இதழ் 65

உளவியல் ஆய்வுகளில் எதிர்கொள்கின்ற சவால்கள்

ஆய்வு என்பது அறிவு தேடலுடன் தொடர்புபட்டதாகும். இது மெய்மையை கண்டறியும் புலமைசார் பயிற்சியாகும். ஆய்வு என்பது தொடர்ச்சியான தேடலை முன்வைக்கின்றது. தேடல் தொடர்ச்சியாக இருப்பதனால் ஆய்வுக்கு முடிவில்லை. ஆய்வு என்பதை குறிக்கும் ஆங்கில பதமான Research என்பது தேடுதல் என பொருள் கொண்ட RESEARCHER என்ற பிரஞ்சு மொழிச் சொல்லின் வழி வந்ததாக கூறப்படுகின்றது. “The Advanced Learner’s Dictionary of Current English” எனும் அகராதி “எந்த ஓர் அறிவுத்துறையிலும் புதிய தகவல்களை குறிப்பாக தேடுவதற்கான கவனமான ஒரு பரிசீலனை அல்லது ஆராய்வு என்பதே ஆய்வு என்பதன் அர்த்தம்” என குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆய்விற்கும் அது மேற்கொள்ளப்படுவதற்கான நோக்கங்கள் காணப்படும். சில நேரங்களில் குறித்த ஆய்வுகளின் நோக்கங்களை அடைய முடியாது போகலாம். உளவியல் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது என்பது பின்வரும் காரணங்களால் முக்கியத்துவம் பெறுகின்றது.

  1. உளவியல் துறையானது ஒரு விஞ்ஞானம் என்பதை நிஷரூபிக்க ஆய்வு முக்கியமாகும்.
  2. உளவியலானது அபிவிருத்தி அடைந்து வரும் துறையாதலால் உளவியலில் ஆய்வுகள் முதன்மைப்படுகின்றன.
  3. மனித நடத்தைகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் ஆதாரப்பூர்வமாக விளக்குவதற்கு உளவியல் ஆய்வுகள் அவசியமாகும்.
  4. பொதுவான உளவியல் கொள்கைகளுக்கும் இயல்பான அல்லது தற்கால நிலைகளுக்கும் இடையிலான இடைவெளியை புரிந்து கொள்வதற்கும் ஆய்வு அவசியமாகும்.

இவ்வாறு உளவியல் துறையில் ஆய்வுகள் மிக முக்கியமான இடத்தை பெறுகின்றன. ஆனாலும் ஏனைய துறைகளோடு ஒப்பிடுகையில் உளவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்வதில் பல்வேறுபட்ட சவால்கள் காணப்படுகின்றன.

ஆய்வாளன் சார்ந்த பிரச்சனைகள்
உளவியல் ஆய்வுகளின் மேற்கொள்கின்ற ஆய்வாளன் சார்ந்தும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவை குறித்த ஆய்வாளனால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் பெரும் சவால்களாக உள்ளன.

  1. அகவயரீதியான சவால்கள்:

முற்கோடல் எண்ணங்கள் :
உளவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளனிடம் காணப்படும் ஆய்வுப் பரப்பு, ஆய்வுக்கு உட்படுத்தப்படுவோர், ஆய்வுப் பிரதேசம் குறித்த முற்கோடல் எண்ணங்கள், அகவயப்பாடு மற்றும் ஆளுமை சார் பிரச்சனைகள் என்பன பெரும் சவாலாக காணப்படுகின்றது. உதாரணமாக குறித்த பிரதேசத்தில் பெண்களே அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் என்ற முற்கோடல் சிந்தனையுள்ள ஆய்வாளர் அதே சிந்தனையுடன் ஆய்வில் ஈடுபடும் போது சில நேரம் அந்த ஆய்வில் ஆண்களே அதிகளவில் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் என்ற உண்மை புலப்படும் சந்தர்ப்பத்தில் ஆய்வாளன் தன் ஆய்வு குறித்து மனக்குழப்பம் அடைவதையும் ஆய்வில் பின்வாங்குவதையும் அல்லது முழுமையாக ஆய்வு முயற்சியை கைவிடுவதையும் குறிப்பிடலாம்.

நம்பிக்கையின்மையும் பயமும் :
உளவியல் ஆய்வாளர்களிடையே மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக இது காணப்படுகின்றது. அதாவது குறைந்த சுயமதிப்புடைய ஆய்வாளர்கள் குறைவான உந்துதலை உணர்கின்றனர். இதனால் அவர்களது ஆய்வின் தரம் பாதிக்கப்படுகின்றது. உதாரணமாக பல்கலைக்கழகங்களில் பல மாணவர்கள் இறுதி வருடத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமே என்ற பயத்தினாலும் தம்மீது தன்னம்பிக்கை அற்ற தன்மையினாலும் பொதுக்கலையை தெரிவு செய்வதையும் இன்னும் இறுதி வருடத்தில் படித்துக் கொண்டு சிறப்புக்கலையை தொடர மறுப்பதையும் குறிப்பிடலாம்.

அறிவின்மை :
உளவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் பகுப்பாய்வு ரீதியாக சிந்திக்க தெரியாதவர்களாகவோ நுண்ணறிவற்றவர்களாகவோ சிறந்த எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றல் இல்லாதவர்களாகவோ காணப்படின் குறித்த ஆய்வைத் திறம்பட மேற்கொள்ள முடியாது. உதாரணமாக ஆய்வு செயல்முறைகள் தொடர்பான பூரண விளக்கம் இல்லாத ஒருவரது ஆய்வு ஏனைய உளவியல் நிபுணர்களால் நிராகரிக்கப்படுவதனை குறிப்பிடலாம்.

  1. புறவய ரீதியான சவால்கள் :

உடலியல் அசாதாரண நிலைமை:
ஆய்வாளனுக்கு உடலில் ரீதியாக ஏற்படும் நோயின் நிலைமைகள் மற்றும் குறைபாடுகள் ஆகியன குறித்த ஆய்வில் பெரும் சவாலாக காணப்படும். உதாரணமாக குறித்த காலவரையிலுள்ள ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உடல் ரீதியாக பலவீனப்படும்போது குறித்த ஆய்வினை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாத நிலை ஏற்படும். இது பெரும் சவாலாகும்.

புறக் குறுக்கீடுகள் :
இதனுள் காலநிலை மாற்றம், தொற்று நோய்த்தாக்கம், வறுமை, போக்குவரத்து வசதியின்மை, இரைச்சல் போன்றவற்றை குறிப்பிடலாம். உதாரணமாக ஆய்வுக்கென ஆய்வாளன் தெரிவு செய்த பிரதேசத்தில் திடீரென காலநிலை மாற்றம் ஏற்படும் போது ஆய்வு இடைநிறுத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படல். அவ்வாறே மனிதர்களை நேர்காணல் முறையில் ஆய்வு செய்யும் போது குறுக்கிடும் இரைச்சல் ஆய்விற்கான சவாலாகும்.

ஆய்வுக்கு உட்படுத்தப்படுவோர் சார்ந்த பிரச்சினைகள்

  1. அகவயரீதியான சவால்கள்

சந்தேகம் :
ஆய்வுக்கு உட்படுத்தப்படுவோர் தான் கூறும் விடயங்களானது இரகசியத்தன்மை பேணப்படுமா? இல்லையெனில் தன் சார்ந்த விடயங்கள் பிறருக்கு தெரிந்து விடுமா? என்று சந்தேகம் கொண்டிருக்கும்போது ஆய்வின் போது உண்மைத்தன்மையை மறைக்கக்கூடும். இது உளவியல் ஆய்வின் பிரதான சவாலாகும். உதாரணமாக தமது உண்மை நிலை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக பொய்யான தகவல்களை வழங்குவதுண்டு. இதன் போது குறித்த ஆய்வின் முடிவுகள் தீர்க்கமானதாகவும் உண்மைத் தன்மை பொருந்தியதாகவும் காணப்படாதிருப்பது ஒரு சவாலாகும்.

பயம் :
உளவியல் ஆய்வு என்றால் சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் சிறிய பயம் இருக்கத்தான் செய்யும். ஏனெனில் எல்லா மனிதருமே ஏதோ ஒரு வகையில் உளரீதியான தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பர். இதன் போது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவோர் ஆய்வாளர்கள் தம்மை உளநோயாளர்களாக அடையாளப்படுத்தி விடுவார்களோ என்ற பயம் கொண்டிருப்பர். உதாரணமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களும் உளதாக்கங்களும் என்ற ஆய்விலே ஆரம்பத்தில் பங்கு பற்றிய பாவணையாளர்கள் சிகிச்சை எனும் பெயரில் தம்மை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வார்களோ? அல்லது தாம் வாழ தகுதியற்றவர்கள் ஆகிவிடுவோமோ? என்ற மனப்பயங்களினால் ஆய்வுகளிலிருந்து இடை விலகுவதை குறிப்பிடலாம்.

மனவிரத்தி மற்றும் என அழுத்தம்:
உதாரணமாக ஆரம்பத்தில் தற்கொலை எண்ணம் கொண்டவர்களும் தற்போது அதிலிருந்து மீண்டவர்களுமான மக்களிடத்தில் மேற்கொள்ளும் ஆய்வுகளில் அவர்களது உள்ளக்குமுறல்கள், ஏமாற்றங்கள், கவலைகள் ஆகியன மேலெழும்போது மனவிரத்திக்கு உள்ளாகி திரும்பவும் அவர்களுடைய தற்கொலை எண்ணங்கள் துளிர் விட ஆரம்பித்தல். இது உளவியல் ஆய்வின் பெரிய சவாலாகும். இதுகுறித்து ஆய்வாளர்கள் மிகுந்த கவனம் செலுத்துவதுடன் ஆய்வு முடிவில் அவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தலை வழங்குதல் வேண்டும்.

  1. புறவய ரீதியான சவால்கள் :

ஆய்வுக்கு உட்படுத்தப்படுவோரின் உடல் நலமின்மை:
உதாரணமாக காலக்கெடு விதிக்கப்பட்ட நோயாளர்களும் உளதாக்கங்களும் என்ற தலைப்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவோர் ஆய்வுக்கால பகுதியில் உடல்ரீதியான அசாதாரண நிலைகளை அடைதல் அல்லது இறந்து போதல். இதனால் குறித்த ஆய்வு முழுமை பெறுவது என்பது பெரும் சவாலாகும் அத்தோடு புலன்குறைபாடு உடையவர்கள், நினைவாற்றல் இழப்பு, ஆளுமைக்கோளாறு உடைய நபர்களை ஆய்வுக்கு உட்படுத்துவது என்பதும் கடினமானதாகும்.

காலநிலை மாற்றம், இரைச்சல் போன்றவற்றையும் குறிப்பிட முடியும்.

ஆய்வுச்செயன்முறை சார்ந்த பிரச்சினைகள்

உளவியல் ஆய்வுகளை பொறுத்தவரையில் குறித்த ஆய்வு ஒன்றினை மேற்கொள்வதற்கு முன் ஆய்வு திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். ஆய்வு திட்டமானது பல்வேறு பிரிவுகளைக் கொண்டு காணப்படும். இத்தகைய செயல்முறைகளில் ஏற்படும் சிக்கல்களும் உளவியல் ஆய்வுகளில் சவால்களாக காணப்படுகின்றன.

ஆய்வை திட்டமிட்டு முன் வைப்பதில் ஏற்படும் தவறுகள்:
ஆய்வை திட்டமிடுவதை பிற்போடுதல் என்பது ஆய்விற்கான முதற்கட்ட சவாலாகும். உதாரணமாக பட்டப்பின் கற்கை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதிக் கட்டம் வரை ஆய்வு பிரச்சினையை தெரிவு செய்வதை பிற்போடுவதை குறிப்பிடலாம்.

ஆய்வு பிரச்சினையை இனம் காணலில் சிரமம் :
உளவியலில் ஆய்வு பிரச்சனைகள் தனித்துவமானதும் அளவிடக்கூடியதும் நோக்கத்தை அடையக் கூடியதும் யதார்த்தமானதும் மற்றும் கால எல்லையைக் கொண்டதுமாக இருத்தல் வேண்டும். இல்லையேல் ஆய்வு சிறந்ததாக காணப்படாது. உதாரணமாக உளவியல் துறை பயிலும் மாணவர்கள் முதன்முறையாக ஒரே சந்தர்ப்பத்தில் பொருத்தமான ஆய்வு பிரச்சினையை இனம் காண்பதில் கடினப்பாடு இருப்பதை குறிப்பிடலாம். இது ஒரு சவாலாகும்.

ஆய்வு பிரச்சினையை பகுப்பாய்வு செய்வதில் உள்ள சிரமங்கள் :
ஆய்வுப் பிரச்சினை இனங்காணப்பட்டால் மாத்திரம் போதாது. குறித்த ஆய்வு பிரச்சினையை பகுப்பாய்வு செய்ய வேண்டியதும் அவசியமாகும். இதனுள் விடய பரப்பு ஒன்றினை அடையாளம் காணல், உபதலைப்பினை தெரிவு செய்தல், பிரச்சினையை பரிசீலனை செய்தல், பிரச்சினை பற்றிய பகுப்பாய்வை மேற்கொள்ளல், தலைப்பு இனம்காணல் மற்றும் இனங்காணப்பட்ட தலைப்பின் பொருட்டு செயறிட்ட முன்மொழிவை தயார் செய்தல் முதலிய படிமுறைகள் உள்ளடங்குகின்றன. இவற்றை திறம்பட செய்வதில் எதிர்கொள்ளும் சவால்கள்.

இலக்கிய மீளாய்வில் ஏற்படும் சவால்கள் :
உளவியலில் எந்த ஆய்விலும் அது சிறியதாயினும் அல்லது பெரியதாயினும் அவ்வாய்விலே கருத்தில் கொள்ளப்பட்ட விடயம் தொடர்பாக மற்ற ஆய்வாளர்கள் என்ன எழுதியுள்ளார்கள் என்று ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும். இதற்கென குறித்த ஆய்வுத்தலைப்புடன் தொடர்புடைய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் தேவைப்படும் போது அவை கிடைத்து விடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதும் ஒரு சவாலாகும்.

இவற்றைவிட தரவு சேகரித்தலில் காணப்படும் சிரமங்கள், தரவுகளைத் திரட்டும் நுட்பங்கள் மற்றும் கருவிகள் குறித்த சவால்கள், தரவுகளை பகுப்பாய்வு செய்வதில் காணப்படும் இடையூறுகள், அறிக்கைப்படுத்துவதில் காணப்படும் சிரமங்கள் மற்றும் ஆய்வின் பொருட்டு ஏற்படும் செலவுகள் ஆகியன உளவியல் ஆய்வுகளில் எதிர்கொள்கின்ற சவால்களாக காணப்படுகின்றன.

இலங்கை நாட்டைப் பொறுத்த வரையில் ஆய்வுக்கான போதுமான பயிற்சிகள் முன்னெடுக்கப்படாமை, ஆய்வுப் பண்பாடு பெரிதாகக் கட்டி எழுப்பப்படாமை, ஆய்வு மேற்பார்வைக்குரிய ஆளணியினர் போதாதிருத்தல், ஆய்வுக்குரிய ஊக்கம் காணப்படாமை, தரவு மற்றும் தகவல் பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படல் முதலியன பாரதூரமான சவால்களாக காணப்படுகின்றன.

உளவியலானது வளர்ந்து வரும் துறையாததால் உளவியல் ஆய்வுகளில் ஏற்படும் சவால்களை குறைக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையிலே உளவியல் துறை சார் மாணவர்களை ஆய்வு குறித்து ஊக்கப்படுத்துதல், உளவியல் ஆய்வு குறித்த பயிற்சிகளை வழங்குதல், ஆய்வாளர்களுக்கு தேவையான பண, பொருள் மற்றும் மனித உதவிகளை உருவாக்குதல், உளவியல் ஆய்வுகளின் பிற்பாடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரது நலன் பேண் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், உளவியல் ஆய்வுகளின் அவசியத்தை எடுத்துரைத்தல், மேற்கொள்ளப்பட்ட உளவியல் ஆய்வுக்கட்டுரைகளை பதிப்பித்து வெளியிடல் முதலிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த சவால்களை குறைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

Related posts

சூடு பிடிக்கிறது உலகக் கிண்ணம் 2023

Thumi202121

சுதந்திர தேவியின் கதை

Thumi202121

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள் – 02

Thumi202121

Leave a Comment