இதழ் 97

இலங்கையில் ஆரியமும் பௌத்தமும்

சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் முழுக்க முழுக்க செல்வாக்குச் செலுத்தியவர்கள் பெரும்பான்மையினமாகக் காணப்பட்ட சிங்களவர்கள் ஆகும். சிங்களவர் என்ற இனத்தின் பிரதான தனித்துவ மதமாக பௌத்த சமயமும் சுதந்திர இலங்கையில் திகழ்ந்தது. மேலும் இலங்கை அரசியல் ஜனநாயக முறையாக்கப்பட்டு அரசியலமைப்புத் திட்டங்களினூடே சுதந்திரத்திற்குப் பின்னர் நகர்த்தப்பட்டது. அந்த அடிப்படையில் முழுச் சுதந்திரம் பெற்றதன் பின் பிரித்தானிய அரசின் தலையீடு முற்றுமுழுதாக இல்லாமல் உருவாக்கப்பட்ட முதல் யாப்பு 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பாகும். (பாசில், 2020)
இவ்வாறு உருவாக்கப்பட்ட இவ்வரசியல் யாப்பானது, சிங்களவர்களையும் அவர்களின் மதமான பௌத்த சமயத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே உருவாக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு யாப்பின் 3ஆம் அத்தியாயம் 7ஆம் சரத்து இலங்கையின் அரசகரும மொழி சிங்களம் எனக் கூறுகிறது. இதற்கு முன்னர் 1956இல் சிங்கள மொழி அரசகரும மொழியாக இருந்தாலும் அது பாராளுமன்ற சட்டமாகவே இருந்தது. அத்தோடு இவ்வரசியல் யாப்பின் 2ஆம் அத்தியாயத்தில் பௌத்த மதம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் “இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு வழங்க வேண்டும் என்பதுடன் அதனைப் பேணிப் பாதுகாத்து வளர்த்தல் அரசின் கடமையாகும்” எனக் குறிப்பிடுகின்றது. இதன் மூலம் பௌத்த மதம் அரச மதம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. (பாசில், 2020)

இவ்வரசியல் யாப்பு இலங்கையில் ஆரிய வழி வந்த சிங்கள இனம், அதனூடே பிரதிநிதித்துவப்படுத்தி தனித்துவ மதமாக அடையாளப்படுத்தப்படும் பௌத்த மதம், அவற்றின் வழியாக கையளிக்கப்படும் அரசியல் ஆட்சியுரிமை என்ற அடிப்படையில் இலங்கை வரலாற்றின் ஆட்சி திகழ்வதை எடுத்துக்காட்டுகிறது.
மற்றும் பௌத்த மதப் பண்பாடுகள் இலங்கை வரலாற்றில் தனித்துவமாக அடையாளப்படுத்தப்படுவதை இலங்கையின் 1978ஆம் ஆண்டின் 2ஆம் குடியரசு யாப்பினூடாகவும் தெளிவுபடுத்திக் காட்டலாம். 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 4ஆவது அத்தியாயம் பௌத்த மதம் பற்றிக் குறிப்பிடுகின்றது. (யோதிலிங்கம். 2013) இதன்படி இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


ஆகவே அரசியல் யாப்புக்கள் இலங்கையின் அரசியல் ஒழுங்கை பெரும்பான்மையினமான சிங்கள இனத்தையும், அவர்களின் பௌத்த மதத்தையும் மையப்படுத்தி இவற்றிற்கு முதன்மையிடம் வழங்கி கட்டமைத்திருப்பது. இலங்கையரசின் வரலாற்று ஆரம்பத்தை மகாநாம தேரர் ஆரிய வருகையையும், பௌத்த தோற்றத்தையும், குறிப்பாக மகாவம்சத்தின் முதல் அத்தியாயம் புத்தரின் இலங்கை வருகையுடன் ஆரம்பிக்கப்படுகிறது. 6ஆம் அத்தியாயம் ஆரிய வருகை மற்றும் புத்த மதத்தின் தோற்றத்திற்கான அறிகுறியை வெளிப்படுத்தியது. அதேபோல சுதந்திரம் பெற்ற பின்னரான புதிய இலங்கையில் அரசியல் யாப்புக்கள் ஆரிய வழிவந்த இனத்தையும், பௌத்த மதத்தையும் முதன்மைப்படுத்தி அவற்றின் ஆதரவுடனான இலங்கை தேசத்தை வடிவமைத்திருப்பது தெளிவாக ஆரியக்கோட்பாட்டின் செல்வாக்குடன் பௌத்தம் நிலை பெற்றிருப்பதைத் தெட்டத்தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
இலங்கையின் வரலாற்றைக் கூறும் முதலாம் தர மூலாதாரமான மகாவம்சத்தின் 37 அத்தியாயங்களும் ஆரியர் வருகையுடன் ஆரம்பித்து பௌத்த மதத் தோற்றத்தைப் பற்றிய விடயங்களை எடுத்துக் கூறுவதுடன் நூலின் முழுப்பகுதியும் சிங்கள மன்னர்களைப் பற்றியும் குறிப்பாக மகாவம்சத்தின் நாயகனான துட்டகைமுனுவைச் சிறப்பித்துக் கூறுவதும் ஆரியத்தோடு ஒருமித்த பௌத்தப் பண்பாடு எழுச்சி பெற்றிருப்பதை நிறுவுகிறது.
குறிப்பாக மகாவம்சத்தின் முதல் அத்தியாயம் புத்தர் வருகையுடன் ஆரம்பிக்கப்பட்டிருப்பது இலங்கைத் தீவின் வரலாற்றில் புத்தமதம் இன்றியமையாதது என்பதை நிறுவுகிறது. (சங்கரன், 1962) மற்றும் இலங்கையில் “ஆரியர்” குடியேறிய நிகழ்ச்சியுடன் வரலாறு ஆரம்பித்தது என்ற கருத்து பேராசிரியர் பரணவிதான இலங்கை வரலாறு பற்றி எழுதும் முன்னரே நிலவிய ஒரு கருத்தாகும். எனினும் அக்கருத்துக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பேராசிரியர் எழுதிய “யுசலயn ளுநவவடநஅநவெள : வுhந ளுinhயடநளந” என்ற அத்தியாயம் அமைந்தது. இவற்றைத் தொடர்ந்து வந்த இளம் வரலாற்றாசிரியர்கள் இக்கருத்தை மையப்படுத்தியே இலங்கை வரலாற்றைக் கட்டமைத்து வந்துள்ளனர். (இந்திரபாலா, 2006)
இவ்வாறு புராதன காலம் தொடக்கம் தற்காலம் வரை ஆரியக் கோட்பாடு என்ற அடித்தளத்திலிருந்தே பௌத்த மதப் பண்பாடுகள் வளர்த்தெடுக்கப்பட்டு வந்துள்ளன. இக்கருத்துநிலை இலங்கை வரலாற்றின் பழம்பெரும் மூலாதாரமான மகாவம்சம் உறுதிப்படுத்துவதோடு இலங்கையின் பல்வேறு வரலாற்றாசிரியர்களும் இக்கருத்தை மையமாக வைத்தே இலங்கை வரலாற்றைக் கட்டமைத்துள்ளனர் என்பதிலிருந்து தெளிவாகின்றது.


மற்றும் இந்த ஆரியக் கோட்பாட்டின் செல்வாக்கு உலகரங்கில் குறிப்பாக ஜெர்மனியில் முன்னிறுத்தப்பட்டிருந்தது. இலங்கையில் மகாவம்சம் ஆரியர்களைத் தனித்துவமாக வரலாற்றில் நிறுவி ஆரியக் கோட்பாட்டினை இலங்கை வரலாற்றில் தோற்றுவித்து அதனோடு பௌத்த மதப் பண்பாடுகள் இணைக்கப்பட்டு எவ்வாறு ஒரு தனித்துவம் வெளிப்படுத்தப்பட்டதோ. அதேபோல 1933ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் ஜெர்மனியைப் பலப்படுத்த ஆரியக் கோட்பாட்டையே எடுத்துக்கொண்டார். இதற்கு ஹிட்லரின் மெயின் காம்பின் “என்னுடைய போர்” என்ற நூல் தக்க சான்றாகும்.


ஏனெனில் இந் நூலில் ஆரியக் கோட்பாட்டில் எவ்வாறு ஆரியர்களும், அவர்கள் வழிவந்த சிங்களவர் பின்பற்றிய பௌத்த மதமும் தனித்துவமாக நிறுவப்படுகின்றதோ அதே அம்சங்களைக் கொண்ட கருத்து நிலை இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாட்டின் பெருமை அதன் மக்களுடைய குலப்பெருமையைப் பற்றியது. அப்படிப் பார்த்தால் ஜெர்மனியர் மட்டுமே கலப்பில்லாதவர்கள் என்றார் ஹிட்லர். இதனால் ஜெர்மனியில் வேற்றினத்தவருக்கு இடமில்லை. ஹிட்லருடைய ஆட்சிக்காலத்தில் அங்கு வாழ்ந்த யூத குல மக்கள் ஜெர்மனியின் தனித்துவம் கருதி நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். (ஆரோக்கியசாமி. 1961) இவ்வம்சங்கள் ஹிட்லரின் நாசிசவாதக் கோட்பாட்டில் ஆரியக் கோட்பாட்டின் செல்வாக்கை எடுத்தியம்புகிறது. இவ்வாறு உலகரங்கில் தனித்துவமான இனம், தனித்துவமான மதம், தனித்துவப் பண்பாடு என்பதை நிறுவ ஆரியக்கோட்பாட்டம்சங்கள் கைக்கொள்ளப்பட்ட விதத்தை அடிக்கோடிட்டுக் காட்டலாம்.
இப்படியாக இலங்கை வரலாற்றில் பௌத்த எழுச்சியின் மூலமாக குறிப்பிடப்படும் ஆரியம் பௌத்த எழுச்சிக்கு அடிகோலினாலும் இந்தக் கோட்பாடும் அதனோடு இணைந்த பௌத்தமும் சமகாலப்பகுதியில் பௌத்தமயமாக்கலையே இலங்கையில் வெளிப்படுத்தி வருகின்றன. இதனால் இலங்கையில் ஏனைய மதப்பண்பாடுகள், கலை மரபுகள் சிதைவடைந்து வருவதோடு அவற்றை வெளிக்கொணர்வதற்காக எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாமலேயே காணப்படுகின்றன.


குறிப்பாக பௌத்த மதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இந்து மதமே இந்நாட்டு மக்களின் மதமாக விளங்கியுள்ளது. (குணராசா, 1996) மேலும் இலங்கையில் விஜயன் குழுவினர் இலங்கை வரும் முன்னரே இலங்கையில் நாகரிகத்தில் முன்னேறிய ஒரு மக்கட் கூட்டமும், பண்டைய வாழ்க்கை முறையைக் கைக்கொண்டு வாழ்ந்த ஒரு மக்கட் கூட்டமும் வாழ்ந்து வந்துள்ளன. (குணராசா, பார்க்க) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் “பகைவராக வந்த சிங்களவர், ஓரளவு நாகரிகமடைந்திருந்த மக்கள் வசத்தில் இந்த நாடு இருந்ததைக் கண்டனர்” என பார்க்கர் என்பவர் தன் “புராதன இலங்கை” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். (Pயசமநசஇ 1909) இவற்றின் அடிப்படையில் இலங்கையில் விஜயன் வருகை அதாவது ஆரியர் வருகையின் முன்னர் ஒரு நாகரிகமடைந்த இனம் இருந்துள்ளதுடன், இந்து சமயப் பண்பாடுகளுக்கான தடயங்களும் காணப்படுவதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும் ஆரியக் கோட்பாடும், அதனோடு இணைந்த பௌத்தமும் இலங்கை வரலாற்றை ஆக்கிரமித்து காணப்படுகின்றமையால் இவற்றின் மீதான இவற்றைப் பலப்படுத்தும் ஆய்வுகளே இன்றளவும் மேற்கொள்ளப்படுகின்றன என்று குறிப்பிடலாம். குறிப்பாக இன்றைய இலங்கையில் சமகாலத்தில் பௌத்தமயமாக்கல் தமிழர் செறிந்து அதிகமாக வாழும் வடஇலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக தையிட்டி விகாரை விவகாரம், குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் பகுதிகளில் அமைக்கப்பட்ட விகாரை என்பன இலங்கை முழுவதும் பௌத்தப் பண்பாடுகள் தனித்துவமாக நிறுவப்படுவதற்கான முயற்சிகளாகக் குறிப்பிடலாம். இதனால் தான் இன்றளவிலும் வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்து ஆலயங்கள், இந்து விக்கிரகங்கள் என்பவை பாதுகாக்கப்படாமல் அழிவுறும் நிலையில் காணப்படுகின்றன. இதற்குச் சான்றாக பூநகரி மண்ணித்தலை சிவாலயம் இன்றளவும் அழிவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இது இந்து கட்டிடக்கலை பாரம்பரியத்தை அறிந்துகொள்ள உதவும் ஒரு கட்டிடக் கலையம்சமாகும். (கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மையின் மூலகங்கள்) குறிப்பாக பண்டைய இந்துப் பண்பாட்டின் கலைச்சிறப்பையும், பெருமையையும் வெளிப்படுத்தி நிற்பதில் கற்பக்கிரகத்தில் மேலமைந்த விமானம் முக்கிய பங்கு வகிக்கின்றது. மற்றும் இதன் கற்பக்கிரகம் பொழிந்த சிறிய முருகைக்கற்களையும், கடலிலிருந்து எடுக்கப்பட்ட கற்களையும் கொண்டு சுதையினால் கட்டப்பட்டுள்ளன. கற்பக்கிரக சுவாசப் பகுதி மட்டும் ஒரே நீளமாக அமைந்த முருகைக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. (பாலசுப்ரமணியம், 1965) மற்றும் இவ் ஆலயக்கலை மரபின் மற்றொரு சிறப்பு அதன் அடித்தளம் மற்றும் கோமுகி அமைப்புக்கள் ஆகும். தொழிநுட்ப வேலைப்பாட்டைக் கொண்ட இக்கோமுகி, வைரமான வெள்ளை முருகைக்கல்லில் அப்படியே லிங்க வடிவத்தை பிரதிபண்ணி அதன் நுனிப்பாகம் சற்று கீழ் நோக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. (சிவசாமி, 1975) இவ்வாறு பல கலைத்துவ அம்சங்களைக் கொண்ட ஆலயம் இன்றளவும் அழிவடைந்த நிலையில் காணப்படுவது, ஆரியமும் பௌத்தமும் பிற பண்பாட்டம்சங்களை நலிவுறச் செய்துள்ளன என்றே குறிப்பிட முடியும்.


மேலும் பொலநறுவையில் சோழர்காலத்தில் அமைக்கப்பட்ட கோயில்களும் இந்துப் பண்பாட்டின் கலைத்துவத்தை வெளிப்படுத்துவதாகவே இன்றளவும் காணப்படுகின்றன. இதுவரை பொலநறுவை இராசதானியில் 14 இந்துக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவற்றுள் 2ஆம் சிவ தேவாலயம் சோழர் காலக் கட்டிடக்கலையில் உன்னத வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பொலநறுவையிலுள்ள இந்துக் கோயில்களும் சிறந்த கோயிலாகவும் காணப்படுகின்றது. (பத்மநாதன். 2000) இவ்வாறு இந்துக் கட்டிடக்கலையம்சங்களை வெளிப்படுத்தும் பல கலைப் பொக்கிஷங்கள் இலங்கையில் காணப்பட்டாலும் இன்றளவிலும் பெரும்பான்மையினரான சிங்களச் சமூகத்தின் ஆட்சி அதிகாரத்துடன் இணைந்த பௌத்த சமயமயமாக்கல் ஏனைய மதப் பண்பாடுகள், கலையம்சங்களை மழுங்கடிக்கின்றன என்று குறிப்பிட்டுக் காட்ட முடியும். இவ்வாறு புராதன காலம் தொட்டு இன்றுவரை ஆரியக் கோட்பாட்டைத் தளமாகக் கொண்டு இலங்கை வரலாற்றில் பௌத்த மதப் பண்பாடுகள் நிறுவப்படுவதை வெளிப்படுத்திக் காட்டலாம்.
இலங்கையில் ஆரியக் கோட்பாட்டு அடிப்படையில் தனித்துவப் பண்பாடாக பௌத்த சமயப் பண்பாடுகள் இலங்கையில் புராதன காலம் தொடக்கம் தற்காலம் வரை நிறுவப்பட்டிருக்கிறது என்றாலும் கூட, சமகாலத்தில் ஏனைய மதப் பண்பாடுகளும் மேலெழுந்து வருவதற்கான வாய்ப்புக்களைப் பௌத்த சமயம் திறந்து விட வேண்டும். ஆரிய வம்சாவளியான சிங்களச் சமூகத்தால் இலங்கை தேசம் ஆளப்பட்டு வந்தாலும், பௌத்தப் பண்பாடுகள் முக்கியப்படுத்தப்பட்டாலும் பல்லின மத சமூகம் வாழும் இலங்கை தேசத்தில் பௌத்த மயமாக்கல் நீக்கப்பட்டு பிற சமயக்கலை, கலாச்சாரங்கள் மீதும் சமய அரவணைப்புடன் அரசு செயற்படுவதினூடே பல்லின மத, இனப் பண்பாடுகள், கலைகள் பேணப்பட்டு ஒரு சுமூகமான தேசமாக இலங்கை திகழும் என ஆணித்தரமாகக் குறிப்பிட முடியும்.

Related posts

ஈழத்தமிழர்கள்

Editor

அளவுகோலில் இருக்கும் அந்தச் சிறிய இடைவெளி: நாம் அறியாத அறிவியல் ரகசியம்!

Editor

கராத்தே போட்டியில் மகாஜனக் கல்லூரி மாணவி தங்கம் வென்றார்

Editor

Leave a Comment