இதழ்-28

எங்கிருந்து வந்தான் இந்த இடையன்?

‘எங்கிருந்தோ வந்தான்,
‘இடைச்சாதி நான்” என்றான்;
”மாடுகன்று மேய்த்திடுவேன்,
மக்களை நான் காத்திடுவேன்…
சின்னக் குழந்தைக்குச்
சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி
அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும்,
கள்ளர்பய மானாலும்;
இரவிற் பகலிலே எந்நேரமானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை,
தேவரீர் தம்முடனே சுற்றுவேன்
தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;
கற்ற வித்தை யேதுமில்லை
காட்டு மனிதன்; ஐயே!
ஆன பொழுதுங் கோலடி
குத்துப்போர் மற்போர் நானறிவேன்;
சற்றும் நயவஞ் சனைபுரியேன்””
என்றுபல சொல்லி நின்றான்.

”ஏது பெயர்? சொல்”” என்றேன்

”ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை”” என்றான்”

கண்ணன் தன் சேவகனாக ஆன கதையை இப்படிச் சொன்னான் பாரதி. தன் உள்ளமென்ற மந்தையை மேய்த்து நிற்கும் பேரிறையை சேவகனாய் எண்ணிப் பாட மகாகவியால் மட்டுமே முடிந்தது. உண்மையில் எங்கிருந்து தான் வந்தான் இந்த இடையன்?

குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடைப்பட்ட முல்லை நில முதுமகனே இடையன் என்று வழங்கப்பட்டான். ஆட்டு மந்தையை மேய்த்துக்கொண்டு அவன் தன் வாழ்க்கைமுறையினை இயற்கையோடு ஒன்றிப் பிணைத்திருந்தான். நடந்தால் கூட புல்லுச்சாகாத நடை அவனுடையது.

ஆடுகளின் இராணுவமாய் கையில் கோல் கொண்டு அவன் வீதியுலா வரும் காட்சியே அதிகாலையையும் அந்திமாலையையும் ஊருக்கு அறிவித்தது. பொழுது சாயத் தொடங்கையில் மந்தை ஆடுகளை மீட்டெடுக்க அவன் குழலெடுத்து ஊதும் ஓசையே மருள் மாலை வருவதை அன்று மாந்தர்க்குப் பகிரங்கமாய் அறிவித்தது. ஆயன் குழலிசை கேட்டு மருண்டு நின்ற காவியத் தலைவிகளை இலக்கியங்கள் எங்கும் எம்மால் காணமுடியும்.

எண்களின் எண்ணக்கரு கூட அவர்கள் கால்நடைக்கணக்கில் தான் உருவாகத் தொடங்கியது. தன் செல்வத்தை கணக்கிட்டுப்பார்க்கவே அவன் எண்களை உருவாக்கினான். அதேவேளை தன் கால்நடைகளைக்கொண்டு பெருஞ்செல்வம் தீட்டவும் அவன் சித்தம் கொண்டதில்லை. தன்வசமிருந்த கால்நடைகளையே அவன் செல்வமாய்க் கருதினான். அதைவிடுத்து மாடல்ல மற்றையவை என முழுதாய் நம்பினான். ‘செத்த ஆடு பெருகும்;. வித்த ஆடு பெருகாது.” என தன் சுய தர்மத்தை கொண்டாட ஏராளம் பழமொழிகளை உருவாக்கி வைத்தான்.

மந்தை ஆடுகளை அவன் எத்தகைய பெருஞ்செல்வமாய்க் கருதினானோ அவ்வாறே ஆடுகளிற்கும் அவன் அவசியமானவனானான். மேய்ப்பான் இல்லாத மந்தைக்கூட்டம் என்பது வழிதவறி வாழ்விழந்து போய்விடுகிறது என்பதை நன்குணர்ந்தே அவனிற்கு கட்டுப்பட அவை கற்றுக்கொண்டன. வழி தவறி ஓடுகின்ற ஆட்டுக்குட்டியொன்றை அன்போடு தன் கரங்களிற்குள் யேசுநாதர் அணைத்துக் கொள்ளும் ஓவியத்தை நீங்கள் எங்கேனும் கண்டிருப்பீர்கள்.

பூவுலகில் பிறப்பெடுக்க எண்ணங் கொண்ட நந்தகோபாலனும் இடையனாகவே அவதாரம் எடுக்க விருப்பம் கொண்டான். உலகிற்கு உபதேசிக்க வந்தவர்கள் கூட மந்தை ஆடுகளிடமே முதலில் பாடம் பயின்று கொண்டார்கள் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

அப்படியொரு மேய்ப்பான் மந்தைக் கூட்டத்திற்கு மட்டுமல்ல, கூடுகிற கூட்டம் எல்லாவற்றிற்கும் தேவைப்படுகிறான்.

வேண்டி விரும்பியோ அல்லது வேறு வழி இல்லாமலோ வழி தவறிச் சொல்லும் ஆட்டுக் குட்டிகளை அவன் அன்போடு அணைத்துக் கொள்வான். திசை தோறும் பிரிந்து போகும் பேரினத்தை குழலெடுத்து இசை எழுப்பி மீண்டும் ஒன்றாய்க் குவிக்கும் வழி அறிவான்.மந்தையாடுகளை மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தோடு வீதியில் அழைத்துச் செல்லுவான். அவன் பொறுமையின் உச்சத்தில் நின்று மந்தையாடுகளை கண்காணிப்பான். கனிவான அவன் பார்வையாலே ஆடுகளை கட்டுப்படுத்தி வைப்பான். வெள்ளாட்டு மந்தையில் புகுந்துவிட்ட கறுப்பாடையும் அவன் கலவரமின்றி சேர்த்துக்கொள்ளுவான். ஆட்டு மந்தைகளின் ஆருயிர் தோழனாய் மேய்ப்பான்இ அவற்றை மேய்த்தும் வருவான். அப்படியொரு மேய்ப்பான் பூமியில் எல்லாக்காலத்திலும் உருவாகிக் கொண்டே இருக்க வேண்டும்.

மேய்ப்பான் இல்லாத மந்தைகள் அதற்காகவே காத்திருக்கின்றன.

Related posts

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் Cleft Lip and palate

Thumi2021

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 02

Thumi2021

நவீன வேதாள புதிர்கள் 07 – சுத்தும் சக்கரமும் சுத்தும்!!!

Thumi2021

Leave a Comment