இதழ் 56

மட்டக்களப்பில் வேலையின்மையும் வறுமையும்

வேலையின்மை மற்றும் வறுமை என்பன அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் முன்னால் உள்ள ஒரு பாரிய சவாலாகும். இவை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமலும் அதனை ஒழிக்காமலும் நாட்டின் ஆக்கபூர்வமான அபிவிருத்தி பற்றி சிந்திக்க முடியாது என்பதே உண்மையாகும்.

இயற்கை எழில் கொஞ்சும் இலங்கைத் தீவின் கிழக்கே அமையப் பெற்றது மட்டக்களப்பு மாவட்டமாகும். இது 2633.1 சதுரக்கிலோ மீற்றர் பரப்பைக் கொண்டுள்ளது. இம்மாவட்டமானது 14 பிரதேச செயலாளர் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதுடன் இயற்கை வனப்பும் அதனை ஒருங்கே கொண்ட வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டமானது கடந்த மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தம் மற்றும் 2004ல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதன் சமூக பொருளாதார அடித்தளங்கள் மீது பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தமை மறுக்க முடியாத ஒன்றாகும்.

மட்டக்களப்பு பிரதேசத்தின் பிரதான அம்சம் அதன் நடுவண் அமைந்துள்ளதும் 50 மைல் நீளங் கொண்டதுமான வாவியாகும். நாட்டின் வனப்பிற்கும் வளத்திற்கும் இவ்வாவி ஏதுவாயுள்ளது. இயற்கையின் காரணமாக மட்டக்களப்பில் எழுவான்கரை, படுவான்கரை எனும் இரு பிரிவுகள் அமைந்துள்ளன. இதில் எழுவான்கரைப் பகுதி குடிசனப் பெருக்கமுடையதும் வர்த்தக சமூகத்தினர் செறிந்து வாழ்வதுமான பிரதேசமாகவும் சமூக பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்ற பிரதேசமாகவும் காணப்படுகின்றது. வாவியின் மேற்கிலமைந்த பகுதி படுவான்கரை எனப்படும். இப்பிரதேசம் மிகப்பரந்த வயல் வெளிகள் மற்றும் எழுவான்கரைப் பகுதியுடன் ஒப்பிடுகையில் சமூக பொருளாதார ரீதியில் வளர்ச்சியினை வேண்டி நிற்கும் சமூகங்களை உள்ளடக்கிய ஒரு பிரதேசமாகவும் காணப்படுகின்றது. இது மட்டக்களப்பு மேற்குப் பிரதேசம் எனவும் அழைக்கப்படுகின்றது.

உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட இடப்பெயர்வு மற்றும் யுத்த செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகக் காணப்படுகின்றது. இன்று இப்பிரதேசமானது சமாதானக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்துள்ள போதிலும் வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்கான மக்களின் போராட்டம் தற்கால கட்டத்தில் மிகத் தீவிரமாக உள்ளதென்றே கூறவேண்டும். யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திட்டங்கள் முனைப்புப் பெற்றுள்ள இவ்வேளையிலும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமை போன்ற சமூக பொருளாதாரப் பிரச்சினைகளால் சொல்லொணாத் துன்பத்தை அனுபவித்து வரும் இப்பகுதி மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவே காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வேலையில்லாத் திண்டாட்டமானது மிகப் பிரதான பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. வேலையின்மையானது வருமானம் உழைக்கும் அளவினைப்பாதித்து அதன் மூலம் வறுமையைத் தூண்டுகின்றது. இப்பிரச்சினைகளை அடியொட்டியதாக கீழுழைப்பு, அடிப்படை வசதிகளின்மை, சுகாதார வசதிகளின் பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பிரச்சினைகளால் இவர்களின் வாழ்க்கைத் தரமானது வீழ்ச்சி யடைந்து கொண்டு செல்வதைக் காணமுடிகின்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவானது 90 ற்கு அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய 346 கிராமசேவகர் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்பிரதேச செயலாளர் பிரிவினுள் 86028 பேர் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் பெரும்பாலான குடும்பங்களின் பிரதான ஜீவனோபாய மார்க்கங்களாக கூலித்தொழில் மற்றும் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றன காணப்படுகின்றன. பிரதேச செயலக அறிக்கைகளின்படி அரசதொழில் வாய்ப்புப்பெற்றோர் தொகை மிகக் குறைவாகும். இப்பிரதேசத்தில் பிரதான தொழில் மூலங்களான கூலித் தொழில் நிச்சயமற்ற தன்மையினைக் கொண்டுள்ளதுடன் விவசாயம், மீன்பிடி போன்றன பருவகாலத் தொழில்களாகக் காணப்படுகின்றது. இதனால் அன்றாடத் தொழில் செய்து வாழ்வாதாரத்தை நடாத்தி வரும் இப்பகுதி மக்கள் நிரந்தரத் தொழில் ஒன்று இல்லாமையினால் ஓர் நிலையானதும் போதுமானதுமான வருமானத்தைப் பெறமுடியாமல் மிகவும் துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர்.

இங்கு வாழும் மொத்தக் குடும்பங்களில் 65மூ வீதமான குடும்பங்கள் சமூர்த்தி நிவாரணம் பெறும் வறிய குடும்பங்களாகவே காணப்படுகின்றன. மொத்த ஊழியப்படையில் 54மூ வீதத்தினர் தொழில் வாய்ப்பற்றவர்களாக உள்ளனர். தொழிலற்றோரில் 65மூ ற்கும் மேற்பட்டோர் கா.பொ.த சாதாரண தரம் மற்றும் அதற்குக் குறைந்த கல்வித் தகைமைகளைக் கொண்டவர்களாகவே காணப்படு கின்றனர்;. (ளழரசஉந: சநளழரசஉந pசழகடைந இ னiஎளைழையெட ளநஉசநவயசயைவ ஆNஇ 2010) இவர்கள் அனைவரும் தொழில் வாய்ப்புப் பெற்றோரின் வருமானத்திலே தங்கி வாழ்கின்றனர். அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்வதற்கு முடியாத நிலையில் காணப்படும் இம்மக்கள் மத்தியில் வறுமை நிலையினைக் காணக் கூடியதாக உள்ளது.

இப்பிரதேசத்தில் காணப்படும் ஓர் உயரிய பிரச்சினையாக வேலையின்மை காணப்படுகின்றது. விவசாயச் செய்கையினை மேற் கொள்வதற்கான வள வாய்ப்புக்கள் அமையப்பெற்ற பிரதேசமாக இது காணப்பட்ட போதிலும் அதனை மேற்கொள்வதற்கான போதிய மூலதனவசதி இன்மையால் நகர் பகுதிகளைச் சேர்ந்த தனவந்தர்களாலே இங்கு அதிகளவான விவசாயச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. தமது வயலை குத்தகைக்கு கொடுத்து அவ்வயலிலே கூலித்தொழில் செய்யும் மக்களும் இங்கு காணப்படுகின்றனர். பொருளாதார வளர்ச்சி, வறுமைக் குறைப்பு, உணவுப் பாதுகாப்பு மேம்பாடு என்பவற்றிற்குப் பங்களிப்புச் செய்யும் விவசாயத்துறையானது கிராமப் புறங்களில் தொழில்வாய்ப்பு வழங்குவதில் பிரதான மூலமாகவும் காணப்படுகின்றது. ஆனால் தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக விவசாய இயந்திர சாதனங்களின் வருகை இத்துறைசார் தொழில்வாய்ப்பு வழங்கும் ஆற்றலில் தாக்கம் செலுத்தியுள்ளமையை காணமுடிகின்றது.

நெல்லுற்பத்தி பிரதானமாக மேற்கொள்ளப்படும் இப்பகுதியில் விவசாயத் துறையில் உள் வாங்கப்படும் ஊழியர்களின் அளவு குறைவடைந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. நெல் அறுவடைக் காலங்களில் தற்பொழுது அதிகளவான அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவதனால் இத்துறையில் தேர்ச்சி பெற்ற பல ஊழியர்களால் தொழில்வாய்ப்பினைப் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது. இயந்திர சாதனங்களின் வருகையால் தொழிலினை இழந்த மேலதிக ஊழியப்படையானது கைத் தொழிற்றுறை விருத்தி பெற்ற நகர்ப்புறங்களை நோக்கிய நகர்வுக்குத் தூண்டப்பட்டுள்ளது. தொழிலின்மை மீதான அழுத்தத்தினைக் குறைப்பதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாடிச் செல்லும் நிலையும் இங்கு உருவாகியுள்ளது.

போதிய தொழில்வாய்ப்புக் கிடைக்காமையால் இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தொழில் வாய்ப்புக்களைத் தேடி மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் கரைப்பகுதியில் அமைந்துள்ள நகர்பகுதிகளை நோக்கி நகர்வடைகின்ற நிலையினைக் காணக்கூடியதாக உள்ளது. தொழில் வாய்ப்பினைத்தேடி அதிகாலை வேளையில் தமது தொழில்சார் உபகரணங்களுடன் புறப்படும் தொழிற்படையினர் வர்த்தக ரீதியில் வளர்ச்சி பெற்றுள்ள காத்தான்குடி பிரதேசத்தினுள் தஞ்சம் புகும் நிலை நீண்ட காலமாக நிலவி வருகின்றது. பொழுது புலர்வதற்கு முன்னர் காத்தான்குடி நகர்ப்பகுதியை வந்தடையும் இத்தொழிலாளர் குழுமம் இப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் திறப்பதற்கு முன்னர் அதன் முன்னால் தொழில் தருனர்களின் வருகைக்காக காத்திருக்கும் அவலநிலையைக் காணக்கூடியதாக உள்ளது. காத்தான்குடியின் கடைத்தெருவின் இரு மருங்கிலும் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியப்படைக்கு தொழில் கொடுக்கும் அளவிற்கு அப்பிரதேசத்தில் தொழில்வாய்ப்புக்கள் இல்லை என்றே கூறவேண்டும்.

அதிகாலை முதல் தொழிலுக்காக காத்திருக்கும் தொழிலாளர்கள் மேசன்;, ஓடாவி மேசன்கூலி மற்றும் எந்த ஒரு கூலித்தொழிலைச் செய்வதற்கும் தயாரானவர்களாகவே உள்ளனர். இவர்கள் காத்தான்குடி, ஆரையம்பதி, கல்லடி மற்றும் மட்டக்களப்பு நகர்ப்பகுதியைச் சேர்ந்த மக்களினால் வேலைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். தமது தகுதிக்குக் குறைந்ததும் குறைந்தளவான கூலியினைக் கொண்டதுமான தொழில்களைக்கூட செய்வதற்குத் தயாரான நிலையில் வாழும் இவர்கள் அனைவரிலும் தொழில் கிடைப்பது ஒரு சிலருக்கே. ஏனையவர்கள் அன்றைய தினம் முழுவதும் வீதியோரங்களில் காத்துக் கிடந்தபடி ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். மறுபுறத்தில் வேலைக்காகச் சென்றவர்களின் வருகைக்காக காத்திருந்த குடும்பத்தினருக்கு கிடைப்பது வெறும் ஏமாற்றமே. குறித்த தினம் முழுவதும் கிடைப்பதை உண்டு பட்டினியால் வாடியபடி வாழ்வைக் கழிக்கும் இவர்களின் வறுமை நிலையானது, போசாக்கு நிலையினை மட்டுமன்றி மனரீதியில் பாதிப்பினையும், வாழ்க்கையில் வெறுப்பினையும் ஏற்படுத்தி இருக்கின்றமை மறுக்கமுடியாத உண்மையாகும்.

தொழில் வாய்ப்பற்ற ஊழியப் படையினர் மத்தியில் அவதானிக் கப்பட்ட மற்றுமோர் பிரச்சினையாக கீழுழைப்பு காணப்படுகின்றது. இங்கு கீழுழைப்பு என்பது ‘இலங்கையின் மத்திய வங்கியினால் நடாத்தப்பட்ட நிதி மற்றும் சமூக பொருளாதார அளவீட்டின் படி ஒருவருடைய தொழிலானது சாதாரண வேலை நேரத்திலும் குறைவாக இருப்பதுடன் கூடிய வேலை நேரத்தை எதிர்பார்ப்பவராக அல்லது மேலதிக வேலையை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் போது இவ்வாள் கீPழுழைப்பாளியாவர்” (இ.ம.வ.ஆண்டறிக்கை,2005).

இதனால் வேலை செய்வதற்கான ஆர்வம் இருந்தும் குறைவான மணித்தியாலங்களே இவர்களுக்கு வேலை கிடைக்கின்றது. அதே நேரம் அதிக நேர வேலை கிடைக்கும் பட்சத்தில் அதற்கு குறைந்த வேதனத்தையே பெற வேண்டியவர்களாக உள்ளனர். இவ்வாறு இப்பிரதேசத்தில் காணப்படும் உயர் வேலையின்மை நிலையானது ஊழியச் சுரண்டல்களுக்கு வழி வகுப்பதன் மூலம் பாதகமான ஒரு தாக்கத்தையே இப்பகுதிப் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திவிடுகின்றது.

இதுவரைகாலமும் கடைத்தெருவின் அருகில் காத்திருந்த ஊழியர்கள், அங்கு காத்திருக்கும் அனைவருக்கும் தொழில்கிடைக்காத காரணத்தினால், கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு நகர் உள் வீதிகளுடாகச் சென்று அங்குள்ள வீடுகளில் வேலை கேட்கும் ஒரு புதிய வழிமுறையை நாடியுள்ளனர். இதனால் வீதியில் காத்திருப்போருக்கு வேலை கிடைப்பது குறைவடைந்து செல்வதாக சிலர் அங்கலாய்க்கின்றனர்.

இப்பகுதி ஊழியப்படையினரில் அதிகமானோர் தேர்ச்சி பெறாத ஊழியர்களாகவே (ரளெமடைடநன டயடிழரச) காணப்படுகின்றனர். இவ்வாறான நிலைமையானது இவர்களுக்கான தொழில்வாய்ப்புக் கேள்வியினை குறைத்துவிடுகின்றது.
தொழிலின்மை காரணமாக குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாத நிலையில் சிலர் சட்டரீதியாக தடை செய்யப்பட்ட சில தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு அவை அறியப்படும் சந்தர்ப்பத்தில் தமது வருமானத்திலும் மிகப் பெரிய தொகையினைத் தண்டப்பணமாக செலுத்திய சம்பவங்களையும் காணக்கூடியதாக உள்ளது. அதாவது வேலையின்மையானது சட்டவிரோத செயல்களைச் செய்வதற்குத் தூண்டும் ஒரு வழிமுறையாக உள்ளதனால் இப்பிரச்சினை மீது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுதல் அவசியமாகும்.

அடிப்படை வசதிகளற்ற குடியிருப்புக்கள்

இங்கு வாழும் குடும்பங்களில் அதிகமான குடும்பங்கள் குறைந்த வருமானத்தைப் பெறும் வறிய குடும்பங்களாகவே உள்ளனர். விலைவாசி உயர்வினால் தொடர்ச்சியாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை ஈடுகட்டு வதற்குத் தேவையான போதிய வருமானத்தைப் பெறமுடியாமல் வறுமையில் வாழ்பவர்களாகவே இவர்கள் காணப்படுகின்றனர். இக்குடும்பங்களில் வாழும் பிள்ளைகள் போதிய கலோரியை நுகர முடியாமையினால் போசாக்கு குறைந்தவர்களாக காணப்படு கின்றனர். சிறுபராயத்தில் காணப்படுகின்ற மந்த போசனை முழுமையான மனித இயலுமை வெளிப்பாட்டினை மழுங்கடிக்கச் செய்கின்றது.

குடும்பத்தில் காணப்படும் வறுமை நிலை காரணமாக சிறுவர்களில் பலர் கல்வியைத் தொடர முடியாமல் கல்வி கற்கும் வயதிலே கல்வியை இடை நிறுத்தி வேலைக்குச் செல்லும் நிலைமையையும் காணமுடிகின்றது.


வேலையின்மையானது வறுமையினை மட்டுமல்லாது குடும்பத்தில் போதிய வருமானமின்மையினால் சேமிப்பு மற்றும் எதிர்கால தேவையை ஒட்டிய முதலீடுகளை மேற்கொள்வதற்கும் தடையாகக் காணப்படுகின்றது. இதனால் திடீரென ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்கும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் முடியாதவர்களாக இப்பகுதி மக்கள் காணப்படுகின்றனர்.

வேலையின்மையும் வறுமையும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டதாகவே காணப்படுகின்றன. குடும்பத் தலைவர் அல்லது உழைக்கக்கூடிய நபர் வேலையின்றி இருக்கும்போது அக்குடும்பம் வறுமையால் வாடுகின்றது. இப்பிரதேச மக்களின் வாழ்வாதார அபிவிருத்தியின் முன்னால் உள்ள ஒரு பாரிய சவாலாக வேலையில்லாப் பிரச்சினை காணப்படுகின்றது. இப்பிரச்சினையானது மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவினுள் மட்டுமல்லாது மட்டக்களப்பு மேற்குப் பிரதேசத்தில் அவதானிக்கப்பட்ட ஒரு பொதுவான பிரச்சினையாகவும் காணப்படுகின்றது.

கிராமங்களின் சொத்தாகவுள்ள ஊழியவளம் பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்ற வேறு பிரதேசங்களை நோக்கி நகரும் நிலையினை இங்கு காணக்கூடியதாக உள்ளது. படுவான்கரைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் தொழில் தேடி பொலன்னறுவை, தம்புள்ள, அனுராதபுரம், மன்னார், யாழ்ப்பாணம் போன்ற தூரப் பிரதேசங்களை நோக்கி நகர்வடைகின்றனர். தொழிலாளர் நகர்வானது தற்காலிகத் தொழில் வாய்ப்பினை வழங்குகின்ற போதிலும் சமூக பொருளாதாரத் தளங்களில் பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவிக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது.

சில தீர்வாலோசனைகள்

வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக வறுமை மற்றும் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இப்பிரதேச மக்களின் பிரச்சினைகள் குறுங்காலத்தில் முழுமையான தீர்வினை எட்டமுடியாத ஒன்றாக காணப்படினும் நீண்டகாலத்தைக் கருத்திற் கொண்டு வகுக்கப்படும் பொருத்தமான அபிவிருத்திக் கொள்கைகள் மூலம் இதற்கு சரியான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்தவகையில் பிரதேசத்தின் வளம் மற்றும் வாய்ப்புக்களை கருத்திற் கொண்டு சில தீர்வாலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

இப் பிரதேசமானது விவசாயத்தினை மேற்கொள்வதற்கான விவசாய நிலங்களை மட்டுமன்றி ஊழியச் செறிவையும் கொண்டுள்ளது. எனவே இவ்வளங்களைக் கருத்திற் கொண்டு இவற்றை முழுமையாக பயன்படுத்தி அதன் மூலம் ஆகக்கூடிய வெளியீட்டைப் பெறுதல் அவசியமாகும். அதாவது இங்கு அதிகளவில் நெல்லுற்பத்தி செய்யப்படுவதனால் அதனைக் கருத்திற் கொண்டு பாரிய அரிசி ஆலை ஒன்று அமைக்கப்படுமிடத்து வேலையற்று இருக்கும் அதிகளவான ஊழியப்படைக்கு தொழில்வாய்ப்பினை வழங்கமுடியும்.

ஊழியச்செறிவு மிக்க இவ்வாறான தொழிற்றுறைகளை கிராமிய மட்டங்களில் விருத்தி செய்தல் வேண்டும். அவை விவசாயம் மற்றும் விவசாயமல்லாத் துறைகளில் ஊழியர்களுக்கான கேள்வியை அதிகரிக்கச் செய்யும் உபாயங்களாக இருத்தல் வேண்டும். வியாபாரம், சேவைகள் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். இவ்வாறான நிலைமை ஏற்படுத்தப்படும் பொழுது கிராமிய வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காணமுடியும். இதன் மூலம் பிரதேச அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.

பிரதேசத்தில் காணப்படும் விவசாயத்திற்கு ஏற்றவகையில் காணப்படாத நிலங்கள் விவசாயச் செய்கையினை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும். கிராமிய மட்டத்தில் உள்ள குளங்கள், நீர்ப்பாசனக் கால்வாய்கள் என்பவற்றை புனரமைப்புச் செய்வதன் மூலம் கிராமிய மட்டத்தில் களப்பயிர்ச் செய்கையினை ஊக்கிவிக்க முடியும். இதன் மூலம் சிறந்த பயனைப்பெற விவசாய முகாமைத்துவப் பயிற்சிகளை வழங்குதல் பயனுடையதாக அமையும். அத்துடன் உற்பத்தித்திறன் குறைந்த விவசாயத் துறையிலிருந்து கூடிய உற்பத்தித்திறன் வாய்ந்த கைத்தொழிற்றுறைக்கும் சேவைகள் துறைக்கும் ஊழியர்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் நீண்டகாலத்தில் இடம்பெறுதல் வேண்டும்.

ஊழியச் சந்தையானது பயிற்சி பெற்ற ஊழியர்களையே அதிகம் வேண்டி நிற்கின்றது. இப் பிரதேசத்தில் காணப்படும் ஊழியர்களில் பெரும்பாலானோர் தேர்ச்சி பெறா ஊழியர்களாகவே காணப்படுகின்றனர். இதனால் இவர்களால் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வது மிகக் கடினமானதாக காணப்படுகின்றது. எனவே பொருத்தமான தொழிற்றுறைகளில் அவர்களால் விரும்பப்படுகின்ற தொழில்சார் பயிற்சிகளை அளிப்பதன் மூலம் பிரதேசத்தில் வேலையின்மையினை குறைக்க முடியும்.

சில தொழில்கள் பருவகாலத் தொழில்களாக காணப்படுவதால் பருவகாலம் தவிர்ந்த ஏனைய காலங்களில் பலர் தொழிலற்று இருக்கின்றனர். இக்காலங்களில் வீட்டுத்தோட்டம் மற்றும் சுயதொழில்களில் ஈடுபடுதல் சிறந்ததாகும். 167ற்கும் மேற்பட்ட யுத்த விதவைகள் (ளழரசஉந: சநளழரசஉந pசழகடைந இ னiஎளைழையெட ளநஉசநவயசயைவ ஆNஇ 2010) காணப்படும் இப்பிரதேசத்தில் பெண்தலைமைக் குடும்பங்களில் அதிக வறுமைநிலை காணப்படுகின்றது. இவர்களில் பலர் தொழிலின்றி அல்லற்படுகின்றனர். எனவே சுயதொழில் ஒன்றினை மேற்கொள்ளும் போது இவர்களால் போதிய வருமானத்தினைப் பெறமுடியும். சுயதொழில் ஊக்கிவிப்புக்கான கடன்கள் மற்றும் உதவிளை அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் சரியான பயனாளிகளை இனங்கண்டு வழங்குவதன் மூலம் சிறுவியாபார முயற்சிகளை ஊக்கிவிப்பதனூடாக பிரதேசத்தில் வறுமை நிலையினைக் குறைக்க முடியும். செயற்றிறனான கடன் திட்டங்கள் புதியதொழில் முயற்சிகளை அதிகரித்து தொழிலின்மை வீதத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு வழிமுறையாக அமையும்.

பின்தங்கிய கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தல் வேண்டும். இதன் மூலம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படுவர். இதனால் அதிக தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும். உட்கட்டுமானங்களின் துரித வளர்ச்சி வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் கவர்ந்திழுத்து பிரதேச அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் என்பதில் ஐயமெதுவுமில்லை. இளைஞர் யுவதிகளின் தொழில் மேம்பாட்டைக் கருத்திற் கொண்டு தொழில் பயிற்சி நிலையங்கள் கிராமப் பகுதிகளை நோக்கி விஸ்தரிக்கப்படுதல் வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு இணைப்பாட விதானமாக தொழில்சார் கல்விகள் முக்கியப்படுத்தப்படுதல் அவசியமாகும். இதனால் உயர்கல்வி வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள் சுயதொழில் ஒன்றில் ஈடுபட வழிப்படுத்தப்படுவர்.

பொருத்தமானதும் நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டதுமான சமூகவலுப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை வறுமையில் உள்ள கிராமங்களில் நடைமுறைப்படுத்தல் வேண்டும். வறுமை பற்றிய விழிப்புணர்வு, சுயநம்பிக்கை, குழு வேலையாற்றல் போன்ற அம்சங்களை இச்செயற்றிட்டங்கள் மூலமாக கிராமிய மக்களுக்கு உட்புகுத்த முடியும். அவை கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தினை விருத்தி செய்ய உதவும். அத்தோடு கிராமிய மட்டத்தில் திட்டமிடலில் மக்களின் பங்குபற்றலை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.

பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகுவதை தடுத்து நிறுத்தும் பொருட்டு பெற்றோர் மற்றும் பாதுகாவலர் மத்தியில் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடாத்துவதற்கு கல்விசார் அமைப்புக்கள் முன்வரவேண்டும். இதனால் இப்பிரதேசத்தில் மனித மூலதன விருத்தியின் மூலம் நிலைபேறான பிரதேச அபிவிருத்தியினை நீண்டகாலத்தில் அடைய முடியும் என்பது திண்ணமாகும்.

மண்முனை வடக்குப்பிரதேசத்தில் காணப்படும் வேலையில்லாப் பிரச்சினைகள் மற்றும் வறுமையினை குறைப்பதற்கு வகுக்கப்படும் அபிவிருத்திக் கொள்கைள் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகளை முதன்மைப் படுத்தியிருத்தல் அவசியமாகும். அத்துடன் பொருளாதார விரிவாக்கமானது புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் ஆற்றல் மிக்கது என்ற அடிப்படையில் இவ்விரிவாக்கத்தின் நன்மைகள் வறுமை நிலையில் வாழும் கிராமப் புறங்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றாகவே அமையும்.

யுத்தத்திற்குப் பின்னரான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில் இத்திட்டங்களுடாக இப்பிரதேச மக்களின் பல்வேறு சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகள் காணப்படுதல் அவசியமாகும். கிராமங்கள் தோறும் ஏற்படுத்தப்படும் அபிவிருத்தியானது பிரதேச அபிவிருத்திக்கு உந்து சக்தியாக அமைவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு மேலும் பலம் சேர்கும் ஒன்றாக அமையும்.

Related posts

வினோத உலகம் – 21

Thumi202121

சித்திராங்கதா

Thumi202121

உடலை உருக்குலைக்கும் போதைப்பொருட்கள்

Thumi202121

Leave a Comment