. துமி அமையமும் ஒரு சில காணொளிகளை வலையொளியில் சேமித்துள்ளது. அவ்வாறே ஒரு பயண அனுபவமும் நூலாக்கம் பெற்றுள்ளது.

2004ஆம் ஆண்டு ஆறு. திருமுருகன் ஐயாவின் அமெரிக்க பயண அனுபவம்இ ‘அமெரிக்காவை நோக்கிய ஆன்மீகப் பயணம்’ என்ற தலைப்பில் 2005 ஜனவரியில் பதிப்பு பெற்றுள்ளது. இப்பதிப்பு முயற்சியும் ஐயா மீது அளவற்ற அன்பு கொண்டோரின் தூண்டுதலும் முயற்சியும் என்பதை முகவுரையில் பதிவு செய்துள்ளார். அமெரிக்காவின் சிக்காக்கோ மாநகரில் உரையாற்றல் என்பது சைவ உலகில் பெரும் வரலாற்றின் மகிழ்வை தரக்கூடியதாகும். 1893ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோவில் ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கதாகும். ஆறு. திருமுருகன் ஐயாவின் தனிப்பட்ட வாழ்விலும் அமெரிக்க பயணம்இ அமெரிக்க அழைப்பு என்பது நிராகரிக்கப்பட்ட இடமொன்றில் கௌரவம் பெறும் மகிழ்வாகும். அம்மகிழ்வு அமெரிக்காவை நோக்கிய ஆன்மிகப் பயணக் கட்டுரையில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. உதயன் பத்திரிகையில் எழுதப்பட்ட கட்டுரையே ஆறு. திருமுருகன் ஐயாவின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அன்பரின் பிடிவாதத்தில் நூலாக்கம் பெற்றது. பின்னர் 2007ஆம் ஆண்டு ஆறு. திருமுருகன் ஐயாவின் வெளிநாட்டு சொற்பொழிவொன்று ஆங்கில நூல் வடிவத்தை பெற்றது.

2000ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய சிட்னி முருகன் ஆலயத்தில் ஆறு. திருமுருகன் ஐயா வழங்கிய சொற்பொழிவுஇ 2007ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் நூலாக சிவபூமி அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ளது. ‘Aaru Thirumurugan’s Spiritual Lectures on Life and Philosophy’ என்னும் தலைப்பில் அந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

இலக்கிய சுவைக்காக அதற்குரிய பாண்டித்திய இலக்கணங்களில் வகுக்கப்பட்ட திருமுறைகளையும்இ திருமந்திரத்தையும் இலகுமொழியில் மக்கள் வாழ்வியலுடன் சுவாரஸ்யமாக சொல்லக்கூடிய திறனை ஆறு. திருமுருகன் ஐயா கொண்டுள்ளார். அவ்எளிமை அவரது உரையின் எழுத்து வடிவிலும் செழுமை பெறுகின்றது. அதனை மொழிபெயர்ப்பாளரும் சரியாக உள்வாங்கியே நேர்த்தியாக செய்துள்ளார். பாடல்களை அதற்குரிய வீரியமான தமிழிழேயே குறிப்பிட்டுஇ விளக்கத்திற்கு ஆங்கில மொழிபெயர்ப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலின் உள்ளடக்கம் திருமுறை மற்றும் திருமந்திரம் கூறும் வாழ்க்கை தத்துவங்களை விபரிக்கிறது. மேலும் மூன்றாவது அத்தியாயத்தில் சைவ சமய வாழ்வை அறத்துடன் வாழின் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற செய்தியையும் வழங்குகின்றது. இந்நூல் ஆங்கில மொழிபெயர்ப்பு என்பதால் புலம்பெயர் தேசங்களில் மொழியை இழந்து வாழும் ஈழத்தின் அடுத்த தலைமுறைக்கு சமய வாழ்வின் நன்மையை புரிந்து கொள்ள பயனுடையதாக அமைகிறது.


சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் முதலாவது குருபூசை தின வெளியீடாக 2009ஆம் ஆண்டுஇ ‘தெய்வத்திருமகளின் வாழ்வும் பணிகளும்’ எனும் தலைப்பிலான புத்தகத்தை அகில இலங்கை இந்து மாமன்றம் வெளியீடு செய்தது. இப்புத்தகத்தின் தொகுப்பு ஆசிரியர்களாக அகில இலங்கை இந்து மாமன்ற செயலாளர் கந்தையா நீலகண்டன் ஐயா அவர்களுடன் இணைந்து அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஐயா அவர்களும் செயற்பட்டுள்ளார்கள். அன்னை சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சைவத்தமிழ் உலகின் பெரும் பொக்கிஷம் என்பதை கடந்துஇ ஆறு. திருமுருகன் ஐயா அவர்களுக்கு ஞானக்குருவாகவும் ஞான அன்னையாகவும் செயற்பட்டு இருந்தார்கள் என விழிப்பது பொருத்தமானதாக அமையும். அவ்ஞான அன்னையை ஆவணப்படுத்தும் ஓர் நூலுருவாக்கத்துக்கும் ஆறு. திருமுருகன் ஐயாவே பொருத்தமானவர். ஆதலாலேயே அகில இலங்கை இந்து மாமன்றமும் அன்னையின் குருபூசை மலருக்கான தொகுப்பாசிரியராக ஐயாவை பிரதானமாக தேர்ந்தெடுத்தும் உள்ளது. அக்கடமையை அவரும் செழுமையாக நிறைவேற்றி உள்ளமையை நூலின் உள்ளடக்கங்கள் உறுதி செய்கின்றது.

சிவத்தமிழ்ச்செல்வியின் பன்முகப் பணிகள் பல ஆளுமைகளின் பார்வைகளில் ஊடாக தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆலய வழிபாட்டு நெறிமுறை வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சி ஆதரவற்றோருக்கான தாய்க் கருணைஇ அறப்பணியின் மேன்மைஇ ஆசிரியப்பணிஇ சர்வதேச அங்கீகாரம் என பல்நோக்கு கண்ணோட்டத்திலான கட்டுரைகள் சிவத்தமிழ்ச்செல்வியின் வரலாற்றை முழுமையாக கட்டமைத்துள்ளது. மேலும் சிவத்தமிழ்ச்செல்வியின் வரலாற்றை காட்சிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பும் நூலின் முழுமைத் தன்மையை உருவாக்கியுள்ளது. வரலாறு படைத்த ஒரு தெய்வீக அன்னையின் வரலாற்றை ஒரு நூலில் அடைத்து விட முடியாது என்பதே எதார்த்தமாகும். ஆன்னை சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தொடர்பில் பல நூல்கள் உருவாகி உள்ளன. உருவாக்கம் பெறுகின்றன. 2025ஆம் ஆண்டு அன்னையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘தங்க தமிழ்’ எனும் தலைப்பில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவஸ்தானத்தால் மலர் வெளியிடப்பட்டது. இந்நூலின் ஆசிரியராகவும் ஆறு. திருமுருகன் ஐயாவே செயற்பட்டுள்ளார். இந்நூல் நூற்றாண்டில் அன்னையின் மகிமை போற்றும் கல்வியாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளையும்இ நூற்றாண்டில் அன்னையின் எழுத்துக்களும் தொகுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். சிவத்தமிழ்ச்செல்வின் அறக்கருத்துக்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானது என்பதையே அத்தொகுப்பு விளக்க முற்படுகின்றது. ஞான அன்னைக்கான நூலுருவாக்கத்தில் ஆறு. திருமுருகன் ஐயாவின் அர்ப்பணிப்பு ஒரு படி அதிகரிக்கின்றமை நூல்களின் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அன்னை சிவத்தமிழ்ச் செல்வியை போற்றி பல நூல்கள் உருவாகியுள்ள போதிலும்இ ஆறு. திருமுருகன் ஐயா ஆசிரியராக உருவாக்கியுள்ள ‘தெய்வத்திருமகளின் வாழ்வும் பணியும்’ மற்றும் ‘தங்கள தமிழ்’ ஆகிய நூல்கள் தனி நிலையை பெறுகின்றன.


சைவத்தமிழ் அறிஞர்களை பொறுத்தவரை ஈழத்தில் பெரும் பற்றாக்குறையாகவே காணப்படுகின்றது. போர் தின்ற பூமி என்ற நிலையில் அறிஞர்களும் ஆற்றலாளர்களும் நலிந்து போயுள்ளது. செயற்படும் ஒருசிலரிடமே கோரிக்கைகளும் குவிகின்றது. அதுமாத்திரமின்றி செய்பவரிடமே எதிர்பார்ப்பும் காணப்படும். அத்தகைய எதிர்பார்ப்புக்களில் ஒப்படைக்கப்படும் பணியைஇ ஆறு. திருமுருகன் ஐயா இறையாசியுடன் செழுமையாகவும் நிறைவேற்றிக் கொள்கின்றார். 2016ஆம் ஆண்டு நாவலரை இன்றைய தலைமுறைக்கு அறியவைக்கும் இந்து சமய காலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முயற்சியில் ‘சைவத்தமிழர்களின் கலங்கரை விளக்கம்’ எனும் நூல் உருவாக்கம் இடம்பெற்றது. இந்நூலுக்கான ஆசிரியர் பணியை திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஆறு. திருமுருகன் ஐயா நிறைவேற்றி உள்ளார். ஆறுமுக நாவலர் சைவமும் தமிழும் காலனித்துவ நெருக்கடியில் இன்னல்களை எதிர்கொண்ட காலப்பகுதியில் தோன்றினார். தனது நாவன்மையாலும் எழுத்தாலும் சைவத்துக்கும் தமிழுக்கும் நாவலர் பெருமான் புத்துயிர் அளித்தார். பலரும் ஆறு. திருமுருகன் ஐயாவின் பணியை நவீன நாவலர் என்ற அடைமொழியில் விழிக்கும் நிலையில்இ திணைக்களமும் பொருத்தமானவரிடமே பொறுப்பான பணியை ஒப்படைத்துள்ளார்கள்.


ஆறு. திருமுருகன் ஐயாவின் நூலாசிரியர் பணியில் ஆவண பெட்டகம் கணதியானதும் ஈழத் தமிழர் வரலாற்றில் முக்கியமானதாகவும் காணப்படுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா ஒரு குறிப்பில்இ ‘செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களது சேவைகள் அளப்பரியன. திருக்கேதீச்சரத்தலத்தின் இலக்கியப் பெட்டகம்இ ஆவணப் பெட்டகம் என்பன நடமாடும் தகவல் களஞ்சியத்தின் உரைகற்களாகும். சிவபூமி அறக்கட்டளையினூடாக ஆற்றிவரும் சேவைகள் பழைமைசார் மரபுகளை அழியாப்பெருமையோடு பாதுகாக்கும் பணிகளாகும்’ எனச் சிறப்பித்துள்ளார். இது நிதர்சனமாகும். 2022ஆம் ஆண்டு ‘திருக்கேதீச்சரம்: ஆவணப் பெட்டகம்’ எனும் நூலும் 2023ஆம் ஆண்டு ‘திருக்கேதீச்சரம்: இலக்கிய பெட்டகம்’ எனும் நூலும் ஆறு. திருமுருகன் ஐயா அவர்களினால் வெளியீடு செய்யப்பட்டது. ‘திருக்கேதீச்சரம்: ஆவணப் பெட்டகம்’ எனும் நூல் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீச்சரம் ஆலயத்தின் நீண்டகால வரலாறுஇ தொல்லியல் சான்றுகள் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை ஒரு தொகுப்பில் ஆவணப்படுத்தும் ஒரு முக்கிய நூலாகும். ‘திருக்கேதீச்சரம்: இலக்கிய பெட்டகம்’ எனும் நூல் இலங்கையில் பாடல் பெற்ற தலமான திருக்கேதீச்சரத்தின் சிறப்பை இலக்கிய வழியே எடுத்துரைக்கும் சைவ இலக்கியங்களின் தொகுப்பை ஆவணப்படுத்தும் நூலாகவும் அமைகிறது. மன்னார் மாதோட்ட நகர்இ இலங்கை எனும் சிவபூமியில் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான திருக்கேதீச்சர நாதன் உறையும் பூமியாக அமைகிறது. எனினும் சமகாலத்தில் ஈழ அரசியல் சமூக முரண்பாட்டு சூழலில்இ திருக்கேதீச்சர வரலாறு மறக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு சூழலில் வாய்வீச்சுக்களை கடந்துஇ செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆறு. திருமுருகன் ஐயாஇ திருக்கேதீச்சர சிறப்பையும் முக்கியத்துவத்தையும் தொண்மையையும் ஆவணமாக தலைமுறைகளின் பார்வைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் வரலாற்று ஆவணத்திற்கானதொரு ஆவண பெட்டகத்தையும் இலக்கிய ஆவணத்திற்கானதொரு ஆவண பெட்டகத்தையும் நூல் வடிவில் உருவாக்கி தந்துள்ளார். 19ஆம் நூற்றாண்டில் நல்லை நகர் நாவலர் ‘தேன் பொந்து ஒன்று உள்ளது’ என்ற செய்தியூடாக காடாகிக் கிடந்த திருக்கேதீச்சர மீட்சியை ஏற்படுத்தினார்.

21ஆம் நூற்றாண்டில் செஞ்சொற்செல்வர் ‘’ஆவணப் பெட்டக நூல்கள்’ உருவாக்கத்தினூடாக வரலாற்று தொன்மை சிறப்பு மறக்கப்படும் திருக்கேதீச்சர ஆவண மீட்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்நூல்களை வெளியீடு செய்த தமிழியற் கழகம் வெளியீட்டுரையில்இ ‘காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப சமுதாயத்தின் தேவைகளை உணர்ந்துஇ வேறு எவராலும் செய்தற்கரிய சேவைகளைச் செய்து வருபவரான கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள்இ ஆவணப்படுத்தலின் தேவையையும் நன்கு உணர்ந்தவர்’ என விழித்துள்ளார். அவ்விழிப்பின் பொருத்தப்பாடு காலங்கருதி திருக்கேதீச்சரத்திற்கான ஆவணப்பெட்டகம் உருவாக்க ஏற்பட்ட சிந்தனையும்இ அவ்ஆவணப் பெட்டக நூல்களின் முக்கியத்துவமும் உறுதி செய்கிறது.


நூல்கள் புதிய அறிவை வழங்குவதுடன்இ புதிய தேடல்களுக்கான அடித்தளமாகவும் அமைய வேண்டும். 2025ஆம் ஆண்டு இறுதியில் ஆறு. திருமுருகன் ஐயாவால் வெளியிடப்பட்ட ‘கர்மயோகி: லேடி இராமநாதன்’ எனும் நூல்இ லேடி இராமநாதன் பற்றிய புதிய பார்வையை வழங்கியது. இந்நூலை வாசிக்கையில்இ ஒருவகையில் இந்தியாவில் அன்னை திரேசா கொண்டாடப்படுவது போன்று ஈழத்தில் லேடி இராமநாதன் கொண்டாடப்பட வேண்டியவர் என்ற எண்ணம் உருவாக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய நாட்டுப் பெண்மணி ஆர்.எல்.ஹரிசன் சைவத்தமிழ்ப் பண்பாட்டினை வளம் சேர்க்கும் வகையில் நெற்றியிலே திருநீறும்இ கழுத்தினிலே உருத்திராக்கமும் அணிந்துஇ மெல்லிய மஞ்சள் நிற ஆடையுடன் திருவாளர் இராமநாதன் பணியை காவினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்இ சேர். பொன் இராமநாதனால் நிறுவபப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி வளாகத்தில் உருவாக்கப்பட்டதை நினைவு கூர்ந்துஇ வருடந்தோறும் லேடி இராமநாதனின் நினைவுப் பேருரை ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றது. எனினும் லேடி இராமநாதன் வரலாறு மற்றும் பெருமைகள் சரியாக தொகுக்கப்பட்ட பதிவுகளை கண்டறிய முடியவில்லை. திருவாளர் இராமநாதன் புகழில் லேடி இராமநாதன் ஒளி வீசப்படுவதாகவே பொதுப்பார்வையில் அறிய முடிகின்றது. எனினும் ‘கர்மயோகி: லேடி இராமநாதன்’ எனும் நூல் திருவாளர் இராமநாதன் மீதான ஒளி வீச்சில் லேடி இராமநாதனின் பிரதான பங்களிப்பு சுட்டிகாட்டப்பட்டுள்ளது. இது ஆய்வு மாணவர்களுக்கு எதிர்கால ஆய்வுக்கான ஒரு தலைப்பை வழங்குவதாகவே உணரக்கூடியதாக உள்ளது. இந்நூலுருவாக்கம் ஆறு. திருமுருகன் ஐயாவின் அனுபவத்தையும்இ ஐயாவின் ஆழமான மனிதத் தொடர்புகளையும் இனங்காட்டுகிறது. இணுவில் இராமநாதன் கல்லூரியில் லேடி இராமநாதன் அதிபராக செயற்பட்ட காலத்தில் சிறுமியாக கல்வி கற்ற ஒருவர்இ பின்னாளில் முதுமையில் ஆறு. திருமுருகன் ஐயாவின் முதியோர் இல்லத்தில் இறுதி காலத்தை கழித்திருந்தார். அவ்அம்மையார் லேடி இராமநாதனின் முக்கியத்துவம் தொடர்பில் ஆறு. திருமுருகன் ஐயாவுடன் நிறைய உரையாடியுள்ளார். இதுவே இந்நூலுருவாக்கத்திற்கான ஆதாரமாக அமைந்தது. இந்நூல் எதிர்கால ஆய்வுக்கு ஒரு அடித்தளமாக அமைகிறது.


நூலாசிரியராக ஆறு திருமுருகன் ஐயாவின் பணிஇ சைவத் தமிழ் இலக்கிய உலகில் ஆவணப்படுத்தலுக்கான ஊடகமாக புத்தகத்தை பயன்படுத்தியுள்ளார். வரலாற்றை ஆவணப்படுத்தலுக்கான தேவைப்பாட்டை நன்கு உணர்ந்தவராகவே தனது சிவபூமி அறக்கட்டறையின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி வருகின்றார். யாழ்ப்பாண நுழைவாயிலில் நாவற்குழியில் உருவாக்கப்பட்டுள்ள அரும்பொருட்காட்சியகம் முதல் ஆலயங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திருவாசக அரண்மனை மற்றும் திருமந்திர அரண்மனைகள் தொட்டு திருக்குறளுக்கான வளாகம் வரையில் அதனையே உறுதி செய்கின்றது. இப்பணியின் தன்மையிலேயே இலக்கியத்தையும் ஆவணப்படுத்தலுக்கான ஊடகமாக கொண்டு நூலாசிரியராக ஆறு. திருமுருகன் ஐயா அவர்களின் நூலுருவாக்கங்கள் அமைந்துள்ளது. அமைந்து கொண்டுள்ளது.

பதிப்பாசிரியர்:


வரலாற்றை ஆவணப்படுத்தஇ தொலைந்து செல்லும் பொக்கிசங்களை பாதுகாப்பதிலும் ஆறு. திருமுருகன் ஐயாவின் பங்களிப்பு உயர்வானதாகும். ஐயாவுடன் அண்மைய காலங்களில் பயணிக்க இக்கட்டுரையாளருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவின் திருச்செந்தூரில் வருடாந்த கந்தசஷ்டி கால சொற்பொழிவுக்கு சென்ற வேளைஇ சமூகவலைத்தளத்தில் (Facebook) பார்த்த செய்தியை கொண்டு ஈழத்தமிழ் மூதாதையர் ஒருவரின் பண்டைய நூலைத் தேடி அலைந்ததை பார்க்கக்கூடியதாக இருந்தது. அதுமாத்திரமின்றி யாழ்ப்பாணம் நகரில் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களை சேகரிக்கும் களஞ்சியப்படுத்தும் வளாக உருவாக்க முயற்சி ஒன்றிலும் ஈடுபட்டு வருகின்றார். வெறுமனவே நிறுவன உருவாக்கத்தில் மாத்திரமின்றி இலக்கிய மீள்பதிப்பிலும் அழியும் இலக்கியங்களையும்இ தொலையும் தொன்மைகளையும் பாதுகாக்கும் பதிப்பாசிரியராகவும் ஆறு. திருமுருகன் ஐயாவின் இலக்கியப் பணி அமைகின்றது.
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாக சபைத் தலைவராக சைவ இலக்கிய பதிப்பில் ஆறு. திருமுருகன் ஐயா அதீத ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

பன்னிரு திருமுறைகள்இ கந்தபுராணம்இ திருவிளையாடற் புராணம் மற்றும் திருவாதவூரடிகள் புராணம் ஆகியன தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தால் பதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது. இது ஆழமான மற்றும் அவசியமான சைவப் பணியாகும். 21ஆம் நூற்றாண்டின் இராண்டாம் தசாப்தத்தில் ஆலயங்கள் பல்கிப் பெருகியுள்ளன. எனினும் தேவாரங்கள் அறிந்து உணர்ந்த படிக்கக்கூடியவர்களோ குறைந்து சென்றுவிட்டது. பல ஆலயங்களிலும் பதிவு செய்யப்பட்ட ஒலிக்கோர்வைகளிலேயே தேவாரங்கள் இசைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆலயங்கள் தோறும் திருமுறைகளை நூலாக பாதுகாக்கக்கூடிய வகையில்இ கொண்டு சேர்க்கும் பணியை ஆறு. திருமுருகன் ஐயா தலைமையில் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் செயற்படுத்துவது சிறப்புக்குரிய விடயமாகும். மேலும் அன்னை சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் ஆற்றிய கந்தபுராண சிறப்பு சொற்பொழிவின் மூன்றாம் பதிப்பு ஆறு. திருமுருகன் ஐயா பதிப்பாசிரியராக ‘கந்தபுராணச் சொற்பொழிவுகள்’ எனும் தலைப்பில் 2025ஆம் ஆண்டு அன்னையின் நூற்றாண்டு விழா நிறைவாக வெளியிடப்பட்டது. இதன் முதல் பதிப்பு 1975ஆம் ஆண்டும் இரண்டாம் பதிப்பு 2000ஆம் ஆண்டும் வெளியிடப்பட்டது. இந்நூல் வெளியீட்டையும் ஸ்ரீ தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாகசபையே மேற்கொண்டுள்ளது.
சைவ சித்தாந்த சமூகமயமாக்க செயற்பாடுகளில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர்களாய் ஈழத்து அறிஞர்களே அறியப்படுகிறார்கள். அத்தகைய அறிஞர்களுல் வடகோவை விநாசிதம்பி வேலுப்பிள்ளை அவர்களும் குறிப்பிடத்தக்க நிலை பெறுகின்றார். நாவலர் மரபின் நீட்சியாக சைவ சித்தாந்தக் கருத்துக்களை எளிமைப்படுத்தி விளக்கும் முயற்சியில் முன்னின்று செயற்பட்ட ஈழத்தவர்களுள் வேலுப்பிள்ளையும் குறிப்பிடத்தக்கவர். இவர் சைவ சித்தாந்தம் சார்பாக பல்வேறு நூல்களை ஆக்கியுள்ளமையை அறிய முடிகின்றதாயினும் சித்தாந்த சைவ சங்கிரகம் என்னும் இந்நூலே இன்று கிடைக்கப்பெறுகின்றது. இவரது வரலாறும் எழுதிய நூல்கள் பற்றிய தகவல்களும் அரிதாகவே காணப்படுகின்றது. ஈழத்தமிழர் தொலைத்த தொன்மைச் சிறப்புகளில் ஒன்றாகவே வேலுப்பிள்ளை அவர்களின் வரலாறு அமைகிறது. ஆயினும் வடகோவை விநாசிதம்பி வேலுப்பிள்ளையின் இலக்கியங்களை தேடிப்பெற்று மீள்பதிப்பினூடாக பாதுகாக்கும் முயற்சியில் ஆறு. திருமுருகன் ஐயா ஈடுபட்டுள்ளார்.

ஒருவகையில் வேலுப்பிள்ளை அவர்களின் பேரன் முறையுடையராகவும் ஆறு. திருமுருகன் ஐயா காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. தேடலில் வேலுப்பிள்ளை அவர்களின் நான்கு இலக்கியங்களை ஆறு. திருமுருகன் ஐயா பதிப்பாசிரியராக மீள்பதிப்பு செய்துள்ளார். ஒன்றுஇ ‘சித்தாந்த சைவ சங்கிரகம்’ எனும் நூலினைப் பெற்று 115 ஆண்டுகளின் பின்னர் மீள்பதிப்பும் செய்துள்ளார். இரண்டுஇ வேலுப்பிள்ளை அவர்களின் புலமைத்துவத்தின் இன்னொரு வெளிப்பாடான ‘முப்பானூற் சுருக்கம்’ மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அறிஞர்களுள் திருக்குறளுக்கு முதன் முதல் சிறந்த பொழிப்புரை எழுதி முப்பானூற் சுருக்கம் என்ற பெயரில் வெளியிட்டவர் இவரே என அறியப்படுகிறது. மூன்றுஇ ‘திருத்தில்லை நிரோட்டக யமக அந்தாதி’ (1891) மீள்பதிப்பு பெற்றுள்ளது. இவ்அந்தாதி இந்தியாவின் சிதம்பரம் மீது பாடப்பெற்றதாக காணப்படுகிறது. நூன்குஇ அண்மையில் வி.வேலுப்பிள்ளை அவர்களின் மற்றொரு புராதனமான சைவத்தமிழ் இலக்கியமான ‘பரானந்த தற்பரமாலை’ என்ற நூலும் ஆறு. திருமுருகன் ஐயாவால் மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது.


மேலும்இ திருவண்ணாமலை ஆதீனத்திற்கு கச்சியப்ப முனிவர் அருளிச்செய்த ‘தணிகைப்புராணமும் மூலமும்’ 1899ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இணுவில் பொ. அம்பிகைபாக உபாத்தியர் புத்துரை வழங்கி நூல் வெளியிட்டுள்ளார். ஏறத்தாழ 120 வருடங்களுக்கு பிறகு ஆறு. திருமுருகன் ஐயா 2023ஆம் ஆண்டு மீள்பதிப்பு செய்துள்ளார். நாவலர் பெருமான் மீது அன்பு கொண்ட உபாத்தியர்இ நாவலரின் வேண்டுதலில் இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலை ஆரம்பித்தார். இப்பாடசாலை சுதேசிகளால் உருவாக்கப்பட்ட இரண்டாவது பாடசாலை என்ற சிறப்பை பெறுகின்றது. சமகாலத்தில் இணுவில் இந்துக் கல்லூரி என்ற பெயரில் இயங்குகின்றது. இணுவில் இந்துக் கல்லூரியில் பொ. அம்பிகைபாக உபாத்தியர் திருவுருவச் சிலை திறப்புவிழா நினைவாகவேஇ ஆறு. திருமுருகன் ஐயாவால் தணிகைப்புராண புத்துரை நூல் நூற்றாண்டு இடைவெளியில் மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நூல் மிக அரியதாகும். ஒரே ஒரு நூல் உபாத்தியரின் குடும்ப மரபில் வந்தவர்கள் பாதுகாத்து வந்த நிலையிலேயேஇ திருமுருகன் ஐயா மீள்மதிப்பினூடாக அதன் நிலைப்பையும்இ வாசகர்களுக்கான பரவுகையையும் உறுதி செய்துள்ளார். இறுதிப் பகுதி சில சிதைவடைந்துள்ளதுடன்இ கிடைக்கப்பெற்றவையையே மீள்பதிப்பு செய்துள்ளதுடன்இ மிகுதி செல்லுக்கு இரையாகி விட்டது என்ற ஆதங்கத்தையும் பதிப்பாசிரியர் திருமுருகன் ஐயா நூலில் பதிவு செய்துள்ளார்.


ஆறு. திருமுருகன் ஐயாவின் பதிப்பாசிரியர் பணி செல்லுக்கு இரையாக காத்திருந்த இலக்கியங்களுக்கும்இ வரலாற்றில் மறக்கப்பட்ட பெருமைசார் இலக்கியங்களுக்கும் புத்துயிர் அளிப்பதாக அமையப் பெற்றுள்ளது. இன்றும் பலர் வீடுகளில் அறியாது பல அரிய இலக்கியங்கள் செல்லுக்கு இரையாகும் சூழலில் காணப்படலாம். இதை பொருத்தமானவர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் அதன் இருப்பை பாதுகாப்பதனுடன் இன்றைய தலைமுறைக்கு கடந்த கால இலக்கியவாதிகளின் உன்னதமான படைப்புகளின் மேன்மையையும் கொண்டு செல்லக் கூடியதாக அமையும். அந்தப் பணியையே பதிப்பாசிரியராக ஆறு. திருமுருகன் ஐயா செய்து வருகின்றார். சிவபூமி பதிப்பகம் என்பதையும் நிலையான நிறுவனமாக நிறுவி வைத்துள்ளார். ஆரம்பத்தில் சிவபூமி சஞ்சிகை மற்றும் ஒரு சில நூல்களிள் பதிப்புக்கள் சிவபூமி பதிப்பகத்தாலேயே மேற்கொள்ளப்பபட்டது. எனினும் சிவபூமி அறக்கட்டளையில் அதிகரிக்கும் நிறுவனங்களும் பொறுப்புகளும் ஏற்படுத்தியுள்ள பொருளாதார சுமையால் சிவபூமி பதிப்பகம் தொடர்ச்சி தன்மையை பெற முடியவில்லை. எனினும் ஆறு. திருமுருகன் ஐயா பதிப்பாசிரியராக இடையறாத செயற்பாட்டை கொண்டுள்ளார்.

இளந்தலைமுறைக்கான வழிகாட்டி:
தலைமுறைகளை வளர்த்தல் என்பது சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிக முக்கியமான பணியாகும். எனினும் ஈழத் தமிழ் சமூகத்தில் தலைமுறைகளை வளர்த்தல் என்பது விமர்சனத்திற்குரியதாகவே அமைகின்றது. அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை தலைமுறை இடைவெளியும்இ எதிர்கால தலைமுறைகளை வளர்க்காமை பாரிய சவாலாக இருக்கின்றது. எனினும் தேசாந்திரியாக பல் நாட்டு பயணங்களும்இ பல் மனிதர் தொடர்புகளும்இ நிறைவான வாசிப்புக்களும் ஒன்றிணைந்த முதிர்ச்சியின் அனுபவத்தில் ஆறு. திருமுருகன் ஐயா தனது எதிர்கால தலைமுறைகளை வளர்ப்பதில் நுணுக்கமான பார்வையும் அக்கறையும் கொண்டவராக காணப்படுகின்றார். சமூக வலைத்தள யுகத்தில் இளையோர் பெரியோரை நாடுவதும்இ பெரியோரை பின்தொடர்வதும் வெகுவாகவே குறைந்துள்ளது. நாடும் இளையோருக்கு நல்ல வழிகாட்டியாக ஆறு. திருமுருகன் ஐயா இருந்துள்ளார் என்தை இக்கட்டுரையாளர் பயனாளியாக உறுதிபடக் கூறலாம். இலக்கியப்பணியில் ஆசிரியராக தான் நடைபோடுவது மாத்திரமின்றா இளையோருக்கான வழிகாட்டியாக எதிர்கால தலைமுறையையும் ஆறு. திருமுருகன் ஐயா கைபிடித்து நடை பழக்கின்றார்.


ஆறு. திருமுருகன் ஐயா ஆசிரியராக வெளியீடு செய்யும் அருள் ஒளி மற்றும் சிவபூமி இதழ்களில் அடுத்த தலைமுறையினரையும் இணை இதழாசிரியராக தன்னோடு இணைத்து செல்வது பெரிய பண்பாகும். இவ்இதழ்களில் பொறியியலாளர் ச.சந்தோசன் இணை ஆசிரியராக செயற்படுகின்றார். அவ்வாறே அண்மைக்கால சிவபூமியின் சிறப்பிதழ் வெளியீடுகளில் தன்னோடு பொறியியலாளர் ச.சந்தோசன் மற்றும் டெல்லி பல்கலைக்கழக கலாநிதிப் பட்ட ஆய்வு மாணவன் ஐ.வி.மகாசேனனையும் இணை ஆசிரியராக வழிகாட்டி இணைத்து செல்கின்றார். சிவபூமியின் சிறப்பு வெளியீடுகளான ‘சிவபூமி திருவாசக அரண்மனைஇ திருவாசக அரங்க மண்டபம் திறப்பு விழா சிறப்பு மலர்’; ‘நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குருபூசை சிறப்பிதழ்’ போன்றவற்றில் ச.சந்தோசன் மற்றும் ஐ.வி.மகாசேனன் இருவரையும் இணை ஆசிரியர்களாக பயிற்றுவித்துள்ளார்.


மேலும் ஆறு. திருமுருகன் ஐயாவின் இலக்கியப் பணி முகத்தை அடையாளப்படுத்தும் கட்டுரையை வெளியிடும் துமி அமையத்தின் இலக்கிய செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தவராகவும்இ தொடர்ந்து ஆர்வலராகவும் ஊக்குவிப்பாளராகவும் ஆறு. திருமுருகன் ஐயா காணப்படுகின்றார். 2016ஆம் ஆண்டு துமி அமையத்தின் ஆரம்பம் ஆவணக் காணொளி உருவாக்கமே அமைகின்றது. பின்னாளில் சிறிதாக அறப்பணிகளிலும் ஈடுபடுகின்றது. கொரோனா முடக்கத்திலேயே மின்னிதழ் யுக துரித வளர்ச்சியில் ஏற்பட்ட ஆர்வம்இ 2020ஆம் ஆண்டு முதல் ‘துமி மின்னிதழ்’ இளையோரின் ஆக்கங்களை தொகுத்து வரும் இலத்திரனியல் சஞ்சிகை உருவாகியது. இதன் முதல் வெளியீடு கொரோனா முடக்க காலத்தில் திருவாசக அரண்மனையில் ஆறு. திருமுருகன் ஐயாவால் வெளியிடப்பட்டது. இன்று வரை 90களை தாண்டிய இதழ் வெளியிடப்பட்டுள்ளது. தனது வேலைப்பளுவிற்குள்ளும் துமி மின்னிதழ் பற்றிய கருத்துக்களையும் ஊக்குவிப்புக்களையும் தொடர்ந்து மின்னிதழ் ஆசிரியருக்கு கூறி வருகின்றார். இப்பின்புலத்திலேயே ஆறு. திருமுருகன் ஐயாவின் இலக்கிய பணியை முழுமையான ஆய்வுக்கான தலைப்பாக ஆய்வாளர்களிடையே திறந்து விட வேண்டும் என்ற விருப்பில் இக்கட்டுரையும் உருவாக்கப்பட்டுள்ளது.

Related posts

வைபவ் சூரியவன்ஷி எனும் சூறாவளி

Editor

இலங்கை மகளிர் அணியில் மன்னார் வீராங்கனை சஜிந்தினி

Editor

சிறகுகள் முளைக்கும் சிகரங்கள்.விசேட தேவையுடைய மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலம்

Editor

Leave a Comment