2000களுக்கு பிறந்த Gen-Z (ஜென்-இசட்) தலைமுறையின் ஊடாட்டமும் ஆதிக்கமும் அரசியல் சமூக பொருளாதார பரப்பில் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் ‘தி எகனோமிஸ்ட்’ (The Economist) ஆங்கில இதழ், முதன்மையான அரசியல் பொருளாதார சமுக கொள்கையான சோசலிசத்திற்கு ஜென்-இசட் அடைமொழியிட்டு (The rise of Gen-Z socialism) கட்டுரை எழுதியுள்ளது. இடதுசாரிகளிடையே ஒரு புதிய மாற்றம் உருவாகி வருகிறது. ‘ஒரு புதிய தலைமுறை சோசலிஸ்டுகள், விலைக் கட்டுப்பாடுகள், பெரும் செல்வ வரிகள் மற்றும் தொடர்ச்சியான தேசியமயமாக்கல்கள் மூலம் பொருளாதாரத்தை மாற்றியமைக்க விரும்புகிறார்கள். இதை ஜென்-இசட் சோசலிசம் என்று அழைப்போம்’ என்ற சாரம்சத்தை விளக்குவதாக கட்டுரை அமைகின்றது. இக்கட்டுரையை எழுதியுள்ள ஆசிரியர், ‘ஜென்-இசட் சோசலிசம்’ என்பது, இதை ஆதரிப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதாலோ, அல்லது இளைஞர்கள் இடதுசாரிச் சிந்தனை கொள்வது புதிது என்பதாலோ இத்தகைய பெயரிடலை வழங்கவில்லை என விளக்குகின்றார். மாறாக, இது டிக்டாக் யுகத்திற்கென (சமுக வலைத்தள) உருவாக்கப்பட்ட ஒருவகை இடதுசாரித்துவம் என்பதாலும், இன்றைய இளம் புரட்சியாளர்கள் இதைத்தான் ஆதரிக்கிறார்கள் என்பதாலும் அத்தகைய புதிய பெயரிடலை பரிந்துரைப்பதாக குறிப்பிடுகின்றார்.

விரும்பியோ விரும்பாமலோ அடையாளம் பிரபல்யமற்ற வகையில் ஜென்-இசட் ஊடாட்டத்தின் ஆரம்ப படிமங்கள் இலங்கையிலேயே அறியப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற அரகலயவின் இயல்புகள் ஜென்-இசட் அரசியல் ஊடாட்ட தன்மையே பிரதிபலிக்கின்றது. எனினும் ஜென்-இசட் பற்றிய உரையாடலினை 2024ஆம் ஆண்டு பங்களாதேஷ் ஜூலை கிளர்ச்சி, 2025ஆம் ஆண்டு நேபாள கிளர்ச்சி என சமகாலப்பகுதியில் ஆட்சி மாற்றத்தை மையப்படுத்தி தென்கிழக்காசியாவில் இந்தோனேசியா, காசா போருக்கு எதிரான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இளையோர்களின் எதிர்ப்புக்கள் ஜென்-இசட் உரையாடலை வேகப்படுத்தியுள்ளது. இது தற்போது இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janata party) என நையாண்டியாக உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள கணக்கை சமூக இயக்கமாக மாற்றி வருகின்றது. இதன் உருவாக்கத்தின் பின்னணியில் 2026-மே இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பொன்றில் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டுக் கூறிய சம்பவமே காணப்படுகின்றது.
தமிழக தேர்தல் முடிவுகளிலும் ஜென்-இசட் பிரிவினரின் தாக்கம் காரசாரமாக தேர்தல் பரப்புரை காலம் தொடக்கம் தேர்தல் முடிவுகளின் பின்னரும் இன்றுவரை விவாதிக்கப்படுகின்றது. தேர்தல் பரப்புரைகளில் ஜென்-இசட் பிரிவினரினை தற்குறிகளாய் பிரச்சாரப்படுத்தியவர்களே, தேர்தல் முடிவுகளின் பின் ஜென்-இசட் பிரிவினரினை தீர்மானமிகு சக்திகளாய் Meet-Upகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலை மாற்றம் ஜென்-இசட் தவிர்க்க முடியாத எதிர்காலம் என்ற செய்தியையே வழங்குகின்றது. தாத்தாக்களின் தலைமுறையிலிருந்து வேறுபட்ட சிந்தனைகளையே அப்பாக்களின் தலைமுறை கொண்டிருந்தது. அப்பாக்களின் தலைமுறையிலிருந்த சிந்தனை எமது தலைமுறைகளில் வேறுபட்டிருந்தது. எம் தலைமுறை சிந்தனையிலிருந்து வேறுபட்டதாகவே எம் பிள்ளையின் தலைமுறை கொண்டிருக்கும் என்பது எதார்த்தமானதாகும். கடந்த தலைமுறை மாற்றங்களை விட எம் பிள்ளைகளின் மாற்றம் விரைவானதும் பரந்ததுமாகும். இது தொழில்நுட்ப நூற்றாண்டின் தலைமுறை எனும் எதார்த்தத்தை பழைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இவ்எதார்த்தம் புரியுமிடத்து ஜென்-இசட் பிரிவின் போக்கு நிராகரிப்பதை கடந்து வழிப்படுத்த வேண்டியதன் அவசியம் அறியப்படும்.
வரலாற்று ஆய்வாளரான யுவால் நோவா ஹராரி எழுதிய ‘சேப்பியன்ஸ்’ என்ற புத்தகம் மனித பரிமானம் பற்றிய எதார்த்தத்தை கட்டவிழ்க்கிறது. கட்டுக்கதைகளும் புனைவுகளும் கலாசாரமாக சமூக ஒழுங்கை வடிவமைத்த நம்பிக்கையையும்; அதுவே கால மாற்றத்தில் இயல்பான உள்ளார்ந்த மோதலால் வடிவம் மாறுவதும் விளக்கப்படுகிறது. இங்கு அத்தகைய உள்ளார்ந்த மோதல் மாற்றமாகவே ஜென்-இசட் போக்கு காணப்படுகின்றது. எனினும் ஜென்-இசட் தொடர்பில் பழைய தலைமுறையினர் முன்வைக்கும் குறைகளை உள்வாங்கிக் கொள்வதும் திருத்திக்கொள்வதும் ஜென்-இசட் சமூகத்தினருக்கும் அவசியமானதாகும். தவறுகையில் மிதமிஞ்சிய வேகம் விபத்துக்களையும் அழிவுகளையுமே உருவாக்கும்.

