பட்டங்களை வாங்கி குவித்து வைத்திருப்பாரே, அவரா?
அல்லது சக மனிதனிரிடத்தில் தன் அறிவுக்கூர்மையை கணமும் நிரூபித்துக் கொண்டு இருப்பாரே அவரா?
கசடு அறக் கற்றவர் தான் யார்? தக நிற்பவர் தான் யார்?
அனைவரையும் தன் கண்மட்டத்திற்கு கீழே பார்ப்பாரே அவரா? அல்லது அனைவரிடமும் அனுசரித்துப்போவாரே அவரா?
கதை சொல்லி கதை சொல்லி கல்லையும் கருமமாற்ற வைப்பாரே அவரா?
அல்லது சொல்லிப்பயனில்லை என்று சும்மா இருப்பாரே அவரா?
புரட்சிகர கருத்துக்களைச்சொல்லி சமகாலத்தை புதிதாய் புரிய வைப்பாரே அவரா? அல்லது தெரியாதென்று சொல்லத் தெரியாதவராய் கேட்டதெற்கெல்லாம் ஏதோ ஒன்று சொல்லுவாரே அவரா?
சமூகத்தின் சங்கமத்தில் தன்னையே தொலைப்பாரே அவரா? அல்லது
தத்துவமே மொழியென்றாகி
சமூகத்தை விட்டு
பத்தடி தள்ளியே பயணிப்பாரே அவரா?
யாராக இருந்தாலும் அநியாயத்தை தட்டிக்கேட்பாரே அவரா?
அல்லது அநியாயம் செய்பவரின் அதிகாரத்திற்கு அமைதி காப்பாரே அவரா?
கருவோடு திருவில்லை எனினும் கற்றதினால் பெருமகனாகினாரே அவரா
அல்லது கற்றபின்னும் பிச்சைபுகும் கற்பனைவாதி அவரா?
பொருட்கள் விலையேறும் சந்தையில் தனது விலையையும் ஏற்றிக் கொண்டே போவாரே அவரா? அல்லது மனுசன் எத்தனை திறமைகளைத்தான் ஒளித்து வைத்திருப்பாரோ என வியக்க வைப்பாரே அவரா?
கற்றோர் முன்பும் கலக்கமின்றி தன் கருத்துரைக்கும் சொலன் வல்லார் அவரா?
அல்லது சொல்லத் தெரியாதவற்றிற்கெல்லாம் ‘சொன்னால் விளங்காது’ என்று சொல்லிவிட்டுப் போவாரே அவரா?
கற்றதை வைத்து குடும்பத்துப் பொருள் பெருக்குவாரே அவரா?அல்லது
கற்றதனாலாய பயன் ஒன்றில்லை என புலம்பித் தீர்ப்பாரே அவரா?
வாழும் வரை ‘அவர் ஒரு போக்கு’-
செத்தபிறகு மொத்த ஊரும் திரும்பிப்பார்த்து
மேதவி என்றுமே, அவரா?
யார் படித்தவர்?
இந்தக் கேள்விக்களிற்கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு கற்றவர் யாரும் இருந்தால் சொல்லுங்கள்.
கற்றவர் ஒருவரின் காட்சிப்படிமம்
தான் இம்முறை
அட்டையிலும் அச்சாகியுள்ளது.
கற்றவர் என்பவர் உண்மையில் யார்?
அவர் எப்படி இருப்பார்? கற்றவர்களை அடையாளங் காண்பதுதான் எப்படி?
கானமயிலும் அழகுதான்
கண்டிருந்த வான் கோழியும் அழகுதான்.
அந்த அழகை பார்க்கக்கூடிய கண்ணுடையோரே
கற்றோர் என்கிறது வள்ளுவம்.
இந்த வாழ்க்கையை நேர்மையாய் மட்டுமே வாழ முடியும் என எமக்கு கற்றுக்கொடுக்கும் அனைவருமே கற்றவர்கள் தான்.
‘படித்தவர் சூதும் வாதும் செய்தால்,
போவார் போவார் ஐயோவென்று போவார்!என்றான் பாரதி ஆவேசமாக
ஒரு நபரை சந்திக்கிறீர்கள். சந்திப்பை முடித்துச் செல்லும் போது
சந்திக்க முதல் இருந்த உங்களிற்கும்
சந்தித்த பின் இருக்கும் உங்களிற்கும் இடையில்
ஏதோ ஒரு தெளிவு இருக்குமென்றால்
சந்தித்த அந்த நபர் ஒரு படித்தவர்!

