இதழ் 20

அவளுக்கு காது குத்தவில்லை!

வாடகை வீட்டில் வசிக்கும் வாத்தியாருக்கு மகளாக பிறந்தவள் நான். அடுத்த வேளைக்கு உணவுக்கு பிரச்சனையில்லாதளவுக்கு வசதியான குடும்பம். அம்மாவுக்கு ஒன்று என்றால் விருப்பம் போல. கையிலும் ஒற்றைக்காப்பு, வயிற்றிலும் ஒற்றைக்கரு! மூத்தது பெட்டை என்பதால் பயந்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள். ஆனால் என்னை அவர்கள் மகாராணியாகத்தான் வளர்த்தார்கள்! எங்கள் வீட்டுக்கு முன்னால்த்தான் என் சித்தப்பா வீடு. நான் பிறந்து ஆறு மாதங்களில் அவர்களுக்கு ஆரூரன் பிறந்தான். ஆருரனுக்கும் அண்ணாவோ, அக்காவோ, தம்பியோ, தங்கச்சியோ யாருமில்லை. ஆனால் மூத்தது பெடியன் என்பதால் சித்தப்பாவும் சித்தியும் பயந்து விட்டதாக ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை.

கிட்டத்தட்ட ஒத்த வயது என்பதால் ஒன்றாகவே வளர்ந்தோம். எங்கள் வீட்டில் எப்போதாவதுதான் பலகாரங்கள், கறி சோறுகள். ஆனால் அவர்கள் வீட்டில் அடிக்கடி ஆடும், கோழியும் தான். சித்தப்பா ரவுணில் கடை. பாம்பும் ஏணியும் போல இலாபமும் நட்டமும் மாறி மாறி வரும். சித்தப்பா நட்டமடையும் போதெல்லாம் அப்பாவின் சேமிப்பு அவர்களுக்கும் உதவி இருக்கிறது. ஆனால் அப்பாவிடம் இருக்கும் சேமிப்புப்பழக்கமும் சிக்கனமும் அவர்களிடம் இல்லை. இத்தனைக்கும் அவர்களை விட நாங்கள் சற்றே வசதியானவர்கள். அண்ணன் தம்பிக்குள் ஏன் இந்த முரண் என்ற கேள்வி நெடுநாளாய் இருந்தது.

சில நாட்களில் எனக்கு காது குத்த ஆயத்தப்படுத்தினார்கள். மூக்கும் குத்த வேண்டுமென்றார் அப்பா. ஆனால் காது குத்தவே நான் போட்ட கதறலை பார்த்து விட்டு மூக்கு குத்தும் ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டார். ஆனால் ஆரூரன் அதை அடிக்கடி நக்கலடிப்பான். அவனுக்கு காது குத்தும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்குமளவுக்கு செய்து விட்டான். ஆனால் அந்த நாள் மட்டும் வரவே இல்லை. ஆம்பிளைகளுக்கு காது குத்துவதில்லையாம். பொம்பிளைகளுக்குத்தானாம். எவன் வைத்த சட்டமென்று தெரியவில்லை. ஆண்கள் கடுக்கன் குத்தும் வரலாறு எப்படி காணாமல் போனதென்றும் புரியவில்லை.

ஒரு நாள் அம்மாவின் அம்மா இறந்து போனார். அம்மாவின் தம்பிதான் கடமைகள் செய்தார். அம்மா அழுது கொண்டு மட்டும் நின்றிருந்தார். அப்பாவின் அப்பா இறந்த போது மட்டும் அப்பா கடமை செய்திருந்தார். ஏன் அம்மா செய்யவில்லை? அப்புறம்தான் தெரிந்தது. பெற்றவர்களுக்கு இறந்த பின்னர் கடமை செய்ய ஆண்கள்தான் உரித்துடையவர்களாம். ஆண் வாரிசு இல்லாவிட்டால் சொந்தத்தில் யாராவது ஆணாம். ஆக மொத்தத்தில்,  பெண்கள் தங்களை பெற்றவர்களுக்கு இறுதிக்கடமைகள் செய்யக்கூடாதாம். அப்பாவுக்கு மூத்த ஆண் பிள்ளையும் அம்மாவுக்கு இளைய ஆண் பிள்ளையும் இறுதிக்கடமைகள் செய்யலாமாம். அதிலும் முன்னுரிமையை ஆண்களுக்குத்தான் கொடுத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுவதற்குள் அடுத்த இடி. சொந்தத்தில் யாராவது இறந்தால் சோகத்தில் சில காலம் மங்கல நிகழ்வுகளை தவிர்ப்பார்கள். துடக்கு என்று சொல்வார்கள். அப்பம்மா இறந்த போது இருந்த துடக்கு அம்மம்மா இறந்த போது இல்லையாம். கேட்டால் தந்தைவழி சொந்தங்களின் துடக்குத்தானாம் துடக்கு. அடேங்கப்பா! அப்ப தாயின் சொந்தங்கள் இறந்தால் அது சோகம் இல்லையா? மரணத்திலும் பெண்களுக்கு ரணத்தைத்தான் கொடுக்கிறார்களா?

ஆதிரனும் நானும் ஒரே பாடசாலையில்த்தான் ஒன்றாக படிக்கத்தொடங்கினோம். ஒரே வகுப்பறை, ஒரே நண்பர் வட்டம் என ஒன்றாகவே பயணித்தோம். ஒரு நாள் இரவு பயங்கர வயிற்று வலி. அம்மாவும் அப்பாவும் சந்தோசப்பட்டுக் கொண்டார்கள். ஊரெல்லாம் கூட்டி, விழாவாக கொண்டாடி விட்டார்கள். வயதுக்கு வந்து விட்டேனாம். அதை ஏன் ஊருக்கே சொல்லி கொண்டாடுவான் என்று கேட்டேன். அதுதான் வழக்கமாம். கொண்டாடாவிட்டால் குடும்ப மானப் பிரச்சனை என்றார்கள். நான் வயதுக்கு வந்ததை கொண்டாடுவதில் என் மானம் போவதை ஏன் எவரும் உணரவில்லை. வயதுக்கு வருவது சாதனையா? ஆதிரனுக்கு அப்படி ஒரு விழா நடக்கவேயில்லை. ஆண்கள் வயதுக்கு வருவதே இல்லையா? அதை ஏன் கொண்டாடுவதில்லை? ஒரு பெண் வயதுக்கு வருகிறாளா? இல்லையா? எத்தனை வயதில் வயதுக்கு வருகிறாள்? என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ள ஆசைப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் சடங்கு என்று இதை சமாளித்திருக்க வேண்டும்.

அதன் பின்னர் எனக்கு உலகம் புதிதாய் தெரிந்தது. அதன் பின் என் தினசரி நடவடிக்கைகளில் அம்மாவின் கவனம் அதிகரித்தது. அப்பாவுக்கும் எனக்குமிடையே சிறு இடைவெளி ஏற்பட்டது. ஆண் நண்பர்களோடு பழகுவதை குறைத்துக்கொள்ள சொன்னார்கள். மாதத்தில் மூன்று நாள் வீட்டுக்குள் கைதியானேன்.  பண்டிகைகள்,  ஆலய பெருந்திருவிழாக்கள் அந்த மூன்று நாட்களில் வந்து விடக்கூடாதென்பது தான் என் முதற் பிரார்த்தனையாக இருக்கும். அவற்றில் கலந்துகொள்ள முடியாத கவலையை விட, தெரிந்தவர்கள் கலந்து கொள்ளாததற்கு காரணம் கேட்கும் போது உண்மையும் சொல்ல முடியாமல் பொய்யும் சொல்ல முடியாமல் முழிப்பது தான் பெருங்கவலை.

உயர்தரத்தில் உயிரியல் கற்று மருத்துவராக வரவேண்டுமென்றே ஆசைப்பட்டேன். ஆனால் ஆதிரன் கணிதம் படிக்கப்போகிறானென்றதும், என்னையும் அதையே படிக்க சொன்னார்கள். வகுப்புக்களுக்கு போய்வருவதும், படிப்பதும் சுலபமென்றார்கள். என் ஆசைகளை விட என் பாதுகாப்பு முக்கியமாகப்பட்டது. ஆனால் ஆதிரனுக்கு இத்தகைய பாதுகாப்பு வேலிகள் ஏதும் இருக்கவில்லை. ஆண்கள் பாதுகாப்பானவர்களா? சமூகத்தால் பெண்களுக்கு ஏற்படும் என்று அச்சப்படும் பாதிப்புக்கள் ஆண்களுக்கு ஏற்படாதா? ஆதிரன் வழியில் நானும் செலுத்தப்பட்டேன். இருவருமே பொறியியல் பீடம் சென்றோம்.

கற்றவர்கள் நிறைந்த இடம்தான் பல்கலைக்கழகம். அங்கும் அக்கறை என்கிற பெயரில் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். அடுத்த தலைமுறையிலும் எங்கள் தலையெழுத்து மாறப்போவதில்லை. ஏனென்று தெரியவில்லை. பெண்களைச்சுற்றி ஒரு வேலியை இந்த சமுதாயம் போட்டுக்கொண்டேயிருக்கிறது. அந்த வேலியை மீறி எவளாவது வந்துவிட்டால் அவள் பெண்மை மீதே சந்தேகத்தீயை வைத்து அவளை காயப்படுத்துகிறது. படித்து முடித்து வேலைக்கு போனேன். அங்கும் அதே நிலைதான். களத்தில் வேலை செய்ய விருப்பம் எனக்கு. வெளியூரெல்லாம் வேலை செய்ய விருப்பம் எனக்கு. பெண்களுக்கு அதெல்லாம் சரி வராதென்று ஒரு அலுவகத்தில் வேலை செய்கிறேன். ஆதிரன் சவுதியில் வேலை செய்கிறான். நான் ஆதிரனாய்… இல்லை, இல்லை! ஆண்பிள்ளையாய் பிறந்திருக்க வேண்டும்.

திருமணம் செய்ய ஆயத்தப்படுத்தினார்கள். காதலிக்கிறாயா என்று கேட்டார்கள். இல்லை என்று விட்டேன். ஆனால் காதலித்திருந்தேன். பள்ளிக்காலத்தின் கடைசிக்காலத்தில் ஒருவனை காதலித்திருந்தேன். ஆனால் அவனிடம் சொல்லவில்லை. காதலை ஆண்கள்தான் சொல்ல வேண்டுமென்று என்னை யாரோ நம்ப வைத்து விட்டார்கள். நானாக சொன்னால் என்னை தவறான பெண் என்று நினைத்து விடுவானோ என்று சொல்லாமலே இருந்து விட்டேன். அவனாவது சொல்வானென்று பார்த்தேன். அவனும் சொல்லவில்லை. அவன் என்னை காதலித்தானா என்று கூடத்தெரியாது. ஆக, இது காதல் இல்லை. அதனால் என் வாழ்க்கை தெரிவை பெற்றவரிடம் விட்டுவிட்டேன். சாதி பார்த்தார்கள். சமயம் பார்த்தார்கள். சாத்திரம் பார்த்தார்கள். வேலையும் பார்த்தார்கள். மாப்பிள்ளை என்னை விட பெரிய உத்தியோகமாக, அதிக சம்பளம் வாங்குபவராக இருக்க வேண்டுமாம். எல்லாவற்றிலும் பெண் ஆணைவிட சற்றே குறைவானவளாக இருக்க வேண்டுமென்கிற அடிப்படையில் தான் சமூகத்தின் சகல செயற்பாடுகளும் உள்ளன. இந்த சமூகத்தின் விசித்திரமான சித்தாந்தங்களை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.

சமயம், சாதி, சாத்திரம் பொருந்துவதாயும், சம்பளம் என்னிலும் அதிகமாக வாங்குபவனாயும் ஒருவனைப்பிடித்து கட்டி வைத்து விட்டார்கள். திருமணச்சந்தையில் என்னை விற்பதற்காக அப்பா தன்னையே விற்க வேண்டி இருந்தது. சீ… தனம்! சித்தப்பா ஊதாரியாயும், அப்பா சிக்கனமாயும் இருக்க காரணமும் இந்த சீ.. தினம் தான்!

மணப்பொருத்தில் மனப்பொருத்தம் மட்டும் பார்ப்பதில்லை. குழந்தை பெறுவதை இரு வருடங்களுக்கு ஒத்திப்போடுவோமா என்றேன். வேண்டாம் என்றார். ஒரு வருடம் முடியும் முன்பே அவர் கையில் நம் குழந்தை! அதே நேரம் எனக்கு பதவி உயர்வு வந்து சம்பளமும் கூடியது. அவரை விடவும் கூடியது. குழந்தைக்காக வேலையை விட சொன்னார். நம்பினேன். வேலையை விட்டேன்.

பெண்கள் விடயத்தில் இந்த உலகம் நிறையவே மாறிவிட்டதென்கிறார்கள். பெண்கள் கேட்ட சுதந்திரத்தை அளித்து விட்டதாக சொல்கிறார்கள். இருபத்தொராம் நூற்றாண்டின் பிரதிநிதியான  என்னைக்கேட்டால் மோதகமாய் இருந்தது கொழுக்கட்டையாக தெரிகிறது. அவ்வளவும் தான்!  என்னோடே பிறந்து வளர்ந்தவன் போல, என்னாலும் வளரமுடியவில்லை எனும்போது, அதற்கு காரணமாக இந்த சமூகம் சொல்வதும் நான் பெண் எனும் போது அடக்குமுறை இன்னும் அகலவில்லை என்று தானே அர்த்தம். அன்றும் சரி, இன்றும் சரி இந்த இனத்தின் கலாசாரத்தின் பிரதிநிதி, குடும்ப கௌரவத்தின் பிரதிநிதி பெண்கள் தான். அது மாறியிருக்கிறதா சொல்லுங்கள்!

ஐயையோ…
என் பிள்ளை வரும் நேரமாகிறது.
சமைக்க வேண்டும்!
வருகிறேன்….
சொல்ல மறந்து விட்டேன்..
அவளும் பெண் குழந்தை!
அவளுக்கு காது குத்தவில்லை!

இப்படிக்கு,
உங்களில் ஒருத்தி
!

Related posts

எண்டோமெட்ரியோஸிஸ்

Thumi2021

மந்திர மெஸ்ஸி – 6

Thumi2021

மங்கையே மாதரே…..!

Thumi2021

Leave a Comment