யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பிறந்தநாள் அறநிதியச் சபையினால் நடத்தப்படும் “இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது – 2026” வழங்கும் வைபவம் எதிர்வரும் 2026 மே 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
அன்று காலை 9.00 மணிக்கு ஆலய வழிபாட்டுடன் ஆரம்பமாகும் இவ்விழாவில், காலை 9.10 மணிக்கு மங்கல விளக்கேற்றலும், அதனைத் தொடர்ந்து 9.15 மணிக்கு திருமுறை பாராயணமும் இடம்பெறவுள்ளன. ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் செயலாளர் திரு. இ. இராதாகிருஷ்ணா (J.P) வரவேற்புரையினை நிகழ்த்த, ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சு. செந்தில்ராஜக் குருக்கள் மற்றும் நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் தலைமையுரையும், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை விரிவுரையாளர் திரு. சி. குணசீலன் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெறவுள்ளன.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் திரு. க. தேவகாந்தன் தம்பதியினரும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் த. திருவரன் தம்பதியினரும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
காலை 10.30 மணியளவில் கல்வி மற்றும் சமூகம் சார்ந்த விசேட கௌரவிப்பு நிகழ்வுகள் அரங்கேறவுள்ளன. அந்தவகையில், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவன் செல்வன். தெய்வவேந்திரன் திருக்குமரன் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான புகழ்பெற்ற “இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது – 2026” வழங்கும் பிரதான நிகழ்வு நடைபெறும். ஆற்றலாளர் அறிமுக உரையைத் தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான விருது பெறுநர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இரு முக்கிய ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.


இலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் (LEARN) பிரதம நிறைவேற்று அதிகாரியும் (CEO), பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தின் கணினி பொறியியல் துறைப் பேராசிரியருமான ரொஷான் G. ராகல் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் பேராசிரியரும் சிறப்பு வைத்திய நிபுணருமான சிவலிங்கராஜா ரகுராமன் ஆகிய இருவருக்கே இந்த உயரிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
நிகழ்வின் நிறைவாக முற்பகல் 11.45 மணிக்கு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் உப செயலாளர் பொறியியலாளர் ச. சந்தோஷன் அவர்களின் நன்றியுரை இடம்பெறும். தொடர்ந்து நண்பகல் 12.00 மணிக்கு வருகை தந்த அனைவருக்கும் மதிய போசனம் வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் ஆன்மீகப் பெரியோர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் அன்போடு கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
