வானமகள் யாரைத்தான் அப்படி காதலித்தாலோ தெரியவில்லை. இரண்டு நாளாக அழுது கொண்டே இருக்கிறாள். அவளது கண்ணீரான மழைநீர் வழமையாக நிற்கும் இடங்களிலெல்லாம் கட்டிடங்கள் கட்டி நிரப்பி விட்டோம். அது தங்க இடமில்லை. சாலைகளில் இறங்கி மறியல் செய்ய ஆரம்பித்து விட்டது மழை நீர்.
“மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலயிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடி கரையும்போது மண்ணில் சொர்கம் எய்துவாய்”
என்று வைரமுத்து சொன்ன கவிதையை ஆதரிப்பதா நிராகரிப்பதா என்ற குழப்பத்தில் மழையில் நனைந்தும் நனையாமலும் ஒருவன் அந்த தெருவில் நடந்து போகிறான். கறுப்புக்கொடி காட்டக் கூடாது என்பதால் புத்தகப்பையையே அவன் குடையாக்கி இருக்க வேண்டும். ஓடிச் சென்று அவனிடம் கேட்டேன்.
“தம்பி எங்க போறாய்?”
நானோ என் கேள்வியோ அவனையோ அவனது நடையையோ எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அவனது வேகத்தில் சிறுதும் மாற்றமின்றி நடையை தொடர்ந்தான். ஊரே வேடிக்கை பார்த்தது. அப்படியென்றால் அவர்களுக்கு இவனைப்பற்றி ஏதோ தெரிந்திருக்க வேண்டும். எல்லோரையும் ஒதுங்க வைத்த மழையையும் பொருட்படுத்தாமல் இந்தளவு வேகமாக, பாடசாலைகள் எல்லாம் இறுகப் பூட்டப்பட்ட இந்த கொரோனா காலத்தில், பாடசாலை சீருடையில் காரணமில்லாமலா போகிறான்? அறிய ஆவல் கொண்டேன். அருகிலிருந்தவர்களை கேட்டேன்.
“படித்துப் பைத்தியமானவர்கள் பலர். படிக்காமல் பைத்தியமானவர்கள் சிலர். படிக்க முடியவில்லையே என்று பைத்தியமானவன் இவன்.”
“நாங்க படிக்கிற காலத்தில எங்கள விட எங்கட புத்தகப்பைகள் பாரம் கூட. புத்தகங்கள் வாழ்க்கையை நிமிர வைக்கும் என்டாங்கள். எங்கட முதுக அந்த புத்தகங்கள் கூன வைச்சது தான் மிச்சம்! புத்தகங்கள், கொப்பிகள் எதுவுமே இப்ப தேவையில்லைத்தானே தம்பி! எல்லாமே போன்ல வந்திட்டுத்தானே. அதுதான் வாங்கி வைச்ச புத்தகப்பை சும்மா கிடக்கென்டு தலையில கவிட்டு வைச்சிட்டு மழைக்க விளையாடிட்டு திரியுறான் வெறும் பயல்”
“கல்வி இனி இலவசமா கிடைக்கப் போறதில்லை. அதுதான் தந்த இலவசப் புத்தகங்களை எல்லாம் பழைய பேப்பருக்கு கொடுத்திட்டு நடந்து போகுது பெடி”
“முகமூடிய மறந்து போய் வீட்டை விட்டுட்டு வந்துட்டான் தம்பி. அங்கால பொலீஸ் நிக்குது. அதுதான் முகத்தை மூடிட்டுப் போறான் முட்டாப் பயல்”
“படிப்பிக்கிறவங்களுக்கு சம்பளம் காணாதாம். அதால அவங்க படிப்பிக்க மாட்டாங்களாம். எங்களை படிப்பிக்க வைக்கிறதுக்கு வீட்டிலயும் சம்பளம் காணாதாம். கொரோனாவ நிப்பாட்டி பள்ளிக்கூடங்களை திறக்க வைக்க கடவுளும் விரும்பேல. ஆக மொத்தம் மாதா, பிதா, குரு , தெய்வம் என்ற நாலு பேருக்குமே நாங்க படிக்கிறதில நாட்டம் இல்லாத போது ஏன் படிப்பான்? அது தான் வேலைக்கு வெளிக்கிட்டான் போல”
“காசில்லன்னு வேலைக்கு போனா அங்கயாச்சும் நிம்மதியா விடுறானுகளா? பிள்ளை வயசு, பேரப்பிள்ளை வயசு இருக்கிற வயசுக்கே வராத சின்னப் பிள்ளைகளுக்கு சேட்டை விடுறாங்கள் தம்பி! இந்த ஊரில இருக்க வேணாம்னு தான் பக்கத்து ஊருக்கு போறான். பாவம்! அங்க நிலைமை இத விட மோசம்னு அவனுக்கு தெரியல.”
இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு விளக்கம் கொடுக்கிறாங்க. அவனா வாயத் திறக்காததால இங்க பல வாய்கள் திறந்திருக்கு. ஒரு நாள் அவன் வாய் திறந்தாத்தான் இந்த வாய்கள் எல்லாம் மூடப்படும்.
திறப்பானா?
என்ற ஆவலுடன் நான்!